பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரையும் துச்சமெனக் கருதி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் அழித்து வீரமரணம் அடைந்த மாவீரருமான தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
தாய்நாட்டிற்காக தனது இன்னுயிரையே துச்சமென நினைத்து வாழ்ந்து மறைந்த மாவீரர் தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினத்தில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம்.
அறிவியல் மற்றும் மனிதநேயத்துடன், சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வரும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களுக்கும் எனது பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவரின் வலியைக் குறைத்து, உடல் இயக்கத்தையும் அன்றாட செயல்பாடுகளையும் மேம்படுத்தி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் மீட்டெடுக்கும் பிசியோதெரபிஸ்ட்கள் அனைவரின் சேவையும், பணியும் மேன்மேலும் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.
திருவள்ளூரில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளை; சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை – தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் குன்றத்தூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சோமங்கலத்தில் உள்ள ஏடிஎம் என இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதே திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அருகே ஏடிஎம் இயந்திரத்தையே முழுமையாக கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொள்ளையடித்துச் செல்லும் வடமாநிலக் கும்பல்களைக் கண்காணித்து கைது செய்யத் தவறியதே, மூன்றாவது முறையாக ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் அளவுக்கு அக்கும்பலுக்கு துணிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏடிஎம் இயந்திரங்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் வெளிமாநிலக் கும்பல், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தொடர் கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட பவாரியா கும்பலோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அடுத்ததாகக் குடியிருப்புகளிலும் நுழைந்து தங்களது கைவரிசையைக் காட்டக்கூடும் என்பதால், அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக்கூட அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது.
அதோடு, சென்னை, அடையாறு அருகே தவெக நிர்வாகியும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கை கேள்விக்குறியாக்குவதோடு, குற்றவாளிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் ஏடிஎம் கொள்ளைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்திடுவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள சட்டம்–ஒழுங்கு நிலைமையில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினமான இன்று,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று.
பொதுவாழ்வில் நேர்மை, மக்களிடம் எளிமை என விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், அவர்களின் உரிமைகளையும் பெற்றுத்தர அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது பாடுபட்ட திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு, தனது உணர்ச்சிமிக்க உரைகளின் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டிய ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து GSLV F-17 ராக்கெட்டின் மூலம் EOS-05 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@isro
பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராமல், தர்மத்தின் பாதையில் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்பதோடு, அன்பு, பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் சமநிலை ஆகிய பண்புகளுடன் வாழ்ந்தால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
“தர்மத்தை நிலைநாட்டி, தீமையை அகற்றி, நன்மையைப் போற்றுவதே வாழ்வின் உயர்ந்த நெறி” என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனையைப் பின்பற்றி, அவர் அவதரித்த இந்நாளில், அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திடட்டும் எனக் கூறி, மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் – Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்?
பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?
சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?
எனவே, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று, திருநெல்வேலி, நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன்.
@JCDPrabhakar@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
சகோதர, சகோதரிகளுக்கிடையே நிலவும் அன்பு, பாசம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறவுகளின் புனிதத்தையும், சகோதரத்துவத்தின் மகத்துவத்தையும் போற்றும் இந்நன்னாளில், பெண்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சமூகத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபாரமான திறமையாலும், தளராத தன்னம்பிக்கையாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீரர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@rpraggnachess
தமிழகம் முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளை – கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்!
திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டின் கும்பகோணத்திலிருந்து 50-க்கும் அதிகமான பயணிகள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியதில், அவர்களில் 37-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
நேபாளத்தில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் அதிகாரிகளும் இணைந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, விரைவில் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@PMOIndia@CMOTamilnadu
நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல் – லஞ்சத்திற்கு எதிரான முதலமைச்சரின் முழக்கம் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம் தானா?
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, தவெக அரசின் மீதான விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.
எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