மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை,கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மீது காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை, சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும், கருத்து சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்!.
ஒரு பேச்சு இரட்டை அர்த்தத்தில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த முறையான மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொண்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவெக பெண் நிர்வாகி புகார் அளித்தார் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாக கைது செய்திருப்பது முற்றிலும் பழிவாங்கும் அரசியலாகும்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் @CMOTamilnadu அவர்கள் பேசும்போது இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு இருக்க, பொதுமக்கள் யாரேனும் புகார் அளித்தால் முதலமைச்சர் மீது இதே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா?
முதலமைச்சரின் நண்பர் அல்லது நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதற்காக மட்டுமே இந்த அளவுக்குக் காவல்துறை விரைந்து செயல்படுகிறதா? அல்லது சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இதே வேகத்தில் நடவடிக்கை தொடருமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனங்களைத் தடுத்து, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சனநாயத்திற்கு ஆபத்தான தவறான முன்னுதாரணமாகும்.
அரசியல் விமர்சனங்களையும் கருத்துக்களையும் சட்டரீதியாகவும் சனநாயக ரீதியாகவும் எதிர்கொள்வதே முதிர்ச்சியான அரசுக்கு அழகு. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பழிவாங்கும் கைது நடவடிக்கைக்கு தமிழர் தேசம் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது!..
இன்று கொங்கு நாட்டின் பெரும் வீரன், விடுதலைப் போராட்ட களத்தில் ஆங்கிலேயர்களுக்குப் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம்!
இளமையிலேயே சிலம்பம், வாள்வீச்சு, வில்வித்தை மற்றும் குதிரையேற்றம் ஆகிய அனைத்துப் போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் தீர்த்தகிரி.
மைசூர் சுல்தான் ஹைதர் அலியின் வரி வசூல் அதிகாரி முகமது அலி, கொங்கு நாட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு மைசூர் சென்றுகொண்டிருந்தார். வழியில் அவரை மறித்த தீர்த்தகிரி, அனைத்துப் பணத்தையும் பறித்து ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
அப்போது வரி அதிகாரியிடம், "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் இருக்கும் 'சின்னமலை' பறித்ததாகப் போய் உன் சுல்தானிடம் சொல்!" என்று கம்பீரமாக முழங்கினார். அன்றிலிருந்து அவர் 'தீரன் சின்னமலை' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
திப்பு சுல்தானுடன் கைக்கோர்த்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான மூன்றாம் மற்றும் நான்காம் மைசூர் போர்களில் தீரமுடன் போரிட்டார். திப்புவின் மறைவுக்குப் பின், ஓடாநிலை என்ற இடத்தில் கோட்டை கட்டி, பீரங்கிகள் மற்றும் போர்க்கருவிகளைத் தயாரித்துத் தன் சொந்தப் படையை உருவாக்கினார்.
காவேரிக் கரைப் போர், ஓடாநிலைப் போர் மற்றும் அரச்சலூர் போர்களில் ஆங்கிலேயப் படைகளைத் தந்திரமான 'கொரில்லா தாக்குதல்' முறை மூலம் சிதறடித்துத் தோற்கடித்தார். ஆங்கிலேயர்களால் நேருக்கு நேர் தீரன் சின்னமலையை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, அவரது சமையல்காரரான நல்லப்பன் என்பவனின் துரோகத்தால் ஆங்கிலேயர்களிடம் சிக்கினார்.
ஆங்கிலேயர்கள் அவரைப் மன்னிப்பு கேட்கச் சொன்னபோதும், தங்களின் அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, 1805 ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டையில் தனது சகோதரர்களுடன் தூக்கிலிடப்பட்டார் (ஆடி 18 பெருக்கு நாளன்று). தூக்கிலிடப்படும் தருணத்திலும் தலைநிமிர்ந்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் உயிரை அற்பணித்தார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த நம் தாய்நாட்டின் மாபெரும் மாவீரனின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குவோம்!
"உயிரை விட மானமே பெரிது!" என்று வாழ்ந்து காட்டிய கொங்கு மண்டலத்தின் வீரத் திருமகனுக்கு வீரவணக்கம்!
