நிறையத் திரைப்படங்களில் மனதை தொடும் ஆஸ்பத்திரி சீன்கள் இருக்கும். ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் படம் முழுக்க முழுக்க மருத்துவமனையிலேயே எடுக்கப்பட்டிருக்கும்.
தேவர் மகன் திரைப்படத்தில் வடிவேலு கை வெட்டப்பட்டு இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஒரு வித நெகிழ்ச்சி.
25 ஆண்டுகளாக எப்போது மருத்துவமனைக்கு போனாலும் ஒரு சீன் மின்னலாக மனதில் வந்து விட்டுப் போகும். அது முகவரி பட சீன்.
படத்தில் அஜித் அண்ணன் ரகுவரனை நண்பர் ராஜீவ், முதலில் ஒரு காட்சியில் தன் தம்பிக்கு திருமணமாகப் போவதாக சொல்லிவிட்டு ஸ்ரீதரும் (அஜித்) அந்த செட்தானே நீ இப்ப என்ன பண்ற என்பது போல கேட்பார்.
இசையமைப்பாளர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித் மிகவும் சங்கடப்படுவார். அப்போது கிட்டத்தட்ட ஒரு வில்லன் வேடம் போலவே தோன்றும் ராஜீவை பார்க்கையில்.
வீட்டில் ஒரே சம்பாதிக்கும் ஜீவன் ரகுவரன் தான். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். ஏகப்பட்ட செலவுகள் அணிவகுத்து நிற்கும். அப்போது விஷயம் கேள்விப்பட்டு ராஜுவ் மருத்துவமனைக்கு ஓடோடி வருவார். அஜித் வாசலில் நிற்பார். தக்கென்று தன்னுடைய பர்ஸை எடுத்து அஜித் கையில் திணித்து, பில் எல்லாம் பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு போவார்.
அவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த காட்சி.
வாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு படி தூக்கி விட ஒரு ஆதரவு கரம் தேவைப்படுகிறது. அந்த கரம் கிடைப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் அந்த கரம் ஒரு நண்பனுடையதாக இருக்கிறது.
அப்படி ஒரு நண்பனின் கரம் எல்லோருக்கும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.