சென்னை நகரமா?
மக்களின் நேரத்தை விழுங்கும் நரகமா?
சென்னை மாநகரம் இன்று வாழத் தகுதியான நகரமாக இருக்கிறதா? அல்லது தினசரி நரக வேதனையை அனுபவிக்கும் முடிவில்லா காத்திருப்புப் பகுதியாக மாறி இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி, ஒட்டுமொத்த மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளது.
ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிட வேண்டிய பொன்னான நேரங்கள், இன்று சென்னையின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களில் கரைந்து கொண்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரி செல்லும் ஒரு மாணவன் தன் அறிவு வளர்ச்சிக்காக எடுத்துச் செல்லும் புத்தகச் சுமையை விட, போக்குவரத்து நெரிசலின் மன உளைச்சல் சுமையையே அதிகமாகச் சுமக்கிறான். ஒரு தொழிலாளி தன் உழைப்பின் வியர்வையைச் சுவாசிப்பதற்கு முன்பாக, வாகனங்கள் கக்கும் நச்சுப் புகையைத்தான் சுவாசிக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சிக்னல்களில் மக்களின் உயிரையே பறிக்கும் அச்சத்தில் காத்துக் கிடக்கின்றன. இது வெறும் போக்குவரத்துச் சிக்கல் அல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத் திட்டமிடலின் படுதோல்வி.
எங்கே போனது தீர்வு?
கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்திற்குப் பேருந்து நிலையத்தை மாற்றினால், சென்னையின் நெரிசல் குறையும் என்று அரசுத் தரப்பில் தம்பட்டம் அடிக்கப்பட்டது.
எங்கே அந்த மாற்றம்?
எங்கே போனது மக்களின் நிம்மதி?
ஒருபுறம் முறையான வழிகாட்டுதல்கள் இன்றிக் கிளாம்பாக்கம் திணறுகிறது. மறுபுறம், ஆம்னி பேருந்துகள் இன்னும் கோயம்பேடு பகுதிக்கே வந்து செல்வது போன்ற குளறுபடிகள் தொடர்கின்றன.
நகரம் முழுவதும் ஒரே நேரத்தில் மெகா திட்டங்கள் என்ற பெயரில் மெட்ரோப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், சாலைத் தோண்டல்கள் என, எவ்வித மாற்றுப்பாதைத் திட்டமிடலும் இன்றி மக்களின் பொறுமை தினந்தோறும் சோதிக்கப்படுகிறது.
சென்னை மட்டுமே தமிழ்நாடா? வளர்ச்சிப் பரவலாக்கல் எங்கே?
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஏன் இன்னும் சென்னை என்ற ஒரே ஒரு நகரத்தின் தோள்களில் மட்டுமே சுமத்தப்படுகிறது?
புதிய தொழிற்சாலைகள், பன்னாட்டுப் பெருநிறுவன அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், மெகா முதலீடுகள் என எல்லாமே சென்னையை நோக்கியே இருக்கிறதே, ஏன்?,
ஒவ்வொரு புதிய நிறுவனமும் சென்னையில் திறக்கப்படும் போதும், இன்னும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், இலட்சக்கணக்கான மக்களும் இந்த நகரின் சாலைகளில் தான் வந்திறங்குகிறார்கள்.
இது உண்மையான வளர்ச்சி அல்ல! ஒரே ஒரு நகரத்தின் மீது ஒட்டுமொத்தச் சுமையையும் ஏற்றி, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பறிக்கும் அபாயகரமான வளர்ச்சி முறை.
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் போன்ற பிற முக்கிய நகரங்களில் ஏன் அதே அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படக் கூடாது?
வேலைவாய்ப்புகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்கள் ஏன் வாழ்நாள் முழுக்கச் சென்னை என்ற ஒற்றை நகரத்தை நோக்கி ஓடி வர வேண்டும்?
சென்னையின் சாலைகளை அகலப்படுத்துவதால் மட்டும் இங்குள்ள அடிப்படைப் பிரச்சினை தீராது. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சியின் பாதையை அகலப்படுத்த வேண்டும்.
சென்னையில் ஆமை வேகத்தில் நடக்கும் மெட்ரோ மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளை உரிய மாற்றுப்பாதைகளுடன், போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும்.
சென்னையை மட்டுமே மையமாகக் கொண்டு குவியும் முதலீட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சமச்சீராகப் பரவலாக்கப்பட்ட புதிய வளர்ச்சித் திட்டங்களை, அரசு உடனடியாக உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
சென்னை | Chennai Traffic | Ambulance Stuck in Traffic | Chennai Pollution | Kilambakkam | Koyambedu |Tamilaga Vazhvurimai Katchi | Velmurugan | Chennai Metro | வேல்முருகன்
#சென்னை #ChennaiTraffic #MetroWork #RoadSafety #Ambulance #TrafficJam #tamilagavalvurimaikatchi
பண்ருட்டி அருகே விஷவண்டு தாக்கி உயிரிழந்த வேளாண் உதவிப் பேராசிரியரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷவண்டு தாக்கி உயிரிழந்த வேளாண் உதவிப் பேராசிரியர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வேளாண் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய சுரேஷ், இன்று தான் பணியாற்றும் கல்லூரியைச் சேர்ந்த 18 மாணவ, மாணவிகளை வேளாண் களப் பயிற்சிக்காக அழைத்துச் சென்றார். அப்போது மாணவிகளுடன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கோழிப்பாக்கம் பாப்புகுளத்தில் வேளாண் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த புதரில் இருந்து வெளியேறிய விஷவண்டுகள், உதவிப் பேராசிரியர் சுரேஷ் மற்றும் மாணவ, மாணவியர்களை துரத்தித் துரத்தித் தாக்கின.