இன்றைய தினம் 03.08.2026, திங்கட்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறையில், தமிழர் தொழிற்சங்க நடுவம் சார்பில் புதிய ஆட்டோ தொழிற்சங்கத்தை, ஆட்டோ ஓட்டுநர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!
இந்த நிகழ்வில், தொழிற்சங்கத்தின் உடைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய தினம் 03.08.2026, திங்கட்கிழமை - ஈரோடு மாவட்டம், அறச்சலூர், கொட்டாரத் தோட்டத்தில் நடைபெற்ற, கொல்லிமலை வேந்தன், மன்னர் வல்வில் ஓரி விழாவில் கலந்து கொண்டு, அவரின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தோம்!..
தமிழ் மண்ணின் வீரம், கொடை, இயற்கை வளத்தைப் போற்றும் வல்வில் ஓரி விழா மற்றும் ஆடி 18 பெருக்குத் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்!
சங்க காலத்தில் தமிழ் நிலத்தை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் ஆடி 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் கொல்லிமலையில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சங்க காலத்தில் கொல்லிமலை பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் மன்னர் வல்வில் ஓரி. வில்லாற்றலில் இவருக்கு நிகர் இவரே என்பதால், 'வல்லிய வில்லையுடைய ஓரி' எனப்பட்டு "வல்வில் ஓரி" என்று அழைக்கப்பட்டார்.
வல்வில் ஓரியின் வில்லாற்றலைச் சங்கப் புலவர் கபிலர் புறநானூற்றில்,
"வேழம் வீழ்த்திய வெண்கோட்டு அம்பின்..."
ஓரி எய்த ஒரே ஒரு கணையானது,
முதலில் ஒரு பெரிய யானையைத் துளைத்தது.
அடுத்து வாயைப் பிளந்து வந்த புலியை கொன்றது.
தொடர்ந்து ஓடிய ஒரு மானை வீழ்த்தியது.
பின்னர் ஒரு காட்டுப்பன்றியைச் சாய்த்தது.
இறுதியாகப் புற்றிலிருந்த ஒரு உடும்பின் மீது பாய்ந்து நின்றது!
ஒரு அம்பில் ஐந்து விலங்குகளை வீழ்த்திய இந்த இணையற்ற வீரமே அவருக்கு 'வல்வில் ஓரி' என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. வீரத்தில் மட்டுமல்லாது கொடையிலும் ஓரி நிகரற்றவராகத் திகழ்ந்தார்.
தன்னைத் தேடி வரும் பாணர்களுக்கும், விறலியர்களுக்கும், புலவர்களுக்கும் பரிசில்களை அள்ளிக் கொடுத்தார்.
பரிசிலர்களுக்கு வெறும் பொன்னும் பொருளும் மட்டும் தராமல், தான் ஆட்சி செய்த நாட்டையே பரிசாகக் கொடுக்கும் பழக்கம் உடையவர் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.
இயற்கையும் நதிகளும் பொங்கிப் பெருகும் இந்த ஆடிப் பெருக்கு நாளில், வல்வில் ஓரியின் வீரத்தையும் கொடைப் பண்பையும் நெஞ்சில் ஏந்துவோம்.
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு! என்று முழங்கிய பாரத ரத்னா, முன்னாள் குடியரசுத் தலைவர், “இந்தியாவின் ஏவுகணை நாயகர்” டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று.
இராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் இந்தியாவின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த அந்த மாமனிதரின் வாழ்வு ஒவ்வொருவருக்கும் ஆகச்சிறந்த பாடம்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவூர்தியான SLV-III திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு, 'ரோகிணி' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தக் காரணமானவர். அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளை உருவாக்கி, பாதுகாப்புத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்தவர்.
இந்தியாவின் அணுசக்தி வல்லமையை உலகிற்குப் பறைசாற்றிய 'பொக்ரான்-II' சோதனையில் முதன்மைச் சிற்பியாகச் செயல்பட்டவர். இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சோமராஜு அவர்களுடன் இணைந்து ஏழை மக்களுக்காக மிகக் குறைந்த விலையில் "கலாம்-ராஜு ஸ்டென்ட்" மற்றும் இலகுரக மாற்றுத்திறனாளி கருவிகளை உருவாக்க உதவினார்.
