முதலமைச்சரான பிறகும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதுபோலப் பேசி வருகிறார் விஜய்!
200 யூனிட் மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரங்களில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறது தவெக அரசு!
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட மோடியிடம் அனுமதி கேட்கிறார் விஜய்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (01-06-26) மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு:
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிப் போன முதலமைச்சர் விஜய், இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் "கேப்டிவ் ஆடியன்ஸ்" (Captive Audience) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதலமைச்சர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அறிஞர் அண்ணா கூறியதைப்போல, "எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க்கரண்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்". முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கான தெளிவான "விஷன் ஸ்டேட்மென்ட்" (Vision Statement) வழங்க வேண்டும் என டாக்டர் எழிலன் வலியுறுத்தினார்.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதையும் எழிலன் சுட்டிக்காட்டினார். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் கலைஞர் அவர்கள் நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையைப் படித்துப் பார்க்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதலமைச்சர், புதியதாகத் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். 100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் கலைஞர் வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய எழிலன், முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே "பூமராங்" ஆகத் திரும்பிவருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தைவிட "வந்தே மாதரம்" பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன்மூலம் மாநில உரிமைகளை முதலமைச்சர் விட்டுக்கொடுக்கிறாரா? என்றும், மேகதாது மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதலமைச்சராகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!
மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் திரு. மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில், இன்று (28.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் Ex.M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் பொருளாளர் என்.தனசேகரன், ஆலந்தூர் கிழக்கு பகுதி வர்த்தகர் அணி செயலாளர் கே.இளங்கோ, மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் டி.ஜெயபிரதாப், ஆலந்தூர் கிழக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் மொசைக் பாபு, ஆடிட்டர் பி.குமரகுரு, பரந்தாமன், எஸ்.கோமதிநாயகம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
***
#DMK
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
“ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்விற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இக்குழுவானது தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களை நேரடியாகச் சந்தித்துக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ஆம் தேதிக்குள் கழகத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்கும்!
- தலைமைக் கழக அறிவிப்பு!
#DMK
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்
2026-ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்:
மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக!
12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றுக!
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ்ச் சுருக்கம் பின்வருமாறு:
நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
இப்படி நடப்பது முதல்முறையல்ல,
2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது.
2016-ஆம் ஆண்டு நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போது மறுதேர்வு நடத்தப்படவில்லை.
2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன. ஆடைக் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது, மொழிபெயர்ப்புகள் தவறாக இருந்தன. இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்விக்குறியானது.
2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர். இதன் பின்னணியில் பெரும் படையே இருந்து செயல்பட்டது.
2021-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு கவுன்சிலிங்கில் 6 மாதம் தாமதம் ஏற்பட்டு பலரது எதிர்காலம் பாதிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டிலும் திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி, பலரும் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர்.
2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக அமைந்தது. சந்தேகத்துக்குரிய வகையில் நம்ப முடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்களைச் சிலர் பெற்றது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் அளித்தது, ஒரே மையத்தில் பல டாப்பர்கள், 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை முன்பே பெற்றது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் நேரடியாகப் பயனடைந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியது.
இவற்றுடன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் இத்தேர்வை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இப்படியாக, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட, பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது இருக்கிறது.
நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு நீட் ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல்தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன.
இதனை நன்கு உணர்ந்ததால்தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகள் மீட்கப்பட வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில், நீட் விலக்குக்காக, 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுமுறை 2022-ஆம் ஆண்டும் என இரு முறை சட்டம் இயற்றினோம். மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட அந்தச் சட்டம் மூன்று ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து, 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அவர்களின் முடிவினை எதிர்த்து, எனது அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தங்களிடம் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன்.
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன்படி மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையானது நீட் எனும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், மீண்டும் நீட் தேர்வினை நடத்தினால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அது மற்றுமொரு சுமையாகவே அமையும்.
அதனால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்.
தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும்.
#DMK
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.05.2026 அன்று நடைபெற்ற தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை:
என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு.
நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு.
கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்....96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37 தான்...அதே போல 2006 ல திமுக ஆட்சி அமைச்சு 2011 ல வெறும் 31 இடங்கள்...
இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம்....இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம்......கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள். கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை.... நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடுதான்.
இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க.
அதுமட்டுமில்ல,
“இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு - ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன்.
இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்.
நம்ம உழைப்புக்கு கிடைச்ச சான்று!
ஆனா, அது வெற்றியா மாறாம போயிடுச்சு.
பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம்.
ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
மேடு பள்ளங்கள் இருக்கும்.
அதுதான் அரசியல்.
இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம்.
இதுதான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கத்து தந்திருக்க பக்குவம்.
அதனாலதான், மத்த கட்சிகள் மாதிரி நம்ம MLA-க்களை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாம தோல்விலயும் நாம தைரியமாவே இருந்தோம்.
என்னைப் பொறுத்தவரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையா உழைச்சேன். உங்களையும் உழைக்க வெச்சேன்.
என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன்.
இதுவரை எந்த அரசும் செஞ்சு தராத சாதனைகளை நாம செஞ்சு கொடுத்தோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியா நம்ம ஆட்சி இருந்தது.
இது மக்களுக்குத் தெரியும்.
இருந்தாலும் நாம ஆட்சி அமைக்க முடியல.
இதுக்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பல. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க.
ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது.
அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க.
கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம்.
வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான்,
தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம்.
நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல பழி போடாதீங்க.
எல்லாரும் என்ன சொல்றாங்க?
அப்படி செஞ்சிருக்கலாம்,
இப்படி செஞ்சிருக்கலாம்,
அது நடக்கல, இது நடக்கல,
அவரு கண்டுக்கல, இவரு கண்டுக்கல-னு பழி போடுறாங்க.