இதில் உதவிப் பேராசிரியர் சுரேஷ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷின் குடும்பத்தாருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த மாணவ, மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், உயிரிழந்த உதவிப் பேராசிரியர் சுரேஷின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பதவியேற்ற 20 நாளில் போதைப் பொருட்கள் பறிமுதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
பதவியேற்ற 20 நாளில் எவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன? போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் உள்ளிட்ட விவரங்களைத் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வயது வித்தியாசமின்றி, ஆளும் கட்சியினரும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வீதிக்கு வீதி விற்பனை, அருகில் மதுக்கடைகள், கள்ளச்சாராய விற்பனை ஆகியவை அதிகரித்துள்ளதால், சமூகத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்த்து தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உள்ளது.
தமிழக முதல்வர் நேற்று வீதிக்கு வீதி கஞ்சா விற்பனைக்கு கடந்த திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம்: 62 வயதான மணி என்பவர், 12 வயது உறவுக்கார சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதே பகுதியில், எம்.ஜி.ஆர். நகரில் 59 வயதான வரதராஜன் என்பவர், 3 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். உறவினர்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர், ஒரு இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராமநாதபுரம் அருகே தனியார் விடுதியில் தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம்: ராஜா என்பவர் போதையில் தன் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்: செங்கல் சூளையில் பணியாற்றும் 50 வயதான சங்கர், 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தலைமைச் செயலகம் அருகே, பைக்கில் செல்லும் ரவுடி இடுப்பில் பட்டாகத்தியை செருகிக்கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான்: அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பிரபாகரன், பேருந்தை இயக்கியபோது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தனுஷ்கோடி சாலையை மறித்து தாக்கிய சம்பவம் நடைபெற்றது.
சென்னை தண்டையார்பேட்டை: கஞ்சா விற்பனைக்கு எதிராகப் புகார் அளித்த விஷ்ணு என்பவர், கஞ்சா கும்பலால் சுத்தியல், அம்மிக்கல் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
2021 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 1,07,000 கிலோ கஞ்சா, 3,21,000 போதை மாத்திரைகள், 1,223 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 2025-ம் ஆண்டு 2,362 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2025 ஜூன் வரை 4,889 வழக்குகளில் 3,493 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.
கடந்த ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக 27,000 போக்ஸோ வழக்குகள் உள்பட மொத்தம் 62,000-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், போதைப் பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் அமைக்க உத்தரவிட்டார். ஆனாலும், இந்த ஆட்சியிலும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாலியல் சீண்டல், கொலை, அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, பதவியேற்ற 20 நாளில் எவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன? போதை விற்பனையாளர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தமிழக அரசு உடனடியாக அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பிச்சை போட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றச்சாட்டு.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசு நேற்று விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனை குறு விவசாயி, சிறு விவசாயி, பெரு விவசாயி எனப் பிரித்து தள்ளுபடி தொகையை அறிவித்துள்ளது. பட்டவர்த்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், இது விவசாயிகளுக்கு பிச்சை போட்டதாகும். ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்ற பெயரில் தமிழக அரசு பிச்சை போட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி. வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்து குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளின் ₹50,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது. ₹50,000க்கும் மேல் ₹1 லட்சம் வரையிலான கடன்களில் ₹5,000 முதல் ₹40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தள்ளுபடியின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ₹2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் விவசாயிகளை கேவலப்படுத்தி பிச்சை போட்டுள்ளது.
மூலதனச் செலவு அதிகரிப்பு, இடுபொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், நீர் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதுமான விலை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளையும் வாழ்வாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இப்படிப்பட்ட தள்ளுபடி அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (PACS) செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் கரும்பிற்கு சராசரியாக ₹60,000ம், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ₹36,000ம் பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது. இரண்டு ஏக்கர் கரும்பிற்கு பயிர்க்கடன் பெற்றிருந்தால் விவசாயிக்கு கிடைப்பது வெறும் ₹5,000 மட்டுமே. மூன்று ஏக்கர் நெல்லுக்கு பயிர்க்கடன் பெற்றிருந்தால் கிடைப்பதும் வெறும் ₹5,000 மட்டுமே. இதற்குப் பெயர் பயிர்க்கடன் தள்ளுபடி அல்ல பிச்சை.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்த பயிர்க்கடன் தொகை ₹12,000 கோடி. அதற்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ₹7,000 கோடி. ஆனால் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடனின் அளவு ₹2,000 கோடி மட்டுமே.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. விஜய் அவர்கள் விவசாயிகளை காப்பாற்றுவார் என நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு இது நம்பிக்கைத் துரோகமாக அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கு எவ்வித பயனும் அளிக்காத இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவோ அல்லது கடந்த கால ஆட்சிகளில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அளவுக்கு ஏற்றவாறோ அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளை பிச்சையிட்டு கேவலப்படுத்த வேண்டாம் என்று கடும் கண்டனத்தை தெரிவித்து குற்றம் சாட்டுகிறேன்
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த செவிலியர் கல்லூரி மாணவிக்கு ரூ50 லட்சம் நிதி உதவி மற்றும் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவத்துறையின் அலட்சியத்திற்கு கடும் கண்டனம்.
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ரூ 50
லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் வலியிறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி (19), திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சி (நாசி சதை) பிரச்னை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூக்கில் உள்ள சதைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், தவறுதலாக வயிறு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தவறான சிகிச்சை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் உறவினர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
மருத்துவர்களில் சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் மருத்துவத் துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி, மருத்துவர்களின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இறந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவ அலட்சியத்திற்கு எதிரான கடும் கண்டனத்தை குற்றச்சாட்டாக தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4765 டாஸ்மாக் கடைகள் இயங்கிவருகிறது. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் 4 இடங்களில் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த சந்து மதுக்கடைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து சூறையாடியுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் போராட்டம் இவ்வளவு தீவிரமானதற்கு குடிநோயாளியான கணவருக்காக மட்டுமல்ல, குடி பழக்கத்திற்கு தன் மகன் அடிமையாகிவிடக்கூடாது என்ற அச்சமாக இருக்கலாம். பெண்களின் எழுச்சியை அலட்சியப்படுத்தாமல் கள்ள வணிகத்தை தடுக்கவேண்டும். மேலும் படிப்படியாக அரசு மதுபானக்கடைகளை குறைத்தும், கள்ள வணிகத்தை தடுத்தால்தான் அமைய உள்ள புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என கடந்த மாதம் 28ம் தேதி அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தேன்.
இதற்கிடையே நேற்று சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பனமரத்துப்பட்டி, மணியனூர் அருகில் காட்டு வளவு மலை பகுதியில் 16 வயதிலிருந்து 19 வயதுடைய பீகார் மாநில சிறுவன் உட்பட 3 பேர் கஞ்சாவுடன் மதுவையும் அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19வயதான கோகுல் என்பவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து போதை தலைக்கேறிய நிலையில் பார்த்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.கொல்லப்பட்ட கோகுலில் உடல். சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதை மனிதனின் சிந்தனையை மழுங்கடித்து மிருகத்தனத்தை உருவாக்கி சக மனிதனை கொன்று அதை வீடியோ எடுத்து கொண்டாடும் நிலைக்கு தள்ளும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு அக்கடைகளை 2 வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
717 மதுபானக்கடைகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி, தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு.ச.ஜோசப் விஜய். அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
#vijay#tamilnadugovernment
நிறைமாதக் கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்!
திமுகவினரின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறோம்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடூரமானத் தாக்குதல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
மாற்று அரசியல் கருத்துகளை எதிர்கொள்ளத் துணிவில்லாத திமுகவினர், ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் வன்முறையை ஏவி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் நாகரிகம் என்பது பெண்களை மதிப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலுமே அடங்கியுள்ளது. ஆனால், அதிகார மமதையில் திமுக கட்சியினர் பெண் வேட்பாளரை, அதுவும் ஒரு கருவுற்றத் தாயின் மீது தாக்குதல் நடத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது, நாகரிகச் சமூகத்தின் தலைகுனிவாகும்.
கருவில் இருக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஒரு சாதாரண அரசியல் மோதல் அல்ல. இது மிக மோசமான மனித உரிமை மீறல்.
சனநாயக ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலையளிக்கிறது.
இந்த அராஜகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
விழிப்புடன் செயல்பட வேண்டியது யார்?
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவரும் செய்தி, மனதை உலுக்கும் துயரச் சம்பவமாகும்.
கல்வியில் சிறந்து விளங்கி பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் பரிசு பெற்று, உயர்ந்த கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இளம் உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகத்தின் மனசாட்சியையே கேள்விக்குறியாக்குகிறது.
சிறுமி காணாமல் போயிருக்கிறார் என்று பெற்றோர் காவல்துறையிடம் முறையிட்டபோதும் அவசர நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமான அணுகுமுறையுடன் நடந்துகொண்டதாக வெளியாகும் தகவல்கள் கவலைக்குரியவையாகும்.
இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்தால், அது ஒரு குடும்பத்தின் துயரமாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் ஒழுங்கையும் மனிதநேய மதிப்புகளையும் சீர்குலைக்கும் அபாயகரமான நிலையை உருவாக்கும்.
மேலும், பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பாகக் கல்வி கற்கவும், வாழவும் தமிழகத்தில் வலுவான பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க, அரசு திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்தக் கொடூர சம்பவத்தால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இனிமேலும் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாதவாறு, அரசு விழிப்புணர்வுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும்.
அதோடு, பாதிக்கப்பட்டுள்ளக் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதோடு இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை கிடைப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .