'Rakesh The Hell' changed to 'Rakesh – The Diwali'
நீங்கள் ரிட்டயர் ஆனவுடன் உலகம் உங்களை மறந்து விடும் என்று நினைத்தால், அது பெரிய தவறு. குறிப்பாக நீங்கள் வங்கியில், அதுவும் DIT மாதிரியான இடத்தில் இருந்திருந்தால், உங்கள் பழைய colleagues, friends, customers — எல்லாருடைய மனசிலும் நீங்கள் இன்னும் ஒரு “helpdesk” ஆக இருக்கலாமோ என்ற எண்ணம் இருக்கும்
ராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை போன ஃப்ரெண்ட் (Retired AGM) அங்கு ஃபோனைத் தொலைத்தார் – Early Morning என்னைக் கூப்பிட்டார் - SB Accountஐ உடனே Freeze பண்ண, DITல் யாரையாவது தெரியுமா என்ற அவசரக் குரல்.
இந்த “யாரையாவது தெரியுமா?” என்பதே நம் Banking System-இன் Unofficial Operating System. எந்தப் பிரச்சனையாயினும் அதன் Solution: Password, OTP, Token, Biometric எதுவும் இல்லை. “யாரையாவது தெரியுமா?” மட்டும்தான்.
நானும் முயற்சி செய்தேன். தெரிந்தவர்கள் எல்லாரும் ஒரே அறிவுரை. “சார், toll free numberக்கு call பண்ணுங்க.” – Googleல் உள்ள நம்பர்கள் ஃப்ராடு நம்பர்கள் – Official Siteல் இருந்து பார்த்து கூப்பிட்டு வேலை முடிந்தது
அது முடிந்த மறுநாள் இன்னொரு நண்பரிடம் இருந்து ஃபோன் - SB Accountல் phone numberஐ மாற்ற பிராஞ்சால் முடியாததால், Ticket raise பண்ணி, ஒரு நாள் ஆனபோதும் ஒன்றும் நடக்காததால், DITல் யாரையாவது தெரியுமா என்றார்
இந்த “ticket raise பண்ணியாச்சு” என்பது ஒரு தனி தத்துவம். Ticket Raise பண்ணுவது என்பது குளத்தில் கல்லெறிவது மாதிரி. பல நேரங்களில் சரியான முடிவு வரும் – ஆனால் நமக்கு முக்கியமான சமயம் எனும்போது, சத்தம் கேட்கும், அலை வரும், பிறகு அமைதி, கல் எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. ரொம்பத் தேவைப்படும் நேரத்தில் கண்டிஷனா மக்கர் பண்ணும்.
அவரிடமும் ‘’சரண்டர்’’ என்று கையைத் தூக்கியாகிவிட்டது
இந்த நிலையில் அதற்கு அடுத்தநாள் சண்டிகாரில் இருந்து ஃபோன் – இவன் ஏண்டா நம்மைக் கூப்பிடறான்னு முதல்ல எண்ணம் – தவறிப் போய் கூப்பிட்டுவிட்டானோ என்று கூட நினைத்தேன் – என்னுடன் டெல்லியில் வேலை பார்த்தவன் – இப்போது சண்டிகர் பிராஞ்சின் ஹெட்
‘’சார் ஒரு entryஐ தப்பாப் போட்டு authorizeம் பண்ணிட்டோம் – பெரிய தொகை – அதற்கு ரிவர்ஸ் என்ட்ரி போட்டு சரி பண்ணலாம் என்றால் அந்த கஸ்டமர் ‘’நாயே – பேயேன்னு திட்டறார் – தவறான அந்த டிரான்ஸாக்ஷேனே அக்கவுண்ட்ல இருக்கக் கூடாதென்கிறார் ‘’ என்றான் – அவனும் DITக்கு ஒரு Request போட்டிருப்பதாகச் சொன்னான் – உங்களுக்கு தெரிஞ்ச யார் கிட்டயாவது சொல்லுங்க என்றான். அவன் குரலில் இருந்த பதட்டம் புரிந்தது.
எனக்கு அழுவதா? சிரிப்பதான்னு தெரியலை – இங்க Chequeக்கு Spelling மறந்து போயிட்டிருக்கு – என்னுடைய பென்ஷன் பிராஞ்சுக்கு அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு முறை போகும் போது கூட இப்போது பயம் இருக்கிறது – ஏதோ ஒரு Secretariatக்குள்ள permission வாங்கிட்டு போற மாதிரி ஃபீலிங்.
ரொம்ப வருடங்கள் உயிரோடிருப்பவர்களை நினைத்துப் பார்ப்பேன் — அவர்களுக்கு தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக “Service Network”லிருந்து வெளியேறும்போது, அந்த loneliness என்ன மாதிரி இருக்கும்? யாரிடம் எதைப் பகிர்வார்கள்?
சண்டிகரில் இருந்து கூப்பிட்ட அவனிடம் நான் ரஜினி பாட்ஷா styleல உண்மையைச் சொன்னேன்: “ஒண்ணுமே நடக்காது.” என்று
அவனும் மற்ற விஷயங்களைப் பேசி விட்டு ‘’இந்தப் பக்கம் வந்தா வாங்க – ஹிமாச்சல் டிரிப் அரேஞ்ச் பண்றேன்னு’’ வைச்சிட்டான்
10-வது நிமிடம் திரும்ப அவனிடமிருந்து ஃபோன் – எதுக்குடான்னு பார்த்தால்
'அந்த கஸ்டமர் சரின்னு விட்டுட்டார் சார் – உங்களைக் கூப்பிட்டதைப் பற்றிச் சொன்னேன் - ரொம்ப கஷ்டம்னு நீங்க சொன்னதையும் சொன்னேன்’
கஸ்டமர்: ‘’அவரையே கூப்பிட்டு பேசியும், அவர் கஷ்டம்னு சொல்லிட்டார்னா, OK,, I will manage’’னு சொல்லிட்டாராம்
எனக்கு படு ஷாக்
Customerன் பெயர் என்னவென்று கேட்டேன்
ராகேஷ்னு சொன்னவுடன், அப்படியே அவனை Holdல் போட்டுவிட்டு, ஃபோனைச் செக் பண்ணினால், என்னுடைய contactல் அந்த நபரின் பெயர் ‘’Rakesh – The Diwali ” என்று save ஆகியிருந்தது
நான் DITல் DGM-ஆக இருந்தபோது, என்னை கன்னா பின்னாவென்று திட்டிய நபர் – அவருடைய பெயரை Rakesh-The Hell என்று தான் அப்போது save பண்ணி வைத்திருந்தேன்
ஏதாவது பிரச்சனை என்று அவர் call பண்ணினால், “Good morning” மாதிரி அவர் சொல்லும் முதல் வரிகள்: “நீங்கள்லாம் ஏண்டா உயிரோட இருக்கறீங்க? சாக வேண்டியது தானே! எங்களையும் ஏன் சாவடிக்கறீங்க!” – பல நேரங்களில் அவர் பேசும் ஹிந்தித் திட்டுக்கள் புரியாததும் நல்லது என்றே நினைக்கிறேன்
சிலர் “Good morning” என்று ஆரம்பிப்பார்கள். சிலர் “Sir, one small issue” என்று ஆரம்பிப்பார்கள். ராகேஷ் மட்டும் நேராக climaxலிருந்து ஆரம்பிப்பார்.
ஆனால் அவர்மேல் எனக்கு கோபம் இருந்ததில்லை. ஏனென்றால் கோபமாய் கத்துகிற customerகளுக்கு ஒரு pattern இருக்கும். அவர்களுக்கு issue விட helplessness தான் அதிகம். குறிப்பாக அவர்கள் மொழியில் பேச யாராவது கிடைத்துவிட்டால் கோபம் பாதியாகக் குறைந்து விடும்.
நான் serviceல இருந்தபோது, Andhra, Odisha, West Bengal, Gujarat என்று பல மாநிலங்களில் இருந்த computer officers கொண்ட ஒரு team இருந்தது. அந்தந்த மாநிலத்திலிருந்து call வந்தால், சம்பந்தப்பட்ட மொழி தெரிந்த officerஐயே பேச வைப்பேன். Software fix வருவதற்கு முன்பே Anger fix ஆகிவிடும்.
Solution கொடுப்பதற்கு முன், customerக்கு languageல comfort கொடுத்தா, anger பாதி அளவுக்கு குறைந்து விடும்.
பல சமயங்களில் software fixக்கும் மேல language fix வேலை செய்யும்.
Technologyக்கு ஒரு limitation இருக்கிறது. அது transactionஐ reverse பண்ணும். Passwordஐreset பண்ணும். Mobile Numberஐ update பண்ணும். ஆனால் “நான் உங்கள் கோபத்தைப் புரிந்துகொள்கிறேன்” என்பதைக் customer languageல சொல்லும் திறன் அதற்கு இன்னும் வரவில்லை.
அப்படிப்பட்ட ராகேஷ்தான் இப்போது retirementக்குப் பிறகு எனக்கு Diwali, Holi wishes அனுப்புகிறார். நானும் அவருடைய பெயரை contact listல் Rakesh – The Diwali என்று மாற்றிவிட்டேன்.
அன்று எனக்குக் கிடைத்த satisfaction வேற மாதிரி.
நான் DITல யாரையும் call பண்ணவில்லை.
எந்த systemல login பண்ணவில்லை.
ஒரு mail கூட forward பண்ணவில்லை.
ஒரு escalation கூட செய்யவில்லை.
ஆனால் ஒரு பிரச்சனை somehow, என்னுடைய பெயரை வைத்தே தீர்ந்துவிட்டது.
