முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அவமதிக்கும், வட இந்திய ஊடகங்களின் வன்மத்தைக் கண்டிக்கிறோம்!
தமிழினத்தின் மீதான வட இந்திய ஊடகத் தாக்குதல்களை முறியடிப்போம்!
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளது.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனை.
அந்தத் துயர நினைவுகளை மனதில் ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு . விஜய் அவர்கள் வெளியிட்ட “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்ற பதிவு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான உணர்வுப்பூர்வமான வெளிப்பாடே அன்றி, எந்தவிதத் தீவிரவாத ஆதரவும் அல்ல என்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியாகப் பதிவு செய்கிறது.
ஆனால், சில வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் அந்தப் பதிவைத் திரித்து, தமிழர்களின் இன உணர்வையும் மனிதநேயக் குரலையும் தீவிரவாத அரசியல் என்பது போன்று விவாதிப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. தமிழர்களின் வரலாற்று வலியையே அவமதிக்கும் செயலாகும்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது இன்று தோன்றிய ஒன்று அல்ல. பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் அரசியல், மாணவர், சமூக, மனித உரிமை இயக்கங்கள் அனைத்தும் ஈழத் தமிழர்களின் உயிர் பாதுகாப்பு, அரசியல் உரிமை மற்றும் நீதி வேண்டி குரல் கொடுத்து வருகின்றன.
அது தமிழின உணர்வு.
அது தாய்மொழி சார்ந்த உறவு.
அது தொப்புள் கொடி இரத்த சொந்தம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் கூட தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என எங்கிருந்தாலும், தமிழ் என்ற தேசிய பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இணைந்த மக்களாகவே எங்களை உணர்கிறோம்.
அந்த உணர்வை அவமதிப்பதோ, எங்களின் கண்ணீரை அரசியல் கேலியாக மாற்றுவதற்கோ, எந்த ஊடகத்திற்கும் உரிமையில்லை.
இன்று தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கிறது.
கோடிக்கணக்கான வடஇந்தியத் தொழிலாளர்களும் குடும்பங்களும் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வேலை செய்து வாழ்கின்றனர்.
அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் மாநிலத்தின் மக்களைப் பிரிவினைவாதிகள் போலச் சித்தரிப்பது, பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களின் ஒற்றுமையைச் சிதைத்து, பகைமையை ஏற்படுத்திப் பிளவுபடுத்தும் செயலாகவே நாம் கவனிக்கிறோம்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று குறிப்பிடாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று தனிமைப்படுத்திப் பேசும் வட இந்திய ஊடகங்கள், இன்று மீண்டும் தமிழர்களை இந்தியாவிற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயல்கின்றன.
இது திட்டமிட்ட பாசிச கார்ப்பரேட் மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
இதைவிட மக்களிடம் பெரிய கேள்வி ஒன்றை எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
இன்று தொலைக்காட்சிகளையும் தேசிய ஊடகங்களையும் கவனித்துப் பாருங்கள்.
நாட்டு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகப்பெரியப் பொருளாதார, தொழில்நுட்ப, சமூக மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
ஆனால் மக்களிடம் தொடர்ந்து திணிக்கப்படுவது என்ன?
முடிவில்லா அரசியல் குழப்பங்கள் மட்டுமே.
உலகளவில் அதிகரித்து வரும் போர்கள் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றன?
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வால் சாதாரணக் குடும்பங்களின் வாழ்க்கை இன்னும் எவ்வளவு சிரமப்படப் போகிறது?
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் எத்தனை வேலைவாய்ப்புகள் மாறப்போகின்றன?
பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் என்ன?
காலநிலை மாற்றத்தால் நாட்டின் விவசாயமும் குடிநீர் பாதுகாப்பும் எந்த நிலைக்கு செல்லப் போகின்றன?
உலக வர்த்தக மாற்றங்கள் சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும்?
உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசுகள் என்ன செய்கின்றன?
மாநிலங்களின் பொருளாதார உரிமைகளில் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து ஏன் திறந்த விவாதங்கள் நடைபெறுவதில்லை?
இந்தியாவின் செல்வமும், வளங்களும் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிவதை ஏன் ஊடகங்கள் பேச மறுக்கின்றன?
தேர்தல் ஆணையம்,
பாஜகவின் கிளை அமைப்பா?
பாசிசத்தின் காலடியில்,
மக்கள் ஜனநாயகமா?
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய,
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய
தேர்தல் ஆணையம்,
இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது,
நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்.
