என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்வதா?
அடக்குமுறையும், அத்துமீறலும் அறத்தின் முன் மண்டியிடும் காலம் வெகுதொலைவில் இல்லை!!
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் கத்தாழை, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, சின்ன நெற்குணம் ஆகிய 5 ஊராட்சிகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் என்று கூறப்பட்டாலும், என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அவர்கள் உதவியாக இருந்தது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அப்பட்டமான இந்த பழிவாங்கல் கண்டிக்கத்தக்கது.
உலக தண்ணீர் நாளான மார்ச் 22-ஆம் நாள் என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிரான கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விசாரிக்கப்பட்டது. அதனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று நம்பினோம். ஆனால், அதிகாரவர்க்கம் மீண்டும், மீண்டும் அதன் இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
ஒருபுறம் நிலப்பறிப்புக்கு எதிராக போராடிய பெண்கள் மீது வழக்கு போட்டு மிரட்டுகிறது. மறுபுறம் மக்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களின் கோரிக்கையை ஏற்றும் என்.எல்.சிக்கு எதிராக மக்கள் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற உதவிய ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து பழிவாங்குகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த பழிவாங்கல் சிக்கலை பெரிதாக்குவதற்கு தான் உதவுமே தவிர, தீர்ப்பதற்கு உதவாது.
அடக்குமுறையும், அத்துமீறலும், பழிவாங்கலும் எல்லா காலமும் வெற்றி பெறாது. அவை அறத்தின் முன் மண்டியிடும் காலம் வெகுவிரைவில் வந்தே தீரும். இதை உணர்ந்து ஊராட்சி செயலாளர்களின் பணியிட மாற்ற ஆணையையும், பெண்கள் மீதான பொய்வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மக்கள் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதுடன், என்.எல்.சியை வெளியேற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
*பா.ம.க, வன்னியர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் கூட்டுக் கூட்டத்தில், மாநில வன்னியர் சங்க தலைவர் "பெரியவர்" பு தா அருள்மொழி அவர்கள் உரையாற்றி வருகிறார்..!*
*திண்டிவனம் கே.ஆர்.எஸ் அம்மா திருமண மண்டபத்தில் நடைபெறும், பா.ம.க, வன்னியர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் கூட்டுக் கூட்டம், மருத்துவர் அய்யா தலைமையில் தொடங்கியது..!!*
டி.என்.பி.எஸ்.சியை துண்டாடக் கூடாது
புதிய ஆள்தேர்வு வாரியம் தேவையில்லை.....
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை.....
#PMK#PSMF
தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு: மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 6957 நீர்நிலைகளில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நடத்திய நீர்நிலைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 8%க்கும் கூடுதலானவை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை ஏற்க முடியாது!
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் 5 நீர்த்தேக்கக்கங்கள், 1458 ஏரிகள், 3565 குளங்கள் ஆகியவையும் அடங்கும். பாசன ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் திகழும் இந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது பெரும் தவறு ஆகும். ஆக்கிரமிப்பு அளவிடப்பட்ட 4933 நீர்நிலைகளில் 1328-இல் 75% வரையிலும், 1009-இல் 75%க்கும் அதிகமாகவும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடும்!
நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையை உயர்நீதிமன்றம் தொடங்கி ஐ.நா. அமைப்பு வரை வலியுறுத்தி வருகின்றன. நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் விவசாயமும், குடிநீர் ஆதாரங்களும் முற்றிலுமாக அழிந்து விடும். இதை உணர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்கவும், மீதமுள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
நீர்நிலைகளுக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ‘‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டம்(Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023)’’ இயற்றப்பட்டிருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக அந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்!
@CMOTamilnadu
தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது: மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!!
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின்படி, கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது!
தமிழ்நாட்டில் கல்விக்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம் முதன்மையான பங்காற்றுகிறது. 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அவற்றின் பயன்கள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப்பள்ளிகளை ஈடுசெய்ய 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக்கப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக்கப்படும். நிறைவாக 100 தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும். அதன்மூலம் கல்விக்கட்டமைப்பு விரிவாக்கப்படும்!
பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நிலையிலும் 100 பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும். அவற்றுக்காக புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருந்தால், கடந்த இரு ஆண்டுகளில் பலநூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அது கிராமப்பகுதிகளில் கல்வி வளர வகை செய்திருக்கும். இத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது!
பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது புதிய அறிவிப்புகள் வராதது ஒருபுறம் இருக்க, 2020-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 165 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டம் மூன்று ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது 200 பள்ளிகளையாவது தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 165 பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும்! @CMOTamilnadu
அதிகரிக்கும் அச்சுறுத்தல்: மணல் கொள்ளையர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்!
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மானாத்தாள் கிராமத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் வினோத்குமாரை மணல் கடத்தல் கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையர்கள் அச்சமின்றி திரிகின்றனர் என்பதையே இது காட்டுகிறது!
மானாத்தாள் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி மணல் கடத்தலில் ஈடுபட்ட முத்துராஜ், விஜி ஆகிய இருவரை பிடித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இழுவை ஊர்தி, மணல் அள்ளும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே கிராம நிர்வாக அலுவலரை முத்துராஜ் வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம்.
தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்க முயலும் அலுவலர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் நிலவுவது அவலமானது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்தகைய சூழலை மாற்ற வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
அதிகரிக்கும் அச்சுறுத்தல்: மணல் கொள்ளையர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்!
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மானாத்தாள் கிராமத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் வினோத்குமாரை மணல் கடத்தல் கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையர்கள் அச்சமின்றி திரிகின்றனர் என்பதையே இது காட்டுகிறது!
மானாத்தாள் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி மணல் கடத்தலில் ஈடுபட்ட முத்துராஜ், விஜி ஆகிய இருவரை பிடித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இழுவை ஊர்தி, மணல் அள்ளும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே கிராம நிர்வாக அலுவலரை முத்துராஜ் வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம்.
தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்க முயலும் அலுவலர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் நிலவுவது அவலமானது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்தகைய சூழலை மாற்ற வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
பொங்கியெழுந்த பெண்கள் : 24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பூதிநத்தம் கிராமத்தில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த ஜெயராமன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் போராட்ட வடிவம் சரியா? என்ற வினா ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் நோக்கமும், உணர்வும் பாராட்டத்தக்கவை. அவர்களை வணங்குகிறேன்.
பூதிநத்தம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால், மாணவர்களும், சிறுவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. ஆனால், அது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் பெண்கள் பொங்கியெழுந்து போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர்.
பூதிநத்தம் கிராமத்தில் மட்டும் தான் இத்தகைய நிலை என்றில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான். மாநிலம் முழுவதும் சட்டப்பூர்வமாக 5,329 மதுக்கடைகள் உள்ளன என்றால், ஒவ்வொரு கடைக்கும் 5 முதல் 10 சந்துக் கடைகள் உள்ளன. அவற்றில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. அதனால் சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும், சில நேரங்களில் கொலைகளும் நிகழ்கின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்!
தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படும் சந்துக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி நடத்துனர்களுக்கு வேலை வழங்க மறுப்பதா?
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழக பணிமனைகளில், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு போதிய எண்ணிக்கையில் ஓட்டுனர்கள் இல்லை என்று கூறி, நடத்துனர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு பணிமனையில் 15 பேர் வீதம் சென்னையில் உள்ள 24 பணிமனைகளிலும் 350-க்கும் கூடுதலானவர்களுக்கு பணி மறுக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு நாளும் குறைந்தது 350 மாநகரப் பேருந்துகள் மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது!
பணி மறுக்கப்படும் ஓட்டுனர்களுக்கு, ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். அதனால், பெருமளவிலான நடத்துனர்களுக்கு மாதத்திற்கு 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பணிக்கு வரும் ஓட்டுனர்களுக்கு பணி வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. அந்தக் கடமையிலிருந்து நிர்வாகம் தவறினால், அதன் விளைவுகளை நிர்வாகம் தான் அனுபவிக்க வேண்டும். மாறாக ஓட்டுனர்களின் ஊதியத்தை பிடிப்பது நியாயமற்றது!
நிர்வாகத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஓட்டுனர்களுக்கு இரவு நேரங்களில் பணிமனைகளில் பேருந்துகளை எடுத்து ஒழுங்குபடுத்தும் எளிய பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கு தேவையான ஓட்டுனர்களை விட பல மடங்கு ஓட்டுனர்களுக்கு இந்த பணி வழங்கப்படுவதாலும், அரசியல் செல்வாக்கு உள்ள ஓட்டுனர்கள் பணி செய்யாமலேயே பணி செய்ததாக கணக்குக் காட்டப்படுவதும் தான், பகல் நேரங்களில் ஓட்டுனர்கள் பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். நிர்வாகத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையால், நடத்துனர்களுக்கு மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்!
மாநகரப் போக்குவரத்துக்கழகங்களில் மட்டுமின்றி, பிற போக்குவரத்துக் கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தொழிலாளர்களிடையே பாகுபாடு காட்டப்படக்கூடாது. அனைத்து வழித்தடங்களிலும், அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுவதையும், அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பணி மற்றும் ஊதியம் வழங்கப்படுவதையும் போக்குவரத்துக் கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் சுரண்டப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையுடன் விற்கப்படும் கள்ளச்சாராயம் : தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கின்றனவா?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய வணிகர்களிடையே நிலவும் போட்டியால் ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் சாராயம் இலவசம், இரு பாக்கெட் சாராயம் வாங்கினால் முட்டை இலவசம் என்றெல்லாம் சலுகைகள் வழங்கப்படுவதாக DT Next ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தடையின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
ஆந்திர - தமிழ்நாடு எல்லையில் உள்ள கிராமங்களில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், எந்தத் தடையும் இல்லாமல் ஊர்திகள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எந்தெந்தப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கூட துல்லியமாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவில் ஒரு சிலரை கைது செய்யும் காவல்துறை மீதமுள்ளவர்களின் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
மதுவில்லா மாநிலம் தான் மக்களின் எதிர்பார்ப்பு. அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்காத அரசு, புதுப்புது வடிவங்களில் மது விற்பனையை அறிமுகம் செய்து வருகிறது. சந்துக்கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராய விற்பனையையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நாடு விரைவில் சுடுகாடு ஆகிவிடும்.
சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக்கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குக் காரணமானவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
தமிழ்திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழ்த்திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் அவரும் ஒருவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@manobalam