நாம வேலை பார்த்தற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று புரிந்த தினம் அன்று
All is not well… when the Tractor is in the Well! – Banker’s Life
கிராமத்தில் ஒரு பெரிய மனிதருக்கு கொடுத்திருந்த டிராக்டர் லோனுக்கு, தொடர்ந்து நான்கு மாதங்கள் EMI வரவில்லை.
மேலிடத்திலிருந்து தினமும் ஒரே கேள்வி. "Recovery எங்கே?"
வேறு வழியில்லை. நேரே கிராமத்துக்கே கிளம்பினேன்.
அவர் நல்ல மனிதர். ஆனால் கொஞ்சம் சென்சிட்டிவ். வங்கிக்காரன் வீட்டுக்கு வந்தது ஊருக்குத் தெரிந்தால், Bank Manager கடனைக் கேட்டு வீட்டுக்கு வந்துட்டார் என்ற பட்டம் அவருக்கு பெரிய அவமானம் என்று நினைப்பவர்
என்னைப் பார்த்ததும், "சார்... இன்னும் 15 நாள்ல கட்டிடுறேன்."
"சரி."
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, "அப்படியும் நான் கட்டலைன்னா... டிராக்டர் சாவியை உங்க கிட்ட வந்து கொடுத்திடுறேன்."
நான் மனதில், அதற்கும் "சரி" என்றேன்.
எனக்கு மாசக் கடைசிக்குள் அவர் கட்ட வேண்டும் – அவ்வளவு தான்
பிறகு என்னை வயலுக்கு அழைத்துச் சென்று டிராக்டரைக் காட்டினார்.
மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய டிராக்டர். ஆனா புது ஷோ ரூமிலிருந்து இப்போதுதான் வெளியே வந்த மாதிரி மின்னியது.
நான், "சார்... மூணு வருஷமாச்சுன்னு யாருமே நம்ப மாட்டாங்க!"
அவர் முகத்தில் சந்தோஷம்!
வங்கிக்குத் திரும்பி விட்டேன் – வேலையில் இருந்தேன்
மாலை நான்கு மணிக்கு அந்த ஊரிலிருந்து ஒருவர் ஓடிவந்து, "சார்... காலைல பார்த்தீங்களே டிராக்டர்... அது கிணத்துக்குள்ள விழுந்துருச்சு!"
எனக்கு BP, Sugar, Cholesterol எல்லாம் ஒரே நேரத்தில் வரப் போற மாதிரி இருந்தது.
காலைதான் மேலிடத்துக்கு, "Positive feedback. Borrower cooperative." என்று மெயில் அனுப்பியிருந்தேன்.
மாலைக்கு நிலைமை... "Borrower cooperative... ஆனால் Tractor underwater."
முதல் வேலையாக Insuranceஐப் பார்த்தேன். அது அப்டேட்டாக இருந்தது.
அப்போதுதான் மூச்சு வந்தது.
மாலையே கிராமத்துக்குப் போனேன். கிணற்றைச் சுற்றி ஐம்பது பேர். யாரும் டிராக்டரை காப்பாற்ற வரவில்லை. அதைப் பார்க்கத்தான் வந்திருந்தார்கள்!
நம்ம ஊரில் எந்த விபத்துக்கும் முதலில் வருவது Ambulance இல்லை.
Audience!
அந்தக் கிணறு சாதாரண கிணறு இல்லை. நம்ம நகரங்களில் இருக்கும் "குடும்பக் கிணறு" கிடையாது.
அதைப் பார்த்தால், "கிணறு" என்பதை விட, "சின்ன ஏரி."ன்னே சொல்லலாம் – பிரமாண்ட சைஸ்
டிரைவர் ரிவர்ஸ் எடுத்திருக்கிறார். ரிவர்ஸ் எடுத்தது டிராக்டரையா..அல்லது நம்ம Recovery வாழ்க்கையையான்னு தெரியலை
தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே!
நல்லவேளை... கிணற்றில் தண்ணீர் இருந்தது. இல்லையென்றால் டிராக்டர் "Second-hand" ஆகாமல் "Scrap-hand" ஆகியிருக்கும்.
முப்பது அடி ஆழத்தில் தண்ணீருக்குள்... டிராக்டர் மட்டும் பளிச்சென்று தெரிந்தது.
அது கீழே இருந்தாலும், "நான் இன்னும் Showroom Condition தான்!" என்று சொல்லிக் கொண்டிருந்தது.
இதற்குள் சிலர் கிணற்றுக்குள் இறங்கி ஆலோசனை கொடுத்தனர். வெளியே வந்ததும்,
ஒருவர், "இப்படி எடுங்க..."
மற்றொருவர், "அப்படி எடுங்க..."
இன்னொருவர்: "என் மச்சான் இருந்தா ஐந்து நிமிஷத்துல எடுத்திருப்பான்..."
இந்த நாட்டில் ஆலோசனை இலவசம் மட்டும் இல்லை... Unlimitedம் கூட
உரிமையாளர் மட்டும் ஒன்றும் பேசவில்லை. கிரேன் எடுக்க டவுனுக்குப் போய்விட்டார். அன்று இருட்டி விட்டதால் காலை 8 மணிக்கு எடுப்பதாகச் சொல்லி கலைந்து சென்றனர்
மறுநாள் காலை. எட்டு மணிக்கு டிராக்டர் எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி... கிராமத்தில் தீபாவளி அறிவிப்பை விட வேகமாகப் பரவியது.
கிணற்றைச் சுற்றி சரியான கூட்டம்! அங்கேயே ஒருவர் பம்ப் செட் அருகே வேக வைத்த வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார்.
பலூன் கடையும், பானிபூரியும் மட்டும் இருந்திருந்தால்... அந்த இடம் டிராக்டர் ரிக்கவரி இடம் இல்லை – Temple Festivalஐப் போல் மாறி இருக்கும்
ஒருத்தன் இன்னொருத்தனிடம், "நான் இதுவரைக்கும் டிராக்டர் கிணத்துல விழுந்தது பார்த்ததில்ல. எப்படி எடுக்கறாங்கன்னு பார்ப்போம்!"
அவன் முகத்தைப் பார்த்தால், கிரிக்கெட் World Cup Final பார்க்க வந்த ஆர்வம்!
அந்த டிராக்டரை எடுப்பது அவ்வளவு சாமான்ய வேலையாய் இல்லை – கிரேனுடன் வந்தவர்களில் சிலர், உள்ளே குதித்து, இரும்புக் கம்பிகளை , டிராக்டரின் முன் பக்கம் மாட்டி, பின் டிராக்டரை சுற்றி கட்டி (அதற்கு அவர்கள் டிராக்டரைத் தாண்டி முங்கி கம்பியை டிராக்டரைச் சுற்றி மேலே கொண்டு வந்தனர்), எல்லாம் முடிந்து அவர்கள் சரி என்றவுடன் டிராக்டர் இழுக்கப்பட்டது
2 மணி நேரமாகியது – டிராக்டர் ஒரு பெரிய வாட்டர் வாஷ் முடிந்து வருவது போல் வெளியே வந்தது – சுற்றியிருந்தவர்கள் ‘’ஹோ’’ என்று பெருங்கூச்சலிட்டனர்
அதிலும் ஆச்சரியம்... டிராக்டருக்கு பெரிய சேதமே இல்லை. கிரேன் காரர்களே, "இப்படி ஒரு Lucky Caseஐ நாங்க பார்த்ததே இல்ல!" என்று சொன்னார்கள்.
இதற்குள் ஓரமாக இருபது பேர் ஒரு உயரமான பையனைச் சுற்றி நின்றிருந்தார்கள்.
என்ன விஷயம் என்று பார்த்தேன். அவன்தான் டிராக்டரை உள்ளே தள்ளிய டிரைவர்! ஒரு துளி guilty feeling கூட இல்லை.
மாறாக...Live Commentary!
"அப்புறம் ரிவர்ஸ் எடுத்தேன்... லேசாதான் சுவர்ல மோதினேன் ஆனாச் சுவர் உடைஞ்சுச்சு... அப்புறம் டிராக்டர் உள்ள விழப் போகுது. நான் இப்படி குதிச்சு, அப்படிக்கா வெளியே வந்தேன்..."
அவன் பேசும் Confidence-ஐ பார்த்தால்... ஒரு ஸ்டண்ட் டைரக்டர் மாதிரிப் பேசிக் கொண்டிருந்தான்
எது எப்படியோ... டிராக்டர் காப்பாற்றப்பட்டது. உரிமையாளரின் முகத்தில் மீண்டும் சிரிப்பு.
ஒரு மெக்கானிக் வந்து சோதித்துப் பார்த்துவிட்டு, அரை மணி கழிச்சு ஸ்டார்ட் பண்ணிரலாம்னு சொன்னார்
ஓனர் என்னைப் பார்த்தவுடன், "சார்... கவலைப்படாதீங்க... லோனைக் கட்டிடுறேன்!" என்றார்.
சொன்னது போலவே... ஒரு வாரத்தில் முழுக் கடனையும் கட்டிவிட்டார்.
All was not well when the tractor was in the well...
