ஒரு தன்னிசைப் பாடல்
எழுதிக் கொடுத்தேன்
‘இதயம் என்பது
நான்கு அறை - உன்
நினைவு தவிர அதில்
ஏதுமில்லை - உன்
நினைவு இழந்தால் ஜீவனில்லை’
ஜான்சன் இசையமைக்க
பினு இயக்க
ஹரி சங்கர் - சைந்தவி பாட
அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது
பாட்டு
அந்தப் பாடலின்
நாயகன் வேல்சங்கரும்
நாயகி கீதாஞ்சலியும்
படமாக்கிய பாடலைப்
போட்டுக் காட்டி
வாழ்த்துப்பெற வந்தார்கள்;
பாராட்டினேன்
வல்லிசைக்கு மத்தியில் ஒரு
மெல்லிசை
நீர்வழிப்படூஉம் புணைபோல
இசைவழி நடந்தது பாட்டு
இயற்கையின் தீண்டலால்
ஒரு மொட்டு மலர்வதுபோல்
இயல்பாக இருந்தது
திரைப்பாடல்களுக்கு
இணையாகத்
தன்னிசைப் பாடல்களையும்
வரவேற்கும் காலம்தான்
இசைப்பாட்டின் எதிர்காலம்
அமெரிக்காவில்
தன்னிசைப் பாடல்களின்
தன்னாட்சி நடக்கிறது
2024இல் அதன் சந்தைமதிப்பு
14.3பில்லியன் டாலர்கள்
இது இசைச் சந்தையின்
உலக மதிப்பில் 46.7விழுக்காடு
இந்தியாவில்
இந்தச் சந்தை
வறட்சியாக இருக்கிறது
இந்தி பஞ்சாபி இரண்டைத் தவிர
எந்த மொழியிலும்
தன்னிசைப் பாடல்களுக்குத்
தனிச்சந்தை இல்லை
ஒரு பெரிய
ராஜகதவு திறக்க வேண்டும்
அப்போதுதான்
இசையும் மொழியும் செழுமையுறும்
காட்டாற்று வெள்ளம்போல்
பாட்டாற்று வெள்ளம்
கரைபுரள வேண்டும்
பார்ப்போம்;
சினிமாவைச் சாராத கலைகள்
வெற்றிபெறுவது எளிதல்ல.
ஆனால் மாறியே தீரவேண்டும்
காட்டுக் குயில்களே
கூவுக என்று
‘கார்ப்பொரேட்’ சேவல்கள்
கூவ வேண்டும்
@singersaindhavi | @ejjohnsonoff@saregamasouth
ஒலிப்பதிவுக் கூடத்துக்குள்
நுழைகிறேன்
காதுகளின்
அடிமடலை வருடும்
மயிலிறகுபோல்
சைந்தவியின் தேன்குரல்
காற்றில் கசிகிறது
“மழையில்
நனைந்ததோர் காகிதமாய் - என்
மனது கிழிந்துதான்
நானிருந்தேன் - அதில்
ஈரக் கவிதை நீ எழுதிவிட்டாய்
என் உயிரே உறவே”
சின்னச் சின்னத்
திருத்தங்கள் சொன்னேன்
ஓர் அரைமணி நேரம்
அத்வைதம் அடைந்தேன்
ஓயாத பணிகளுக்கு மத்தியில்
ஒலிப்பதிவுக் கூடத்தில்
பாடும் பறவைகளின்
பாடல் கேட்பது
ஓர் இளைப்பாறுதல்தான்
பாடகி சைந்தவி
இசையமைப்பாளர் ஜான்சன்
நடிகை கீதாஞ்சலி
நடிகர் வேல்
பாடலைக் கொண்டாடிக்
கூடிவிட்டார்கள்
இரைச்சல் பாட்டுகளுக்கு
மத்தியில்
ஓர் இசைப்பாட்டு
@singersaindhavi| @ejjohnsonoff