யானை - வெளிநாட்டினர் குறிப்புக்கள்...!
■ மெகஸ்தனிஸ், கிரேக்கம்
இந்தியப் பெருங்கடலில் இருந்த தப்ரபானே (#Taprobana) என்னும் தீவில் ஏராளமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள் வரிசையாக ஒழுங்காகவும் வளர்க்கப்பட்ட அந்த உலகைக் காணும் போது வியப்பும் மலைப்புமாக இருக்கிறது.
அந்தத் தீவில் யானைகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன, அவைகள் மிகவும் பெரியவை, அந்த யானைகள் நிலப்பரப்பில் இருக்கும் யானைகளைக் காட்டிலும் உருவத்தில் பெரியவை, எல்லாவகையிலும் நுண்ணறிவு மிகுந்தவை.
தீவில் வாழும் மக்கள் அந்த யானைகளைப் பிடித்து ஏற்றுமதி செய்கிறார்கள். அதற்காகத் தனிப் படகுகளை அவர்களுக்கு வேண்டிய மரங்களைத் தீவில் உள்ள காடுகளில் வெட்டிக் கொள்கிறார்கள். யானைகள் கலிங்க நாட்டு மன்னனுக்கு விற்கப்படுகின்றன.
இலங்கையில் யானைகள் அதிக அளவு இருந்தது என்று வெளிநாட்டினர் அனைவருமே கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் யானைகள் மிகமிகப் பெரியவை என்று கூறுகிறார்கள்.
■ காஸ்மாஸ், எகிப்து
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த அரசுகள் ஏராளமான யானைகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அரசர்களும் ஏறக்குறைய 500-600 யானைகளை வைத்திருந்தனர். அரசன் யானைகளை மட்டுமின்றிக் குதிரைகளையும் விலை கொடுத்து வாங்கி, யானையின் உயரத்தைத் தெரிந்து கொள்வதற்காக அதனை ஓரத்தில் நிறுத்தி அதன் உயரத்தை அளந்து 50-100 என்று எண்ணிக் கொடுக்கிறார்கள்.
அவனுடைய குதிரைகள் பாரசீகத்தில் இருந்து இறக்குமதி ஆகின்றன. அந்தக் குதிரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்து இறக்கும் போது வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அரசர்கள் யானைகளைப் பிடித்துப் பழக்கிப் போரில் பயன்படுத்துகிறார்கள். யானை சண்டை அரசன் முன்னிலையில் அடிக்கடி நடைபெறுகிறது. இரண்டு யானைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதை அரசனும் மக்களும் கண்டு மகிழ்வார்கள்.
யானைகளோடு மனிதர்கள் சண்டையிடுவதும் உண்டு. இந்திய யானைகளின் தும்பிக்கை அவ்வளவு நீளம் ஆனவை அல்ல. போர் புரியும் யானைக்கு தும்பிக்கை நீளமாக இருந்தால் அதுவே ஒரு தடையாகி விடும் என்று கருதுகின்ற இந்தியர்கள், யானையின் துதிக்கை நீளமாக இருந்தால் குறைத்து விடுகிறார்கள்.
யானையைப் பிடித்துப் பழக்கும் முறை வெளிநாட்டினருக்குத் தெரியாது. இங்கிருந்து யானைகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள். யானைகளைப் பழக்கும் கலை எத்தியோப்பியருக்கு தெரியாது. யானைகள் அங்கு ஏராளமாய் இருக்கின்றன. அவற்றின் தந்தங்கள் மிகப்பெரிதாக இருக்கிறது.
#எத்தியோபியர் அவற்றைக் கடல் வழியாக இந்தியாவுக்கும், பாரசீகம் நாடுகளுக்கும், #ரோமானிய ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
சோழ மண்டலக் கடற்கரை அரசனிடம் 60 ஆயிரம் போர் யானைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 10 முதல் 12 அடி உயரம் உடையது.
போர்க்களத்துக்குப் போகும் போது இந்த யானைகளின் முதுகில் வீடுகளைப் போன்ற அமைப்பினை கட்டி வைத்துள்ளார்கள். அதனுள் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். தூரமாகப் போரிடும் போது அம்புகளையும், பக்கமாகப் போரிடும் போது ஈட்டிகளையும், அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
போரில் வெற்றி பெற்ற யானைகளுக்குச் சிறந்த பெயரும், அணிகலன்களும் சிறப்பு பரிசாகத் தரப்படுகிறது.
■ ஜார்டனஸ் துறவி, பிரெஞ்சு
பழகிய யானைகள் எல்லா வேலைகளும் செய்கின்றன. பாகனின் சொற்படி செய்கிறது என்று சொல்லி விட முடியாது. எத்தனையோ வழிகளில் ஒரு பகுத்தறிவு உள்ள உயிரினம் போல நடந்து கொள்கிறது.
யானையின் கால்கள் மிகவும் பெரியவை. யானையின் முதுகில் மரத்தாலான ஒரு அமைப்பைக் கட்டி அதில் 30க்கும் அதிகமான பேர் ஏறிக் கொள்கின்றனர். யானை ஓர் அமைதியான விலங்கு, ஆனால் அதற்குப் போர் பயிற்சி அளித்தால் களத்தில் அது 1500 பேர்களுக்குச் சமமாகப் போர் புரிகிறது.
அதனுடைய கொம்புகளில் கத்தி, தண்டாயுதம் கட்டிப் போர்க்களத்தில் விட்டால், அது எதிர்பட்டவர்களை எல்லாம் அடித்து வீழ்த்துகின்றது. இந்த விலங்கின் வலிமை மிகவும் பயங்கரமானது. முக்கியமாகப் போர்க்களத்தில் அதனுடைய வலிமைமிக்க தாக்குதலால் நேர்கின்ற சேதம் மிகக் கொடுமையானது.
யானையின் தாக்குதல் தைரியம் யாருக்கும் எதற்கும் இல்லை. இவ்வளவு பலமுள்ள யானை, பாகன் சொல்லுக்குக் குழந்தை போல் கட்டுப்படுகிறது.
- நன்று.
பண்டைத் தமிழர்களின் உல்லாசப் பயணம் மற்றும் நீர் போக்குவரத்து...!
மகாகவி பாரதியார் அவர்களின் பாடல் வரிகளில் "சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடிடுவோம்" என்பதற்கேற்ப, நமது மூதாதையர்களும் நீரில் உல்லாசமாகச் செல்ல படகுகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
மனிதர்களின் வாழ்க்கையில் வாழ்க்கைத் துன்பத்தால் ஏற்பட்ட சலிப்பு நீங்கவும், உழைப்பால் ஏற்பட்ட களைப்பு அகலவும், மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கவும், பல்வேறு பொழுதுபோக்குகளையும், விளையாட்டுகளையும் விளையாடுவார்கள். இவை பயன்பாட்டின் கூறுகளாகவும் மாறிவிடுகின்றன.
#தோணிகள் உல்லாசப் பொழுது போக்கின் உதவிகளாக அன்றும் இன்றும் திகழ்தலைக் காணலாம்.
#பரிபாடல் பாடலொன்றில் 'நீரணி மாடம்' என்னும் ஒருவகை உல்லாசப் படகு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் #பள்ளியோடம் என்றும் அழைப்பர்.
'நீரணி மாடம்' என்னும் படகு நடுவே அகன்றும் முன்னும் பின்னும் சுருங்கியும் காணப்படும். இதன் பின்பக்கம் முன்பக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்படும்.
இதன் நடுவே உட்காருவதற்கு ஏற்ப சிறு மண்டபம்போல் ஒரு மேடை அழகாக அமைக்கப்பட்டிருக்கும் என்று #பரிபாடல் கூறுகிறது.
#காவிரி, #வையை போன்ற பேராறுகளில் #புதுவெள்ளம் பொங்கி வரும் பொழுது, அவற்றின் கரையில் வாழும் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகப் #புனல் விளையாட்டுக்குரிய #தெப்பம், #புணை, #அம்பி' முதலியவைகளோடு செல்வர் என்று இலக்கியம் கூறுகின்றது.
நீரணி மாடத்தில் 'கோவலனும், கண்ணகியும், கவுந்தி அடிகளும் ஏறிக் காவிரியின் தென்கரையை அடைந்ததாகச் #சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில் கூறப்பட்டுள்ளது.
இங்குக் கூறப்பட்டுள்ள 'நீரணி மாடம்' என்பதற்கு உரையாசிரியர் #பள்ளியோடம் என்று பொருள் கூறுவது கவனிக்கத் தக்கதாகும்.
'நீரணி மாடம்' என்று அழைக்கப்படும் பள்ளியோடங்களில் முன்பகுதியாகிய #அணியம்; குதிரை, யானை, சிங்கம் ஆகியவற்றின் முகங்கள் போன்ற வடிவில் காணப்பட்டதாகச் #சிலப்பதிகாரம் கூறுகின்றது.
இதனால் குதிரை, யானை, சிங்கம் போன்றவற்றின் முகங்களை வடிவமைத்துச் செய்யப்பட்ட #தோணிகள் காணப்பட்டதை அறியலாம்.
இது இந்தத் தோணிகளைச் செய்தவர்களின் தொழில் திறமையையும், கலை நுணுக்கத்தையும், பண்பாட்டுப் பெருமையையும் விளக்குவதாக அமைகின்றது.
பெருங்கதைப் பாடலொன்றிலும் யானை, சிங்கம், பெண்மான், புலி, பலவிதப் பறவைகள் ஆகியவற்றின் முகங்களைப் படகின் முகப்பில் அமைத்த அம்பிகளில், ஏறி மகளிர் நீர் விளையாட்டு ஆடினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#அம்பி என்றழைக்கப்படும் படகானது அறப்பணிக்குப் பயன்பட்டது.
#புறநானூறு பாடலொன்றில் சிறியோர், பெரியோராக வருபவர்களை இருகரையிலும் மாறிமாறிக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியை உடையனவாக, நீர்த்துறையிடத்தில் #அம்பிகள் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பண்டைத் தமிழ் மக்கள் கடல் வணிகத்திலும், கடற்போரிலும், கடற்கொள்ளையை அழித்தலிலும், மீன்பிடித் தொழிலிலும், உல்லாசப் பயணம் மற்றும் நீர் போக்குவரத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்ததின் வாயிலாக, அவர்களுக்குக் #கப்பற்கலை குறித்த ஞானம் அதிகமாகவே இருந்திருக்க வேண்டுமென ஊகித்து அறிந்துகொள்ள முடிகின்றது.
அந்த ஞானத்தினால் மட்டுமே அவர்களால் பல்வேறுவிதமான படகுகளைக் கட்டவும் செலுத்தவும் முடிந்திருக்கும்.
தமிழ் இலக்கியங்களை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, பல்வேறு வகையான கலங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.
படம் 1): பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சோழர் காலத்திய 'நீரணி மாடம்'.
படம் 2): இன்றும் கேரளத்தில் காணப்படும் 'நீரணி மாடம்' வகை உல்லாசப் படகு.
- நன்று.
அகநானூறு பறைசாற்றும் அரிய வரலாற்றுச் செய்திகள்...!
தமிழ்ப் புலவர்கள் பலரால் பாடப்பட்ட சங்ககாலப் பாடல்கள் காலப்போக்கில் மறைந்தும், மக்களால் மறக்கப்பட்டும் வருவதைப் புலவர்கள் கண்டனர்.
அவற்றைத் தொகுத்துப் போற்றிப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டினர். அதற்கு அரசர்களும் வள்ளல்களும் துணை நின்றனர்.
பாடல்களை மணியாரம் போலத் தொகுப்பதற்குப் புலவர்கள் கைக்கொண்ட வரையறைகள் பலவாகும்.
தமிழக வரலாற்றை அறிவதற்குரிய சான்றுகளுள் முதல்நிலைப் பெறுவன சங்க இலக்கியங்களாகும்.
அத்தொகுப்பில் இடம்பெற்ற புறநானூறும், பதிற்றுப்பத்தும் வரலாற்றுக் களஞ்சியங்களாக
குறிக்கப்படுகின்றன.
புறநானூற்றுக்கு இணையாக வரலாற்றுச் செய்திகளை மிகுதியாக எடுத்துரைக்கும் நூல் #அகநானூறு.
இதில் குறிக்கப்படும் வரலாற்றுச் செய்திகள் பெரும்பாலும் சங்ககாலப் புலவர்களால் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.
#அகநானூறு பண்டைத் தமிழ்ச் சமுதாய மக்களின் இயல்பினை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணை செய்கிறது.
◇ சங்க காலத்தில் மன்னராட்சி நடைபெற்ற போதிலும் மக்கள் உறுப்பினர்களைக் #குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தனர் என்பதனை 'மருதன் இளநாகனார்' காட்டுகிறார் (பா.77).
◇ மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட தூண்டில் 'கொடுவாய் இரும்பு' என அழைக்கப்பட்டதை மதுரை நக்கீரர், 'கொடுவாய் இரும்பின் கொளிரை துற்றி' (பா.36) என்பதன் மூலம் காட்டுகிறார்.
◇ மக்கள் செருப்பு அணிந்திருந்த செய்தியை 'மதுரை இளநாகன்' எடுத்துரைக்கிறார் (பா.34).
◇ பழங்காலத்தில் செருப்பிற்கு 'அடிபுதைத் தொடுதோல்' என்னும் பெயர் இருந்ததை 'மாமூலனார்' எடுத்துக் காட்டுகிறார் (பா.101).
◇ மக்கள் கஞ்சி தோய்த்த ஆடைகளைப் பயன்படுத்தியதையும், அதனை அழுக்கு நீங்கத் துவைத்துக் கொடுத்தவள் 'வண்ணார் குலப்பெண்' என்பதையும் மதுரை இளநாகனார் எடுத்துரைக்கிறார் (பா.34).
◇ மக்கள் கண்ணாடியாகிய நிழல்காண் மண்டிலத்தைப் பயன்படுத்தினர் என்பதை அந்தி இளங்கீரனாரின் கூற்றுப் புலப்படுத்துகிறது (பா.71).
◇ பனங்குருத்தால் ஆகிய குடையினை மக்கள் பயன்படுத்தினர் (பா.121)
◇ மக்களிடம் பல்லிச் சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்ததைக் 'காவன்முல்லைப் பூதரத்தனார்: எடுத்துரைக்கிறார் (பா.151).
◇ தலைவன் பிரிந்து சென்றவிடத்துக் கோடிட்டு நாட்களை எண்ணுதல் (பா.61).
◇ மகளிரின் குறிஞ்சிப் பண்ணைக் கேட்டுக் காட்டு யானை உறங்குதல் (பா.102).
◇ தலைவன் பரத்தையோடு காவிரியில் நீராடுதல் (பா.166).
◇ பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்வாங்கியது (பா.140).
◇ உமணர் உப்பைக் கழுதைமேல் வைத்து விற்பதற்கு எடுத்துச் செல்லுதல் (பா.207) போன்ற செய்திகள் அகநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
◇ கிரேக்க நாட்டிலிருந்து மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்த #யவனர் அதற்கு மாற்றாக மிளகினை வாங்கிச் சென்ற செய்தியை 'எருக்காட்டுத் தாயங்கண்ணனார்' (பா.149)
எனக் குறிப்பிடுகின்றார்.
◇ மகத நாட்டை ஆட்சி செய்தவர்கள் #மௌரியர். இவர்கள் தென்திசையில் உள்ள மலைகளைச் சமப்படுத்தித் தேர்செல்லப் பாதைகளை #மௌரியர் அமைத்தனர் என்னும் அரிய குறிப்பை 'உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்' குறிப்பிடுகிறார் (பா.69).
அப்பாடலில் #மௌரியர் என்னும் சொல் தமிழ் இயல்பிற்கேற்ப #மோரியர் என எடுத்தாளப்பட்டுள்ளது.
◇ பண்டைய காலத் தமிழர்களிடம் வேரூன்றி இருந்த வழிபாடுகளில் ஒன்று போரில் இறந்த வீரர்களின் நினைவினைப் போற்றும் வகையில் எடுக்கப்படும் #நடுகல் வழிபாடாகும்.
இதனைக் 'காட்சி நீர்படை நடுகல் பெரும்படை வாழ்த்து' எனத் #தொல்காப்பியம் கூறுவதிலிருந்து #தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந்தே இந்நடுகல் வழிபாடு இருந்துள்ளது.
அகநானூற்றுப் பாடல் ஒன்றில் கற்களில் வீரனின் பெயரும் அதில் அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டு, அவ்விடத்தைச் சுற்றி வேலை நட்டுக் கேடயங்களை நிறுத்தி இருந்ததை கீழ்காணும் வரிகள்
எடுத்துரைக்கிறது
"நல்லமர் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்' (அகம்-67)
'வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்' (அகம்-131)
- நன்று.
முருகனை சங்க இலக்கியங்களில் #மஞ்ஞையன் என்றும் #தகரன் என்றும் கூறுவர்.
ஆட்டை வாகனமாகக்கொண்டு வருவான். மயில் மீது ஏறி வருவான். சேவல் கொடியை தன் கையில் கொண்டிருப்பான். உயரமான தோற்றத்தைக் கொண்டிருப்பான். தோளில் தொடி என்னும் ஆபரணத்தை அணிந்திருப்பான்.
நரம்பு ஒலித்தாற்போன்ற இனிய இசையோடு வருகின்ற புள்ளிகளை உடைய நல்ல மனமுடைய குளிர்ச்சியையும் உடைய நிலத்தில்தோய்கின்ற ஆடையை அணிந்திருப்பான்.
'தகரன் மஞ்ஞையன் புகழ்இல்சேவல் அம் கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்' (திருமுருகு, பா. 210).
முருகனது வாகனங்கள் பற்றிய செய்திகள் #திருமுருகாற்றுப்படை மற்றும் #பரிபாடல் கலங்களிலேயே காணப்படுகின்றன.
#மஞ்ஞையன் என திருமுருகாற்றுப்படையில் கூறப்படும் முருகன், பரிபாடலில் மயிலுடன் இணைத்து பேசப்படுகின்றான்.
இந்நிலையில் 'மணி மயில் உயரிய மாறா வென்றி' (புறம், பா. 56) என நக்கீரரால் பாடப்பெற்றுள்ளான்.
#தகரன் எனப்பட்ட முருகன் ஆட்டுக்கிடாவை தனது உடலின் ஒரு பகுதியில் இருந்து பெற்றான் என #பரிபாடல் கூறுகிறது.
சங்க இலக்கியத்தில் அரசர்களின் முரண் மரபுகள்...!
