விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும். எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.
முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா? திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது? சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா? திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, இந்தி மொழி எதிர்ப்பு, வகுப்புவாரி இடப்பங்கீடு, அதிகாரத்தில் பங்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண் விடுதலை, சனாதன எதிர்ப்பு, தீண்டாமைக்கொடுமை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்த சமூகநீதிப்போராளி!
ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப்பெற்றிட தம் வாழ்வினையே ஒப்புவித்த இலட்சியவாதி!
'தமிழன்' எனும் இதழை நடத்தி பகுத்தறிவையும், சமத்துவத்தையும் போதித்து, இனமான உணர்வு ஊட்டிய பெருந்தமிழர்!
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வர்ணாசிரம கோட்பாட்டினைத் தகர்த்தெறிய 'தமிழர்கள் இந்துக்கள் அல்லர்' என்பதை அறுதியிட்டு நிறுவிய பெருந்தகை!
'சென்னை ஐஸ் ஹவுஸ்' தொழிலாளர்களைத் திரட்டி ஆங்கிலேயே அரசின் கொடுமைக்கு எதிராக இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த புரட்சியாளர்!
பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இல்லாதிருந்த தமிழர் மறையாம் திருக்குறளை, தன் குடும்பச் சேமிப்பு ஓலைச்சுவடிகளிலிருந்து தேடி எடுத்து ஆங்கிலேய அதிகாரி எல்லிஸ் மூலம் அச்சு பதிப்பித்து, அடுத்த தலைமுறையிடம் கையளித்த தகைமையாளர்!
தமிழ்ச்சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாமேதை!
முருகக்கடவுள் வரலாறு, விபூதி ஆராய்ச்சி, நந்தன் சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நூல்களை இயற்றி அன்னை தமிழுக்கு அணிசேர்த்த தமிழ்ப்பேரறிஞர்!
தமிழர்களின் உண்மையானப் பெரியார்!
சமூக சீர்த்திருத்தங்களின் தந்தை!
பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
https://t.co/gpuLewS1mx
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர்ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi
தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப
நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக திகழ்ந்து, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலியத் தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி என்பது தோல்வி அல்ல; அதுதான் வெற்றிக்கான முதல் படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப் போவதில்லை!
தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காதவரை!
உலகில் வெற்றியின் சிகரங்கள் தொட்ட சாதனையாளர்கள் யாவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள் தான்!
மதிப்பெண்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மந்திர எண்கள் அல்ல! அவை குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயின்றதை அளவிடும் வெறும் அளவீட்டு எண்கள்தான்!
மதிப்பெண்கள் மட்டுமே மனித அறிவையும், ஆற்றலையும் தீர்மானிப்பதில்லை!
ஆகவே, என்னருமை தம்பி-தங்கைகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி பெறுவீர்கள்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்!
தோல்வியை ஏற்க முடியாத சிலர், EVM வாக்கு எந்திரத்தில் குளறுபடி என்று பேசி மக்களை குழப்பும் வேலைகளை செய்து வருகிறார்கள்!
இவர்கள் வாதப்படி பார்த்தால், தவெக வுக்கு 108 இடங்களை setting செய்து கொடுத்த பாஜக, தான் போட்டியிட்ட 27 இடங்களில் ஒரு 5 இடங்களை செய்திருக்கலாமே! ஏன் ஒரே ஒரு தொகுதியில் சுருங்கிப் போனார்கள்?
ஒரு தொகுதிக்கு சராசரியாக 350 வாக்கு எந்திரம் என்றால், தவெக வென்ற 108 தொகுதிகளுக்கு (108 × 350 = 37,800) வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய வேண்டும்!
அடிப்படை அறிவு இருக்கிற யாரும் வாக்கு எந்திரத்தில் முறைகேடு என்று சொல்ல மாட்டார்கள்!
தோல்வியை ஏற்க மனமில்லாத சோம்பேறிகளின் சப்பைக்கட்டுகள் தான் இவை!
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.