2002 முதல் 2007 வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய கலாம் அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகத் திறந்து வைத்தார். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதும் எளிமையின் சிகரமாகவே வாழ்ந்தார்.
கோடிக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடி, அவர்களிடம் "வல்லரசு இந்தியா" என்ற தொலைநோக்குப் பார்வையை விதைத்தார். மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டவர்.
இன்று நாம் அவருக்குச் செய்யும் இதய அஞ்சலி, அவர் கண்ட கனவுகளுக்கு உயிரூட்டுவதும், அவர் வழியில் நேர்மையாகவும் உழைப்புடனும் வாழ்வதுமே ஆகும்!
"உங்கள் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவரது நினைவைப் போற்றுவோம்!..
இசையுலகின் ஆகாய கங்கை... விடைபெற்றார் ஜானகி அம்மா!
நம்பவே முடியவில்லை... பல தலைமுறைகளாக நம் வீடுகளிலும், மனங்களிலும் தனது தேன்குரலால் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த அந்த 'இசைக்குயில்' தன் பாடலை நிறுத்திக் கொண்டதா?!
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, நான்கு மொழிகளில், 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இந்தியத் திரையிசையின் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்த மரியாதைக்குரிய 'பாடும் நிலா' எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும், கோடிட்டுச் சொல்ல முடியாத பேரிழப்பாகும்.
'சின்னச் சின்ன வண்ணக்குயில்' என்று அவர் துள்ளலாகப் பாடினால் நம் மனமும் சிறகடிக்கும், 'உருகும் உன்னைக் கண்டு' என்று அவர் உருகினால் நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கும். கொஞ்சும் மழலையின் குரலாகட்டும், காதலின் தவிப்பாகட்டும், தாலாட்டின் தாய்மையாகட்டும்... அத்தனை உணர்வுகளையும் தன் குரல் வளத்தால் மட்டுமே கடத்தியவர் அவர்!
மெல்லிசை மன்னர் MSV முதல், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசை மேதைகளின் கற்பனைகளுக்கும் உயிர் கொடுத்தவர் ஜானகி அம்மா. குறிப்பாக, SPB - ஜானகி அம்மாவின் கூட்டணி என்பது தமிழ் திரையிசையின் பொற்காலமாகும்.
அவரது எளிமையும், எதற்கும் ஆசைப்படாத அந்தப் பெருந்தன்மையும், விருதுகளை விட ரசிகர்களின் அன்பே பெரிது என்று வாழ்ந்த குணமும் அவரை சாதாரணப் பாடகியாக அல்லாமல், நம் வீட்டுத் தாயாக மாற்றியது.
உடல் மறைந்தாலும், காற்றுள்ள வரை... இந்த பூமியில் இசை உள்ள வரை உங்களது குரல் அலைகள் காற்றில் மிதந்து கொண்டே இருக்கும் அம்மா!
ஜானகி அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!...
இன்றைய தினம் (14.07.2026, செவ்வாய்க்கிழமை), திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், காசம்பட்டி கிராமத்திற்கு சொந்தமான அழகர் கோவில் வழிபாட்டு உரிமை, கடந்த 17 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. நமது வழிபாட்டு உரிமையும், ஆன்மீக மரபும் யாராலும் பறிக்கப்பட முடியாதவை.
இந்த நிலையில், இன்று காசம்பட்டி கிராமப் பெரியோர்களை நேரில் சந்தித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்தேன். இழந்த வழிபாட்டு உரிமையை சட்டரீதியாகவும், அமைதியான முறையிலும் எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த விரிவான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கினேன்.
பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அநீதிக்கு விரைவில் ஒரு சுமுகமான மற்றும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். காசம்பட்டி கிராம மக்களின் நியாயமான ஆன்மீக உரிமை மீட்டெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு உறுதுணையாக தோளோடு தோள் நின்று போராடுவோம்!..
