ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை: தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டை மீண்டும் தங்களின் வேட்டைக்காடாக்கின. கோடிக்கணக்கில் பரிசு வழங்குவதாகவும், புதிதாக விளையாட வருவோருக்கு போனஸ் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் காட்டி, சூதாட்டம் ஆட வருமாறு தமிழக மக்களை அழைத்தன. அப்போதே இது குறித்து எச்சரித்த நான், ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகத் தான் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட இரு மாதங்களில் ஓர் ஆசிரியர் ரூ.8 லட்சத்தை இழந்திருக்கிறார் என்றால், ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு ஆக்டபஸ் போன்று வளைத்திருக்கிறது என்பதை உணர முடியும். ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படவில்லை என்றால், சரவணனைப் போன்று நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக்கூடும். அதை தடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததா, இல்லையா? என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#OnlineGamblingKills
#BanGambling
போக்குவரத்து தொழிற்சங்கங்களின்
கோரிக்கைகளை ஏற்க வேண்டும்; 9-ஆம் தேதி முதல்
நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்!
15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், வரும் 9-ஆம் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. பொங்கல் திருநாளுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட ஏராளமான முதன்மை பணிகள் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை; அவை பல ஆண்டுகளாக அவர்களால் வலியுறுத்தப்பட்டு வருபவை தான். அது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை இயன்ற வகையில் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற அரசு தவறி விட்டதன் விளைவாகவே வேலைநிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுகளை அடுத்த ஓரிரு நாட்களில் அரசு நடத்த வேண்டும். அந்தப் பேச்சுகளில் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் போக்குவரத்து அமைச்சரே பங்கேற்க வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி , அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்த குடந்தை மாநகராட்சியில் தங்குதடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்கள், தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள், மோசமான சாலைகள், சுகாதார சீர்கேடு மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.
@drramadoss@draramadoss #Kumbakonam
இது எந்த இடம் தெரியுமா ? பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் இருக்க வன்னிய தேனாம்பேட்டை தான்..
வந்தது யார் ? யாருக்கும் அடிபணியாத ஜெயலலிதா
இதுபோன்ற உதாரணங்கள் கூறுவது திராவிட கட்சிகளுக்கு பாமக நிகரானது என்பதை குறிப்பிடதான் 🔥
எந்தெந்த ஊரில், எந்தெந்த தெருவில் எத்தனை சாதிகள் உள்ளது. என்ற புள்ளி விவரம் திமுக -விடம் உள்ளது.!
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss
தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா?
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்துங்கள்!
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022-ஆம் ஆண்டு தவிர கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது!
பொங்கல் ரொக்கப் பரிசை நிறுத்துவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே பொங்கல் பரிசாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை வழக்கத்தை விட உயர்த்தி தான் வழங்க வேண்டுமே தவிர நிறுத்தக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படவில்லை. ஆனாலும் அந்த ஆண்டில் வெல்லம், நெய், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவற்றை வழங்குவதில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றைத் தவிர்ப்பதற்காகவே கடந்த ஆண்டில் வெல்லம்,நெய் உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் அவற்றை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ள வசதியாக ரூ.1000 வழங்கப்பட்டது. அதை இப்போது நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் ஏழை, பணக்காரர் வேறுபாடு இல்லாமல் அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பது தான் பொங்கல் பரிசு வழங்கப்படுவதன் நோக்கம். எந்தக் காரணமும் இல்லாமல் நடப்பாண்டில் பொங்கல் ரொக்கப்பரிசு நிறுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தமிழர் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும்? பொங்கல் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா?
தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, சென்னை புறநகர் மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6000 உதவித் தொகையை வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 மாத உரிமைத் தொகையும் தகுதியான பலருக்கு வழங்கப்படவில்லை. அதனால், பொதுமக்கள் மத்தியில் கடுமையாக மனக்குறை நிலவி வரும் சூழலில், பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கப்படாதது மக்களின் மனக்குறையை கோபமாக மாற்றி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.
எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும். அத்துடன், முழுக் கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல. அது அவர்களின் உற்பத்திச் செலவைக் கூட ஈடு செய்யாது. எனவே, செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
@CMOTamilnadu
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம்
செய்ய வேண்டும் - இடைக்கால குழு அமைக்க வேண்டும்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டு, இடைக்கால பிணையில் வந்துள்ள அதன் துணைவேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.
முந்தைய காலங்களில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த இராதாகிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் மட்டும் அவருக்கு தனிச்சலுகை காட்டப்படுவது வியப்பளிக்கிறது.
மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கான துணைவேந்தர் போன்ற உயர்பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தலைமறைவாக உள்ள பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைவேந்தரும், பதிவாளரும் இல்லாத சூழலில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
அரசு பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி ஒதுக்கீடு: தமிழ் மீது அக்கறை இருந்தால்
தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?
தமிழ்நாட்டில் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தவும், ஆண்டுக்கு மூன்று முறை தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு பள்ளிக்கு ரூ.9000/- வீதம் மொத்தம் ரூ. 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் குறித்து மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, தமிழை மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடிக்க முடியும் என்பது மட்டுமின்றி, பட்டமும் பெற முடியும் என்ற நிலை தான் இன்று வரை நீடிக்கிறது. தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட அந்த சட்டம் இன்று வரை நடைமுறைக்கு வராதது நல்வாய்ப்புக் கேடானது.
இந்தியாவின் பல மாநிலங்களில் அம்மாநிலத்தின் தாய்மொழி தான் கட்டாயப் பயிற்று மொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக 101 தமிழறிஞர்கள் சென்னையில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டனர். அதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதை செயல்படுத்த முடியவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்த அவலம் தமிழ்நாட்டில் தான் நடந்தது.
தமிழ் பயிற்றுமொழி, தமிழ் கட்டாயப் பாடம் ஆகிய பெருங்குறைகளை சரி செய்யாமல், தமிழ் மன்றங்களை மேம்படுத்துவதாலோ, தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஏற்படுத்த முடியாது. தமிழில் பயிற்றுவிப்பதன் மூலமாகவும், தமிழை படிக்கச் செய்வதன் மூலமாகவும் மட்டும் தான் மாணவர்களையும், தமிழையும் இரண்டறக் கலக்கச் செய்ய முடியும். எனவே, உச்சமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக நடத்தி தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதேபோல், தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே இன்று அதிகாலை தேனீர்க்கடையில் தேனீரருந்தி கொண்டிருந்தவர்கள் மீது சரக்குந்து மோதிய விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு சிறுமி உட்பட 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான மருத்துவம் அளித்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர்
அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீரையும், மழையையும் நம்பி சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால் கதிர் வைக்கும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜனவரி 28-ஆம் நாள் வரை தண்ணீர் திறக்கப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்ததாலும், ஏரி, குளங்களில் நீர் நிரம்பியிருந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாலும் அதைக் கொண்டு வழக்கத்தை விட பாதிக்கும் குறைவான பரப்பளவில் சம்பா - தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை என்பதால் கதிர் வைக்கும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன.
காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை நெற்பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கருகி விட்டன. அதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்போது சம்பா பயிருக்கும் அதேநிலை ஏற்பட்டால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பும், அதனால் கடன்சுமையும் ஏற்படும். அத்தகைய நெருக்கடியிலிருந்து காவிரி பாசன மாவட்ட உழவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 72 அடி, அதாவது 34 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதைக் கொண்டு வினாடிக்கு 6000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால், அதனால் நேரடிப் பாசனம், நீர்நிலைகளை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு ஆகியவற்றின் மூலம் சம்பா மற்றும் தாளடி பயிர்களைக் காப்பாற்றி விட முடியும். அதற்காக 5 டி.எம்.சி அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் செலவாகும். அதை சமாளிக்கும் அளவுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பதால் , சம்பா மற்றும் தாளடி பயிர்களைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழ்த்திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு. மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு அவரது இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு:
அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்!
சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது. அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கடந்த காலங்களில் இதேபோல் பல முறை வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதே பாதிப்பை கோரமண்டல் நிறுவனமும் ஏற்படுத்தியதாகத் தான் கருத வேண்டியிருக்கும். இது குறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியமும், காவல்துறையும் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை, அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வேதி ஆலைகளாலும், பிற காரணங்களாலும் அப்பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்; அத்தகைய பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வல்லுனர் குழுவிடமிருந்து 3 மாதங்களில் பரிந்துரை அறிக்கை பெற்று அதை முழுமையாக செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#Ennore_GasLeak
தே.மு.தி.கவின் நிறுவனரும், தலைவருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, அனைவரின் மனங்களையும் வென்றவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர். அதன்பின் 2005&ஆம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர்.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் மீதும் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. 2014&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர். கடந்த 2019&ஆம் ஆண்டில் அவர் உடல்நலம் பாதித்திருந்த போது அவரை மருத்துவர் அய்யா அவர்களுடன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பும், உறவும் இயல்பானதாக தொடர்ந்தது.