போரில் வென்ற அரசன் தோற்ற அரசனை அவமானப்படுத்த, முரணான பல போர் மரபுகளை கடைப்பிடித்தனர்.
பகைவர் முரசு கவர்தல், பகைவரின் காவல் மரத்தை வெட்டி அதில் முரசு செய்தல், முடிப்பொன்னால் கழல் செய்தணிதல், காவல் மரம் தடித்தல், பகைவரின் நிலத்தில் வெள்ளை வரகும் கொள்ளும் விதைத்தல், கழுதை பூட்டி நிலத்தை உழுதல், கதவில் தோற்றோர் பல்லைப் பதித்து வைத்தல், களிற்றினைக் கயம்படிவித்தல், வென்றோர் குடைக்குப்பின் தோற்றோர் குடைபிடித்தல், எரியூட்டுதல், தம் கோட்டை வாயிலில் பகைவரை இகழுவதற்கு அடையாளமாகப் பெண்டிர்க்குரிய பொருட்களான பந்தும் பாவையும் தூக்கல், சிலம்பும் தழையும் தூக்கல், பகைவரின் இலச்சினையை நீக்கித் தமது அடையாளத்தைப் பொறிக்கச் செய்தல், பகையரசனது பட்டத்து யானையின் தந்தத்தை அறுத்துக் கட்டில் செய்தல், பகைவர் மகளிரைச் சிறைப்பிடித்தல், போரில் பகைவர் முரசும் குடையும் கொள்ளுதல் ஆகியவை குறிப்பிடத்தக்க முரண் மரபுகளாகும்.
◇ ஆநிரைகளை கவர்ந்து வருதல்
போர்க்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்றான ஆநிரைகளை கவர்தல், சங்க காலத்தில் ஆநிரைகள் செல்வமாக மதிக்கப்பட்டது. அதிக ஆநிரைகள் உள்ளவரை செல்வந்தராக மதிக்கும் முறைமை இருந்தது.
பகை நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களை கவர்ந்து வந்து கள் விற்பவரிடம் தந்து விட்டு அதற்கு மாற்றாக கள்ளை பருகுவர் இச்செய்தியை #பெரும்பாணாற்றுப்படை வரிகள் (140-141) புலப்படுத்துகிறது.
◇ முடி கவர்தல்
முடி கவர்தல் என்பது மன்னன் தலையில் அணியும் மகுடம். இம் மகுடத்தை நாட்டை ஆளும் அரசன் தன்தலையில் சூடுவது மரபாகும். பகைவரை வென்று அவருடைய முடிபொன்னை எடுத்து காலில் அணியும் #கழலை செய்து அணிவது தோற்ற மன்னனை இழிவுபடுத்தி, வென்ற மன்னனை புகழும் செயலாகும்.
#புறநானூறு (40:3–4) வரிகளில் பகை மன்னரை வென்றதன் அடையாளமாக அவர்தம் பொன்முடியின் பசும் பொன்னினால் அடி அழகுறக் கழலை அணியும் மரபு வெளிப்படுகிறது.
◇ காவல் மரத்தை அழித்தல்
#நெடுஞ்சேரலாதன், பழையன் என்னும் குறுநில மன்னன் காத்து வந்ததும், கரிய கிளைகளை உடையதுமாகிய வேம்பினது முழவு போன்ற அடிமரத்தை வெட்டியச் செய்தியைப் #பதிற்றுப்பத்து (5:13-14) குறிப்பிடுகிறது.
பகைவரது காவல் மரத்தை வெட்டி, அம்மரத்தினால் முரசு செய்வது வென்ற மன்னனது இயல்பாகும்.
பகை மன்னனது காவல் மரத்தைச் சுற்றிலும் வீரர்கள் சேர்ந்து கடம்ப மரத்தை காவல் காப்பர்.
அம்மரத்தை வெட்டிக் கொண்டு வந்து, அம்மரத்தின் அடிப்பகுதியில் முழுங்குகின்ற முரசை செய்து கொள்ளும் மரபு இருந்தது.
◇ பட்டத்து யானையின் தந்தைத்தை அறுத்தல்
உருவத்தில் பெரியதும், வலிமை மிக்கதுமான யானை போரிலே பயன்படுத்தப்பட்டது. நாட்டின் பட்டத்து யானையை அரச மரியாதையுடன் பாதுகாக்காத்தனர்.
போரிலே தோற்ற மன்னனின் பட்டத்து யானையின் கோட்டினை அறுத்து அதில் கட்டில் செய்து பயன்படுத்துவது வென்ற அரசனின் வெற்றியின் அடையாளமாகவும், தோற்ற மன்னனுக்கு இழுக்கவும் அமையும் என்பதை #பதிற்றுப்பத்து (79:13-14) வரிகளில் அறியலாம்.
எதிர் நாட்டை வென்று அவனுடைய பட்டத்து யானையின் தந்தத்தை அறுப்பது, தோற்ற
மன்னனை இழிவு படுத்தும் செயலைக் குறிக்கும்.
◇ சங்கிலியால் பிணைத்தல்
தோற்ற அரசனை சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய்போல் பிணித்து ஊர் அறிய இழுத்து வந்து அம்மன்னனுக்கு பெரும் துன்பத்தைச் செய்வர் என்கிறது “தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுந் திரீஇய" #புறநானூறு (74:7) வரிகள்.
வென்ற அரசனின் வெற்றியும் தோற்ற அரசனின் இயலாமையும் வெளிப்படுத்தும் விதமாக, தோற்ற அரசனை சங்கிலியால் பிணைக்கும் முரண் மரபு இருந்தது. வென்ற அரசனுக்கு அச்செயல் இன்பத்தை தருவதாக அமைந்தது.
◇ போரில் தோற்ற மன்னனது பல்லைப் பறித்தல்
போரில் தோற்ற மன்னனை இழிவு படுத்தும் செயல்களில் ஒன்று அவனுடைய பல்லைப் பறித்தல். அப்பல்லை வாயிற் கதவில் பதிப்பதால் வென்ற அரசனின் வீரமும், பகை மன்னனின் தோல்வியும் மக்களுக்கு அறிவிக்கும் முகமாக இச்செயல் அமைகிறது என்கிறது #அகநானூறு (211:13-15) வரிகள்.
வேட்டையின் போது உதவிக்கு எழினி என்பவன் வராததா சினம் அடைந்தன் சோழன், எழினியைப் பிடித்துவர மத்தி என்பவனை ஏவினான். போரில் எழினியை வென்று அவனுடைய பல்லைப் பறித்து வந்து வெண்மணி ஊரினுடைய வாயிற் கதவில் பதித்தான் மத்தி.
◇ எதிரி நாட்டை அழித்தல்
பகை நாட்டை அழிக்க எண்ணி அவர்கின் வயல்வெளியில் தேர்களைச் செலுத்தியதால் விளைபுலங்கள் ஏர்பூட்டி உழுததைப் போன்று மாறின.
பன்றிகள் தம் கொம்பால் குத்திக் கிளறிய விளைநிலங்கள் பின் கலப்பையால் உழ வேண்டாதனவாயின. தயிர் கடையும் மத்துக்கள் ஒலித்த வீடுகளில் இனி மங்கல இசைகள் ஒலிக்காது.
மேலும், அழகிய பீர்க்கங்கொடிகள் வீடுகளுக்கு வேலியாக இருந்தன. வீரர்களால் நாடு அழிந்த பின், அவை பாழ் பட்டு மனைகள் பொலிவிழந்தன. 1/2
பண்டைக் காலங்களில் யானைகளைப் பிடிக்கும் முறை...!
அடர்ந்த வனங்களில் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் யானைகளைப் பிடித்துக்கொண்டு வருவது முதல் பணி. அப்படி பிடித்துக்கொண்டு வந்த அந்த யானையை நமக்கு இணக்கமாக கொண்டு வருவது மற்றொரு பணி.
இன்று யானைகள் பெரும்பாலும் காடுகளை ஒட்டிய மரத்தொட்டிகளில் பளுத் தூக்கும் வேலைக்கு மட்டுமே பயன்பட்டாலும், அக்காலத்தில் யானைகளுக்கு போர் பயிற்சி அளித்து யானைப் படைகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
பண்டைய காலங்களில் யானை மீதிருந்து பறை அறிவிப்புகள், அரசன் போருக்குச் செல்வது, வெற்றி வாகைச் சூடிப் பட்டத்து யானை மீது அமர்ந்து நகர் வலம் வருவது, போர் இல்லாத காலங்களில் விவசாயம், கட்டடக்கலை போன்ற மற்ற வேலைகளுக்குப் பயன்படுத்துவது என்று மக்கள் தங்கள் தினசரிப் பயன்பாட்டில் யானைகளை வைத்திருக்கிறார்கள்.
யானைகள் காட்டில் ஒரு நாளைக்கு 200 கிலோ இலை தழைகளையும்,150 லிட்டர் தண்ணீரையும் உணவாக கொள்ளும், தொடர்ந்து 15 கிலோ மீட்டர் வரை நடக்கும். அடர்ந்து பரந்து விரிந்த காடுகளில் வாழ்ந்த யானைகளைப் பிடித்து வந்து 14 X 14 என்ற அளவில் உள்ள மரக் கூண்டில் அடைத்து வைத்துப் பழக்குவது என்பது, வேரோடு ஒரு மரத்தைப் பிடுங்கி வந்து இன்னொரு இடத்தில் வளர்ப்பது போலவே ஆகும்.
