JUNE21
#SDPIFORMATIONDAY
Celebrating 18TH Year of Dedication
To Justice and Equality
17 YEARS OF
STRUGGLE. SERVICE. SACRIFICE.
FOR A JUST AND EQUITABLE INDIA.
#ஜூன்21
SDPIகட்சி துவக்கதினம்.
கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள்,ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அரசுப் பள்ளியில் மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லா சீருடைகள், தரமற்ற புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் வழங்கல்!
தரமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஏழை, எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளே இவையனைத்தும் மாணவர்களின் கைகளில் கிடைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தற்பொழுது வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு ஆகியவை மிகவும் மோசமான நிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசு வழங்கும் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து, சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தகப் பைகள் ஆகியவை மிக மோசமான தரத்திலும், தவறான அளவுகளிலும் உள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லாமல், ஏற்ற இறக்கங்களுடனும், அளவுகள் மாறியும் சீருடைகள் உள்ளன. ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் 'ஏனோ தானோ' என்ற மனோபாவத்துடன் தரமற்ற துணிகளையும், புத்தகப் பைகளையும் வழங்குவதால் அவை சில மாதங்கள்கூடத் தாங்குவதில்லை. "அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்" என்ற அதிகாரிகளின் அலட்சியப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் நலன் காக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, சீருடைகளைத் தைக்கும் பணியைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாக வழங்கக் கூடாது. மாறாக, கோடை விடுமுறைக்கு முன்பாகவே மாணவர்களிடம் சரியான அளவுகளை எடுத்து, அந்தந்தப் பள்ளிகளைச் சுற்றியுள்ள உள்ளூர் தையல்காரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதற்கான தரமான துணிகளை அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்குச் சரியான அளவில் சீருடைகள் கிடைப்பதுடன், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் பெருமளவில் உறுதி செய்யப்படும்.
அதேபோல், புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் அளவு மற்றும் தரத்தை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும். தரம் குறைந்த அல்லது அளவில் குறைபாடுள்ள பொருட்களை, ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களிடமே உடனடியாகத் திருப்பி அனுப்பி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் வகையில் தரமற்ற பொருட்களை வழங்குவதை நிறுத்தி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அவர்களும் பெருமிதத்துடன் பள்ளிக்குச் செல்லும் வகையில் தரமான கல்வி உபகரணங்களை வழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்கள், ஏழை மாணவர்களின் கல்விச் சூழலோடு விளையாடும் இந்த முறைகேடுகளைக் களைந்து, இந்த நிதியாண்டிலேயே உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu
நீண்ட நாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு உடனடி பரோல் வழங்கிடுக! - தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகச் சிறைகளில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக, அதாவது 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்துவிட்டனர். அரசின் கருணை விடுதலை கிடைக்கப் பெறாத நிலையில், பரோலில் இருந்த இவர்களுக்கான பரோல் காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அவர்கள் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களாகக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்துவந்த சிறைவாசிகள் உட்பட அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த மனிதாபிமானப் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
முன்னாள் சிறைவாசி பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சட்டப்பூர்வ முன்னுதாரணங்கள் உள்ள நிலையில், அதே சட்டக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எவ்விதப் பாரபட்சமுமின்றி துரிதப்படுத்த வேண்டும். மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில், அந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்ய அரசு உரிய ஆவன செய்ய வேண்டும்.
மேலும், அவர்களின் இறுதி விடுதலைக்கான சட்ட வழிமுறைகள் நிறைவடையும் இடைப்பட்ட காலம் வரை, அவர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அவர்களுக்கு மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிடத் தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே தற்போதைய முதன்மையான கோரிக்கையாகும். பரோல் நீட்டிப்பு மட்டுமே இப்போது தவித்துக் கொண்டிருக்கும் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்காலிக நிம்மதியைத் தரும்.
கால் நூற்றாண்டு காலச் சிறைவாசம் என்பது ஒரு மனிதனின் ஆயுளில் பெரும்பகுதியாகும். இவர்களின் எஞ்சிய வாழ்நாளையாவது தங்களது குடும்பத்தினருடன் கழிக்கும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையைத் தனிப்பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, முதற்கட்டமாக இவர்களுக்கு மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிட விரைந்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu
மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
எனினும், மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. வரும் காலங்களில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
புதிய அமைச்சரவை அனைத்துத் துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்; தமிழகத்தின் மாநில உரிமைகளை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல், சாமானிய மக்களை வஞ்சிக்காத, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி SDPI வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்கள் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தனது வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
#DMKWins2026#VoteforDMKAlliance#திராவிட_மாடல் #முகம்மது_முபாரக் #உதயசூரியன் #நன்னிலம் #nannnilam
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக மாநில தலைவர் முகம்மது முபாரக் போட்டி
------------------
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து எஸ்டிபிஐ கட்சி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி திமுக கூட்டணியில் #நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (மார்ச்.29) நடைபெற்றது.
அதன்படி நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக, கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அவர்களை, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி அறிவிப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொருளாளர் அப்துல் சத்தார், தேசிய செயலாளர் யாமுகைதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக், பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமீர் ஹம்சா, முகமது ரஷீத், பஷீர் சுல்தான், ரத்தினம் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#MohamedMubarak | #SDPI | #DMK | #MKStalin
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் SDPI கட்சிக்கு #நன்னிலம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி தலைவர்களை சந்தித்து SDPI கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் ஆதரவு கோரினார்!