But thankfully... the well was kind enough to save the tractor! 😄
தவெக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால், 70 எம்எல்ஏ-க்கள், 10 மந்திரி பதவிகள் வரை கிடைத்திருக்கும்னு காங்கிரஸ் புதிய தலைவரை வரவேற்கும் இடத்தில் காங்கிரஸார் பேச்சு
இந்த தேர்தலில் நடந்த நல்ல விஷயமே தவெக தனித்துப் போட்டி போட்டதுதான் - எல்லா ஓட்டும் விஜய்-க்காக விழுந்தவை
தவறிப் போய் காங்கிரஸ் கூட்டணி இருந்திருந்தால்
1. எங்களால் தான் நீங்க ஜெயிச்சீங்கன்னு தவெக-கிட்ட இந்த இத்துப் போன காங்கிரஸ் இப்ப சொல்லிட்டிருக்கும்
2. இது நாள் வரை நீங்க ஜெயிச்சதும் எங்களாலதான்னு திமுக கிட்ட கூட சொல்லியிருப்பானுவ
நல்ல காலம் = அதையெல்லாம் ஏதோ ஒரு சக்தி, அதை விதின்னே வைச்சுக்கலாம். அது தடுத்து விட்டது
Great
ராதா... ராதா... கிருஷ்ணா - Escape!
இன்று காலை கடைக்குப் போகலாம் என்று கீழே வந்தால் நாலு பேர் மரத்தைப் பார்த்து ‘’காகா, காகா என்பதற்கு பதிலாக கீ, கீ என்று கத்திக் கொண்டிருந்தார்கள்’’ – அதில் எங்க தெருவில் கடை வைத்திருப்பவரின் குரலும் இருந்தது
என்னடா என்று பார்த்தால, வேப்ப மரத்தின் மேல் கிளையில் ஒரு கிளி
எங்கள் தெருமுனை கடைக்காரர் ஒரு பெரிய Bird Lover. அவர் கடையில் இரண்ட கிளிகள் உண்டு – மேலே வீடு – வீட்டில் அவைகளை திறந்து விடுவார் – வெளியே போக முடியாது – சன்னல்கள் உண்டு – அங்கேயே சுற்றலாம் – கடைக்கு எடுத்து வரும் போது Z+Security - கூண்டுக்குள் - இவர் வெளியில் போவதென்றால், பையன் வீட்டில் கொண்டு போய் கிளிகளை விட்டு விடுவார்
கிளிகளின் பெயர் ராதா, கிருஷ்ணா
நடந்து இது தான்: இன்று காலை வழக்கம்போல் கூண்டைத் தூக்கிக்கொண்டு பையன் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்திருக்கிறார்
எதிரே வந்த ஒரு நல்ல மனுஷன், "என்ன சார்... கூண்டோடு எங்க கிளம்பிட்டீங்க’’
கடைக்காரர் பெருமையாக, "கிளிகள்... ராதே... கிருஷ்ணா..." என்று சொல்லிக்கொண்டே கூண்டை அவர் பக்கம் திருப்பிக் காட்டினார்.
அந்த ஆள் என்ன நினைத்தாரோ தெரிய வில்லை...
"அடடே... இவ்வளவு அழகான கிளிகளா? கொஞ்சம் Close-upல பார்க்கலாம்!" என்ற ஆர்வத்தில்...
கிளியைப் பார்க்க வேண்டியவர், கதவைத் தொட்டுவிட்டார் – அந்த கதவு சரியாகப் பூட்டப்படவில்லை
அடுத்த நொடியே...*கிருஷ்ணா — ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!* ✈️
ஒரே பறப்பு! கடைக்காரர் பதறி, கூண்டை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு
*"ராதா... ராதா... ராதா..."* என்று கத்த ஆரம்பித்தார்!
பக்கத்தில் நின்றவர்கள், "அடப்பாவி... கிளி போன நேரத்திலும் பக்தி மட்டும் குறையலையே!" என்று நினைத்திருப்பார்கள்
ஆனால் உண்மையில் அவர் சொல்ல வந்தது, *"ராதாவைப் பிடிங்கடா! இல்லேன்னா இவளும் கிருஷ்ணாவைப் பார்க்கப் பறந்து போயிருவா"* என்று
சுமார் பத்து நிமிடம் அதை கீழே வர என்னென்னவோ முயற்சிகள் – இவர்கள் பண்ணிய கூத்தில் அந்த ஏரியா முழுவதும் வேப்ப இலைகள், கிளைகள் சிதறியது தான் மிச்சம் - கிளியைப் பிடிக்க முயற்சித்ததை விட, வேப்ப மரத்துக்குத்தான் அதிக கஷ்டம். வேப்ப மரம் மட்டும் மனசுக்குள், "நான் என்ன பாவம் பண்ணேன்?" என்று அழுதிருக்கும்.
ராதா மட்டும், "நான் குடும்பப் பொண்ணு... எங்கேயும் போக மாட்டேன்!" என்று கூண்டிலேயே இருந்தது.
அப்போது எங்கிருந்தோ ஒரு ஸ்கூட்டர் பையன் வந்தான். நான் கிருஷ்ணாவை கீழே வரவழைத்துக் காட்டுகிறேன் பேர்வழி என்றான் - YouTube-ல "How to call a parrotஐப் பார்த்திருப்பான் போல - ஸ்கூட்டர் மேல் ஏறி, கூண்டை வாங்கி, ராதையை, கிருஷ்ணா பார்க்கட்டும் என்று கூண்டை 90 டிகிரி திருப்ப, கதவு சரியாக பூட்டபடாமல் இருந்ததில், ராதையும் கிருஷ்ணனை நோக்கி மேலே போனது - ஜூட்
கொஞ்ச நேரத்தில் இரண்டும் இன்னும் மேலே, இன்னும் மேலே என்று மேல் கிளைகளுக்குப் போய்விட்டன – என்னுடைய பயம், காக்கைகள் – அவை ஈஸியாக வீட்டுக் கிளிகளான இவைகளை டார்கெட் பண்ணும் என்பது தான்.
நான் கடைக்குப் போய்விட்டேன் – திரும்ப வந்தபோது தெரு அமைதியாக இருந்தது – கடைக்குப் போனேன்
கடைக்காரரைப் பார்த்து கேட்டேன் என்னாச்சு என்று – ‘’வெறுங்கூண்டைத் தூக்கிக் காட்டினார்’’
‘’கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து, ஆத்தை விட்டு பறந்து போயிடுத்து’’ கௌரவம் சிவாஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்
ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் கடந்த ஒரு மாதமாக Platform போடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது
ஏற்கனவே இது ஒண்ணரை அணா ரோடு. இது போன்ற ரோடுகளில் பெரிய பஸ்ஸை allow பண்ணுவதே தப்பு - Artificial traffic is always created.
யார் இந்த பிளாட்பார்ம் ஐடியா கொடுத்ததுன்னு தெரியலை
இப்போதே பிளாட்பார்ம் போட்டு முடிந்த ஒரு போர்ஷனில் கடைக்காரர்கள்
1. சேரைப் போட்டு சாட் பிஸனஸ் பண்ணுகிறார்கள்
2. ஹோட்டல்காரர்கள் குப்பைத் தொட்டியை வெளியில் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
3. துணிக் கடைக்காரர்கள் displayஐ இந்த பிளாட்பாரத்தில் போட்டு நடப்பதையே தடுத்திருக்கிறார்கள்
4. கடைக்காரர்களுக்கு வாடகையில்லாத extra இடம் கிடைத்திருக்கிறது
இது வரை கஷ்டப்பட்டு டூ வீலரை பார்க் பண்ணிய மக்களுக்கு இந்த பிளாட்பார்ம், படு இடைஞ்சலை ஏற்படுத்தியிருக்கிறது - 4 அடி குறைவதால், ரோட்டில் பார்க்கிங்
நிரந்தர டிராஃபிக் பிரச்சனை
@chennaicorp
குன்னூரின் திகில் நிமிடங்கள்
Depression என்று சொன்னாலே, எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது சென்னிமலை செந்தில்குமார் தான்.
1982-ல் குன்னூரில் வேலைக்குச் சேர்ந்த புதிது.
ஆபீஸுக்கு மிக அருகிலேயே ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தேன். சதுர வடிவில் ஒரு அறை. நான்கு கட்டில். நான்கு பேர். மாத வாடகை ரூ.65.
இப்போ அந்த வாடகைக்கு குன்னூர்ல ஒரு சாப்பாடு கூட கிடைக்காது!
என்னோட ரூம்மேட்களில் இரண்டு பேர் டெலிபோன்ஸ் டிபார்ட்மெண்ட். இன்னொருத்தர் பாங்க் ஆஃப் பரோடா.
மொத்தம் 12 ரூம்கள். ஐம்பது, அறுபது பேச்சுலர்ஸ். இரவுகளில் சில ரூம்களில் சீட்டுக்கச்சேரி.
எங்க ரூம்மேட் தான் செந்தில்குமார். Telephone Department
அவன் ஒரு வித்தியாசமான கேரக்டர்.
நன்றாகப் பேசிக்கொண்டே இருப்பான். திடீரென்று ரிமோட்டில் Mute பட்டன் அழுத்திய மாதிரி நாலு நாள் வாயே திறக்க மாட்டான். இப்போ இருந்தா WhatsApp-ல Last Seen Off பண்ணிருப்பான். அப்போ அதுக்கு Technology இல்ல. அதனால அவனே Off ஆயிடுவான்.
அந்தக் காலத்தில் எங்களுக்கு சினிமா என்பது பொழுதுபோக்கு இல்லை... Part-time job! அது தான் தொழிலே
குன்னூரில் அப்போது புதுப்படங்களுக்கு மட்டுமே நாலைந்து நாள் Second Show.
இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே போனால், நம்ம உடம்பே "நீ உள்ளே போடா!" என்று ஆர்டர் போடும் அளவு வெளியில் குளிர். பல தடவை லோயர் குன்னூர் கணேஷ் தியேட்டருக்குப் போய், அவன் மாடியில் இருந்து வந்திருக்கும் கூட்டத்தை எண்ணி, "இன்று Second Show Cancelled..."ன்னு சொல்லிட்டு லைட்டுகளை அணைத்துவிட்டுப் போய் விடுவான் – நாங்க லொக் லொக்கென்று 1 கிமீ மலைப் பாதையில் மேலேறி வர வேண்டும் – அந்தக் குளிரிலும் வேர்க்கும்
அது போன்ற ஒரு டிசம்பர் இரவு. செந்தில் எங்களிடம் பேசாத "Silent Mode"-ல இருந்த ஒரு நாள்
நாங்க மூணு பேரும் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் பார்க்க Second Show போய்விட்டோம். திரும்ப வந்தோம்
ரூம் கதவு திறந்தே இருந்தது. லைட் எரிந்துகொண்டிருந்தது.
செந்தில் கட்டிலில் ஒருவித மயக்கத்தில். இப்போ இருந்தா..."தண்ணி அடிச்சுட்டு வந்திருக்கானோ?"ன்னு நினைப்போம்.
ஆனா 1982-ல TASMAC-ஐ விட டீக்கடைதான் அதிகம்.
"என்ன ஆச்சு?"ன்னு கேட்டோம். கண்ணை மெதுவாகத் திறந்தான்
அவன் Office Circular வாசிப்பது போல் ரொம்ப அமைதியாக...
"நீங்கள்லாம் என்னை விட்டுட்டு அப்பப்ப சினிமா போயிருரீங்க... அதனால கோபத்துல இருபது தூக்க மாத்திரையைப் போட்டுட்டேன்... இன்னும் அரை மணி நேரத்துல செத்துருவேன்... நீங்க டெய்லி சினிமா போய் ஜாலியா இருங்க." என்று சொல்லிவிட்டு, கண்களை மூடிக்கொண்டான்.
அவன் மட்டும் கண்களை மூடினான்.
எங்களுக்கு மூணு பேருக்கும் தூக்கமே திறந்து போச்சு!
குன்னூரின் டிசம்பர் குளிரிலும் எனக்கு குப்பென்று வியர்த்தது. வயித்துக்குள் என்னென்னவோ செய்கிறது
என் இதயம் அப்போது போட்ட சவுண்டு, எனக்கே கேட்கிறது
மூணு பேரும் கீழே ஓடி... எந்தெந்த கதவைத் தட்டினோம்... யாரையெல்லாம் எழுப்பினோம்... யாரெல்லாம் எங்களை திட்டினார்கள்... என்ற எதுவுமே ஞாபகம் இல்லை.
அந்தக் காலத்தில் Uber இல்லை. Ola இல்லை. 108 இல்லை. குன்னூரில் ஆட்டோவே கிடையாது – டாக்ஸிகள் மட்டுமே
ஒரே ஒரு ஆள்கிட்ட மட்டும் பைக் இருந்தது - அவனை எழுப்பி... செந்திலை நடுவில் உட்கார வைத்து... நாங்க பின்னாடி உயிரை கையில் பிடிச்சுக்கிட்டு...அருகிலிருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம். மற்ற இரண்டு பேரும் இன்னொரு பஜாஜ் லாம்ரட்டா வண்டியில்
ஹாஸ்பிட்டலில் இருந்தவர்களுக்கு போலீஸ் கேஸ் பயம்.
எங்களுக்கு அதைவிட பயம்! கெஞ்சல்னா கெஞ்சல் அப்படி ஒரு கெஞ்சல் அங்கிருந்தவர்களிடம் – அழாத குறைதான்
எப்படியோ அட்மிட் பண்ணினாங்க.
அதுக்கு முன்னாடி ஏகப்பட்ட பேப்பர்ல கையெழுத்து.
கையெழுத்துப் போடும்போது என் கை நடுங்கினது.
அந்த சிக்னேச்சரோடு ஒரு செக்கை பாங்க்ல கொடுத்தா, **Signature Differs**னு செக்கை ரிட்டர்ன் பண்ணியிருப்பாங்க
நல்ல வேளையாக ஒரு Night Duty Doctor இருந்தார்.
அவர் வந்து செக் பண்ணி...
சினிமா டாக்டர் மாதிரி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு,
"இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது..." என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
டாக்டர் போயிட்டார். எங்களோட BP மட்டும் மேலே போன அதே லெவலில் இருந்தது. அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால்...
போலீஸ் என்ன கேட்கும்?
நாங்க என்ன பதில் சொல்வோம்?
வேலை என்ன ஆகும்?
என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கற்பனை சினிமா ஓட்டிக்கொண்டிருந்தோம்.
அப்புறம் ஒருத்தன் ரூமுக்குப் போய்... செந்திலின் பெட்டியைத் திறந்து...வீட்டு முகவரி, போன் நம்பரைத் தேடி எடுத்து வந்தான். மணி மூன்று.
வீட்டில் லேண்ட்லைன் இல்லை.
PP Number.
3.30 மணிக்கு பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னோம்.
அவர்கள் நல்ல மனசோடு செந்திலின் அண்ணனைக் கூப்பிட்டு போன் கொடுத்தார்கள்.
நாங்க பதட்டமாக, "அண்ணே... செந்தில்..." என்று ஆரம்பிக்க...அவர் கேட்ட முதல் கேள்வி...
"திரும்பவும் மாத்திரையைப் போட்டுட்டானா?"
அந்த ஒரு வாக்கியம் கேட்டவுடன்...நாங்க மூணு பேரும் ஒரே நேரத்தில் பெருமூச்சு விட்டோம்.
அட...
இது First Attempt இல்லை! இதைவிட பெரிய Suspense-ஐ அவங்க Handle பண்ணியிருப்பாங்க போல!
எங்களுக்கு ஒரு விதத்தில் தைரியம் வந்தது.
குறைந்தபட்சம் எங்களை அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க நம்புவாங்க!
ஆச்சரியமாக செந்தில் பிழைத்துக்கொண்டான்.
மறுநாள் அவனுடைய அண்ணன் வந்தார்.
அவரிடம் செந்திலை ஒப்படைத்தோம்.
நாங்க மூணு பேரும் ஆபீஸுக்கு லீவு சொல்லிட்டு ரூமுக்கு வந்து படுத்தோம்.
அந்த நாள்தான்...சினிமா Second Show பார்த்ததற்காக First Time சரியான தூக்கம்தூங்கினோம்!
பிறகு செந்தில் வேலையை விட்டுவிட்டு, சென்னிமலையில் அப்பாவுக்கு தறி வேலையில் உதவுவதாகக் கேள்விப்பட்டோம்.
அதற்குப் பிறகு அவனைப் பற்றிய பேச்சே வந்தால், நாங்கள் வேறு டாபிக்குக்கு மாறிவிடுவோம்.
இப்போது யாராவது "டிப்ரஷன்" என்று சொன்னால்...
எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது மருத்துவப் புத்தகம் இல்லை...குன்னூரின் அந்த டிசம்பர் குளிர்... நடுநிசி பைக் பயணம்... நடுங்கிய கையெழுத்து...
சில இரவுகள் வாழ்க்கையில் தூக்கத்தைப் பறித்துவிடும்.
ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பார்க்கும் போது... அந்த இரவில் நாம் ஓடிய வேகத்தை நினைத்து சிரிப்பும் வரும்...
அந்த நேரத்தில் Horror படம் – பல வருடங்கள் கழித்து நினைத்தால் ‘’Crazy Mohan Comedy”
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையில்லாமல் பாட முடியவில்லை...முதலில் எல்லோரும் தமிழ் கற்றுக் கொண்டு வாருங்கள்... மற்றதெல்லாம் அப்புறம் 😁
நீராரும் கடலெடுத்த - எந்த கடல யாரு எடுத்தா?
தெலிலொலுகும் - ஒழுகிடுச்சு
தரித்தனரும் திலகமுமே - அது தரித்த நறும் திலகமுமே (tha not dha)
அப்புறம், வாழ்த்துதுமே என்று நெஞ்சம் நிமிர்த்தி பெருமைப்பட கூறுவதால், MSV அவர்கள் அதை ஆரோஹன ஏற்றத்தில் உச்சஸ்தாயியில் இசை அமைத்துள்ளார்.. காற்றுப் போன பலூனாக, "அப்பாடா பாடி முடிச்சாச்சு" என பெருமூச்சு விட்டது போல அல்ல...
தமிழனான எனக்கும் என் போன்றோர்களுக்கும் நிரம்ப வேதனை 😕
ஆந்திர எம்ஜிஆர் காந்தாராவும், ஸந்தியாவந்தனமும், பரிஸேஷனமும்
ஆந்திர எம்ஜிஆர் காந்தாராவின் அம்பாசமுத்திரம் ரசிகர் மன்றத்துக்கு நான் தலைவர் என்றால், செல்லமணி General Secretary. நான் 8வது, அவன் 7வது படித்துக் கொண்டிருந்த நேரம்
1970–80களில் தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழ்நாட்டையே ஆட்சி செய்த காலம். நாங்கள் இருவரும் சைக்கிளில் முக்கா பெடல்போட்டு, 4 கி.மீ. தூரம் இருக்கும் வி.கே.புரம் தாய் சினீஸுக்கு போய், "விடாகண்டன் கொடாக்கண்டன்" பார்த்த ரசிகர்கள் – NTR & காந்தாராவ் முக்கியக் கட்டத்தில், வாள் சண்டை போட்டு, ஒருவர் பெயரை இன்னொருவர் கையில் வாளால் ரத்தத்தில் எழுத, அதனால் கடைசியில் அண்ணன் தம்பி என்று தெரியும் – Goosebumps moment.