அரசியலையும், திரைவாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அனைவரையும் சமமாக மதித்தவர். அனைவரிடமும் அன்பு காட்டியவர். உடல்நலக் குறைவால் ஒவ்வொருமுறையும் மருத்துவமனையில் அனுமதிகப்படும் போது, அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதும், உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துவதும் வழக்கம். இப்போதும் வழக்கமான மருத்துவ ஆய்வுக்காகவே மருத்துவனையில் அவர் சேர்க்கபட்டிருப்பதாக அறிந்த நிலையில், ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார்; அரசியல் பணியை தொடர்வார் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன்.
ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை; தாங்க முடியவில்லை. அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளரும், மனைவியுமான சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த சமூக முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகியும், பண்ருட்டி சார்பதிவாளருமான ஆறுமுகம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சமூக முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று டிசம்பர்-28, பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன் லயன் டாக்டர் #பாலா (எ) #வ_பாலயோகி BBA,LLB,D.LIT, மாநில இளைஞர் சங்க செயலாளர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு:
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. குற்றவியல் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம். ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் கூட வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையும், நிலைப்பாடும் ஆகும். பாதிக்கப்பட்ட தங்கள் மீதே ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது தான் தங்களை நிம்மதியாக வாழ வைக்கும் என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர். வேங்கைவயல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாழும் பிற சமூகத்தினரும் தங்கள் மீது தேவையின்றி பரப்பப்படும் அவதூறுகளை நிறுத்த உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் என்ன தயக்கம்? என்று தெரியவில்லை.
வேங்கைவயல் கொடுமை குறித்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகும் கூட, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலும் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையோ? என்ற ஐயத்ததை தான் இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.
வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதே போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்த செய்திகள் வெளியில் வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி, அந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன அல்லது வேறு காரணங்களைக் கூறி திசை திருப்பப்படுகின்றன. இதே நிலை தொடரக்கூடாது. அதை உறுதி செய்வதற்காக வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@tnpoliceoffl
காவல்துறை நண்பர்களுக்கு எனது வேண்டுகோள்.
இந்த அதிகாரி யாரென்று எங்களுக்குத் தெரியாது. நக்கீரன் கோபாலுக்கு எந்தவிததில் இவரைத்தெரியும் என்பதும் தெரியாது. ஆனால் ஒரு கூலியாள் மஞ்சள பனியன் போட்ட காரணத்தால் வேறு ஒருநபர் தாக்கிய சம்பவத்தில் நக்கீரன் கோபால் வான்டடாக உள்புகுந்து இந்த காவல் அதிகாரி மஞ்சள் பனியன் அணிந்த நபரை சம்பவ இடத்திற்கு செட்ப் செய்து அனுப்பியதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளைவைத்து இவர் ஏதோ செய்யப்போகதாகவும் அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார். இதில் இந்த காவல் அதிகாரியின் தொடர்பு இருப்பது கோபாலுக்கு தெரியவந்திருந்தால் நியாயமாக செய்திருக்கவேண்டியது காவல் உயர் அதிகாரிகளிடம் உரிய ஆதாரங்களோடு இதுபற்றி தெரிவித்திருக்கவேண்டும். அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க கோரியும், அப்படி எடுக்காத பட்சத்தில் அவரது ஊடக்திலும், நீதிமன்றத்திலும் இதுபற்றி தெரிவித்திருக்கவேண்டும். பரவாயில்லை அவரது ஊடக விற்பனை பரபரப்பாக்கவே அவர் அவரது ஊடகத்தில் மட்டும் செய்தியாக வெளியிட்டிருக்கலாம். ஆனால் ஒரு உயர்பதவியில் உள்ள காவல் அதிகாரிபற்றி ஒரு அவதூறு செய்திபோடும்போது அதற்கான ஆதாரங்களையும் வெளியிட வேண்டுமே. அதுபோன்ற ஆதாரங்கள் இருந்தால் காவல்துறை அந்த ஆதாரங்களைப் பெற்று அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கலாம். ஆதாரம் உள்ளதா? அப்படி இல்லையென்றால் விளம்பரத்திற்க்காகவும், பரபரப்பான பத்திரிக்கை விற்பனைக்காகவும் கோபால் இவ்வாறான பொய் செய்தியை வெளியிட்டிருந்தால் காவல்துறை அவரைக்கைதுசெய்து நடவடிக்கை எடுக்குமா? காவல்துறைமீது களங்கம் கற்பித்த நக்கீரன் பத்திரிக்கையை இந்த அரசு தடைசெய்யுமா?
@tnpoliceoffl@mkstalin