முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையானது மிகமிக நியாயமானது. அதனை ஏற்க மறுத்து, வலுக்கட்டாயமாகத் தேர்வினை அறிவித்த தேதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பணிக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற தேர்வெழுதும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கை மிகமிக நியாயமானதும், அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். அதனை திமுக அரசு ஏற்க மறுப்பது பெருங்கொடுமையாகும். இதற்கு முன் பல அரசுப்பணி தேர்வுகளும், அதன் முடிவுகளும், பணி நியமன ஆணை வழங்குதலும் ஆண்டுக் கணக்கில் எவ்வித காரணமுமின்றி, ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தேர்வர்களின் நியாயமான கோரிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க மறுப்பது ஏன்? தேர்வு எழுதும் பட்டதாரி ஆசிரியர்களின் பக்கம் உள்ள நியாயத்தை திமுக அரசு உணரத் தவறியதேன்? அவசர அவசரமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வினை நடத்தி முடிக்க திமுக அரசு திட்டமிடுவது, ஊழல் முறைகேடுகளை நிகழ்த்தும் சூழ்ச்சியோ என தோன்றுகின்றது.
ஆகவே, தேர்வு எழுதும் ஆசிரியப்பெருமக்களின் நலன் காக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தேவையான கால அவகாசம் வழங்கி, நடத்த வேண்டுமெனவும், 12.10.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ள தேர்வினை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவசரம் ஏன்? தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு திட்டமிட்டு அக்டோபர் 12-ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. தேர்வர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராமல் தேர்வு வாரியம் பிடிவாதம் பிடிப்பது கண்டிக்கத்தக்கது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அத்தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறித் தான் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், எதையும் மதிக்காத தேர்வு வாரியம் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கும் எந்த போட்டித் தேர்வும் குறித்த தேதியில் நடைபெறுவதில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வுகளும், கல்லூரி உதவிப் பேராசியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநிலத் தகுதித் தேர்வும் பல மாதங்கள் தாமதமாகத் தான் நடத்தப்பட்டன. கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 4 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நடத்தப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கானத் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.
எனவே, தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். தேர்வுகளில் விடைத்தாள்கள் மாறுவதைத் தவிர்க்க ஓ.எம்.ஆர் விடைத்தாள்களின் நகல்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும்; அது சாத்தியமில்லை என்றால், 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் நடைபெற்றது போல CBT (Computer Based Test) முறையில் இத்தேர்வை நடத்த வேண்டும்.