"எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பது பொன்மொழி. வெறும் புத்தகப் பக்கங்களைத் தாண்டி, வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து, நம் கனவுகளுக்குச் சிறகுகள் முளைக்க வைக்கும் உன்னதமான மனிதர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும், ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதல் நிச்சயம் இருக்கும்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி, நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். 'என் பிறந்தநாளைத் தனியாகக் கொண்டாடுவதை விட, ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடினால் பெருமைப்படுவேன்' என்ற அவரின் உயரிய எண்ணமே இந்நாளின் அடிப்படை.
வகுப்பறையில் நாம் தடுமாறும் போது, "உன்னால் முடியும்" என்ற ஒற்றை வார்த்தையால் நம் தன்னம்பிக்கையைத் தூண்டுபவர்கள். வெறும் மதிப்பெண்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், நற்பண்புகள், ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றை ஊட்டி நல்ல குடிமக்களாக நம்மை உருவாக்குபவர்கள். சுயமாகச் சிந்திக்கும் திறனை வளர்த்து, அறியாமை எனும் இருளைப் போக்கி அறிவுச் சுடரேற்றுபவர்கள்.
"களிமண்ணாக இருந்த எங்களை எழில்மிகு சிற்பங்களாகச் செதுக்கிய சிற்பிகளே! தவறுகளைத் திருத்தி, சரியான பாதையைக் காட்டி, நாங்கள் எட்டிய ஒவ்வொரு உயரத்திற்கும் ஏணியாக இருந்த உங்கள் தியாகத்திற்கு ஈடில்லை."
நாம் எத்தனையோ படிகள் உயர்ந்து சென்றாலும், நம்மைச் செதுக்கிய ஆசிரியர்களை வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த ஆசிரியர் தினத்தில், நமக்குக் கற்பித்த அனைத்து நல்லாசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
இன்றைய தினம் 05.09.2026,சனிக்கிழமை - சுதந்திர போராட்ட வீரர், விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களின்,225 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் கலந்துகொண்டு,அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!
இன்றைய தினம் 05.09.2026,சனிக்கிழமை - தமிழர் தேசத்தின் கொள்கை வழிகாட்டி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று!..
சுதேசி நாவாய் ஓட்டி, ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்துத் தன் வாழ்வையே தியாகம் செய்த "கப்பலோட்டிய தமிழன்" செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்கள்.
அன்னியர் ஆட்சியை எதிர்த்துச் சொந்தமாகக் கப்பல் நிறுவனம் தொடங்கிய தீரர்.
சுதேசி இயக்கத்திற்காகத் தனது செல்வத்தையும், உடல்நலனையும் ஈந்த தியாகி.
சிறைக் கொடுமைகளையும், செக்கிழுத்த துயரத்தையும் புன்னகையோடு ஏற்ற தேசபக்தர்.
தமிழனின் மானமும், வீரமும், தேசபக்தியும் என்றும் வ.உ.சி அவர்களின் பெயரோடு நிலைத்து நிற்கும். அவரது தியாக வரலாறு தலைமுறைகள் கடந்து நம்மிடையே சுடரட்டும்!
அன்புடையீர் வணக்கம், முத்தரையர் சமூகம் மற்றும் தாய் தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவச் செல்வங்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் எதிர்வரும் 02.10.2026 (காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள்) அன்று, கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரம்மாண்டமான 'மாணவச் செல்வங்களுக்கான பாராட்டு விழா' நடைபெற உள்ளது. இவ்விழாவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 2025- 2026 கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற விரும்பும் மாணவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள
ஆவணங்களை,
98405 65164, 98436 19108
ஆகிய எண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் 22.09.2026 ஆம் தேதிக்குள் அனுப்பிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
1.மதிப்பெண் சான்றிதழ்
2.சாதிச் சான்றிதழ்
3.அதார் அடையாள அட்டை
4.தொலைபேசி எண்.
