நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று, திருநெல்வேலி, நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதி வழங்குவதில் தாமதம் – தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதா?
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? – தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்ப சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது.
சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.
தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின், மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@AmitShah@AmitShahOffice
அரசுப் பள்ளியில் பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு – மாணவ, மாணவியரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரைக் கூட உறுதி செய்ய முடியாத தவெக அரசு.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
மாணவ, மாணவியரின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய அரசுப் பள்ளியில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீரைக் கூட முறையாக வழங்க முடியாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட அரசு நிர்வாகத்தால் மாணவ, மாணவியரின் உடல் நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தனக்குச் சம்பந்தமே இல்லாத துறைகள் தொடர்பான கேள்விகளுக்குக்கூட தாமாக முன்வந்து அடுக்குமொழியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், இனியாவது தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவும் அவலநிலையைப் போக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், நிதி நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @nsitharamanoffc@nsitharaman
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பஞ்சாயத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மீறி மது அருந்தினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் "மதுவை ஒழிப்போம் மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குடும்பங்களின் நலனை உறுதி செய்யவும், மக்களின் பொது அமைதியைப் பேணவும் விழுந்தமாவடி பஞ்சாயத்து மக்கள் தாமாக முன்வந்து தொடங்கியுள்ள இந்த மதுவுக்கு எதிரான பிரசாரம் பாராட்டுக்குரியது.
விழுந்தமாவடியில் தொடங்கியுள்ள இந்த மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் வலிமையான சமூக இயக்கமாகவும் உருவெடுக்கட்டும்.
அங்கன்வாடி மையங்கள் தொடங்கி அரசு உயர் மருத்துவமனைகள் வரை தொடரும் அலட்சியப்போக்கு - அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது ?
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் ஊட்டச்சத்திற்காக வழங்க வேண்டிய முட்டைகளை அவர்களின் படுக்கையிலும், கால்களுக்கு அருகிலும் ஊழியர்கள் அலட்சியமாக வீசிச் செல்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையிலேயே, நோயாளிகளை இவ்வளவு மோசமான நிலையில் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
அதே போல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் முட்டைகள் தொடங்கி, அரசு உயர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் வரை அனைத்தும் தரமற்றதாக இருப்பதோடு, அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கும், அரசின் மெத்தனமான செயல்பாடுகளும், அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன.
எனவே, அங்கன்வாடி மையங்களுக்குத் தரமற்ற முட்டைகளை வழங்கிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!
நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.
தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்னைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