யானைகளும் மனிதர்களைப் போலவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு மனிதர்களோடு சேர்ந்து வாழப் பழகிக் கொள்கிறது. யானைகளைப் பிடித்துப் பழக்கும் தொழில், மேற்குத் தொடர்ச்சி மலையில் வசித்த பழங்குடி மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. யானைகளைப் பிடிப்பதற்குப் பல முறைகள் உள்ளன.
அவற்றைப் பயம்பு, வாரி, கெட்பி, அபதாம், அவபாதம், வாரி பந்தம், வாசப் பந்தம், அனுக பந்தம் என்று பெயரிட்டிருக்கின்றனர்.
க) #பயம்பு - முதலாவது முறை, காடுகளில் யானைகள் வழக்கமாகச் உணவு தேடிவரும் வழித்தடத்தில், ஆழமான பெரிய குழிகளைத் தோண்டி, மூங்கில் படல் பரப்பிக் குழிகளை மறைத்து, மேலே இலைகளோடு மண்ணைப் பரப்பி வைத்து, யானைகளுக்குப் பிடித்த உணவுகளை வளர்த்து, அவற்றை உண்ண வரும்
யானைகளைக் குழியில் விழச்செய்து பிடிப்பது. அந்தக் குழியை இலக்கியங்கள் #பயம்பு என்று குறிப்பிடுகிறது.
இவ்வாறு வெட்டப்படும் குழியில் விழுந்த யானை நீண்ட கொம்புகளும், உடல் வலிமையை வாய்க்கப்பெற்ற பெரிய யானையாக இருப்பின், அது அந்தக் குழியைக் கொம்பால் குத்தி மேடாக்கி வெளியேறுவது உண்டு
குழியில் விழுந்த பெண் யானைகள் குழியை விட்டு வெளியேற இயலாமல் தவிக்க நேரிடும் பொழுது, அதன் துணை யானை அதனைக் குழியில் இருந்து மீட்க உதவிக்கு வருமாறு தனது கூட்டத்தைப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு அழைக்கும்.
குழியில் விழுந்த யானையின் குட்டி, பயந்துபோய் கூட்டத்தை விட்டு பிரிந்து, மேய்ச்சலுக்கு வந்த கன்றுகளுடன் ஊருக்குள் புகுந்த செய்தியை அகநானூறு சொல்கிறது.
குழியில் வீழ்த்திப் பிடிக்கப்பட்ட காட்டு யானைகளைப் பாகன்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் செய்யச் சில காலம் பழக்கி, நாட்டு யானைகள் ஆக்கி, பின் அவற்றைப் பரிசுப்பொருளாக வழங்குவதற்கான வழக்கத்தை வேந்தர்களும் குறுநில மன்னர்களும் கொண்டிருந்தனர் என்பதனை அகநானூறு சொல்கிறது.
யானைகளைப் பயம்பில் வீழ்த்திப் பிடிப்பது செலவு குறைவானது, முயற்சியும் அதிகம் தேவைப்படாத எளிய வழி, குழியில் விழுந்த யானையை, பழகிய யானையின் உதவியுடன் வெளியேற்றுவர்.
அதன் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த ஒருவன் சிறிது நேரம் அதனை அங்குசத்தால் குத்தியும் அடித்தும் துன்புறுத்துவான், இன்னொருவன் வந்து அவனை அடித்துத் துரத்திவிட்டு யானைக்குக் கரும்பு தளிர் முதலானவற்றை தின்னக் கொடுப்பான்.
இது யானை அவனிடத்தில் நம்பிக்கை வைத்து அவன் சொற்படி நடக்க வழிவகுக்கும். யானைப் பிடிக்கும் குழிகளைக் #கொப்பம் என்று பழங்குடி மக்கள் தங்கள் வழக்கில் அழைக்கிறார்கள். இந்த முறையைக் கஜசாஸ்திரம், அசுவ சாஸ்திரம் என்னும் வடமொழி நூல்களும் குறிப்பிட்டுள்ளன.
உ) #வாரி - இரண்டாவது முறை, பயம்பில் யானைப் பிடிக்கும் முறையிலிருந்து வேறுபட்ட இன்னொரு யானைப்பிடிக்கும் முறை.
இம்முறையினைக் கையாண்டு பல யானைகளை ஒரு சேரப் பிடிக்கலாம். இதற்குப் பல யானைப் பாகன்கள் துணையும், பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் ஒத்துழைப்பும் தேவை.
பெரிய உயரமான தேக்கு மரங்கள் அடர்ந்த இடங்களில், கூட்டமாக வாழும் யானைகளை அடைப்புக்குள் துரத்தி, பின் பழகிய யானைகள் மீது இருந்து அவரின் கால்களுக்குச் சுருக்கிட்டுப் பயிற்சி நிலையத்திற்குக் கொண்டு செல்வார்கள். இதற்கு மிகுந்த பொருட்செலவும், முயற்சியும் தேவைப்படும். 1/n
தமிழர் வாழ்வியலில் யானை...!
இன்றைய காலகட்டத்தில் கோயில்களில் யாசகத்திற்கு தும்பிக்கையை நீட்டி வாழ்த்திக் கொண்டிருக்கும் யானைகள், ஒரு காலத்தில் பல பேரரசுகளுக்கு வித்திட்டவை. பண்டைய தமிழ் மன்னர்களின் படைகளின் நால்வகைப் படைகளில், யானைப்படை மிகவும் சிறப்புற்று விளங்கின.
யானைகளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவு பெருங்கற்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. பல பாறை ஓவியங்களில் யானைகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது. யானைகளைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியத்தில்
பரவலாகக் காணப்படுகிறது.
அதன் சிறப்பியல்புகள், மதம் பிடித்தல், அன்போடு பழகுதல் எனப் பல இடங்களில் யானைகள் பற்றிய பாடல்கள் உள்ளன. சங்கக் காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை பல பேரரசுகளும் சிற்றரசுகளும் தங்கள் படையில் யானைப் படைகளை பராமரித்து வந்துள்ளார்கள்.
அரசன் வெற்றி பெற்ற காலத்தில் பட்டத்து யானையின் மீது அமர்ந்து நகர்வலம் வருவது, யானைகள் மீது அமர்ந்து பறை அறிவித்தல் எனப் பல்வேறு வேலைகளுக்கு யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
■ முதலாம் பரமேசுவர வர்மன், சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தியனுடன் நிகழ்த்திய போரில் யானைப் படைகளின் பங்களிப்பையும், பரமேசுவர வர்மனின் பட்டத்து யானை #மகிவர்ணாம் என்ற பெயரைக் கொண்டது என்றும், அதன் மேல் அவன் அமர்வதற்காக அமைக்கப்பட்ட #அம்பாரம் குறித்தும் '#கூரம்_செப்பேடு' குறிப்பிடுகிறது.
■ பல்லவர்களும் அவர்களது பகைவர்களும் யானைப் படைகளைக் கொண்டிருந்தமையை '#உதயேந்திரம்_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன. அபராஜித பல்லவனின் கல்வெட்டொன்று அவன் சோழ மன்னனுடன் நடத்திய சிற்றாற்று போரில் யானைப் படையின் துணையுடன் வென்றதைக் குறிப்பிடுகிறது.
■ பல்லவர்களைப் போன்றே சோழர்களும் யானைப் படையைக் கொண்டிருந்தனர். சுந்தரச் சோழனின் பட்டத்து யானையின் போர்க்கள ஆற்றலை '#அன்பில்_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன.
■ ராஜாதித்யன் என்ற சோழ இளவரசன், போர்க்களத்தில் யானையில் வீற்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதைப் பெரிய '#லெய்டன்_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன.
■ முதலாம் ராஜராஜ சோழனின் யானைப் படையைக் கவித்துவமான மொழியில் '#கரந்தைச்_செப்பேடு' வர்ணிக்கிறது.
■ முதலாம் ராஜேந்திர சோழன் தன் யானைக் கூட்டங்களை ஆற்றில் நிறுத்தி, அவற்றைப் பாலம்போல் பயன்படுத்தியதாகத் '#திருவாலங்காடு_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன. இவரின் யானைப் படையைக் 'கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்' குறிப்பிடுகின்றன.
போரில் தோல்வியுற்ற மன்னர்களின் யானைகளை வெற்றி பெற்ற மன்னர்கள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னர்களுக்கிடையே பரிமாறப்படும் அன்பளிப்புப் பொருட்களில் ஒன்றாக யானை விளங்கியது. பாண்டிய மன்னர்களிடமும், சேர மன்னர்களிடமும் அதிக அளவு யானைப்படை இருந்துள்ளது.
ஒற்றை உயிரினமான யானைக்குத் தான் எத்தனை எத்தனை பெயர்களை தமிழர்கள் வைத்திருக்கிறாரகள்?
#வாரணம்
#இபம்
#வேழம்
#களிறு
#தும்பி
#வல்லிலங்கு
#தந்தாவளம்
#கரி
#மாதங்கம்
#நாகம்
#வழுவை
#கயம்
#தூங்கல்
#கும்பி
#ஆம்பல்
#கைம்மா
#தோல்
#நால்வாய்
#மந்தமா
#சிந்துரம்
#கரையடி
#பூட்கை
#மருண்மா
#வயமா
#எறும்பி
#குஞ்சரம்
#மதகயம்
#புகர்முகம்
#புழைக்கை
#கரேணு
#போதகம்
#தந்தி
#ஒருத்தல்
#அத்தி
#உவா
#மதாவளம்
இவைகளையெல்லாம் சங்க இலக்கிய நூலான "சூடாமணி நிகண்டு " சொல்கிறது. யானைகளுக்கு தமிழ் தந்த வெவ்வேறு பெயர்கள் இத்தனை.
அது மட்டும் தானா...?
அது யானையை பற்றி மேலும் விவரிப்பதைப் பாருங்கள்... 1/2
தென்னாட்டில் 12 ஆண்டுகள் மழை பெய்யாத பஞ்சமும், வறுமையும்....!
பொ.மு 307-இல் தென்னாட்டில் கொடிய #வற்கடம் (பஞ்சம்) நிலவியதாகக் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#இறையனார் இயற்றிய #களவியல் நூலும் தமிழ்நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யாததால் ஏற்பட்ட கொடிய வறுமைத் துன்பத்தைக் குறிப்பிடுகிறது.
அது பின்வருமாறு:
"அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது; செல்லவே, பசி கடுகுதலம், அரசன் சிட்டரையெல்லாம் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகிலேன். என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி
வம்மின்" என்றான்.
தென்னாட்டில் கொடிய #மழைவறம் (பஞ்சம்) ஏற்படுவதற்கு முன்பு வடநாட்டிலும் பல ஆண்டுகள் மழைபெய்யாத வறுமையால் மக்கள் மடிந்தார்கள்.
சமண சமயத்தைச் சார்ந்த மகத நாட்டரசர் சந்திரகுப்தரும், பத்திரபாகு முனிவரும், 8000 சமணத் தறவிகளுடன் தென்னாடு நோக்கி வந்து மைசூர் மாநிலத்தில் சிரவணபௌகுளாவில் தங்கினர்.
அவர்களில் விசாக முனிவர் தலைமையில் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுக்கு வந்த சமண முனிவர்கள், தமிழகத்தில் சமண சமயத்தைப் பரப்பினர். பௌத்த சமயம் அசோகரின் மகனால் ஈழம் வரை பரப்பப்பட்டது.
எனவே சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் சமண பௌத்த சமயத்தைச் சார்ந்த தமிழ்ப் புலவர்களால் பாடப்பட்டன. தமிழின் இலக்கண இலக்கிய மரபுகள் சிதையாமல் பாதுகாக்கப்பட்டன.
தொல்காப்பியப் புறத்திணைகளில் போரில் வென்ற அரசன் தோற்ற அரசனின் நகரத்தை இடித்துத் தரைமட்டமாக்குவதும், ஊர்களைத் தீவைத்து அழிப்பதும் கூறப்படவில்லை.
ஆயின் கடைச்சங்க காலத்தில் ஆரியர்களின் வழக்கமாகிய ஊர்களைத் தீவைத்து அழித்தல், நகரங்களை இடித்து நொறுக்குதல், அரசர்கள் அனைவரும் பார்ப்பனர்களை வேதம் ஓதவைத்து வேள்வி செய்தல், இரணிய கருப்பம், துலாபார தானம் போன்ற வடநாட்டு வழக்கமாகிய கொடைகளை அளித்தல் ஆகியவை தமிழகத்தில் புகுந்துவிட்டன.
சமண பௌத்த சமயங்கள் தமிழகத்தில் புகுவதற்கு முன்பே அதற்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் இவ்வழக்கங்கள் படிப்படியாகத் தமிழர்களிடையே பரவியிருக்க வேண்டும்.
தொடர்ந்து 12 ஆண்டுகளில் மழை பெய்யாததால் மக்கள் பல்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்ததும், ஆரியப் பழக்கவழக்கங்கள் மென்மெலப் பரவியதும், சமண பௌத்த சமயங்கள் தலையெடுத்ததும், பொ.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றை இருண்ட காலமாக்கி, இரண்டாம் தமிழ்ச் சங்க இலக்கியங்களின் மறைவுக்கு வழி வகுத்திருக்கலாம்.
- ஆய்வும், எழுத்தும்: பேராசிரியர். இரா. மதிவாணன்.
பாண்டியரின் குதிரை வாணிகம்...!
'குதிரை வாணிகம்' பற்றியும், குதிரைப் படைகளைப் பல்லவரும், பாண்டியரும் வைத்திருந்ததைப் பற்றியும் நமக்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன.
#அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து, அரசர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் விற்று வந்த ஒருவகைக் குதிரை வணிகர்களைக் #குதிரைச்செட்டிகள் என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
#இஸ், #ஹர்மாஸ், #டோபர், #சோவர், #ஏடன் ஆகிய இடங்களிலுள்ள வணிகர்கள் போர்க் குதிரைகளை வாங்கிப் பாண்டிய நாட்டு அரசனுக்கும், அவனுடைய நான்கு சகோதரர்களுக்கும் ஆண்டுதோறும் விற்கிறார்கள்.
அரசன் மட்டும் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குதிரைகளை விலைக்கு வாங்கினானென்று #மார்க்கோபோலோ கூறுகிறார்.
ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு குதிரைகளை வாங்குகிறார்களென்பதற்கு #மார்க்கோபோலோ காரணத்தையும் கூறுகிறார்.
வெப்பமான பாண்டிய நாட்டிற்குக் #குதிரைகள் வந்தவுடன் வெப்பத்தைத் தாக்குபிடிக்காமல் வலிமைகுன்றி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன.
மேலும் அவற்றிற்கு #இலாடம் கட்ட #அரபு நாட்டிலிருந்து #இலாடக்காரர்கள் வராமல் தடுக்கப்பட்டு விடுகின்றனர்.
இதனால், மதுரைக்கு ஆண்டுதோறும் அரபுநாடுகளில் இருந்து #குதிரைகள் கொண்டுவரப்பட்டன என்று மார்க்கோபோலோவும், #அரபு பயணியான வாசபும் கூறியுள்ளனர்.
- நன்று.
பழந்தமிழகத்தின் முத்து வணிகர்கர்கள்...!
சங்ககாலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப்பெற்ற #முத்துக்கள் வட இந்தியா மற்றும் கிரேக்க, ரோமானிய நாடுகளில் புகழ்பெற்று விளங்கின. இதற்கு #மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவர் குறிப்புகள், இலக்கியங்கள், வடமொழி நூலான #அர்த்தசாஸ்திரம், #பாளி மொழி நூலான #மகாவம்சம் போன்றவை சான்று தருகின்றன.
சங்க இலக்கியங்கள் பாண்டிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் #முத்துக்குளித்தல் பற்றியும், இத்தொழில் புரிந்த #பரதவர்கள் பற்றியும் மிகுந்து குறிக்கின்றன. அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி செயற்கையாக #முத்துச்சிப்பி வளர்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் சிறப்பாக ஐப்பானிலும் வளர்ந்த காரணத்தினால் "மரபுவழி முத்துக்குளித்தல்" தற்போது நடைபெறுவதில்லை.
தமிழகக் கடற்பகுதியில் முத்துக்குளித்தலின் வரலாறு, முத்துக்குளிக்கும் தொழில்நுட்பம், ஆளுவோர் குறித்த ஆய்வுகள் ஏற்கெனவே செய்யப் பெற்றுள்ளன. எனினும், "முத்து வணிகர்கள்" பற்றி தனித்த ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அம்முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்ளுகிறது. இக்கட்டுரைக்குச் சான்றுகளாக சங்க இலக்கியங்கள், வெளிநாட்டவரின் பயணக்குறிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய விடுதலைக்கு முன்னர் இலங்கையிலும் இந்தியக் கடற்பகுதியான மன்னார் வளைகுடாவிலும் #முத்தெடுத்தல் தொழிலில் ஈடுபட்டோர், இரு நாடுகளிலும் வாழ்ந்த #பரதவர்கள் ஆவர். மேலும் இலங்கைப் பகுதியில் #முத்துக்குளித்தல் நடைபெறும்போது இந்தியக் கடற்பகுதியில் நடைபெறாது. அதுபோல் இந்தியப் பகுதியில் #முத்துக்குளித்தல் நடைபெறும்போது இலங்கைப் பகுதியில் நடைபெறாது. எனவே, இருபகுதியிலும் வாழ்ந்தோர் இத்தொழிலில் ஒன்றாக ஈடுபட்டனர்.
ஆகையால், இலங்கைப் பகுதியில் நடைபெற்ற #முத்துக்குளித்தல் பற்றிய சான்றுகளும் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் #முத்தெடுத்தல் குறித்த செய்திகள் அதிகம் காணப்பட்டாலும் "முத்து வணிகம்" செய்தோரைப்பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
■ பொ.மு 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த #மாங்குளம் #தமிழி கல்வெட்டில் முத்து வணிகரைப் பற்றிய குறிப்பு உள்ளதாகக் கருதலாம். கல்வெட்டில் உள்ள,
'வெள்அறைய் நிகமது
காவிதிஇய் காழிதிக அந்தை"
- என்ற வரிகளில் #காழ்' என்பதை #முத்து என்றும் #அதிக என்பதை #கண்காணிப்பாளர் (அதிகாரி) என்றும் ஐராவதம் மகாதேவன் வெள்ளறையைச் சார்ந்த வணிகனான முத்துக்குளித்தலின் கண்காணிப்பாளனைக் குறிப்பதாகக் கொள்கிறார்.
