இதுவரை வெல்லவில்லை என்பதற்காக இனியும் வெல்ல முடியாது என்று நினைத்து இவர்கள் ஒருபோதும் ஒதுங்கிவிட மாட்டார்கள்
இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மக்கள் தமது கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் விதைத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்களுடைய அரசியல் அடுத்த சந்ததிக்கானது
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது?
பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு!
எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் பற்றி இன்னாள் முதல்வர் இப்படி Boby Shaming பண்ணும் போது வாய்மூடி இருந்துட்டு "பொட்டு மாமா" என்று சொன்னதும் பொங்குவதற்கு பெயர்தான் "தூயசக்தி"
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி