நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வருகிறது. இது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை சரிந்ததால் இந்த திடீர் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைலாய யாத்திரைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் யாத்திரை ஏஜென்சி மூலம் 57 பயணிகள் நேபாளுக்கு சென்றுள்ள நிலையில், இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 நபர்களின் நிலைமை என்னெவென்று தெரியவில்லை. நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
நேபாளத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் விரைவில் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்பு இருந்தால் தான் அனைவருக்கும் உதவ முடியும் என்பதனை போதித்ததோடு மட்டுமில்லாமல் அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
"பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள், சகோதரர்களாக வாழுங்கள், மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள், எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வசப்படாத சகிப்புத்தன்மையும், நிதானமும் வேண்டும், சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள், இறைவனின் உதவி ஒன்று சேர்ந்த மக்களின் மீது இருக்கும்” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
மனித குலத்திற்கான அற்புதமான வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டிய இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிடும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய மீலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தவர் அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள். அவர் ஆற்றிய அரும்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்.
@PremallathaDmdk
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்💐
புதிய தலைமுறை தொலைக்காட்சி 16-ஆம்ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனதுஇதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன்.
பாரபட்சமின்றி நடுநிலையான செய்திகள், விறுவிறுப்பான விவாதங்கள் என அனைத்து விதமான மக்கள் பிரச்னைகளையும் துணிச்சலாக வெளிக்கொணர்ந்து, சிறப்புடன் பணியாற்றி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, வரும்காலங்களிலும் தனித்தன்மையுடன் தொடர்ந்து ஊடகத்துறையில் தனது பங்களிப்பினை சிறப்புடன் ஆற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஊடகத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சி கண்டு, உச்ச நிலையை அடைய வேண்டுமென தங்கள் நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன்.
@PttvNewsX
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திருமதி. சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரைத்துறையில் யாராலும் ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகவும்.
சௌகார் ஜானகி அவர்கள் தனது 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணத்தில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்திய நடிகைகளில் சௌகார் ஜானகிக்கு தனி இடம் உண்டு. பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பெருமைக்குரியவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். சௌகார் ஜானகி அவர்கள் பணம் படைத்தவன், பெற்றால்தான் பிள்ளையா, தாய்க்கு தலைமகன், ஒளி விளக்கு உள்ளிட்ட படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் இணைந்து நடித்த காலத்தால் அழியாத காவியங்களை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரி, திருமதி.சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர்களின் மக்கள் பணி, சமூகப் பயணம் தமிழ் மண்ணில் தொடர்ந்து ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@thirumaofficial
“இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்”
ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்திய திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும் வாழ, ஆங்கிலேயர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, சிறையில் அடைபட்டு, இன்னல்களையும் இன்முகத்துடன் ஏற்று, தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நாட்டுப் பற்றையும், தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் இந்த சுதந்திரத் திருநாளாகும்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் நம் தமிழகம் ஆகும். சுதந்திரப் போராட்ட களத்தில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற மாமன்னர் பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட எத்தனையோ தியாகிகளை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று, தன்னலம் பாராமல், ஆண்களுக்கு இணையாக பெண்களும் குறிப்பாக வீரமங்கை வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பங்கு மகத்தானது என்பதையும் நாம் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம். அத்தகைய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்துவதுடன், அவர்தம் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம் தியாக சுடர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பியதையும், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிகளை உயர்த்தி வழங்குதல் போன்ற எண்ணற்ற பணிகளைச் செய்ததையும் இந்நேரத்தில் எண்ணிப் பெருமையடைகிறேன்.
நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதே ஒவ்வொரு இந்திய குடிமகளின், இந்திய குடிமகனின் கடமையாகும். பிராந்திய, கலாச்சாரம் மற்றும் மத எல்லைகளை கடந்து, இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்ட அடையாளத்தின் பன்முகத்தன்மையை பாதுகாத்திடுவோம்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என பேரறிஞர் அண்ணா அவர்களின் வாக்கிற்கிணங்க, "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று புரட்சித்தலைவர் அவர்கள் பாடிய வைர வரிகளைப் பின்பற்றி, "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாரக மந்திரத்தை, ஒவ்வொருவரும் கடைபிடித்து, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுட்டிக் காட்டிய வெற்றி இலக்கை, எட்டிப்பிடிப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.