■ கீழக்கரையான 'நினைத்ததை முடித்தான்பட்டினத்தில்' 11-ஆம் நூற்றாண்டு வரை "பதினெண்விசையத்து திசையாயிரத்து ஐநூற்றுவர்" முத்துவணிகத்தில் ஈடுபட்டு அவற்றின் வருமானத்தில் ஒரு பகுதியை அங்குள்ள கோயிலுக்கு அளித்துள்ளனர்.
■ பண்டைய போசள நாட்டின் மையப்பகுதியில் (தற்போதைய கர்நாடக மாநிலம்) #அரிசிக்கெரே (Arsikere) என்னுமிடத்திலுள்ள 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெட்டப்பட்ட கல்வெட்டில் "சட்டி செட்டி" என்னும் பெயருடைய "ஐயவொளே வணிகக்குழுவின் வணிகர்" #முத்து, #குதிரை, #யானை ஆகியனவற்றை வணிகம் செய்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.
■ 13-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வருகைபுரிந்த #மார்கோபோலோ (1260-1300) தனது குறிப்பில் #காயல் துறைமுகப்பகுதியில் நடைபெற்ற முத்துக்குளித்தலின் போது வணிகர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, முத்துக்குளிப்போரை வாடகைக்கு அமர்த்தி, சிப்பிகளை வெளிக்கொணர்ந்தனர் எனக் கூறியுள்ளார். அவ்வாறெனில் எடுத்த முத்துக்களின் ஒரு பகுதியை அரசுக்கு அளித்து பிறவற்றை வணிகக் குழுக்கள் வணிக நோக்கிற்காக எடுத்துச் சென்றிருத்தல் வேண்டும். ஆனால் எவ்வகை வணிகக் குழுக்கள் முத்துக்களை வணிகம் செய்தன என்பது குறிப்பிடப்படவில்லை.
■ சீனப்பயணி 'வாங்-த-யுவான்' (பொ.பி 1349) தமது குறிப்பில் மன்னார் வளைகுடாவில் எடுக்கப்பட்ட முத்துக்கள் சல்லடைகளில் அளவுவாரியாகப் பிரிக்கப்பட்டதாகவும். அரசு அலுவலர்கள் இம்முத்துக்களுக்கு வரிவிதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
■ பொ.பி 1518-ஆம் ஆண்டு #தூத்துக்குடி பகுதிக்கு வருகைபுரிந்த 'தூயர்த் பார்போசா' (Duarte Barbosa) #காயல் பகுதி முத்துக்குளித்தலில் 'செட்டி' எனப்படும் இந்து சமய வணிகர்களும், இசுலாமிய வணிகர்களும் வணிகத்தில் பங்கு வகித்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
■ 'சீசர் ஃபிரடெரிக்' (Caesar Frederick, பொ.பி 1563-1581) தமது குறிப்பில் #செட்டி (Chitti) என்னும் சான்றோர் (learned men) முத்துக்களை சல்லடைகளைக் கொண்டு பிரித்து #எடை, #அழகு, #திடம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நான்கு வகைகளாகப் பிரித்ததாகக் குறிப்பிடுகிறார். 1/2
கடல் கடந்த தமிழும், வணிகமும் - #இந்தோனேசியா நாட்டு
தீவுக்கூட்டத்தில் கிடைத்த #தமிழ் கல்வெட்டுகளும்...!
■ #சுமத்ரா - ஜகர்தா அருங்காட்சியகத்தில் இரண்டு #தமிழ் கல்வெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 'லோபோ தொய்வா' என்னுமிடத்திலிருந்து, மிகவும் சிதலமடைந்த நிலையில் தமிழ் எழுத்துக்களுடன் இருக்கும் தமிழ் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டன.
இக்கல்வெட்டினை ஆராய்ந்த பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் இக்கல்வெட்டு பொ.பி 1075-1125ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் #குலோத்துங்கசோழன் காலத்துக்குறியது எனவும், வணிக்கத்திற்காக #சோழர்கள் இங்கு குடிப்பெயர்ந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
மற்றொரு கல்வெட்டில் மத்தியில் ஒரு சிற்பமும், அதை சுற்றி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பொ.பி 1258-1275 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டின், மேல் பகுதியில் சிறு விநாயகர் உருவமும், தமிழ் மற்றும் ஜாவா மொழியில் எழுத்துக்களும் உள்ளது. இதில் #சேனாதிபதி திபான்கரன் என்ற பெயர் உள்ளது.
இதன் மூலம் தமிழர்கள் வணிகத்திற்காக இங்கு குடிபெயர்ந்து கோயில் கட்டி வாழ்ந்திருக்கலாம் என அறிந்துக்கொள்ள முடிகிறது.
■ #சாவா (சாவகம்)
இதுமட்டுமின்றி, இந்தோனேசியாவிலுள்ள சாவா (#சாவகம்) தீவில் மிகஉயர்ந்த மலைகளில், இரண்டு மலைகள் மட்டும் தமிழ்ப் பெயரினைக் கொண்டுள்ளன.
ஒன்று #பாண்டியமலை, மற்றொன்று #செமேருமலை என்பதே ஆகும், தற்போதும் இப்பெயர்கள் வழக்கில் உள்ளன. இந்த #சாவா தீவைப்பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்திற்கும் #சாவா தீவிற்கும் இடையே கடல்வழி போக்குவரத்துக்கள் இருந்ததையும் #மணிமேகலை குறிப்பிடுகிறது.
- நன்று.
தமிழ்நாட்டின் போர் யானைகள்...!
"வேழமுடைத்து மலைநாடு" என்றார் #ஔவையார்.
தமிழ்நாட்டிலுள்ள இரண்டு மலைத்தொடர்களிலும் மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத்தொடர்ச்சி உள்ள காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகளுக்கு உகந்த வாழிடமாக இருந்தன.
இம்மலைகளைப் போர்த்தியிருக்கும் காடுகளில் இன்றும் யானைகள் வாழ்கின்றன. அண்மைக்காலம் வரை சமவெளிக் காடுகளிலும் இருந்தன. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவை நம் காடுகளை உறைவிடமாகக் கொண்டிருந்தன.
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள #ஆயனடைப்பு என்கிற இடத்தில் 30,000 ஆண்டு பழமையான யானை #தொல்லெச்சம் (fossil) ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இமயத்தின் அடிவாரக் காடுகளிலிருந்து இலங்கை வரையில் #காட்டானைகள் வாழ்ந்தன என்பதை இங்கு கண்டறியப்பட்ட #தொல்லெச்சங்கள் காட்டுகின்றன.
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன், இந்தியாவில் போர் யானைகளைப் பற்றி "யானைகளும் அரசர்களும்" என்கிற நூலை எழுதியுள்ளார்.
#போர்யானை உருவானது தென்னிந்தியாவில் தான் என்கின்றார் டிரவுட்மன். இங்கிருந்து ஐரோப்பாவிற்கு யானைகள் போரில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுடன் யானைப் பாகன்களும் சென்றிருக்கின்றனர்.
முதன்மை ஆயுதம்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ரோம் நாட்டின் மீது படையெடுத்த கார்தேஜினிய நாட்டு தளபதி ஹன்னிபல், பல யானைகளுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரைக் கடந்து சென்று ரோம் நகரைத் தாக்கி வென்றார் என்பது ஐரோப்பிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. அவரது படையிலிருந்த யானைகள் இந்தியாவிலிருந்து சென்றவையே.
ஆசிய யானைகளை மட்டுமே பழக்கப்படுத்த முடியும். அவை பல சடங்குகளிலும் பங்கெடுக்கின்றன. அண்மைக் காலம் வரை சர்க்கஸ்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன. ஆப்பிரிக்க யானைகளுக்கு எந்த வேலை செய்யவும் பயிற்றுவிக்க முடியாது.
பண்டைய தமிழ்நாட்டில் காட்டில் வளர்ந்த காட்டானைகளைப் பிடித்து போருக்கு பழக்கினார்கள். குட்டிகளைப் பிடித்து வளர்க்கவில்லை. ஏனென்றால் அவை முழு வளர்ச்சி அடைவதற்குத் தேவையான சுமார் இருபது ஆண்டுகள் வரை, இரை கொடுத்து பராமரிப்பது மிகச்சிரமமான வேலை. ஆகவே வளர்ந்த யானைகளைப் பிடித்தே பழக்கியிருக்கிறார்கள்.
ஆனால், பிடிப்பதற்கு எந்த உத்தியைப் பயன்படுத்தினார்கள் என்கிற விவரம் இல்லை. குழி பறித்து பிடித்ததாகப் புறநானூற்றில் ஒரு குறிப்பு உண்டு. பிடிக்கப்பட்ட யானைகளுக்குப் #போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டதைப் பற்றி #கபிலர் எழுதியுள்ளார்.
படையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்த குதிரைகளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், யானைகள் நம் காட்டிலேயே இருந்தன. ஆகவே, இந்தக் காடுகளைக் காப்பதில் அரசர்கள் ஆர்வம் காட்டினார்கள். காட்டில் வாழும் பழங்குடியினரை, யானைகளைப் பிடிப்பதற்கும் பழக்குவதற்கும் அரசர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
தமிழ்நாட்டுப் போர்களில்...
இன்று பல கோயில் யானைகள் அருகில் மக்களுக்கு இருந்தாலும், நம்முடன் பழகினாலும் அவற்றில் வீட்டினம் கிடையாது. மாடு, குதிரை போன்ற ஒரு வளர்ப்பு விலங்கு அல்ல யானை. பழக்கப்பட்ட காட்டு விலங்குதான். இதற்கென்றே #கஜசாஸ்திரம் என்றொரு நூலும் உள்ளது. பயிற்றுவிக்கும் முறை, யானைகளுக்குச் செய்ய வேண்டிய மருத்துவம், கொடுக்க வேண்டிய இரை இவை பற்றிய விவரங்கள் அடக்கிய நூல்.
"பலகாப்ய முனி" எழுதிய இந்நூலின் தமிழ் வடிவம் #தஞ்சை "சரஸ்வதி மகால்" நூலகத்தில் உள்ளது.
போரில் மட்டுமல்ல, வேறு சில வேலைகளைச் செய்யவும் யானைகள் பயன்தரு விலங்காகப் பழக்கப்படுத்தப்பட்டன.
இன்றைய ராணுவத்தில் டாங்கிகள் வகிக்கும் இடத்தை, அன்று யானைகள் நிரப்பின என்று சொல்லலாம். கோட்டைகளைத் தகர்ப்பதற்கு, போர்க்களத்தில் குதிரைப் படையையும், காலாட் படையையும் துவசம் செய்ய இவை பயன்படுத்தப்பட்டன.
#ஔவையார் (1953) படத்தில் ஒரு யானைத்திரள் தோன்றி சோழ மன்னனின் கோட்டையொன்றின் பெருங்கதவுகளை உடைக்கும் காட்சி, தமிழ் சினிமா வரலாற்றில் வரலாற்றில் இடம்பெற்ற ஒன்று.
புறநானூற்றில்கோட்டைக் கதவுகளைத் தகர்க்கும் யானைகளைப் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு.
பல சிற்பங்களில் #போர்யானை சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. #புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், குதிரைவீரன் ஒருவனைத் தாக்கும் போர்யானை ஒன்றின் புடைப்புச் சிற்பம் உண்டு.
ஆலயங்களில் மட்டுமல்ல சில நடுகற்களிலும் #போர்யானை காட்டப்பட்டுள்ளது. இலக்கியத்தில் குறிப்புகள் போர் யானைகளைப்பற்றி பல காணப்படுகின்றன.
#பரணி என்கிற சிற்றிலக்கிய வகை ஆயிரம் போர் யானைகளைக் கொன்ற ஒரு வீரனைப் போற்றிப் பாடுகின்றது.
புறநானூற்றுப் பாடல்களில் வெகுவாக குறிப்பிடப்படும் விலங்கு யானை தான். 1/2
கொடுமணலில் 2400 ஆண்டுகளுக்கு மேல் பழமையுடைய தொழிற்பேட்டை வளாகம்...!
புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை 2012 ஆண்டில், #ஈரோடு மாவட்டக் #கொடுமணல் பகுதியில் புதிதாக மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வில் ஏராளமான செய்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மக்கள் வாழிடமாயிருந்த நான்கு அகழாய்வுத் தளங்களில் கண்டறியப்பட்ட #செய்பொருட்கள், அங்கு 2400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய #தொழிற்பேட்டை இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
அந்தத் தொழிற்பேட்டையில்
இரும்புப்பொருட்கள், எஃகுப்பொருட்கள், நெசவுப்பொருட்கள், சங்கு வளையல்கள், ஆயிரக்கணக்கான பல்வகை மணிகள் என கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக்கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
உரோமைப் பேரரசில் புழங்கிய #பொன் (ம) #வெள்ளி நாணயங்கள் பலவும் கண்டறியப்பட்டுள்ளன.
சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது.
கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு (ம) பலவகை பாசி மணிகள் #எகிப்து, #உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.
கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் #முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் #பட்டணம் என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது.
ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த வளாகத்தில் நூல் சுற்றும் சுடுமண்கதிர், பொன் கம்பி ஆகியவை கிடைத்துள்ளன. 30 தமிழ்ச் சொற்கள் அடங்கிய 130 தமிழிப் பொறிப்புகள் கொண்ட பானைகள் கிடைத்துள்ளன.
'சப மகதை பம்மதன்', சாதன், விசாகி, சிலிகன், உரனன், திசன், 'சம்பன் சுமநன்' முதலிய பெயர்கள் அவற்றில் உள்ளன.
இவ்வகழாய்வை மேற்கொண்ட
புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கா. இராசன் இந்து நாளிதழ்ச் செய்தியாளர் டி.எஸ். சுப்பிரமணியத்திடம் இது குறித்துப் பதிவுசெய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேறெங்கும் இதுபோன்ற தொழிற்பேட்டை வளாகம் கண்டுப் பிடிக்கப்படவில்லை. #கொடுமணல் பெரிய #தொழிற்பேட்டை வளாகம். இங்கு வேளாண் பணி குறைந்த அளவிலேயே நடந்துள்ளது.
சங்ககால ஊர்களான #கொற்கை, #பூம்புகார், #கரூர், #உறையூர், #அழகன்குளம், #பொருந்தல் என்று பல ஊர்களில் அகழாய்வு நடந்திருந்தாலும், கொடுமணலில் கிடைத்ததுபோல் வேறெங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானைகள் கிடைக்கவில்லை.
'சம்பன் சுமநன்' என்ற தமிழிப் பொறிப்பு பொ.மு 3-ஆம் (அ) 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். 'சம்பன் சுமநன்' என்ற பெயருள்ள பெரிய பானை நான்கு தளங்களுள் ஒன்றின் இரண்டாம் அடுக்கில் கண்டறியப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில் #சம்பன் என்ற பெயர் பொறித்த பானை கிடைத்துள்ளது. பல பானைகளில் #சம்பன், #சுமநன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதை வைத்துப் பார்க்கும்போது #சம்பன் தந்தை, #சுமநன் மகன் என்று முடிவுசெய்யலாம். இந்தத் தொழில் வளாகம் #சம்பன் குடும்பத்தைச் சேர்ந்ததெனலாம்.
கொடுமணலில் இரண்டு பெருங் கற்காலக் #கற்பதுக்கைகள் அகழப்பட்டன. ஒரு #கற்பதுக்கை #கல்வட்டம் சூழ அமைந்திருந்தது. அதன் உள்ளே இரண்டு தடுப்புகள் இருந்தன. தடுப்புகளும் மேற்கூரையும் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தன.
#கல்வட்டம் நெடுங்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. உயரமான கற்கள் சிதைந்திருந்தன. உள்வட்டம் சுவர்போல் அமைந்துள்ளது. முன் தடுப்பில் துளையிடப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்புகளுக்கும் பொதுப்பாதை உள்ளது. மனித எலும்புகள் தடுப்புகளில் இருந்தன. இறப்புச் சடங்குப் பொருள்களான நான்கு கால் ஜாடி, வளையல் தாங்கி, இரும்புப் பொருள்கள், மணிகள் உள்ளே இருந்தன. கற்பதுக்கையின் வெளியே உடைந்த பானைகளும் கலயங்களும் கிடந்தன.
இரண்டாவது கற்பதுக்கையில் ஒரு முதன்மைத் தடுப்பும் இரண்டு துணைத் தடுப்புகளும் உள்ளன. ஒவ்வொன்றும் கற்கூரையுடன் உள்ளன. முதன்மைப் பகுதி சிறந்த கல்லாலும் பிற பகுதிகள் எளிய கற்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுற்றியிருந்த கல்வட்டத்தில் இப்போது கற்கள் இல்லை. ஒரு தடுப்பு, தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. அதில் துளை உள்ளது. மற்ற இரண்டிலும் வட்ட வடிவத் துளைகள் உள்ளன. தடுப்பின் உள்ளே மணிகள் கிடைத்துள்ளன. உள்ளே துளைப்பகுதியில் அம்பு முனைகளின் தொகுப்புப் பதியப்பட்டுள்ளது. இது எதற்காக அமைந்துள்ளது என்று தெரியவில்லை என்கிறார் கா. இராசன்.
கொடுமணலில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒய். சுப்பராயலுவை இயக்குநராகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை ஆகியவற்றின் துணையோடு 1985, 1986, 1989, 1990ஆம் ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டு 48 குழிகளைத் தோண்டியது. 1/2
கடல் கடந்த தமிழும், வணிகமும் - #தாய்லாந்து நாட்டில் கிடைத்த #தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளும்...!
தொல்தமிழர் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவினார்கள் என்பதற்கான பல சான்றுகள் உள்ளன.
2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே #தாய்லாந்து (#சியாம்) நாட்டில் தடம்பதித்ததற்கான சுவடுகள் ஏராளம் உள்ளன. தாய்லாந்திற்கு அண்மைக்காலத்தில் தான், அங்குள்ள #தாய் என்ற இன மக்களின் பெயரால் அது #தாய்லாந்து என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
■ வாட்நா மியாங் கோயில் கல்வெட்டு...
தாய்லாந்தில் உள்ள 'நக்கோன்ஸி தம்மாரத்' என்ற நகர அருங்காட்சியகத்தில் 'தகு வாபா' என்னுமிடத்தில், 'வாட்நா மியாங்' என்ற கோயிலில் பொ.பி 8-9 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் திருமாலுக்கு குளம் வெட்டி கோவில் கட்டிய செய்திகள் சொல்லப்படுகிறது.
