இன்று (21.08.2026) மாலை 5.30 மணியளவில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் 17077/17078 திருச்சி–சார்லப்பள்ளி விரைவு ரயிலை தினசரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றுதல் குறித்து வலியுறுத்தினேன். இந்த ரயில் ஹைதராபாத், தெலங்கானா பகுதிகளுடன் திருச்சியை இணைக்கிறது. இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சரிடமும் ஏற்கனவே கோரிக்கை அளித்துள்ளேன்.
மேலும், திருச்சி–சாமராஜநகர் இடையே இரவு நேர நேரடி விரைவு ரயில் சேவை அறிமுகப்படுத்துதல் மற்றும் 16833/16834 திருச்சி–மயிலாடுதுறை MEMU ரயிலுக்கு திருவெறும்பூரில் நிறுத்தம் வழங்குதல் ஆகிய நீண்டநாள் கோரிக்கைகளையும் வலியுறுத்தினேன். இவை தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடமும் ஏற்கனவே கோரிக்கை அளித்துள்ளேன்.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகளை சீரமைத்தல், காத்திருப்பு அறைக்குள் தெருநாய்கள் வருவதைத் தடுத்தல், கூடுதல் மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் நிலுவையில் உள்ள லிப்ட் பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன். இக்குறைபாடுகளை செப்டம்பர் 15க்குள் சரிசெய்வதாக DRM உறுதியளித்தார். மேலும், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட நாய்கள் தொல்லை உள்ள நிலையங்களின் பட்டியலை ரயில்வே நிர்வாகம் வழங்கினால், மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தேன்.
கடந்த 20.05.2026 அன்று அளித்திருந்த கோரிக்கையைத் தொடர்ந்து, 22672 தேஜஸ் மற்றும் 16615 செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களில் திருச்சிக்கான Quota-வை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
மேலும், திருச்சி ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் Coach Indication Boards அமைத்தல், 8-வது நடைமேடையில் செயல்படாத குடிநீர் வசதியை மீண்டும் செயல்படுத்துதல், கல்லுக்குழி நுழைவாயிலில் எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடித்தல் ஆகியவற்றையும் வலியுறுத்தினேன். எஸ்கலேட்டர் பணிகள் முடிந்துவிட்டதாகவும், Coach Indication Boards ஒரு மாதத்திற்குள் அமைக்கப்படும் என்றும், குடிநீர் வசதி விரைந்து சரிசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மேலக்கல்கண்டார்கோட்டை LC No.323, ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் அருகிலுள்ள LC No.244 மற்றும் குமரேசபுரம் LC No.317 ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளின் தற்போதைய நிலை, நிலுவைப் பணிகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் நிறைவு காலம் குறித்த விரிவான நிலவர அறிக்கையையும் கேட்டுள்ளேன்.
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மதிமுக
21.08.2026
#DuraiVaiko #tvk #mdmk #cmvijay #trichy
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் விவாதிக்கப்பட்ட மசோதாக்கள் குறித்து, குறிப்பாக சிறுபான்மையினரையும், வளர்ந்து வரும் மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களையும் பாதிக்கக்கூடிய,
தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை (FCRA) சட்டத்திருத்த மசோதாக்கள் குறித்து, எதிர்வரும் (23.08.2026) ஞாயிறு மாலை 3 மணியளவில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ள சிறப்புக் கருத்தரங்கிற்கு,
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் மற்றும் முக்கிய பிரமுகர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கினேன்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக.
21.08.2026
#mdmk #tvk #congress #cpi #cpim #vck #iuml