உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள்
“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார்.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல்
தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார்.
“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும்
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார்.
அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்.
‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் பெருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது.
ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
யாருக்கு வெட்கமில்லை? @VanniTamizhVCK
பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, 2001ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் அங்கம்!
விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரண்டே ஆண்டுகளில் 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அங்கம்!
"ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்தார் கருணாநிதி" என 2004ஆம் ஆண்டு விமர்சித்து கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டு, 2006ஆம் ஆண்டு மீண்டும் திமுக கூட்டணியில் ஐக்கியம்!
2009ஆம் ஆண்டு சனவரி மாதம் காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு, அதே ஆண்டு மே மாதம் காங்கிரசுடன் கூட்டணியில் ஐக்கியம்!
'சாதிய அரசியல் செய்கிறது பாமக' என விமர்சிக்கப்பட்டக் காலத்திலேயே, 2009ஆம் ஆண்டு பாமகவோடு ஒரே கூட்டணியில் அங்கம்!
"விஜயகாந்துக்கு நாடாள என்ன தகுதி இருக்கிறது?" எனக் காட்டமாக விமர்சித்துவிட்டு, அதே விஜயகாந்தைத் தலைமையேற்று, 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் அங்கம்!
'கண்ணாடி விரியன்' எனக் கூறி நச்சுப் பாம்பென திமுகவை 2016ஆம் ஆண்டு விமர்சித்துவிட்டு, 2019ஆம் ஆண்டு அதே திமுகவுடன் கூட்டணியில் ஐக்கியம்!
2017ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவித்தபோது, அதனை வரவேற்று Charistmatic Leader எனவும், அவர் முன்வைக்க விரும்பும் அரசியல் எல்லோருக்குமானது எனவும் புகழாரம் சூட்டிவிட்டு, அதே ரஜினிகாந்தை எதிர்த்து சில மாதங்களிலேயே விமர்சனம்!
கமல்ஹாசனை, 'பாஜகவின் கைக்கூலி' என 2019ஆம் ஆண்டு விமர்சித்துவிட்டு, அதே கமல்ஹாசனை வைத்து 2024ஆம் ஆண்டு சிதம்பரத்தில் தங்களது வெற்றிக்காகப் பரப்புரை!
2026ஆம் ஆண்டு, 'RSSன் பிள்ளை' என தவெகவை விமர்சித்துவிட்டு, தேர்தலுக்குப் பின்னர், அதே தவெகவோடு கூட்டணி - அமைச்சரவையில் அங்கம்!
2026ஆம் ஆண்டு திமுகவும், அதிமுகவும் இணைந்து திருமாவை முதல்வராக்க ஒரு முயற்சி எடுத்தபோது, அதற்காகப் பின்புலத்தில் ஆதரவளித்தது!
இவ்வாறாக, திருமா துண்டுபோட்டு வைக்காத கட்சிகளே இல்லை! கூட்டணி வைக்காத இயக்கங்களே இல்லை!
தேவைப்பட்டால், ராஜபக்சேவோடும் கைகுலுக்குவார்; அமித்ஷாவையும் அரவணைத்துப் பேசுவார். எதற்கும் கூச்சப்படவோ, வெட்கப்படவோ மாட்டார் திருமா.
சந்தர்ப்பவாத அரசியலின் முழு உருவம் திருமா!
இப்படி தேர்தல் இலாபத்துக்காக யார் காலையும் பிடிக்கத் தயங்காத திருமாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிற வன்னியரசு, தேர்தல் அரசியலில் சமரசமே செய்யாது இருக்கிற எங்களைப் பார்த்துப் பேசலாமா?
விஜய்யைக் கோழை என விமர்சித்துவிட்டு, அதே கோழையின் அமைச்சரவையில் தொடர்வதற்காகக் கூழைக்கும்பிடு போடும் வன்னியரசுக்கு எங்களைப் பேச என்ன அருகதை இருக்கிறது?
ஊனை உருக்கி உயிரை எரித்து, விடுதலை வேள்வி நடத்திய மாவீரன்..!
ஒரு சொட்டு நீர் அருந்தாமல் விடுதலைப்பசிக்குத் தன்னைத்தானே புசிக்க தந்த பெருமகன்..!
மருத்துவப் படிப்பைக் கைவிட்டு, இன அடிமை இடர் தீர்க்க,
தமிழ்த்தேசியத் தலைவர் தடம் பற்றிய தமிழீழத் தலைமகன்..!
புத்தன், காந்தி பெயரைச் சொல்லி இரத்தம் குடித்த ஓநாய்களின் முகத்திரை கிழித்த புலி வீரன்..!
ஆயுதம் ஏந்திய போராட்டக் களத்தில் அகிம்சையை ஆயுதமாக்கிய புரட்சியாளன்..!
கூர்த்த பெரும் அறிவாற்றலால் அரசியல் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்று, விடுதலைப்படையை வீறுகொள்ளச்செய்த தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தளபதி..!
லெப்டினண்ட் கர்னல், ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
நாம் தமிழர்!
மக்களுக்காக போராடி எண்ணற்ற வழக்குகளை வாங்கி , ஓராண்டு கொடும் சிறைவாசம் சென்று தமிழ்த்தேசியம் என்கிற உயர்ந்த தத்துவத்தை வெகுசன மக்களிடம் கொண்டு போய் சேர்த்து , காடுவளம் ,கனிமவளம் ,நீர்வளம் ,நிலவளம் என்று பல்லுயிர் அரசியல் பேசும் ஒரு தலைவனை பார்த்து
ரசிக வெறியால் அற்ப தேர்தலில் வென்ற ஒரு தறுதலை சொல்கிறது நீ கவுன்சிலராகிட்டு வா என்று !
உங்க ஆணவமும் அகந்தையும் ரொம்ப நாளைக்கு தாங்காது தம்பி ! @RameshOffcl
முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தப் பிறகுதான், எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பாரென்றால், கடைசிவரை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவே முடியாது. அப்படியெல்லாம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
'தேவையான நேரத்தில்' ஊடகங்களைச் சந்திப்பார் அண்ணன் சீமான். மற்றபடி, உங்கள் செய்திப்பசிக்கு தீனிப்போடுவதற்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!
தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!
தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்!
திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!
தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!