நாம் ஒவ்வொருவரும் மதத்தால் வேறுபட்டு இருக்கலாம், நிறத்தால் வேறுபட்டு இருக்கலாம், மொழியால் வேறுபட்டு இருக்கலாம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், வளமிக்க முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகி திரு.M.ஆண்டிச்சாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு.M.ஆண்டிச்சாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியாத ஒரு சம்பிரதாய அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.
தமிழக அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை கொண்ட நிதி நிலை அறிக்கையானது சாமானிய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தவெகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உரிமை தொகை, விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, மகளிருக்கு அனைத்து இடங்களுக்கும் சென்று வர இலவச பேருந்து பயணம், வேலையில்லா பட்டாதாரிகளுக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் இடம்பெறாமல் போனது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே கொண்டுவந்த தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி திட்டம், அம்மா பசுமை இல்லம் திட்டம், பள்ளி மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மாணவர் தங்கும் விடுதி, ஏழைப்பெண்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் இன்றைக்கு புதிய பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகள் விடுபட்டுள்ளது.
தவெக அரசு மாவட்டம்தோறும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை உருவாக்கியபோதும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் இன்னும் குறையாமல் இருப்பது வேதனையளிக்கிறது. வீடுகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்தபோதிலும், 3 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகளில் அதிகம் மின் கட்டணம் வசூல் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பல இன்னல்களுக்கு நாள்தோறும் ஆளாகி வருவதை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு டெண்டர் நடைமுறைகளில் ஒரு சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தது, 717டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை மூடி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் இந்த ஆட்சி பொறுப்பேற்றுள்ள மூன்று மாதங்களில் ரூ.22,000 கோடி கடன் பெற்றுள்ளதும், நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடன் சுமை 10,98,768 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் இருந்தபோதும் நிதி மேலாண்மையை திறம்பட செய்ததோடு, தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றியதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களை கடந்துவிட்ட தவெக அரசு வரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்பட்டால்தான் மாநிலத்தின் வருவாயை அதிகரித்து, நிதி நிலையை சரி செய்யமுடியும். அதேசமயம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தவறாமல் நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள நிலையில் இதுவரை 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு அவர்கள், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஒட்டுமொத்த எடையில் புதிய வரலாற்றுச் சாதனையை செய்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. இதன் மூலம், நடப்பு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ள மீராபாய் சானு அவர்கள் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ள நம் மண்ணின் மைந்தர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடியிலிருந்து சென்று இந்தியாவிற்காக காமன்வெல்த் போட்டிகளில் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் தான் பிறந்த மண்ணுக்கே பெருமை தேடித்தந்துள்ளார். அன்பு தம்பி ராஜா முத்துபாண்டி அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அதேபோன்று, ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சனம்பம் ரிஷிகாந்த சிங் அவர்கள், 'ஸ்னாட்ச்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு தொடர்பாக இளம் சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து செய்து வந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மாணவர்களின் போராட்டத்திற்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மேலும், மாணவர்கள் வைத்த இதர கோரிக்கைகளான நீட் தேர்வு தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறுவது போன்றவற்றையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகுவதால் மட்டும் நீட் தேர்வு தொடர்பான பிரச்சனைகள் முடிந்து விட்டதாக கருத முடியாது. அதாவது, தமிழக மாணவர்களின் நெடுங்கால எதிர்பார்ப்பு என்னவென்றால், அது நீட் விலக்கு ஒன்று மட்டும் தான். இதுவே மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வாக நாம் பார்க்க முடியும். எனவே, மத்திய-மாநில அரசுகள், நாட்டில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
புதிய தலைமுறை நெறியாளரும், மிகச்சிறந்த ஊடகவியலாளருமான திரு.விஜயன் அவர்களிடம் தமிழக காவல்துறை விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழிப்பதும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் கண்டனத்திற்குரியது.
நாட்டில் நடைபெறுகின்ற சமூக விரோத செயல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் மறைக்கப்படுகின்ற உண்மைகளை கண்டறிவதில், இன்றைக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையானது காவல்துறைக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு புலனாய்வுகளை மேற்கொண்டு பல நேரங்களில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் முதன்மையாக விளங்குகின்றன. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுகின்றவர்கள் பல்வேறு சவால்களையும் கடந்துதான் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் தான் எந்த ஒரு அரசும் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே, பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக காவல்துறை கைவிட்டு விட்டு, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறை என்றைக்கும் சுதந்திரமாக செயல்படுவதை ஆளும் தவெக அரசு உறுதிசெய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞான பீட விருதை, கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள் பெற்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி மற்றும் கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றுள்ள திரு.வைரமுத்து அவர்கள், தமிழ் இலக்கியத் துறையில் எழுத்தாளர் அகிலன் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இருவரையும் தொடர்ந்து தமிழ் மண்ணிலிருந்து மூன்றாவது கவிஞராக ஞான பீட விருதினை பெற்றிருப்பதன் மூலம் தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.
தனது பிறந்தநாளான இன்று ஞான பீட விருது பெற்றுள்ள திரு.வைரமுத்து அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும், அவர்களது வாழ்வில் இன்னும் பல உச்சங்களை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.@Vairamuthu
பிரபல முன்னணி பாடகியும் "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற திருமதி.S.ஜானகி அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திருமதி.ஜானகி அவர்களின் மறைவு இசைத்துறையில் யாராலும் ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
திருமதி.ஜானகி அவர்கள் தனது 60 ஆண்டு கால இசைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், சிங்களம், துளு, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களுக்கும் அதிகமாக பாடி எண்ணற்ற பல விருதுகளை வென்ற பெருமைக்குரியவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக “என் அண்ணன், நீரும் நெருப்பும், அன்னமிட்டகை” உள்ளிட்ட பல படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரி, திருமதி.S. ஜானகி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை உலகினருக்கும், கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
#SJanaki #LegendForever #IndianMusic
வியட்நாம் நாட்டின் பூ குவாக் தீவு அருகே இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தை சேர்ந்த 10 நபர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 15 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
சிறந்த வணிக செயல்பாட்டிற்காக தனியார் நிறுவனம் சார்பில், வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் படகில் பயணித்தபோது, படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 நபர்களில் 15 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இதில் 10 நபர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை, அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை மற்றும் மகனை பட்டப்பகலில் கொன்று அவரது தலையை சாலையில் வீசிச்சென்ற கொடூரம் அரங்கேறியிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
திருநெல்வேலி அடுத்த கல்லிடைக்குறிச்சியில் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த திரு.காளிமுத்து அவர்கள் தனது இரு மகன்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் தாக்கப்பட்டு, காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜையும் வெட்டி கொன்றதோடு, காளிமுத்துவின் தலையை நடு ரோட்டில் வீசி சென்றுள்ளதாகவும், மர்ம கும்பலின் தாக்குதலுக்கு ஆளான மூத்த மகன் சின்ராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்ற சட்ட விரோத செயல்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இன்னும் சரிசெய்யப்படாமல் இருப்பதைத்தான் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு, தொடர்ந்து நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க தவறினால், மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாவதுடன், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது முற்றிலும் கடினமாகிவிடும். எனவே, தமிழ்நாட்டில் சட்ட விரோத செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடினமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கல்லிடைக்குறிச்சி அருகே நடைபெற்ற இந்த கொடூர கொலையில் உயிர் நீத்த காளிமுத்து மற்றும் அவரது மகனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான திரு.கே.