அதானியை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்களின் மொபைல்களை மோடி அரசு ஹேக் செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் ஒரு ஆய்வினை வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் மாதம் சில பத்திரிக்கையாளர்களின் மொபைலுக்கு, அவர்களின் மொபைல் அரசின் துணையுடனான ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை அனுப்பியது.
அவர்களது விவரங்களை ஆராய்ந்ததில் அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது.
அவர்கள் எல்லோருமே அதானியின் முறைகேடுகள் குறித்தும், மோடியுடனான நெருக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியவர்கள்.
அதானி குறித்து OCCRP நிறுவனத்தின் செய்தியாளர் கேள்வி எழுப்பி மின்னஞ்சல் அனுப்பிய 24 மணி நேரத்தில் அவரது மொபைலில் பெகாசஸ் உளவு செயலி நிறுவப்பட்டிருந்தது.
இப்படி பல தகவல்களை வாஷிங்டன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் கட்சியாக இவ்விழாவில் பங்கேற்க முடியாது என எதிர்ப்பினை சிபிஎம் பதிவு செய்துள்ளது.
மதம் என்பது தனிநபர் விருப்பமாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் லாபத்திற்கான கருவியாக பயன்படுத்தப்படக் கூடாது.
உச்சநீதிமன்றம் குறிப்பிட்டபடி, இந்திய அரசியல் சாசனம் அரசுக்கு மதச்சார்பு இருக்கக் கூடாது என்று தெரிவிக்கிறது. இந்த அடிப்படை விதியானது இந்நிகழ்வை ஒருங்கிணைக்கும் பாஜக ஆட்சியினால் மீறப்படுகிறது.
இவ்வாறு சிபிஎம்-மின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
81.5 கோடி இந்திய மக்களின் ஆதார் தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. இதற்கு உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசின் முன்னாள் செயலாளர் இ.எ.எஸ்.சர்மா கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
டார்க் வெப்-பில் 81.5 கோடி இந்திய மக்களின் ஆதார் தகவல்கள் விற்பனைக்கு விடப்பட்டதை அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெசுரிட்டி வெளிக்கொண்டு வந்தது.
மொபைல் எண்கள், பாஸ்போர்ட் தகவல்கள், முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்தல், போலி மொபைல் எண்களை உருவாக்கி மிரட்டுதல் என பல குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இது மிகவும் ஆபத்தான விடயம். இதன் மேல் சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் இ.எ.எஸ்.சர்மா இந்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் வரலாற்றில் இதுவரை நடக்காத பல விடயங்களை பாஜக அரங்கேற்றி இருக்கிறது. அது இக்கூட்டத்தொடரின் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அப்படி இக்கூட்டத்தொடரில் நடந்தது என்ன?
* எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
* இடைநீக்கம் செய்யப்பட்ட 146 எம்.பிக்கள் அனுப்பிய அத்தனை கேள்விகளும் பதிலளிக்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
* மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மகுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
* இக்கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா கூட பாராளுமன்றத்தின் நிலைக்குழுவிற்கோ, கூட்டுக் குழுவிற்கோ அனுப்பப்படவில்லை.
* கூட்டத்தொடரில் பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. முந்தைய கூட்டத்தொடரில் நிலுவையில் இருந்த மேலும் 7 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
146 எதிர்கட்சி எம்.பிக்களை இடைநீக்கம் செய்துவிட்டு, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் விவாதம் இல்லமால் 5 சர்ச்சைக்குரிய முக்கிய மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
3 New Criminal Law bills to Replace IPC, CRPC, Evidence Act
Chief Election Commissioner Bill,
Telecommunications Bill 2023
இந்த 5 மசோதாக்களும் தமிழ்ச்சமூகம் அதிகம் விவாதிக்க வேண்டிய மசோதாக்கள்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மனித உரிமை செயல்பாட்டளர் கெளதம் நவ்லகாவிற்கு பிணை வழங்கியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
ஆனாலும் இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய NIAவிற்கு 3 வாரம் கால அவகாசம் வழங்கி பிணையினை நிறுத்தியும் வைத்துள்ளது.
2018-ம் ஆண்டின் பீமா கொரேகான் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கெளதம் நவ்லகா, தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் அமைப்பு தொடர்பான புத்தகங்கள் மற்றும் இலக்கியங்களை வைத்திருந்ததாலேயே அவர் மீது பயங்கரவாதம் தொடர்பான UAPA விதிகளை சுமத்த முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசாங்கம் 2019-ம் ஆண்டிலிருந்து செய்தித்தாள்களுக்கான விளம்பரத்திற்கு மட்டும் அரசு பணம் 967.46 கோடியை செலவு செய்துள்ளது.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இத்தகவலை அளித்துள்ளார்.