உழைப்பால் உயர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கும் நம் வீட்டுப் பிள்ளைகளைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவச்செல்வங்களும் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கடைக்கோடி முத்தரையர் கிராமங்களுக்கு கொண்டு சேர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
ஆவணி மாதத்தின் ரோகிணி நட்சத்திரத்தில், தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என் உளம் கணிந்த நல்வாழ்த்துகள்!
பாரதப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, "கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே" என்ற வாழ்வின் உயர் தத்துவத்தை நமக்கு உணர்த்தியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் குடும்பத்தில் என்றும் நிலைக்கட்டும். ஆரோக்கியமும் செல்வமும் பெருகட்டும்.
அன்பும் அறமும் நம் சிந்தனையில் ஓங்கட்டும்.
அன்பும், கருணையும், அமைதியும், மனிதநேயமும் நிறைந்த நபிகள் நாயகத்தின் வாழ்வும் போதனைகளும் உலகெங்கும் ஒளியேற்றட்டும்.
நமது எண்ணங்களிலும், செயல்களிலும், வார்த்தைகளிலும் நன்மையும், நேர்மையும் நிலைத்திருக்க இந்த புனித நாளில் இறைவனைப் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் மிலாடி நபி நல்வாழ்த்துகள்!
புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று!
தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலிலும் தன் தனித்துவமான குணத்தாலும், அளப்பரிய கொடைத் தன்மையாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் "கேப்டன்" விஜயகாந்த். ஏழை எளிய மக்களின் பசி போக்கிய மாமனிதராகவும், அனைவருக்கும் சம உரிமை தந்த தலைவராகவும் வாழ்ந்து காட்டிய அவரது பிறந்தநாளில் அவரை நன்றியோடு நினைவுகூர்வோம்.
தனது ஆரம்பகால திரைப்படங்களில் இருந்து, காவல் துறை அதிகாரியாகவும், சமுதாய மாற்றத்தை விரும்பும் புரட்சியாளராகவும் பல வெற்றிப் படங்களை அளித்து ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கடன் சுமையில் இருந்தபோது, தலைவராகப் பொறுப்பேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி, முழு கடனையும் அடைத்து அமைப்பை வளம்படுத்திய தொலைநோக்குச் சிந்தனையாளர்.
படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி, கலைத்துறையில் உணவுச் சமத்துவத்தைக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கி, குறுகிய காலத்தில் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, மக்கள் நலனுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவும் அவரது உயர்ந்த குணமும், அஞ்சா நெஞ்சமும் என்றும் மக்கள் நினைவில் நிலைத்து நிற்கும். புரட்சி கலைஞர் "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் நினைவுகளையும், அவரது மக்கள் சேவையையும் போற்றி வணங்குவோம்!
நேற்றைய தினம் 20.08.2026,வியாழக்கிழமை - மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீட்டை வழங்காமலும், காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைக்கட்ட துடிக்கும், கர்நாடக அரசை கண்டித்து, தமிழர் தேசம் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் இரயிலடியில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தலைமையேற்று கண்டன பேரூரையாற்றினேன்!.
திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்த அனைத்துநிலை நிர்வாகிகளுக்கும், உறவுகள் அத்துணை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
சட்டமன்றத்தில் கேள்விகள் எழும்போது காவல்துறை சரியாகச் செயல்படுகிறது, காவல்துறையா மக்களா என்றால் மக்கள் தான் என அமைச்சர்கள் தரும் பதில்களுக்கும், களத்தில் மக்கள் சந்திக்கும் நிஜங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக்கூறி, காவல் நிலைய மரணங்களுக்குச் சாக்குப்போக்குகளை அடுக்குவது எந்த வகையிலும் நியாயமாகாது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையோ, அவர்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மாறுவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும்.
பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையின் பிடியில் சித்திரவதைகளும், தொடர் மரணங்களும் நிகழ்வது அதிர்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் குறுகிய காலத்திற்குள்ளேயே அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மீதான கண்காணிப்பு குறித்தும் கடுமையான அச்சத்தை எழுப்புகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே எல்லை மீறும்போது, சாதாரண பொதுமக்கள் யாரிடம் சென்று நீதி கேட்பது என்ற கேள்வி எழுகிறது.