"கோட்டையில் அமர்ந்திருந்தும்
குடிசைகளை மறவாத குணம்...
அதிகாரம் கையில் இருந்தும்
ஆடம்பரம் அறியாத மனம்..."
தமிழகத்தின் விதியைத் தன் மதி நுட்பத்தால் மாற்றி எழுதிய மாமனிதர், கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன்!
மதிய உணவு என்ற ஒரு திட்டத்தின் மூலம், ஏழைத் தாயின் வயிற்றில் இருந்த பசியையும், அந்தப் பிள்ளையின் கையில் இருந்த அறியாமை இருளையும் ஒரே நேரத்தில் போக்கிய தீர்க்கதரிசி. "பிள்ளைகள் படிக்கட்டும், செலவை அரசாங்கம் ஏற்கும்" என்று ஒற்றை வரியில் ஏழைக் குடும்பங்களின் தலைவிதியை மாற்றிய கல்வித் தந்தை.
'கே-பிளான்' (K-Plan) மூலம், கட்சிப் பணிக்காகத் தன் முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்த தியாகச் செம்மல்.அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, நாட்டின் இரண்டு பிரதமர்களை (லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி) உருவாக்கிய 'கிங் மேக்கர்' ஆக இருந்தும், இறுதிவரை ஒரு வாடகை வீட்டிலும், சில கதர் வேட்டிகளுடனும் மட்டுமே வாழ்ந்து மறைந்த உன்னதத் துறவி!
வைகை அணை, சாத்தனூர் அணை, மணிமுத்தாறு அணை எனத் தமிழகத்தின் நதிகளைக் கட்டிப்போட்டு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தவர். தொழிற்சாலைகளைப் பெருக்கி, பின்தங்கியிருந்த மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டிய நிர்வாகத் திறன் மிக்க தலைவர்.
இன்று நாம் அனுபவிக்கும் கல்வி, தொழில், விவசாய வளர்ச்சி என அத்தனையிலும் பெருந்தலைவரின் வியர்வைத் துளிகள் கலந்திருக்கின்றன.
மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காகவே மறைந்த அந்தப் படிக்காத மேதையின் தூய்மையான அரசியலையும், நேர்மையையும் இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்!
கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துகள்!
இந்திய மண்ணில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் ஆயுதம் ஏந்தி, சுதந்திரப் போராட்டக் கனலை மூட்டிய மாபெரும் பாட்டனார், கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை விழா இன்று!
மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் மானத்திற்காகவும் ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் முறையை எதிர்த்து நெஞ்சுரத்தோடு நின்றவர். காட்டிக்கொடுத்தால் உயிரும், பெரும் செல்வமும் தருவதாக வெள்ளையர்கள் ஆசை காட்டியபோதும், "மண்ணை காட்டிக்கொடுத்து வாழும் உயிர் எனக்குத் தேவையில்லை" என்று கம்பீரமாக மறுத்தவர்!
1759-ஆம் ஆண்டு நடுக்காட்டுப் பகுதியில் ஆங்கிலேய பீரங்கிகளுக்கு முன்னால், தன் படைவீரர்கள் 6 பேருடன் நெஞ்சு நிமிர்த்தி நின்றார். கைகள் பீரங்கி வாயில் கட்டப்பட்டிருந்த போதும், மரண பயமின்றி தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த அந்த வீர வரலாறு, நம் நரம்புகளில் என்றும் தேசபக்தியை ஊட்டும்!
ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளுக்குத் தன் மார்பைக் காட்டி, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம்பிடித்த வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம்!
அவரது வழியில் மண்ணையும், மொழியையும், மக்கள் ஒற்றுமையையும் காக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சமநீதி போராளி அண்ணன் @KKSelvakumaroff அவர்களின் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்.
நாள் : 20.07.2026, திங்கட்கிழமை
நேரம் : காலை 9.00 மணி
இடம் : அய்யலூர் இரயில் நிலையம்
@CMOTamilnadu@tnpoliceoffl@NewsTamilTV24x7
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 3 முக்கிய செய்தி அலைவரிசைகளை தன்னிச்சையாக நீக்கியது வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இந்த சனநாயக விரோதப் போக்கைக் கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களை எவ்வித நிபந்தனையுமின்றி, உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்!..