தயவு செஞ்சு இனிமே அதை பண்ணாதீங்க.
தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி.
சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது.
தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க.
எங்க கோளாறு நடந்துச்சு?
எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம்.
இதை ஆய்வு செஞ்சாகணும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கு.
எல்லாரும் இதை பரிசீலிச்சு பார்க்கணும். ஆய்வு செய்யணும்.
இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை..
இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோட, நம்ம செயல்பாடுகளை மாத்திகிட்டு வேலை செய்யணும்...
முக்கியமா, ஒத்துமையா இருந்து வேலை செய்யணும்....
அதுக்கு முன்னாடி நாம ஒவ்வொருத்தரும் நம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சிக்கணும்.
முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும்.
அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும்.
அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன்.
அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க.
கழக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன்.
உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ’வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும்.
கழகம், இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க?
நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம்.
இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்.
தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்.
அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது.
கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு.
இதை நான் கடந்த ஐந்தாண்டுகள்ல பல முறை வலியுறுத்துனேன். குறிப்பா, காணொலிக் கூட்டங்கள் நடத்தும்போது, சோஷியல் மீடியாவோட ரீச் பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன்.
ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கழகத்தினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும்.
தி.மு.க.வைப் போல, நம்ம தலைவர்களைப்போல காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்துனவங்க வேற யாருமில்ல.
பொதுக்கூட்டம், திண்ணைப் பிரசாரம், பத்திரிகை, நாடகம், சினிமா, டி.வி.-னு கால மாற்றத்திற்கேற்ப, அனைத்து தளங்களையும் கொள்கையை விளக்கும் பிரச்சாரக் களமா வெற்றிகரமா பயன்படுத்துன இயக்கம் நம்ம இயக்கம்.
அதை மனசுல வெச்சிட்டு, இனி வரும் காலத்துல நம்ம பிரச்சார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் மாத்திக்கணும்.முன்னாடி டீக்கடையில உக்காந்து பேசிட்டிருந்த நம்ம அரசியலை, இப்ப சோஷியல் மீடியால பேசியாகணும்.
நேத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிச்ச ஆளும்கட்சிக்கு, மெஜாரிட்டி இல்லனாலும், நம்ம கூட்டணிக் கட்சிகளை வெச்சும் – அ.தி.மு.க.வை உடைச்சும் பெரும்பான்மையை நிரூபிச்சிட்டாங்க.
அதிமுக ஆட்கள் எப்படி நடந்துக்குவாங்கனு சொல்லவே தேவையில்ல. இந்த நிலைமையில, அடுத்து என்ன நடக்கும்னு உறுதியா சொல்லவே முடியாது.
நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான - திறமையான - கட்சியா நாம செயல்படணும்.
நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா, கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும்.
நாம தொடங்கிய உட்கட்டமைப்பு பணிகளை, குறித்த காலத்துல கட்டி முடிக்கிற வரைக்கும் நாம அழுத்தம் கொடுத்துட்டே இருக்கணும்.
சட்டமன்ற உறுப்பினர்களா இருக்க கூடியவங்களை ஆதாரங்கள், புள்ளிவிவரங்களோட ஷார்ப்பா பேச சொல்லியிருக்கேன்.
வெற்றியோ, தோல்வியோ - எல்லாரும் வாக்காளர்களைச் சந்திச்சு நன்றி சொல்ல சொல்லியிருந்தேன். இன்னும் அதை முழுசா செஞ்சு முடிக்காதவங்களையும் முடிக்க சொல்லுங்க.நாம மக்கள் கூடவே இருக்கணும்.
விரைவுல கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இனிமே, ரொம்ப கவனமா, எல்லா விஷயங்களையும் செய்யணும்.
எல்லா நிர்வாகிகள் கூட்டத்துலயும் நான் வலியுறுத்தி பேசுறது, நிர்வாகிகள் ஒற்றுமைதான். இப்பவாச்சும், கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைச்சு போங்க.
நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா - வெற்றி என்பது சாத்தியம் இல்ல.
நம்ம கட்சி வீக்கா இருக்கும் பகுதிய பாருங்க, அங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இருக்கும்.நம்ம கட்சி தோற்ற தொகுதிலயும் நிர்வாகிகளின் ஒற்றுமை இல்லாம இருக்கும். அதையெல்லாம் நீங்களே நேர்ல போயி, கவனிச்சு சரிசெய்யுங்க.
என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் - அடிமட்ட நிர்வாகிகள் - முழுப்பங்களிப்பைத் தரும் வகையில நாம அவங்களை தயார் செய்யணும்.
மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல.அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது.எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம்.
ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம்.
நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்கத் தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல கழகம் கண்டிப்பா வெற்றி பெற்றாகணும்.
குறி வெச்சு களப்பணியாற்றுனா, நிச்சயம் வெற்றி பெறுவோம்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, நீங்க உழைச்ச உழைப்பாலதான்,இத்தனை தொகுதிகள்ல நாமும் நம்ம தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற முடிஞ்சுது.
ஒரு தேர்தல்ல தோற்ற நாம் - மறு தேர்தல்ல வென்று காட்டி இருக்கோம். உங்க உழைப்பால வெற்றி பெற வெச்சிருக்கீங்க. அதுதான் தி.மு.க.! அந்த நம்பிக்கையோட பணியாற்றுங்க.
இந்த தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேணாம். நாம பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரங்க. நம்மோட இந்த தோல்வி தற்காலிகம்தான்.
வெற்றியை நோக்கி பயணிப்போம்.
திட்டமிடுவோம்.
தீவிரமாக உழைப்போம்.
மீண்டு வருவோம்!
மீண்டும் வெற்றி பெறுவோம்.
நன்றி வணக்கம்!
***
#DMK
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!