Special Intensive Revision (SIR) என்றப் பெயரில், வாக்காளர் பட்டியலை “திருத்துகிறோம்” என்றப் போர்வையில், எதிர்க்கட்சிகளும் பிற கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் மட்டும், இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, அவர்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிப்பது என்பது, தேர்தல் ஆணையத்தின் நிர்வாக நடவடிக்கை அல்ல. இது திட்டமிடப்பட்டப் பாசிச அரசியல் சதி!
பாஜக ஆளும் மாநிலங்களில்
இந்த SIR ஏன் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை?
அங்கே மட்டும் வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறதா? அல்லது பாஜக விற்கு வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் இருந்தால் போதுமா? இதுதான் ஜனநாயகமா?
வாக்குப் பெட்டியில் தோல்வி கண்ட பாஜக, இப்போது வாக்காளர்களையே அழிக்கும் அரசியலுக்கு இறங்கியுள்ளது.
வாக்குகளால் வெல்ல முடியாத பாஜக, வாக்குரிமையையே பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள்:
“SIR என்பது திருத்தம் அல்ல.
அது ஒரு Super Emergency.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.”
அவர் எழுப்பும் இந்தக் குரல்
ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல.
இந்திய ஜனநாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள அவசரகால எச்சரிக்கை!
தமிழ்நாட்டில், உயிருடன் இருக்கும் இளைஞர்கள் “மரணித்தவர்கள்” எனக் குறிக்கப்பட்டுள்ளனர்,
உழைக்கும் மக்கள் “இடம்பெயர்ந்தவர்கள்” என நீக்கப்பட்டுள்ளனர், முழுக் குடும்பங்களே ஒரே நேரத்தில்
வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போயிருக்கிறது!
இது தவறுதலாக நடந்திருக்கிறதா?
இல்லை.
இது மக்கள் விரும்பும் அரசியல் சக்திகளைப் பலவீனப்படுத்தும் திட்டமிட்ட நடவடிக்கை. தேர்தல் ஆணையம் சுயாதீனமாக செயல்படாவிட்டால், இந்த நாடு ஜனநாயகக் குடியரசாக இருக்காது .
அது தேர்தல் முகமூடி அணிந்த
பாசிச ஆட்சியாக மாறிவிடும். அப்படித்தான் மாறிக் கொண்டிருக்கிறது.
எனவே,
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி,
இந்தியப் பெருநிலத்தில் வாழும்
அனைத்து மக்களும்,
பாசிச பாஜகவின் சூழ்ச்சிகளைக்
கண்டறிந்து, அடையாளம் கண்டு,
ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய காலம் இது. தமிழ்நாடு உள்ளிட்ட
எந்த மாநிலத்திலும் பாஜக
பாசிச அரசியலோடு உள் நுழையாதவாறு மக்கள் ஒன்றுபட்டு எழ வேண்டும்.
இது கட்சி அரசியல் அல்ல!
இது ஆட்சி மாற்றப் போராட்டமும் அல்ல!
இது ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டம்!
வாக்குரிமை எங்கள் உயிர்!
ஜனநாயகம் எங்கள் அடையாளம்!
பாசிச பாஜகவின் எந்தச் சூழ்ச்சிக்கும், இந்த மண்ணில் இடமில்லை!
தலைநகர் தில்லியில் மனித வேட்டையா?
ஒன்றிய அரசும், தில்லி அரசும் மெத்தனப்போக்கைக் கையாள்வது ஏன்?
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே?
இந்தியாவின் இதயப்பகுதியான தில்லி மாநகரில், 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, ஒட்டுமொத்தத் தேசத்தையும் உலுக்கியுள்ளது.
குறிப்பாக, காணாமல் போனவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் சிறுமிகளும் பெண்களும் என்பது நெஞ்சைப் பதற வைப்பதோடு, இந்திய பெருநிலத்தின் பாதுகாப்புத் தன்மையையே கேலிக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அன்றாடம் நடமாடும் தலைநகரில், சாமானியப் பெண்களுக்கு இந்த கதி ஏற்படுவது தேசத்திற்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகும்.
நாட்டின் உளவுத்துறையும், காவல்துறையும், உள்துறை அமைச்சகமும் எதற்காக இயங்குகின்றன என்கிற கேள்வி, இன்று ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கனன்று கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 52,000-க்கும் மேற்பட்டோர் தில்லியில் காணாமல் போய், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது என்பது பாதுகாப்பு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வியையே பறைசாற்றுகிறது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வெற்று முழக்கங்களை மட்டுமே முன்வைக்கும் ஒன்றிய அரசின் கண்காணிப்புகள் நிறைந்த தில்லியில், இந்த மனிதக் கடத்தல்களையும் குற்றங்களையும் தடுக்கத் தவறியது ஏன்?