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மூன்று முக்கிய செய்தி சேனல்களான, @polimernews , @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகிய தொலைக்காட்சிகளை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தனது ஒளிபரப்புத் தொகுப்பிலிருந்து தன்னிச்சையாக நீக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத் துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களாட்சியில் மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதும், அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு விமர்சிப்பதும் ஊடகங்களின் கடமையாகும். ஆனால், மாற்றுக்கருத்துகளுக்கோ அல்லது தங்களுக்குச் சாதகமற்ற செய்திகளுக்கோ இடமளிக்கக் கூடாது என்ற நோக்கில், அரசு பொதுத்துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி இவ்வாறு சேனல்களை முடக்குவது சனநாயக விரோதச் செயலாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை காரணமாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மக்கள் படும் அவதிகளை இந்த மூன்று செய்தி சேனல்களும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட மூன்று செய்தி சேனல்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக அரசு கேபிள் அலைவரிசையில் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும். அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஒளிபரப்பை முடக்குவதன் மூலம் ஊடகங்களை மறைமுகமாக அச்சுறுத்தக் கூடாது.
ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்க உருவாக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம், அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.
கருத்துச் சுதந்திரமும், ஊடகச் சுதந்திரமுமே ஒரு ஆரோக்கியமான சனநாயகத்தின் அடையாளமாகும்.
அதை நசுக்க முற்படுவது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கூண்டில் அடைப்பதற்குச் சமம்.
அரசு தனது இந்த மக்கள் விரோத, ஊடக விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக அலைவரிசைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
அனைவருக்கும் எனது மனமார்ந்த தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகள்!
இறைவனின் தூதர் இப்ராஹீம் அவர்களின் உன்னதமான தியாகத்தையும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும் போற்றும் புனிதமான நாள் இன்று.
நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து மகிழும் ஈகைப் பண்பையும், சக மனிதர்கள் மீது காட்டும் உறைவிடமில்லா அன்பையும் இந்த நன்னாள் நமக்குக் கற்றுத் தருகிறது. தியாகமும், மனிதநேயமும் மட்டுமே இந்த உலகை இன்னும் அழகாக்க வல்லவை.
இந்த இனிய பக்ரீத் திருநாளில், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், நீடித்த அமைதியையும், அனைத்து வளங்களையும் வாரி வழங்க வேண்டுகிறேன்.
மகிழ்ச்சியைப் பகிர்வோம்... மனிதநேயத்தைக் காப்போம்!
அனைத்து இசுலாமிய சொந்தங்களுக்கும், என் நெஞ்சம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!..
பேரரசர் பெரும்பிடுகு முத்திரையினரின் 1351வது சதய விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பட்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
#DMKVirudhunagar#DMKAruppukottai
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | On the occasion of the 1351st Sathaya festival of Emperor Perumpidugu Mutharaiyar, Tamil Nadu Minister Ramesh, Tamil Nadu Urban Habitat Development Board Chairman Ku Pa Krishnan, State Assembly Deputy Speaker Ravi Shankar, and other governt and administrative officials of the state paid floral tributes to the statue of Emperor Perumpidugu Mutharaiyar at Othakadai in Trichy.
தமிழர் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதயவிழாவின் இறுதி நிகழ்வாக, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் "சதயவிழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" சிவகங்கை அரண்மனைவாசலில் சிறப்பாக நடந்து முடிந்தது!..
இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று எழுச்சி உரையாற்றினேன்!
இந்நிகழ்வில், தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் அனைத்துநிலை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
#முத்தரையர்_சதயவிழா
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1351 வது சதயவிழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பு அணி கண்ணப்ப நாயனார் குருதி கொடை இயக்கத்தின் சார்பில் நான் இன்று இரத்ததானம் கொடுத்தேன்.
#முத்தரையர்_சதயவிழா