அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @EPSTamilNadu அவர்கள் உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து பொதுவாழ்வுப் பணியாற்ற எனது வாழ்த்துகள்!
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கே.சி.வீரமணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் அ.ஞானசேகர் அவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்திலும் வாக்கு சேகரித்து, திருப்பத்தூரில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
காவல் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- 3 காவலர்கள் படுகாயம்: சட்டம் - ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா?
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.
தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க
முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகல்: இனியாவது முதல்வர் விழிப்பாரா, சீரழிப்பாரா?
தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடற்ற வகையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளையை தடுக்க முடியாததாலும், அதன் தீமைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததாலும் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் கடையம் சந்திரசேகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். சுயமரியாதையைக் காக்க இந்த முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் சரியானது.
திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகியின் பதவி விலகலை ஒரு சாதாரணமான நிகழ்வாக பார்க்கக் கூடாது. தென் மாவட்டங்களில் கட்டுப்பாடற்ற வகையில் கனிமக் கொள்ளை நடக்கிறது; அதை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய திமுக நிர்வாகியாலேயே தடுக்க முடியவில்லை; கனிமக் கொள்ளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக நிர்வாகியே புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல செய்திகளை இந்த ஒற்றை பதவி விலகல் கடிதம் கூறுகிறது.
தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கனிமக் கொள்ளை நடைபெறுகிறது; ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன; கனிமக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு காட்பாதராக இருந்து திமுகவின் பெரும்புள்ளி ஒருவர் பாதுகாக்கிறார் என்று பல ஆண்டுகளாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். அவை அனைத்தும் உண்மை என்று இப்போது திமுக நிர்வாகியின் வாக்குமூலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலனிலும், இயற்கை வளங்களின் நலனிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருக்கிறதா? என்பதை நிரூபிப்பதற்கான நேரம் வந்து விட்டது. இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது : உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நாளை மறுநாள் திசம்பர் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 700 பேர் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிய சான்றிதழ்களை அவர்களால் பதிவேற்றம் செய்ய முடியாதது தான்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாததற்கு தேர்வர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. அவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை குறித்த காலத்திற்குள் இணையம் வாயிலாக நிரப்பி விட்டனர். அதன்பின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளில் இணையதளம் முடங்கியதால் அவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. அதனால் அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த வகையில் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்ட தேர்வர்களில் 22 பேர் மட்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி தேர்வு எழுத அனுமதி பெற்றுள்ளனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை நேரடியாக வாங்கிக் கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்கு வாய்ப்பும், வசதியும் இல்லாதவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வழக்கமாக இது போன்ற சிக்கல்கள் எழும் போது நீதிமன்றம் ஒருவருக்கு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதை ஆள்தேர்வு அமைப்புகள் வாடிக்கையாக வைத்திருந்தன. ஆனால், இந்த முறை அவ்வாறு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மறுக்கிறது. இணையதளம் முடங்கியதும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாததும் தேர்வர்களின் பிழை அல்ல; அது முழுக்க முழுக்க தேர்வு வாரியத்தின் தவறு. அதற்காக தேர்வர்கள் பாதிக்கப்படக் கூடாது.
தமிழ்நாட்டில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்தேர்வு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடைபெறுகிறது. இனி இத்தகைய ஆள்தேர்வு எப்போது நடைபெறும் என்பது தெரியாது. எனவே, அவர்களுக்கு இப்போதே வாய்ப்பு வழங்குவது தான் சமூகநீதியாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்டிருக்கும் 700 பேருக்கும் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியை மீண்டும் ஏற்படுத்துவதன் வாயிலாகவோ அல்லது மூலச் சான்றிதழ்களை நேரடியாக தாக்கல் செய்ய அனுமதிப்பதன் வாயிலாகவே அவர்களை நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்வை எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிக்க வேண்டும். @CMOTamilnadu
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அண்ணன் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெளிவான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களில் ஒருவர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக திறம்படச் செயலாற்றி, மக்கள் அன்பைப் பெற்றவர். அவரது மேலான மக்கள் பணிகள் என்றும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து
கரூரில் த.வெ.க. பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சொந்தங்களுக்கு இரங்கல் செலுத்தும் வகையிலும், அவர்கள் குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், கரூர் உழவர் சந்தைப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று மாலை நடைபெறவிருந்த எனது தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. பரப்புரைக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்
சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:
உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.இராதாகிருஷ்ணன் புதிய உயரங்களைத் தொட வேண்டும்!
இந்தியாவின் 15-ஆம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருப்பது மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது குடியரசுத் துணைத் தலைவரான திரு.சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள், தமது சிறப்பான பணியின் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன். அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் அவர் புதிய உயரங்களைத் தொடுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமை நிலைய செய்தி
நாளைய பொதுக்குழுவுக்கு தடையில்லை:
வாருங்கள் சொந்தங்களே.... பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே!