#1310
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா
விளக்கம் : ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்
#1309
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
விளக்கம் : நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
#1308
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி
விளக்கம் : நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
#1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
விளக்கம் : கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு
#1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
விளக்கம் : பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்
#1305
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து
விளக்கம் : மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்
#1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
விளக்கம் : ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
#1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
விளக்கம் : ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்
#1301
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
விளக்கம் : ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக
#1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
விளக்கம் : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்
#1299
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
விளக்கம் : துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
#1298
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
விளக்கம் : பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்
#1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு
விளக்கம் : அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்
#1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு
விளக்கம் : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது
#1295
பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
விளக்கம் : என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்
#1294
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
விளக்கம்
நெஞ்சே முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய் எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள் நான் பேசுவதாக இல்லை
#1293
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்
விளக்கம்
நெஞ்சே நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?
#1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
விளக்கம்
நெஞ்சே நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும் நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே
#1291
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
விளக்கம் : நெஞ்சே நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?