சிறந்த இசையமைப்பாளர் - பாடல்கள் - சந்தோஷ் நாராயணன் (ரெட்ரோ, தலைவன் தலைவி)
மொத்தத் தமிழ்ச் சமூகமும் தங்கள் சொந்த வாழ்வின் சோகங்களையெல்லாம் மறக்கும் வகையில் ஆண்டு முழுக்க வைப் மெட்டீரியல்களை அள்ளித் தெளித்துக்கொண்டேயிருந்தார் சந்தோஷ் நாராயணன்.
‘கனிமா’ ஒலிக்காத கல்யாண வீடுகளே இல்லை எனும் வகையில் பட்டி தொட்டியெல்லாம் தெருவில் இறங்கிக் குத்தாட்டம் போட்டது.
அந்தப் பாட்டை நகலெடுத்து வந்த ரீல்ஸுகளைக் கணக்கில்கொள்ள முடியாமல் சமூக வலைதள அல்காரிதமே மூர்ச்சையானது.
‘ஒரு தீயில சொல்லெடுத்து’ என சித் ஸ்ரீராம் உச்சஸ்தாயி தொட்டபோது தரையில் துவண்டுபோய்க் கிடந்த மனங்களெல்லாம் உத்வேகம்கொண்டு எழுந்தன.
திரையில் சூர்யா ‘தி ஒன்’ ஆனார்.
முடிவுரை எழுதப்படா காதல் கதைகளின் மொத்தக் குரலாக ஒலித்தது ‘கண்ணாடிப் பூவே.’
திருமணத்துக்குப் பின்னான ஊடலை, கேலியும் கொஞ்சலுமாய் உறவாடிய ‘பொட்டல மிட்டாய்’க்கு மணமான ஒவ்வொரு ஜோடியுமே தலைவனும் தலைவியுமாய் ஆனார்கள்.
இசைக்கு ஏது மொழி என்பதை மெய்ப்பிப்பதுபோல் எல்லைகள் கடந்தும் களிப்புக்கான காரணியானது இந்த மிட்டாய்.
மணநாளை எதிர்பார்த்து பரிதவித்துக் காத்திருக்கும் இதயங்களுக்கு இதமாய் ஒத்தடம் கொடுத்தது ‘ஆகாச வீரன்.’
காதலின் கொடையான குழந்தைக்கு, தந்தை பாடும் தாலாட்டாக தலைவருடியது ‘செல்லக் கோளாறே.’
இப்படியாக, அடுத்தடுத்து தன் சாதனைகளைத் தானே முறியடித்து மாதக்கணக்கில் விளையாடிக்கொண்டிருந்தார் ச.நா.
எளிய மனிதர்களுக்கு அணுக்கமாய் இசை படைத்து அவர்கள் தோள்மேல் கைபோட்டு வழிநடத்தும் சந்தோஷ் நாராயணன், இந்த மண்ணின் ஓசை.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #SanthoshNarayanan | #Retro | #ThalaivanThalaivii | #BestMusicDirector