காவல்துறை அமைச்சரோ அது குறித்துச் சட்டமன்றத்தில் பேசுவதும் இல்லை; மக்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, புகழ் பாடுதல் எனச் சொகுசாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.
அப்பாவி மக்களின் உயிர் போகிறது; முதலமைச்சரே உறக்கத்தில் இருந்து எழுந்திருங்கள்!
காவல்துறை அராஜகத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! ஐயா பரமசிவம் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் தேசம் கட்சி சட்டப் போராட்டம் தொடரும்!
மதுரை மாவட்டம், மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த திரு.பரமசிவம் அவர்கள், விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள காவலர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி நம் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.
விசாரணை என்ற பெயரில் நடைபெறும் இதுபோன்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், காவல்நிலைய மரணங்களும் சகித்துக் கொள்ள முடியாதவை.
இச்சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், வழக்கை மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி இன்றைய தினம் (18.08.2026, செவ்வாய்க்கிழமை) மேஜிஸ்திரேட் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, மறைந்த திரு. பரமசிவம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்.
அவர்களது குடும்பத்திற்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் செய்து, தவறிழைத்த காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய நீதி கிடைக்கும் வரை தமிழர் தேசம் கட்சி களத்திலும் நீதிமன்றத்திலும் அத்துணை சட்டப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்பதை உறுதியளித்துள்ளேன்.
அதிகார வர்க்கத்தின் அநீதிக்கு எதிராகத் தமிழர் தேசம் கட்சி என்றும் மக்களுக்குத் துணையாக நிற்கும்.
மேலும், இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பிய, அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!.
@CMOTamilnadu@tnpoliceoffl
மதுரை சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததாக புகார் – தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மதுரை அனுப்பானடி அருகே பொது இடத்தை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு. பரமசிவம் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.
கடந்த ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் பரமசிவம் பலத்த காயமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், சட்டத்தின் மீது நம்பிக்கையையும் அளிக்க வேண்டிய காவல்நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எனவே, சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திடுவதோடு, தொடர்ந்து அதிகரிக்கும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
ஜெயராஜ்,பென்னிக்ஸ் வழக்கு போல நூறு வழக்குகளில் தண்டனை பெற்றாலும் காவல்துறையினர் தங்களின் சர்வாதிகார மனநிலையை மாற்றி மனித உரிமைகளின் மீது அக்கறை செலுத்தாத வரை எத்தனை ஆட்சிகள் வந்தாலும் இந்த காட்சிகள் மாறப்போவதில்லை..!மதுரை மாநகர் காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள்!@CMOTamilnadu
தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல்நிலைய அக்கிரமங்கள்; சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு!
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதோடு, காவல் நிலையங்கள் அப்பாவி மக்களைச் சித்திரவதை செய்யும் சித்திரவதைக் கூடங்களாக மாறி வருவது மிகவும் வேதனைக்குரியதும், வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
மதுரையைச் சேர்ந்த திரு.பரமசிவம் மற்றும் அவரது மனைவி திருமதி.அய்யம்மாள் ஆகிய இருவர் மீது மதுரை சிந்தாமணி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த், காவலர் அப்துல் முகமது மற்றும் அடையாளம் தெரியாத காவலர்கள் நடத்திய மனிதநேயமற்ற கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 16.07.2026 அன்று வண்டி நிறுத்துவதில் ஏற்பட்ட சிறிய தகராறில் அய்யம்மாள் மற்றும் அவரது கணவர் தாக்கப்பட்டதால், மதுரை சிந்தாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் நள்ளிரவில் மருத்துவமனைக்கே சென்று, புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி மிரட்டியுள்ளனர்.
19.07.2026 அன்று விசாரணை என்ற பெயரில் தம்பதியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலர்கள் பரமசிவத்தின் தலையில் பூட்ஸ் கால்களால் ஓங்கி மிதித்துத் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த அவர் அங்கேயே மயங்கியுள்ளார்.