அதுபோல ஒருநாள் காந்தாராவின் முக்கியமான படமான "மாயமோதிரம்" அம்பை கிருஷ்ணா தியேட்டரில். அந்தக் காலத்தில் அந்த மாதிரி படங்கள் மூன்று நாள் ஓடினாலே Silver Jubilee மாதிரி. நாலாவது நாள் போஸ்டரின் மேல் கட்டாயம்... "இப்படம் இன்றே கடைசி!" என்று ஒட்டிவிடுவார்கள்.
செல்லமணிக்கு பூணூல் போட்டு ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
ஆறு மணிக்கே தியேட்டருக்குப் போய்விட்டோம். கூட்டமே இல்லை.
60 பைசா பெஞ்சு டிக்கெட். இன்னும் படம் ஆரம்பிக்கவில்லை.
வழக்கம்போல... "பஞ்சாபில் வெள்ளம்... பீகாரில் பஞ்சம்..." என்ற கருப்பு-வெள்ளை News Reel ஓடத் தயாராகிக் கொண்டிருந்தது.
அந்தக் காலத்து தியேட்டர்களில் குடிக்கத் தண்ணீர் என்றால் ஒரு சிமெண்ட் தொட்டி. அதில் ஒரு குழாய். அதன் கீழே... கம்பியால் கட்டப்பட்ட அலுமினிய டம்ளர்! அந்த டம்ளரையே யாராவது திருடிவிடுவார்களோ என்ற சந்தேகம் தியேட்டர் ஓனருக்கு.
திடீரென்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த இவனைக் காணவில்லை – 5 நிமிடம் ஆகியும் வராததால் நான் வெளியே வந்தேன்
அங்கே பார்த்தால்...
அந்த சிமிண்ட் தொட்டி முன் செல்லமணி தரையில் சம்மணம் (சப்பளம்) போட்டு உட்கார்ந்திருந்தான்.
பக்கத்து முட்டை போண்டா போட்டுக் கொண்டிருக்கும் டீ ஸ்டாலில் இருந்து ஒரு கண்ணாடி டம்ளரை வாங்கி, அதில் தொட்டித் தண்ணீரைப் பிடித்து:
முன்னால் கை நீட்டி... ஸந்தியாவந்தனம்!
பக்கத்தில் முட்டை போண்டா கடை. ஒரு பக்கம்... "முட்டை போண்டா... சூடா இருக்கு..."
மற்றொரு பக்கம்... "ஓம் கேசவாய நம:"
அந்த காம்பினேஷனை பார்த்து நான் குழம்பிட்டேன்.
"ஏல... என்னல பண்ணிட்டு இருக்க?" என்றேன்.
அவன்: ‘’படத்துக்கு புறப்புடுத்துக்கு முன்னாடி, ஸந்தியாவந்தனம் பண்ணிட்டு போன்னு அப்பா சொன்னார்ல – நான் மறந்திட்டேன் – வீட்டுக்குப் போனவுடன் இன்னிக்குப் பண்ணினயா?ன்னு தான் முதல்ல கேப்பார் – அதான் பண்ணிக்கிட்டிருக்கேன்’’னான்
இதற்கிடையில் முட்டை போண்டா போட்டுக் கொண்டிருப்பவர்கள் ‘’என்னமா வளத்திருக்காங்க – ஸாமி என்னமா பூசை பண்ணுது – வளர்ப்புன்னா இப்படி இருக்கணும்லன்னு’’ கமெண்ட்
சிறு வயதில் இந்த மாதிரி பண்ணியவனின் பையன் ஐயர்லாண்ட் போனபோது, அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி, ஒரு பேரனும் இருக்கான் – இவன் அங்கு போனால், அவனுக்கு பட்டை பட்டையா விபூதியைப் பூசி, Face Bookல அந்த இங்கிலீஷ் பேரனைப் பத்தி போஸ்ட் போடுவான் ‘’அம்பையின் மைந்தன்னு’’
செல்லமணி எனக்கு திடீரென்று ஞாபகம் வரக் காரணம் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சி
ஹோட்டலுக்கு மத்தியானம் சாப்பிடப் போனேன் – எதிரில் ஒரு மாமா - பையன் இலையைப் போட்டான் – சாதத்தைப் போட்டான் – கொஞ்சம் பருப்பை போட்டான்
வந்திருந்த மாமா ‘’நெய் இருக்கா’’ன்னார்.
அவன் ‘’கியா’’ன்னான் – பீகார்லயிருந்த வந்து ஜாயின் பண்ணி 4 நாள் தான் ஆகிறது போல
இவர் ‘’Ghee” என்றார் – அதற்குள் கவுன்டரில் இருப்பவர் அவனுக்குப் புரியவைக்க, அவன் உள்ளே எடுக்கப் போய்விட்டான்
இவர் என்னிடம் ‘’பரிஸேஷனம் பண்ணிட்டுத் தான் சாப்பிடணும் (சுத்தமான நீரால் வட்டமாக தெளித்து, மந்திரங்களைச் சொல்லி சாப்பிடணும்) – யார் இப்ப இதையெல்லாம் கடைபிடிக்கறா, ஆனா இந்த ஆச்சார அனுஷ்டானங்களை என்னால விட முடியலை பாருங்கோ’’ என்றார்
அடுத்த ஒரு நிமிடம்...இந்தக் காலத்து இளைஞர்கள்... கலாசாரம்... பண்பாடு... ஒழுக்கம்... எல்லாத்துக்கும் அவர் ஒரே நேரத்தில் RIP போட்டார்.
அப்போது ஹோட்டல் உள்ளிருந்து, ஒரு அரை டிரவுஸருடனும், மேலே முழுவதும் வியர்வையில் நனைந்த பனியனுடன் ஒரு நபர், ஹிந்திப் பாட்டைப் பாடிக் கொண்டே எங்களை கடந்தார் – பின் reverse எடுத்து எங்களை நோக்கி வந்தார் – நெய் வந்திடுச்சா சாப் என்று கேட்டார்
நான் அந்த மாமாவுக்கு அந்த நபரைக் காட்டினேன்
இவர் தான் நீங்கள் இப்போது சாப்பிடப் போகும் எல்லாவற்றையும் ஆச்சார, அனுஷ்டானங்களுடன் prepare பண்ணினவர் என்றேன்
அவர் நான் சாப்பிட்டு முடியும் வரை, ஒரு வார்த்தை கூட மேலே பேசவில்லை
தாடியை ஜெயித்தது யார் தெரியுமா?
சமீப காலமாக நான் போன பத்து கல்யாணங்களில், பெரும்பாலான மாப்பிள்ளைகளுக்குள் ஒரு பொதுவான ஒற்றுமை...
கேனத்தனமான தாடி!
கல்யாண நாளில்கூட முகம் பளிச்சென்று இல்லாமல் ராப்பிச்சைக்காரனைப் போல
சிலர் எடுக்க நினைத்தாலும், வருங்கால மனைவியாக வரப்போகும் இக்காலப் பெண்கள், "தாடியோடதான் நீ கேனத்தனமா அழகா இருக்கே...எடுக்காதே!" என்று அந்தப் பையனை ரேக்கி விட்டு, அவனும் நாம அழகுதான் போல என்று மாய உலகில் ........
அப்படிப்பட்ட ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். நான் அவனைப் பார்த்த நாளிலிருந்து, அவன் முகத்தை விட தாடியைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.
கல்யாண நாளில்கூட அதே கோலம்! சாஸ்திரிகளுக்கே பொறுமை போய்விட்டது. அவருக்குக் கடுங்கோபம் – என்ன பண்ண
"பொண்ணு வீட்ல முகத்தை சரி பண்ணக் கூட காசு தரலையா?"
என்று கல்யாண மேடையிலேயே சத்தமாகக் கேட்டார்!
இரண்டு நாட்களுக்கு முன் அவன் வீடியோ காலில் வந்தான். திரையில் பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி!
பளிச்சென்ற முகம்... தாடி காணாமல் போய்விட்டது!
"என்னடா... அமெரிக்கால டிரம்பின் புதிய சட்டம் எதையாவதை implement பண்ணிருக்கியா? என்று கேட்டேன்.
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.
சமீபத்தில் குழந்தை பிறந்து, இப்போது 7வது மாதம்.
பிறந்த நாளிலிருந்து அந்தக் குழந்தை, அப்பாவை தாடியுடன்தான் பார்த்து வளர்ந்திருக்கிறது.
வேலை மாறுவதற்காக Interview இருந்ததால், பல வருடங்களுக்குப் பிறகு தாடியை முழுவதும் எடுத்துவிட்டான்.
மாலையில் வீட்டுக்குள் நுழையும்போது அவனுக்கே பயம்.
"குழந்தைக்கு என்னை அடையாளம் தெரியுமா?"
ஆனால் நடந்தது வேறு! அப்பாவை தாடி இல்லாமல் பார்த்தவுடன்... குழந்தை வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்ததாம்!
அது வரை அந்த அளவுக்கு சிரித்து அவன் பார்த்ததே இல்லையாம்
அவன் தூக்கியதும், கன்னத்தைத் தொட்டு... தடவி... மீண்டும் சிரிப்பு!
அம்மாவிடம்கூட போகாமல், அப்பாவையே கட்டிப்பிடித்துக் கொண்டதாம். இப்போது... Interview முடிந்துவிட்டது.
ஆனால் தாடி மட்டும் இன்னும் திரும்பி வரவில்லை!
