Sensational Song Of the Year சாய் அபயங்கர் (ஊறும் பிளட்)
இதுவரை நாம் கேட்டுப் பழக்கப்பட்ட பல துள்ளலிசை பாடல்களிலிருந்து முற்றிலும் வேறொன்றாக வந்து நின்றது 'ஊறும் பிளட்'. நமக்குப் பழக்கப்பட்ட சென்னை சாலைகளில், பீச்களில் `மன்னனனா வந்தனா ஊர் அலற' என ட்யூட்கள் ஆட, இணைய உலகில் மில்லியன்களையும் கடந்து மாரத்தான் நடத்திக்கொண்டிருக்கிறது ட்யூட்டின் `First Gear'. `என் மூச்சவ பேச்சவ என' சொடக்குப்போட்டு குவிந்த ரீல்ஸ்கள் இன்ஸ்டாகிராமின் இன்பாக்ஸை நிறைத்தன.ஒரு பெருங்கூட்டத்தின் கொண்டாட்ட மொழியானது இப்பாடல்.மாறிக்கொண்டே இருக்கும் இணையத்தின் வரையறைகளை இசை வழி எல்லாருக்கும் உணர்த்தும் நவயுகத் தூதுவராக உருமாறி நின்றார் சாய் அபயங்கர். இந்தத் தலைமுறையின் ஃபேவரைட் ட்யூனாகிப்போன இந்த பாடல் கடந்த ஆண்டின் டாப் கியர் சென்சேஷன்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #SaiAbhyankkar | #SensationalSongOfTheYear
சிறந்த திரைக்கதை - கீர்த்தீஸ்வரன் (டியூட்)
ஒரு படம் திரைக்கு வெளியே விவாதிக்கப்படும்போது தான் அது நேர்த்தியான காட்சி அனுபவமாகிறது.
இது பரீட்சார்த்தப் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற கருத்துருவாக்கத்தை உடைத்து ‘டியூட்’ வழியே கீர்த்தீஸ்வரன் கிளப்பிய அதிர்வலைகள் ரிக்டர் அளவுகோலில் பத்தைத் தாண்டி எகிறியது.
‘பார்த்துப் பழகிய முக்கோணக் காதல் கதைதானே’ என உள்ளே சென்று அமர்ந்தவர்களுக்கு, அடுத்தடுத்த திருப்பங்களைச் சன்மானமாய் அளித்துக்கொண்டே இருந்தது இவரின் திரைக்கதை.
பலகாலமாய் பால் ஆதிக்கமும், சாதிய வெறியும் பெண்ணுடலை எப்படிக் கருவியாய் பயன்படுத்துகின்றன என்கிற ஆழமான அரசியலை இனிப்புக்குள் வைத்து ஊட்டப்படும் மருந்துபோல சிரிப்பு கலந்து சொன்னது இவரின் எழுத்து.
அந்த வகையில், எண்ணவோட்டத்தில் வெகுவாய் பின்தங்கிப்போய்விட்ட ‘பூமர்களுக்கும்’ புரியும் மொழியில் பேசியதே கீர்த்தீஸ்வரனின் அசல் வெற்றி.
‘கலாசாரம் என்பதே அந்தந்தக் காலத்து நியாயம்தான். மாறுதலுக்குத் தப்பாது’ எனச் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் தான் நினைத்ததை தீர்க்கமாய் முன்வைத்த கீர்த்தீஸ்வரன் இந்தத் தலைமுறையின் கலகக்குரல்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Keerthiswaran | #Dude | #BestScreenplay