சம்பவத்தை வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியதுடன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கே பொய் தகவல் சொல்ல வைத்துள்ளனர். காவல்துறையின் கொடூரத் தாக்குதலால் பரமசிவத்தின் மண்டையோட்டுப் பகுதியில் தீவிர ரத்த கசிவு ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிவந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.
தவெக அரசு அமைந்ததிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலைய மரணங்கள், சட்டவிரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்கதையாகி வருகின்றன. மக்களுக்காகச் செயல்பட வேண்டிய காவல்துறை, அதிகார போதையில் அப்பாவி ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடுவது ஏற்றுக்கொள்ளவே முடியாது.
திரு. பரமசிவம் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, கொலைசெய்த சிந்தாமணி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த், காவலர் அப்துல் முகமது உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த திரு. பரமசிவம் அவர்களது குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தவெக அரசு, தன் தவறுகளை உணர்ந்து, இந்த அராஜகத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!
@CMOTamilnadu@tnpoliceoffl
ஆகஸ்ட் 15, 1947 அன்று நமது தாய்நாடு அடைந்த இந்த விடுதலை, பல தலைமுறைகளின் அளப்பரிய தியாகத்திலும், எண்ணற்ற தியாகிகளின் அசைக்க முடியாத போராட்டத்திலும் பூத்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும்.
மகத்தான தலைவர்கள் காட்டிய வீரம் செரிந்த பாதையும், பெயரறியா ஆயிரக்கணக்கான தியாகிகளின் நெஞ்சுறுதியும் தான் இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரக் காற்றிற்கு வலுவான அஸ்திவாரம்.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் நமது பாரத நாட்டில், சாதி, மத, மொழி மற்றும் பிராந்திய பாகுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் 'ஒரே இந்தியர்' என்ற ஒற்றை உணர்வோடு ஒருங்கிணைந்து நிற்பதே இந்த விடுதலைத் திருநாளுக்கு நாம் சேர்க்கும் உண்மையான பெருமையாகும்.
நாம் பெற்ற இந்தச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பதோடு, நமது தேசத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியிலும், அடுத்த தலைமுறையினரின் வளமான எதிர்காலத்திலும் பங்காற்ற இந்நாளில் உறுதியேற்போம்!
தாய் திருநாட்டின் புகழை உலகரங்கில் உயர்த்த இடைவிடாது உழைப்போம்! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தமிழில் பேச முடியாது என்று திமிர் பேசுவதா?!
மதத்தை முன்னிறுத்தி தாய்த்தமிழை இழிவுபடுத்துவதா?!
மாண்பிற்குரிய சட்டப்பேரவையில் மைக்கை தட்டிவிட்டு ரவுடித்தனம் செய்வதா?!
வன்மையான கண்டனங்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை,கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மீது காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை, சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும், கருத்து சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்!.
ஒரு பேச்சு இரட்டை அர்த்தத்தில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த முறையான மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொண்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவெக பெண் நிர்வாகி புகார் அளித்தார் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாக கைது செய்திருப்பது முற்றிலும் பழிவாங்கும் அரசியலாகும்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் @CMOTamilnadu அவர்கள் பேசும்போது இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு இருக்க, பொதுமக்கள் யாரேனும் புகார் அளித்தால் முதலமைச்சர் மீது இதே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா?
முதலமைச்சரின் நண்பர் அல்லது நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதற்காக மட்டுமே இந்த அளவுக்குக் காவல்துறை விரைந்து செயல்படுகிறதா? அல்லது சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இதே வேகத்தில் நடவடிக்கை தொடருமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனங்களைத் தடுத்து, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சனநாயத்திற்கு ஆபத்தான தவறான முன்னுதாரணமாகும்.
அரசியல் விமர்சனங்களையும் கருத்துக்களையும் சட்டரீதியாகவும் சனநாயக ரீதியாகவும் எதிர்கொள்வதே முதிர்ச்சியான அரசுக்கு அழகு. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பழிவாங்கும் கைது நடவடிக்கைக்கு தமிழர் தேசம் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது!..