காரணம்? குழந்தை
தினமும் அந்த பளிச்சென்ற முகத்தைப் பார்த்து சிரிக்கிறதாம்.
எவனாலும் மாற்ற முடியாததைக் கூட... குழந்தையால் மாற்ற முடிகிறது! ❤️😂
அந்த BLUE கலர் சட்டையும் திருச்சி டெய்லரும்
நான் பார்த்து என் கண்முன்னேயே உயர்ந்த மனிதர் என்றால் அவர் திருச்சி டெய்லர் தான் – இன்று வரை அவர் பெயர் என்னவென்று தெரியாது – திருச்சி டெய்லர் என்ற பெயர் மட்டுமே எனக்குத் தெரியும்
நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் தெருவில் இருந்த பஜ்ஜி அம்பி வீட்டில், அவருடைய 17வது வயதில் திருச்சி டெய்லர் குடிவந்தார் (பஜ்ஜி அம்பி என்று அந்த 6 வயது பையனுக்கு ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஊருக்குப் போனபோது, 50 வயது பஜ்ஜி அம்பியை, அதே பேர் கொண்டே ஒருவர் அழைத்தார் - சில பட்டப்பெயர்களுக்கு ஆதார் கார்டே தேவையில்லை என்று புரிந்தது!)
பஜ்ஜி அம்பி வீட்டில், அவனும், அவன் பாட்டியும் மட்டுமே. அவர் ஒரு நார்மடிப் புடவையுடன் (காவிக்கலர்) இருப்பார். அப்பா-அம்மா, இறந்து போன நிலையில் பாட்டி தான் அவனை வளர்த்தார் – இரண்டே பேர்கள் மட்டுமே இருந்ததால், வீட்டை வாடகைக்கு கேட்ட திருச்சி டெய்லருக்கு மாடியை வாடகைக்கு விட்டார் – வாசலில் அவர் ஒரு தையல் மெஷின் வைத்துத் தைக்க அனுமதியும் தந்தார் – அவர் எப்படி திருச்சியில் இருந்து எங்க ஊருக்கு வந்தார் என்பது எனக்கு இப்போது நினைத்தாலும் ஆச்சரியமான விஷயம்
அவர் வந்த புதிதில், எங்க தெரு மற்றும் பக்கத்துத் தெருவில் இருந்த ஒன்றிரண்டு பேர் தைக்கக் கொடுத்தார்கள் – பின் அவர் நன்றாகத் தைப்பதைப் பார்த்து, தெருவில் பலரும் கொடுக்க ஆரம்பித்தனர் – அப்போது ரெடிமேட் என்ற பேச்சுக்கே இடமில்லை – தெரியவே தெரியாது – டெய்லர்கள் கோலோச்சிய காலம் – அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பிக்அப் ஆனது.
டெய்லர்களைப் பற்றி தனிக் கதையே உண்டு : டெய்லர் கடையில் துணி தைக்கக் கொடுக்க வந்த ஒருவர், வெளியே வரும்போது, அவருடைய பங்காளியைப் பார்த்தவுடன், இருவருக்கும் சண்டை வந்து, சண்டையில் டெய்லர் கடையில் இருந்த கத்திரியைக் கொண்டு அவரைக் குத்தியதால், 1 வருடம் ஜெயிலுக்குப் போய்விட்டு, வெளியில் வந்தவுடன், தைக்கக் கொடுத்த சட்டை ஞாபகம் வந்து, அந்த டெய்லரிடம் போனால், தைச்சாச்சு, காஜா மற்றும் பட்டன் வைக்க வேண்டியது தான் பாக்கி என்றாராம்
டெய்லர்கள் "நாளைக்கு ரெடி" என்று சொல்வது, அரசாங்க "விரைவில்" என்ற வார்த்தையை விட நம்பிக்கை தரும்... ஆனால் முடிவு பெரும்பாலும் ஒன்றுதான்!
ஆனால் திருச்சி டெய்லர் ஆரம்பக் கட்டத்தில் ரொம்ப உஷார். இரவு 10 மணி வரை தையல் மிஷின் ஓடும் சத்தம் கேட்கும்
ஒரு தீபாவளிக்கு, எங்களை எங்க அப்பா துணி எடுக்க சேட்டு கடைக்குக் கூட்டிப் போனார் – அப்போதெல்லாம், வீட்டில் 4 பையன்கள் என்றால், ஒரு நாலு மீட்டர் துணியை, கிழித்துக் கொடுத்தால், நாலு பசங்களுக்கும் ஒரே கலரில் சட்டை – அதே போல் டிரவுசரும் – சேர்ந்து ரோட்டில் போனால் அண்ணன், தம்பி என்பது ஊருக்கே தெரியும் (இப்போதென்றால் இதை "Family Theme Dress" என்று சொல்வார்கள்) – பெரிய பையனுக்கு சட்டை டைட்டானால், அது அடுத்தவனுக்கு வரும்
அன்று துணி எடுக்கப் போனபோது, அந்தக் கடையில் எனக்கு சரியாக இருக்கும் படியாக ஒரே ஒரு ரெடிமேட் சட்டை இருந்தது – கடைக்காரரும் எனக்குச் சரியாக இருக்கும் என்றார் – எனக்கு அதன் மேல் அடங்கமாட்டாத ஆசை வந்ததற்கு காரணம் அதில் இருந்த 24 பட்டன்கள் என்று நினைக்கிறேன் – அழுது, ஆர்ப்பாட்டம் செய்தும், ஒன்றும் நடக்கவில்லை – ரொம்ப அழுததால், அப்பா எனக்குப் பிடித்த கலரில் சட்டைத் துணி எடுத்துத் தர சம்மதித்தார் – ஒரு Blue Colour துணி – பள,பள, ஜிலு ஜிலு என்று ராமராஜன் பாணிக் கலரில் இருந்தது – அண்ணன்கள் பொறாமையில் முணுமுணுக்க எனக்கு மட்டும் விதிவிலக்காக அந்தத் துணி கிழிக்கப்பட்டது
திருச்சி டெய்லரிடம் கொடுத்தோம் – தீபாவளிக்கு ஆவலோடு காத்திருந்த காலம் – தினசரி நாட்களை எண்ணுவோம் – அந்த தீபாவளி எனக்கு இன்னும் ஸ்பெஷலாக இருந்ததற்கு அந்த ஜிலு ஜிலு, பளபள தான் காரணம் – இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று சொல்லி நாட்கள் கடந்தன
நாளை தீபாவளி – எங்கும் போகாமல் டெய்லர் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தேன் (அன்றைக்கு CCTV இருந்திருந்தால், சந்தேக நபர் பட்டியலில் முதல் ஆள் நான்தான்!) – என்னுடைய துணி இருக்கும் – அதை எடுக்கப் போகிறார் என்று பார்த்தால், அதை தள்ளி வைத்துவிட்டு, கீழே உள்ளதை எடுப்பார் – என்னுடைய அண்ணன்களின் சட்டை 2 நாள் முன்னரே கொடுக்கப்பட்டு விட்டன
ராத்திரி 11 மணிக்கு அந்தப் பாட்டி வீட்டின் பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன் – என்னைப் போலவே இன்னும் 2 பேர் – அவருக்குத் துணைக்கு ஒரே ஒரு பையன் மட்டுமே பட்டன் தைக்க – இப்போது நினைத்துப் பார்த்தால் அவர் எவ்வளவு டென்ஷனில் இருந்திருப்பார் என்று புரிகிறது - அன்று எனக்குக் கோபம் மட்டுமே
இரவு 2 மணிக்கு அந்தச் சட்டையைக் கொடுத்தார் – அந்த நேரத்தில் இஸ்திரி போடும் பழக்கம் இருந்ததா என்று கூட ஞாபகம் இல்லை – சட்டையை அப்படியே முயலைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன் – மறுநாள் எல்லோருமே எங்கடா துணி வாங்கின என்று கேட்டபோது வந்த சந்தோஷத்தை இப்போதும் மறக்க முடியாது
எத்தனையோ ரெடிமேட்கள் Raymonds, Van Hussen. Louis Philippe என்று வேலையில் சேர்ந்தபின் வாங்கியபோதும், அந்தச் சட்டைக்கு ஈடில்லை
திருச்சி டெய்லர் எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே, ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, பின் அதை விலைக்கும் வாங்கிவிட்டார்
எங்க ஊர் பெண் ஒருவரையே கல்யாணமும் செய்து, வீடும் எங்கள் தெருவிலேயே வாங்கிவிட்டார் – உழைப்பு என்பதற்கு அவர் ஒரு உதாரணம் என்பது பல காலம் கழித்து இப்போது தெரிகிறது – உறைக்கிறது
அவரை ரொம்ப வருடங்கள் கழித்துப் பார்த்தேன் – பையன்கள் 2 பேர் – இரண்டு பையன்களும் Engineering படித்தார்கள் என்று ஞாபகம் –
‘’ஒரு பையன் பெங்களூரில் Infosysல் இருக்கிறான், கல்யாணம் பண்ணிவிட்டேன்’’ என்றார்,
‘’இன்னொரு பையன்’’ என்றேன்
பெங்களூரில் வேலைக்குப் போனவன், பெங்களூர் ISKONல் சேர்ந்து, சாமியாராகி அங்கேயே பெர்மனென்டாக செட்டில் ஆகிவிட்டான் என்றார்
கோவில் நடை திறக்கவில்லை
நேற்று சாயந்தரம் கோவிலின் அருகில் இருந்த ஒருவர் இறந்து விட்ட படியால் கோவில் நடை சாத்தப்பட்டுக் கொண்டிருந்தது
கோவிலின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்தவரிடம் என்ன, யார் என்று விசாரித்தபோது, யார் என்று சொல்லிவிட்டு ‘’மகராசன் போயிட்டார், ஆனா நாளைக் காலைலயும் திறக்க மாட்டாங்க போலிருக்கு – காலைலயே வியாபாரம் டல் – இது நாளை காலை வரை தாங்காது – அவ்வளவுதான்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்
அப்போது தான் எப்படி இறந்தார் என்ற விவரத்தை கதவைச் சாத்திக் கொண்டிருந்த பட்டரிடம் சொல்லிக் கொண்டிருந்த இறந்து போனவரின் உறவினர் பூக்காரர் பேசுவதையும் கேட்டார் – அவர்தான் இறந்து போனவரின் சொந்தக்காரர் என்று தெரிந்திருந்தால், பூக்காரர் அமைதியாக இருந்திருப்பார்
அந்த இறந்தவரின் சொந்தக்காரர், பூ விற்பவரிடம் நீங்க வச்சிருக்கிற மொத்த உதிரிப் பூவும், அந்த இரண்டு மாலைகளும் சேர்த்து எவ்வளவு என்ற போது, அவர் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டார் – ரூ.750 கிட்ட வரும்னார்
அந்த நபர் ரூ.1000ஐ இவரிடம் கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும், ஒரு உரச் சாக்கில் போட்டு, இறந்து போனவரின் வீட்டு வாசலில் வைத்து விட்டுப் போங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டார்
பூக்காரர் இறந்து போனவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திருப்பார்
திமுக சின்னத்துல ஜெயிச்ச 2 எம் எல் ஏ ராஜினாமா பண்ணணும். இதே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு திருச்சியில் ஜெயித்த தன் மகன் மட்டும் MP பதவியை ராஜினாமா செய்ய மாட்டாராம். இதுக்கு பேர் என்ன.