வெங்கட நாராயணா அவர்களை தமிழக அரசு நியமித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றிடவும், தமிழக மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவேண்டிய முக்கிய பொறுப்பு கொண்ட பதவிக்கு, கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள நபரை நியமிப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது ஆகாது. அதிலும்,குறிப்பாக கர்நாடக மாநில அரசு காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திரு.கே.வெங்கட நாராயணா அவர்களின் நியமனத்தை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உறுதியோடு போராடக்கூடிய வகையில், தகுதி வாய்ந்த, நல்ல அனுபவம் கொண்ட, தமிழ் மண்ணை சேர்ந்த ஒருவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்திட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும், சமூக மாற்றத்திற்கான பல முன்னோடி சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே, தனித்து நின்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து, தமிழக சட்டமன்றம் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும், பல அறிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக நம் இளைய சமுதாயத்தினர் பார்த்து கொண்டிருக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். தற்போது சட்டமன்றத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்பொழுது நம் இளம் சமுதாயத்தினர், நாமும் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என தவறுதலாக கருதிவிடக்கூடாது. தமிழக முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டு இருப்பதால் தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் அது பயனளிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் இன்றைக்கு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் வைத்து இருக்கிறார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீது வெறுமனே குற்றம் சாற்றுவதோடு இருந்துவிடாமல் அவர்கள் மீது உள்ள குற்றத்தை நிரூபித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து செயலில் காட்டுவதுதான் சிறந்ததாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுளேன்.
தமிழக சட்டமன்றத்தில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி, திரு.ஓ.பி.ராமசாமி ரெட்டியார், கர்மவீரர் திரு.காமராஜர், திரு.C.N.அண்ணாதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் முதல்வர்களாக பணியாற்றி இருக்கின்றனர். தமிழக மக்களுக்கு தேவையான வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியும், மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் மக்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற அத்தியாவசிய தேவைகளையும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் விவாதிக்க வேண்டிய நேரத்தை, தனி மனித தாக்குதல்களுக்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்வதற்கும் அந்நேரத்தை செலவிடுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காது. தமிழக மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், தமிழக சட்டமன்றத்தில் நாம் தொன்றுதொட்டு கட்டிக்காத்த மரபுகளை, கடைபிடித்து வந்த விதிகளை, பாரம்பரியமிக்க மாண்பை காப்பாற்றும் விதமாக தங்களது செயல்பாடும் அமையவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் தவெகவினர் சென்று மாணாக்கர்களின் கல்வி பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையதாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பள்ளி வகுப்பறையில் தவெகவினர் நுழைந்து தமிழக முதல்வரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மாணாக்கர்களிடம் பாடம் எடுத்த வீடியோக்கள், செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. இதன்மூலம் மாணவ-மாணவியர்களின் கல்வி பாதிக்கக்கூடும்.
அதேபோன்று, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அமைச்சர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் மேடையிலேயே குத்தாட்டம் போடுகிறார். இது மாணவர்களுக்கு எந்தவித பயனையும் அளிக்காது. இது போன்ற செயல்களை அனுமதித்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு பட்டம் வழங்கியபோது, தவெகவினர் அவர்களது கட்சியின் பிரச்சார பாடலை ஒலிபரப்புகின்றனர். இது போன்ற செயல்களை தவெக அரசு கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கல்லூரி வாகனத்தில், திமுகவினர் அவர்களின் கட்சி கூட்டங்களுக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். அதனை அப்போதே தவறு என சுட்டிக்காட்டி இருக்கிறேன். இதற்குத்தான் மக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தலில் உரிய பாடத்தையும் கற்பித்துள்ளனர். ஆனால், இன்றைக்கு புதிதாக ஒரு ஆட்சி அமைந்த பிறகும் காட்சிகள் மாறாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் பெரும்பாலான பள்ளிக்கட்டடங்கள் பராமரிப்பின்றி இடிந்துவிழும் நிலையில் உள்ளன. எனவே, தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பள்ளிக்கட்டடங்களில் தேவையான கட்டிடப்பணிகளை மேற்கொண்டு மாணவ-மாணவியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
சுதேசமித்திரன், மணிச்சுடர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள மூத்த பத்திரிகையாளர் திரு. பெரியசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் திரு. பெரியசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.