ஒன்றிய அரசும், தில்லி அரசும் ஒருங்கிணைந்து, உடனடியாகப் பலமானப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, காணாமல் போனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கைது செய்யப்பட்டது ஏன்?
உற்பத்தி நிறுத்தப் போராட்டம் குற்றமா?
தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து,
நியாயமானக் கறிக்கோழி உற்பத்தி கூலி உயர்வுக்கானக் கோரிக்கையை முன்வைத்து,
தமிழ்நாடு அரசு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய முக்கியமான கட்டத்தில்,
வருகின்ற 21.01.2026 அன்று அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான
சூழ்நிலை உருவாக்கப்பட்டு வந்த நிலையில், அந்த அமைதியான ஜனநாயக முயற்சியை சிதைக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி,
கூட்டுறவு சங்க அணிச் செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட
9 பேரைப் பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளதைத்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கறிக்கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல ஆண்டுகளாக விவசாயிகளை அச்சுறுத்தும் நோக்கில், செக், பாண்டு பேப்பர் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தி எழுதிப் பெற்றுக்கொண்டு,
“குஞ்சுகளை இறக்கவில்லை என்றால் சட்ட சிக்கல்கள், நஷ்டங்கள் சந்திக்க நேரிடும்” என மிரட்டல் விடுத்து, விவசாயிகளை அடிமைப்படுத்தும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்த அநீதிக்கு எதிராக,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும், கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், ஒற்றுமையுடன் ஒன்று திரண்டு, “முத்தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை
குஞ்சுகளை இறக்க வேண்டாம்” என்று அமைதியான முறையில் எடுத்த முடிவை, குற்றமாக மாற்ற முயற்சிப்பது, முழுமையான சதி என்பதில் ஐயமில்லை.
கடந்த இரண்டு மாதங்களாகக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத்
திசை திருப்பும் நோக்கில்,
“குஞ்சுகள் இறந்தன, பொது சொத்து சேதம்” போன்ற
அடிப்படையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளைக்
கட்டவிழ்த்து விடப்பட்டு,கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது
மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில்,
13.01.2026 அன்று இரவு சுமார் 10 மணியளவில், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையம் சார்பில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, இரவோடு இரவாக
வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும்,
விடிய விடிய குடும்பத்தாருக்கும், நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், பல்வேறு காவல் நிலையங்களில் தேட வைக்கப்பட்ட பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும்
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும்.
போராட்டத்தைக் கலைக்கவும்,
விவசாயிகளின் ஒற்றுமையை உடைக்கவும், அரசு பேச்சுவார்த்தையைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட
இந்தக் கைது நடவடிக்கை,
விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட நேரடி அடக்குமுறை என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.
இதனைக் கண்டித்து,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையகங்களில்,
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளதைத்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
இவ்வேளையில்,
பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அனைவரையும்,
எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யவும்,
சட்டவிரோதக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்,
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் உற்பத்தி கூலி உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையைத்
திசை திருப்பும் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி,
முறையானப் பேச்சுவார்த்தை நடத்தவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்!
சட்டமன்ற ஜனநாயக மரபுகளை மீறுவது, ஏன்?
சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் வெளியேறியது ஏன்?
எட்டு கோடி மக்களின் பேராதரவும் நம்பிக்கையும் பெற்ற, மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை என்பது, வெறும் ஒரு நிர்வாக மன்றம் அல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயகக் குரல்.
சட்டப்பேரவை என்னும் உயரிய அமைப்பில், இந்த ஆண்டின் தொடக்கக் கூட்டத்தில் இன்றும், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும், ஆளுநர் அவர்கள் சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் வெளியேறியிருப்பது, சட்டப்பேரவையின் மரபுகளையும் மாண்புகளையும் திட்டமிட்டு மீறிய செயல் என்பதோடு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையே அவமதிக்கும் செயலாகும்.
சட்டப்பேரவை உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்தல்ல. அது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள், நோக்கங்களை மக்களின் முன் வாசிக்க வேண்டிய அரசியலமைப்புச் சார்ந்தக் கடமை. அந்தக் கடமையை மீண்டும் மீண்டும் புறக்கணிப்பது, ஜனநாயகத்தின் மீது காட்டப்படும் அலட்சியமாகும்.
மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான ஒரு தொடர்பாளராக மட்டுமே இருக்க வேண்டிய ஆளுநர், தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், சட்டங்கள், திட்டங்களைத் தாமதப்படுத்துவதும், திருப்பி அனுப்புவதும், சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வதும், அரசியலமைப்பைச் சிதைக்கும் செயல்களாகும்.