போங்காட்டம். பெத்த பாசம். வாரிசு அரசியல். வெளங்கிடும்.
ஹார்ட் அட்டாக் மொமண்ட் ❤️😄
நேற்று ஒரு Retirees Meeting at Hotel Palmgrove. வெகுநாட்கள் கழித்து, பலரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது – பெரும்பாலோர் அவர்களின் Sugar Level Target, USல உள்ள பேரன், பேத்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர் - போகும் போது CABல் போய்விட்டேன்
வரும்போது, இன்னொரு GMம்ன் காரில் ஆலந்தூர் மெட்ரோ வரை – அங்கிருந்து ஆட்டோவைப் பிடித்துக் கொள்ளலாம் என்று
இறங்கும்போதே அவரிடம், "இப்போ வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கணும், சொத்தை எழுதிக் கேப்பாங்களே!"ன்னு புலம்பிக் கொண்டே இறங்கினேன் – மனதளவில் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு போகும் எண்ணம்தான்
கொஞ்ச தூரம் நடந்தேன். சாயங்காலம்னா நடந்தே போயிருப்பேன். ஆனால் மணி இரண்டு... அடிக்கும் வெயில் "நீ நட பார்ப்போம்.. நான் ஒரு கை பாக்கறேன்!" என்று இருந்தது.
அப்போது ஒரு Electric Auto கிளம்பத் தயாராக இருந்தது. "அண்ணே... இந்த இடத்துக்கு வர முடியுமா?" என்றேன்.
"வரேன்... எவ்வளவு கொடுப்பீங்க?" என்று Counter Question.
பொதுவாக ஆலந்தூர் மெட்ரோ ஆட்டோக்காரர்களின் மினிமம் எதிர்பார்ப்பு , "150 ரூபாய்..." – அதைச் சொன்ன பிறகு பேரம் ஆரம்பிக்கும்.
நான் மனசுக்குள், "நியாயமா 100 ரூபாய் கொடுக்கலாம்... அவர் 150 சொல்வார்... 120க்கு முடியும்..." என்று Budget Meeting நடத்திக் கொண்டிருந்தேன்.
ஆனால் அவர் சொன்ன அடுத்த வார்த்தை... "75 ரூபாய் கொடுத்தா போதும் சார்."
அந்த ஒரு நொடி...எனக்கு BP, Sugar, ECG எல்லாம் ஒரே Screenல ஓடின மாதிரி இருந்தது. "என்னது... 75ஆ?"
ஒரு கணம், அவர் Autoவா ஓட்டுறாரு... இல்ல Time Machineல 2014லிருந்து வந்தாரா என்று கூட சந்தேகம் வந்தது!
ஏறி உட்கார்ந்தேன். பிறகு அவரே சொன்னார்: "என் வீடு அந்தப் பக்கம் தான். சாப்பிடப் போயிட்டு இருந்தேன். நீங்க கேட்டதால வர்றேன். அதனால 75 போதும்."
அந்த ஒரு வாக்கியத்திலேயே, Google Mapsஐ விட நல்ல Routeம், மனிதநேயமும் இருந்தது. பேச்சு தொடர்ந்தது. ஆட்டோவில் நான் வேலை பார்த்த பாங்கின் QR Code இருந்தது.
"எந்த Branch?" என்றேன்.
"நங்கநல்லூர் Branch." 20 வருடமாக அங்கேயே தான் Account.
ஆட்டோ Loan.ரூ. 2 லட்சம் - பையனுக்கு Education Loan ரூ.20 லட்சம் . பையன் Irelandல் படித்துக்கொண்டே வேலை பார்த்து, இதுவரை Loanலேயே நான்கு லட்சம் வரை கட்டிவிட்டானாம்.
பிறகு Auto பற்றிய Technical Review ஆரம்பித்தார். TVS Electric Auto. ஒன்றரை வருடம் ஆகிறதாம். இரண்டரை மணி நேரம் Charge போட்டால் 140 கி.மீ. ஓடுகிறதாம்
தினமும் 1500 ரூபாய் வரை மிச்சமாம். அந்த 140 கிமீ வட்டத்திற்குள் மட்டும் ஓட்டுவதாகச் சொன்னார்
ஆனால் கடைசியில் Practicalஆ சொன்னார்: "இப்போ நல்லாத்தான் இருக்கு சார்... நாலு வருஷம் கழிச்சுதான் உண்மையான Report Card தெரியும்!"
முன்னாடி லாரி ஓட்டியிருக்கிறார். Swift Dzire ஓட்டியிருக்கிறார். கடைசி இரண்டு வருடமா Auto. "வாழ்க்கை நல்லாத்தான் ஓடுது சார்..." என்றார்.
இறங்கும்போது 75 ரூபாய் கொடுக்க மனசு வரவில்லை. நான் கொடுக்க நினைத்த 120 ரூபாயைக் கொடுத்தேன்.
அவர் முகத்தில் சந்தோஷம்
பல மாதங்களுக்குப் பிறகு...
"டீசல் விலை ஏறிடுச்சு...
பேட்டரி விலை ஏறிடுச்சு...
வாழ்க்கையே நாசமாப் போயிட்டிருக்கு..."
என்று எந்தபொரு ஒரு புலம்பலும் இல்லாமல், பாங்கைப் பற்றி கூட நல்ல விதமாக, சிரித்த முகத்துடன் பேசிய ஒரு ஆட்டோக்காரரைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
நேற்று மீட்டிங்கில் ஒருவர் பேசும்போது, நீங்க இன்னிக்கு முழுவதும் என்ன காரணம்னு தெரியாம சந்தோஷமா இருப்பீங்கன்னு சொன்னார் – மீட்டிங்கில் பலரையும் பார்த்ததில் உள்ள சந்தோஷத்தை மேலும் Bankஐப் பற்றியும் Positive Feedback கொடுத்து அதிகப்படுத்தியவர் இந்த ஆட்டோக்காரர்
இறங்கியபின் தான் ஞாபகம் வந்தது – ‘’சே!!! அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டோமே என்று’’
பெயரில் என்ன இருக்கிறது – அவர் பெயர் சந்தோஷ்-னே வைச்சுக்கலாம்
வாங்கின வாட்ச் எங்கே?
குமாருக்கு, அவன் நண்பன் சங்கரின் தங்கை வித்யா மீது காதல். நல்ல வேலை, நல்ல சம்பளம், கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. சங்கருக்கும் குமாரை ரொம்பப் பிடிக்கும். "வீட்டில் பேசி உனக்கு என் தங்கையைக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று வாக்குறுதியும் கொடுத்திருந்தான்.
ஆனால் வித்யாவின் பெற்றோருக்கு ஒரே கனவு — "மாப்பிள்ளை என்றால் அமெரிக்கா மாப்பிள்ளைதான்!" குமாரைப் பார்த்ததும், "ஜாதகம் பொருந்தலை" என்ற இந்தியாவின் மிகவும் பிரபலமான Reject Template-ஐ பயன்படுத்திவிட்டார்கள்.
இந்த நிலையில் வித்யாவிற்கு ஒரு Present பண்ணலாம்னு Pheonix Mallல் ஒரு வாட்சை ரூ.32000க்கு வாங்கியிருக்கிறான் – அதை வாட்ச் கேஸில் போட்டு, பில்லோடு வீட்டுக்கு எடுத்து வந்தவன், வாட்சை மட்டும் கொடுக்கலாம் என்றெண்ணி, பில்லையும், கேஸையும் வீட்டில் எங்கோ வைத்தாயிற்று – இவன் பிரசன்ட் பண்ண போவதை சங்கருக்கும் சொல்ல, அவனோ, அவளுக்கு இன்னும் 4 நாள்ல பிறந்த நாள் வரப் போகுது – அன்னிக்கு கொடுத்துருன்னு சொல்ல, இவன் வீட்டுக்கு வந்து டப்பாவையும், பில்லையும் தேட, அவை உடனே கிடைக்கவில்லை – சரி பரவாயில்லை என்று லோக்கல் வாட்ச் கடைக்கு எடுத்துப் போய், ஒரு நல்ல வாட்ச் கேஸில் வைத்து, Gift Pack பண்ணிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறான்
அவன் பண்ணின பெரிய தவறு, கடைக்காரரிடம், காதல் கதையையும், "அமெரிக்க மாப்பிள்ளை Competition" பற்றியும் Open Heart Surgery போல சொல்லிவிட்டான்.
அவர் வாட்சை உள்ளே எடுத்துப் போய், பேக்கிங் எல்லாம் செய்து விட்டு, அதை மூடுமுன், வாட்சைக் காட்டி, "சார் OKஆ Pack பண்ணிடட்டுமா?" என்று கேட்டிருக்கிறார்.
"OK" என்று சொன்னவுடன், Gift Pack Ready.
பிறந்த நாளன்று வித்யாவிடம் வாட்ச் போய்ச் சேர்ந்தது.
பத்து நாட்கள் கழித்து வாட்ச் நின்றுவிட்டது.
"என்னங்க, வாட்ச் ஓடலையே?" என்று வித்யா கேட்டதும், குமார் வீட்டையே புரட்டிப் போட்டுத் தேடி பில்லைக் கண்டுபிடித்தான்.
வாட்சை வாங்கிய கடைக்கு எடுத்துச் சென்றான்.
அவர்கள் வாட்சைப் பார்த்துவிட்டு: "சார், இந்த Model-ஐ நாங்க விற்கவே இல்லை." "அப்போ?"
"இது Duplicate. மதிப்பு சுமார் ரூ.1200." இருக்கலாம்
குமாருக்கு BP, Sugar, Cholesterol எல்லாம் ஒரே நேரத்தில் வந்த உணர்வு.
Gift Pack செய்த கடைக்குப் போய் சண்டை போட்டிருக்கிறான்.
அவர்கள் அமைதியாக: "சார், Pack பண்ணுவதற்கு முன் உங்களுக்கே காட்டினோமே. நீங்க OK சொன்ன பின்தானே மூடினோம்!" என்று பதில் சொன்னார்கள்.
அப்போதுதான் கடையை நன்றாக கவனித்தான்.
அங்கே Rolex, Seiko, Omega, Cartier, Breitling போன்ற எல்லா வாட்ச்களின் ரேட்டும் ரூ.1200, ரூ.1300 - அந்தக் கடை Watch Shop இல்லை... Duplicate-க்கு UNESCO Heritage Site மாதிரி இருந்தது!
Police Complaint கொடுத்திருக்கிறான். அது இன்னும் "விசாரணை நடைபெற்று வருகிறது" என்ற Stage-ல்தான் இருக்கிறது.
இதற்கிடையில் சங்கரும், வித்யாவும் சேர்ந்து வீட்டாரை Convince செய்து, " டிரம்ப்போட சங்காத்தமே வேண்டாம், உள்ளூர் குமாரே போதும்" என்று சொல்ல வைத்தார்கள்.
கல்யாணமும் நடந்து, பத்து நாள் ஆகிவிட்டது.
இப்போது குமாரின் வாழ்க்கையில் ஒரே ஒரு பயம்தான்.
"முதன் முதலாக எனக்கு வாங்கிக் கொடுத்த Gift-ஏ Duplicate தானே?" என்று வித்யா எப்போது, எந்தச் சண்டையின் போது சொல்லப் போகிறாளோ? என்பது தான்
Evening Incident 25/06/2026 - ஹெல்மெட்டுக்குள் இருந்த "அவசரக் கால்"
ஏர்போர்ட்டிலிருந்து நங்கநல்லூர் சுரங்கப் பாதை வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன்.
பொதுவாக மாலை 6 மணிக்கு மேல் அந்தப் பகுதியில் டிராஃபிக் என்றால், வாகனங்கள் எல்லாம் "நீ போ... இல்லை நீ போ..." என்று குடும்பக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும்.
ஆனால் அன்று ஆச்சரியமாக பெரிய டிராஃபிக் இல்லை.
அப்போது எங்கள் ஆட்டோவை ஒரு பைக்காரர் முந்திச் சென்றார். ஹெல்மெட்டுக்குள் மொபைல் போனை இடுக்கிக் கொண்டு யாருடனோ தீவிர ஆலோசனையில் இருந்தார்.
எங்களை ஓவர் டேக் செய்த வேகத்தில், அவருக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த இன்னொரு பைக்காரரை கவனிக்க நேரம் கிடைக்கவில்லை.
அடுத்த சில விநாடிகளில் Physics, Balance, Gravity மூன்றும் சேர்ந்து ஒரு Practical Class நடத்தின.
பேலன்ஸ் தவறி கீழே விழுந்தார்.
நாங்கள் வந்த ஆட்டோக்காரர் நல்லவேளை உடனே பிரேக் போட்டுவிட்டார்.
ஆனால் கதையின் கிளைமாக்ஸ் இன்னும் பாக்கி.
கீழே விழுந்ததில், அவருடைய ஹெல்மெட் கழண்டு விழுந்து ஓடியது – அதிலிருந்த ஃபோன் நடு ரோட்டுக்குப் போனது. ரோட்டின் நடுவில் போய் படுத்துக் கொண்டது.
அந்த நேரத்தில் பின்னால் வந்த ஒரு கார், "இதென்ன புதிய ஸ்பீட் பிரேக்கரா?" என்று நினைத்ததோ என்னவோ... டப்!
மொபைலின் மேல் ஏறி இறங்கியது.
ஒரு நொடி முன்பு வரை Smart Phone. அடுத்த நொடி...
அதற்குப் பிறகு அது மொபைல் இல்லை. அப்பளம்.
அந்த மொபைலின் கடைசி மெசேஜ் என்னவாக இருந்திருக்கும் என்று மட்டும் தெரியவில்லை:
"சார், கொஞ்சம் கழித்து பேசலாமா? இப்போ நான் Busy..." 😄📱🏍️
How to lose a regular customer (ஒரு நிரந்தர வாடிக்கையாளரை இழப்பது எப்படி)
நான் பாதி நேரம் மெயின் ரோட்ல வண்டியோட அலையக் கூடிய ஆள்
யார் யார் என்ன விக்கறாங்க, இன்னிக்கு விலை கூடியிருக்கா, குறைஞ்சிருக்கான்னு போகிறபோக்கில் பார்த்திட்டு போற ஆள் – ஆனா எதையும் வாங்க மாட்டேன்
பழம் வாங்கறதுன்னு வரும்போது, எங்க தெருவில் மாலை சுமார் 4 மணிக்கு டிரை சைக்கிளில் விற்றுக் கொண்டு வரும் ஒரு பெண்மணியிடம் தான். ஒரு பெண்மணி வீட்டுக்காக, இப்படி அலைகிறாரே என்று
பப்பாளி, பழமுதிர்சோலையிலேயே ரூ.60 என்றால், இவர் அதை எனக்கு ரூ.70 என்று கொடுப்பார். நானும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – என்னென்னவோ தண்டச் செலவுகள் செய்கிறோம் என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்
நேற்று மெயின் ரோட்டில் ஒரு மட்டாடர் வேனில் ‘’நவ்வாப்பழம் (நாவல்பழம்)’’ விற்றுக் கொண்டிருந்தார்கள் – ஒரு கிலோ ரூ.100 – 2 கிலோ ரூ.170
பழங்களும் சினிமா ஹீரோ ஹீரோயின் மேக்கப் போட்டுக் கொண்டு ஜொலிப்பதைப் போல் பளபளவென்று மின்னின. ஆனால் நான் வாங்கவில்லை.
சாயங்காலம் அதே பழங்களுடன் இந்த அம்மா – சரி ஒரு கிலோ என்ன விலை சொல்கிறார் பார்க்கலாம் (வாங்கப் போவது அரைக்கிலோ) என்று கேட்டபோது ரூ.220, உங்களுக்காக ரூ.200 என்றார்
ஒரு நிமிடம் எனக்கு BP, Sugar, Cholesterol எல்லாம் ஒரே நேரத்தில் வந்த மாதிரி இருந்தது.
எனக்கு புரியவில்லை. நான் இவருக்கு ரெகுலர் கஸ்டமரா?
அல்லது “MRP பார்க்கத் தெரியாத மனிதர்” மாதிரியா?
அல்லது
“இந்த ஆளுக்கு மார்க்கெட் ரேட் தெரியாது; நாம சொல்ற விலைக்கு வாங்கிடுவார்” என்று அவருக்கு நிரந்தர நம்பிக்கையா? என்பது எனக்குப் புரியவில்லை
ஒரு பொருளை கொஞ்சம் அதிக விலைக்கு விற்பது வேறு. கஸ்டமரை அறிவில்லாதவர் என்று நினைத்து விலை சொல்வது வேறு.
நான் வாங்கவில்லை.
அதோடு ஒரு விஷயமும் முடிவுக்கு வந்தது.
மற்றவர்களுக்காக பாவம், பரிதாபப்பட்டு, அவர்கள் பார்வையிலேயே நாம் “படு முட்டாளாக இருப்பது பெரும் குறை.”
அந்த அறிவு அல்லது ஞானோதயம் வந்த தினம் — நேற்று! 😄