நியமனப் பதவியில் இருக்கும் ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை இவ்வாறு அவமதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயம் அரசியலமைப்பில் இருக்கிறபோது, அதை மீறுவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை, மேலாதிக்கமாக நடத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.
இந்நிலையில் ஏற்கனவே, இந்தியப் பெருநிலத்தில் மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி என்பது தேவையற்றது என்றும், ஒன்றிய அரசின் தலையீட்டிற்கானக் கருவியாகவே மாறிவிட்டதையும், பலமுறை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக் காட்டி இருக்கிறது.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு, அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் உண்மையாக்கும் எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.
மக்களின் அதிகாரத்தை மீறி நிற்கும், ஜனநாயகத்தை அவமதிக்கும், மாநில உரிமைகளை நசுக்கும், இந்த நியமன ஆளுநர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் நியாயமானக் கோரிக்கையாக, இன்று உரத்த குரலுடன் ஒலிக்கிறது.
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மரபுகளையும், அதன் ஜனநாயக மாண்புகளையும் இவ்வாறு காலடியில் போட்டு மிதிக்கும் எந்தச் செயலும், தமிழக மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, ஆளுநர் அவர்களின் இன்றைய நடவடிக்கையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மறைந்த தேமுதிக நிறுவனரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. விஜயகாந்த். அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர்களிடம் அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
நீதித்துறையே!
நீதிபதி ப.உ.செம்மல் அவர்களின் பணியிடை நீக்கத்தை இரத்து செய்ய வழிவகை செய்!
நீதியென்பது அதிகாரத்தைப் பாதுகாக்க அல்ல. அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவே. அந்த அடிப்படையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு கோட்பாட்டை நடைமுறையில் நிலைநாட்ட முயன்ற மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது முழுக்க முழுக்கத் தவறானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். ஒரு நீதிபதி சட்டத்தின் அடிப்படையில், சாட்சிகளின் அடிப்படையில், எந்த அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தீர்ப்பளித்தால் அதற்கான பரிசு இடைநீக்கமாக இருக்க முடியாது. இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்திற்கே நேரடியான சவால் ஆகும்.
நீதிபதி ப.உ. செம்மல் அவர்கள், தமது பணிக்காலத்தில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமல்ல, தொடர்ந்து மக்களுக்குப் பயன் தரும் தீர்ப்புகளை வழங்கியவர். காவல்துறையில் சிலர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்குகளில், அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே என்ற அடிப்படையில், இவரது தீர்ப்புகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சி / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் வெறும் சட்டப்புத்தக வரியாக இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உண்மையானப் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நிவாரணம் வழங்கிய தீர்ப்புகள், ஏழை எளிய மக்கள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டபோது, சாட்சிகளையும் சட்ட விதிகளையும் ஆழமாக ஆராய்ந்து அவர்களுக்கு நீதி வழங்கிய தீர்ப்புகள், அரசியல் மற்றும் அதிகார அழுத்தங்கள் வெளிப்படையாக இருந்த போதிலும் அவற்றுக்கு அடிபணியாமல் சட்டத்தின் பக்கம் நின்ற தீர்ப்புகள் ஆகியவை, இவர் ஒரு மக்கள் நல நீதிபதி என்பதற்கான சாட்சிகளாக உள்ளன.
அப்படிப்பட்ட ஒரு நீதிபதி, சட்டத்தின் வரம்புக்குள் நின்று வழிகாட்டுதல் வழங்கியதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவது, நாளை எந்த நீதிபதியும் அதிகாரத்திற்கு எதிராகத் தீர்ப்பளிக்க முடியாத அச்ச சூழலை உருவாக்கும் அபாயகரமான முன்னுதாரணமாகும்.
இது ஒரு தனிநபருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. மாறாக, மக்கள் நீதியைப் பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதித்துறையின் சுயமரியாதையைப் பலவீனப்படுத்தும் செயல்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்தப் பணியிடை நீக்கத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ப.உ. செம்மல் அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் நலன் காக்கும் தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு, பாதுகாப்பும் மரியாதையும் உறுதி செய்யப்பட வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவிதமான அரசியல் அல்லது அதிகாரத் தலையீடும் தமிழகத்தில் அனுமதிக்கப்படக் கூடாது.
நீதிக்காக நின்ற ஒருவரை தண்டிப்பது நீதியையே தண்டிப்பதற்கு சமம். அநீதிக்கு எதிராக நின்று நீதிக்காக குரல் கொடுக்கும் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி எப்போதும் மக்களோடு நின்று செயல்படும் என்பதை, இதன் மூலம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும்
ஈர்க்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியை சார்ந்த 700க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி
தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வு கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சகோதரர் திரு.பிரம்மமூர்த்தி.அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது,
இந்நிகழ்வில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.உ. கண்ணன். மாநில இளைஞரணி தலைவர் திரு.முருகானந்தம்.கொள்கை விளக்க அணி தலைவர் திரு. மாரிமுத்து.மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அழகாபுரம் திரு.தங்கம். ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
#தமிழக_வாழ்வுரிமைக்கட்சி
பட்டீஸ்வரம் அரசுப்பள்ளி மாணவர் கொலை : பள்ளிகளில் அதிகரித்து வரும் சாதிய வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
கும்பகோணம் பட்டீஸ்வரம் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இச்சூழலில், பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதியில் கடந்த 5ஆம் தேதி இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 12-ம் வகுப்பு மாணவர் கவியரசனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அம்மாணவர் கவியரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட 11ஆம் வகுப்பைச் சேர்ந்த 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விகாரத்தின் பின்புலத்தில் சாதிய சிக்கல் இருப்பதாக கூறப்படுவது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற வன்முறைகள், தமிழ்நாட்டின் நிலையை 100 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் செல்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதி சார்ந்த கட்சிகளின் அடையாளமிட்ட கயிறு, டாலர், ஸ்டிக்கர், கைவளையம் உள்ளிட்ட பொருட்களை அணிந்து கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சாதி மாணவர்களும் வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் பேருந்துகளிலும் தனித்தனியாக பிரிந்து கிடப்பது வேதனை அளிக்கிறது.
மாணவர்களிடையே நிலவும் இத்தகைய சாதிய பாகுபாட்டை களையும் முயற்சிக்கு பதிலாக சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் சிலரும் சாதிய பாகுபாட்டோடுதான் மாணவர்களை நடத்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பொதுவில் பள்ளிச் சூழலே சாதியின்பால் பாழ்பட்டிருக்கிறது என்பதாகத்தான், மாணவர் கவியரசன் மரணத்தை பார்க்க முடியும்.
பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் மேசைகள் ஒவ்வொன்றும் சாதிவாரியாக பிரிந்து கிடக்கிறது. மாணவப் பருவத்திலேயே நஞ்சாக ஊட்டப்படும் சாதி வெறியால் அவர்கள் சாதிவாரியான தனித் தனிக் குழுக்களாக பிரிந்து காணப்படுகிறார்கள். தங்கள் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாணவரும் கைகளில் குறிப்பிட்ட வண்ணங்களில் அடையாளக் கயிறு கட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
பள்ளி மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கயிறுகளை தங்கள் சாதிக்கு ஏற்றபடி அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு வருகின்றனர். இதன் மூலம் தங்கள் சாதியைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு, விளையாட்டு வகுப்புகளிலும் பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும் சாதி அடிப்படையில் அணி திரள்கிறார்கள். விளையாட்டுகளில் எழும் சிறு மோதல்கள்கூட, சாதி அடிப்படையிலான பெரிய மோதல்களாக மாறுகின்றன.
அப்படி தான், கும்பகோணம் பட்டீஸ்வரம் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் நீட்சியாகவே, மாணவர் கவியரசனின் மரணம் அரங்கேறியுள்ளது.
தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என போதிக்க வேண்டிய பள்ளி மற்றும் கல்லூரிகளில், சாதி கயிறுகள் தீண்டாமையின் நவீன அடையாளத்தை உருவாகி வருவது எதிர்கால தலைமுறைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
எனவே, கவியரசனின் மரணம் விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் 15 பேருக்கு உரிய தண்டனையை பெற்று தர, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் ஆதிக்க சாதியாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களது பக்கம் நிற்பதே அறம்.
இனி வரும் காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை கட்டி வரும் மாணவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அம்மாணவர்கள் மீது உரிய நடவடிக்கையை, அந்தந்த பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டும்.
சாதிய பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளையோ, வளையங்களையோ, மாணவர்கள் அணிந்து வருவதை தடுக்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
உயிரிழந்த மாணவர் கவியரசனின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர் உயர்திரு.ஜானகிராமன். அவர்கள் மற்றும் அவரது வாழ்க்கை இணையரின் அழைப்பின் பேரில் அவர்களது இல்லத்திற்கு சென்ற என்னை சிறப்பாக வரவேற்று விருந்தளித்து உபசரித்தனர் அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும்.
ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னி நகரிலுள்ள ப்ளாக் டவுன் என்னுமிடத்தில் இன்று நடைபெற்ற 12வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்,மேலும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அவரது திருவுருவப் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தினேன்.