இவ்வணிகக்குழுவினர் மணிக்கிராமத்தைச் சேர்தவர்கள் எனவும், அவர்களுக்கு #சேனாமுகம் என்ற பாதுகாப்புத் தமிழர்படை துணையாக இருந்தது எனவும், #மணிக்கிராமத்தார் அந்தக்குளத்துக்கு #அவனி_நாரணன் என பெயர் வைத்தனர் எனவும் அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக்கல்வெட்டைக் வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் ஆய்வுசெய்து, இது மூன்றாம் நந்திவர்ம பல்லவ மன்னனின் காலத்துக்குறியதாக இருக்கலாம் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி நந்திவர்மனின் பட்டப்பெயர்களில் #அவனி_நாரணன் என்பதும் ஒன்றாகும். இதன் காரணமாகவே அங்கு வெட்டப்பட்ட குளத்திற்கு #அவனி_நாரணன் என பெயர் சூட்டியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
■ பூ கே தாங் பானை ஓடுகள்...
2006 ஆம் ஆண்டு தாய்லாந்தில், 'பூ கே தாங்' என்னுமிடத்தில் நடந்த அகழ்வாரய்ச்சியின் போது பொ.பி 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த #தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், #தமிழி எழுத்துக்கள் தான் என்பதைத் தமிழ்நாடு தொல்லியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும், வாசிங்டன் பல்கலைக்கழப் பேராசிரியர் ரிச்சர்ட் சாலமனும் உறுதி செய்தனர். இங்கு கிடைக்கப்பட்ட பானை ஓடுகளில் #துறவு என பொறிக்கப்பட்டிருந்தது.
■ தமிழி பொறிக்கப்பட்ட தொடுகல்...
தாய்லாந்தில் 'க்லோங் தோமிடேரியன்' என்னுமிடத்தில் பொ.பி 3-4 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த #தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட #தொடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொடுகல்களில் #பெரும்பட்டன் என பொறிக்கப்பட்டிருந்தது. #பெரும்பட்டன் என்பது கைவினை கலைஞர்கள் (அ) கொல்லர்களை குறிப்பதாகும்.
#கொல்லர்கள் இத்தொடுகல்லினை தங்கள் தொழிலிற்காக பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடுகல்லின் மூலம் சங்ககாலத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த பல பொற்கொல்லர்கள் (ம) கைவினை கலைஞர்கள் தாய்லாந்திற்கு குடிப்பெயர்துள்ளது தெரியவருகிறது.
அதுமட்டுமின்றி இவ்விடத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த சதுரவடிவ செப்பு நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நாணயத்தின் ஒருபுறம் புலி சின்னமும், மற்றோரு புறம் குதிரை (ம) யானையுடன் கூடிய தேர்ச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் பொ.பி 1 முதல் 3-ம் நூற்றாண்டைச்சேர்ந்த சங்ககால சோழர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே அகழாய்வில் மற்றொரு பொ.பி 6-ம் நூற்றாண்டைச் சேந்த வட்டவடிவிலான செப்பு நாணயமும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்நாணயத்தின் ஒருபுறம் #எருது நின்ற நிலையிலும், மறுபுறம் #பாய்மரக்கப்பல் துடுப்புடன் கடலில் பாய்வது போலவும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் பல்லவர்கால நாணயங்களில் எருது சின்னம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றின் மூலம் இந்த நாணயங்கள் சங்ககாலத்திருந்தே தாய்லாந்தில் வணிகத்தின் மூலம் புழக்கத்திலிருப்பது தெரியவருகிறது. இவைகள் மட்டுமின்றி தமிழர்களால் பொறிக்கப்பட்ட நிறைய #தமிழ் கல்வெட்டுகளும் தாய்லாந்தில் காணப்படுகின்றன.
- நன்று.
கடல் கடந்த தமிழும், வணிகமும் - தென் அராபிய ஓமனில் தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு...!
#தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு ஒன்று தென் அராபியாவில் உள்ள ஓமனில் #கோர்ரோரி (Khor Rori) பகுதியில் #சும்குரம் (#Sumhuram) என்ற ஊரில் 2006 ஆம் ஆண்டுக் கிடைத்தது. அதில் "ணந்தை கீரன்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொ.பி முதல் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது, வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துள்ளது. தமிழகத்தின் பண்டைக் கடல் வணிகம் எகிப்து - செங்கடல் பகுதிகளுக்கிடையே மட்டுமின்றி அராபியப் பகுதிகளிலும் நடந்து வந்ததை இது நிறுவுகிறது.
#ஓமன் பகுதியில் அகழாய்வு செய்த இத்தாலியக் குழு இந்தப் பானை ஓட்டைக் கண்டெடுத்தது. அகழாய்வில் ஈடுபட்ட அலெக்சியா பாவன் (Alexia Pavan) என்னும் இத்தாலியத் தொல்லியலாளர், "கேரளப் பட்டண இந்தியக் கடல் வணிகமும், தொல்லியல் தொழில்நுட்பமும்" என்ற தலைப்பில் கொச்சியில் நடந்த பன்னாட்டுப் பீங்கான் தொல்பொருள் ஆய்வரங்கில் அதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
தொல்லியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வரங்கில் பானைகள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் பி.ஜே. செரியனும், இலண்டன் பிரிட்டீஷ் அருங்காட்சியக ரோபர்ட்டா டோம்பரும் இணைந்து ஆய்வரங்கை நடத்தியுள்ளனர்.
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராசன், இந்தியத் தொல்லியல் துறை மண்டல இயக்குநர் டி. தயாளன், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத்தலைவர் வி. செல்வக்குமார் ஆகியோர் மேற்குறிப்பிட்ட பானை ஓட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பானை ஓடு #சும்குரம் நகரத்தின் மிக முக்கியமான குடியிருப்புப் பகுதியில் கிடைத்தது. இது சமையல் பாத்திரத்தின் கைப்பிடியாக இருக்கலாம் என்றும், இதன் காலம் பொ.பி முதல் நூற்றாண்டுக்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்றும் அவ்வாய்வரங்கில் கலந்துகொண்ட முனைவர் பாவன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விடத்தில் பேரளவில் தமிழகப் பொருள்களான மணிகள், காசுகள், பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் தென் அராபியக் கடற்கரைக்கும் இருந்த நெருங்கிய உறவை இவை வெளிப்படுத்துகின்றன என்று பாவன் கருதுகிறார்.
■ தனியார் பெயர்...
பேராசிரியர் கா. இராசன் "ணந்தை கீரன்" என்கிற ஆள் பெயர் இரண்டு கூறுகளைக் கொண்டது என்கிறார். #அந்தை மூத்தோரைக் குறிக்கும் மரியாதை ஒட்டு. இதைக் #குழந்தை_சம்பன், #அந்தை_அசுதன், #கொற்றந்தை எனத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணலாம்.
#கீரன் ஓர் ஆளின் பெயர். தமிழ்ச் சங்க காலப் புலவர்களில் 20 பேருக்கு மேல் #கீரன் என்ற பெயரில் உள்ளனர். எனவே உடைந்த பானை ஓட்டில் உள்ள பெயர் புகழ்பெற்ற ஒரு பெருவணிகரின் பெயராக இருக்க வேண்டும் என்று இராசன் கருதுகிறார்.
பொதுவாக இந்தியர்களின் வணிகத் தொடர்பு எகிப்தியப் பகுதிகளுடன் தான் இருந்தது. செங்கடல் துறைமுகங்களான "குவெசிர் அல் காதிம்" (Quasir al-Qadim), "பெரெனிகே" (Berenike) ஆகியவைதான் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
#காதிம் நகரில் நடந்த அகழாய்வில் #கணன் (கண்ணன்), #சாதன் (சாத்தன்), பானை ஓரி என்ற பெயர்களைத் தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடுகளும், #பெரெனிகே நகரில் #கொற்றபுமன் (கோற்பூமான்) என்று தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடும் கிடைத்துள்ள செய்தி 1990க்கு முன்னரே வெளிவந்தது.
#கோரோரி கண்டுபிடிப்பு தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து நடந்த வணிகம், அராபியா முதலிய நாடுகளுடனும் நிகழ்ந்துள்ளதை நிறுவுகிறது என்கிறார்.
மணப்பொருள்களான #மிளகு, #இலவங்கம் முதலியவற்றோடு #குதிரை வணிகமும் இந்தப் பகுதியில் அப்போது நடந்திருக்கலாம் என்று இராசன் கருதுகிறார்.
பைசா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த அகழாய்வுகள் அரேபியப் பகுதிகளுடன் தமிழகம் பண்டைய மணப்பொருள் வணிக உறவுகளோடு, பண்பாட்டு உறவுகளையும் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன என்கிறார்.
#தமிழி எழுத்துப் பற்றி நடந்துள்ள ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது #கோர்ரோரி எழுத்துப் பொறிப்பு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார் கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் முனைவர் செரியன்.
இந்தக் கல்வெட்டுச் சான்றானது வரலாற்றுக்கு முந்தைய கால (எழுத்து வரலாறு தொடங்கிய கால) ஊழியில் இடம்பிடித்துள்ளதை அவர் சுட்டுகிறார்.
எகிப்துக்கும், அரேபியாவுக்கும் நடுவில் உள்ள செங்கடலின் கரைகளில் உள்ள #கோர்மோஸ், #பெரெனிகே மற்றும் இலங்கையில் சில இடங்களில் மட்டுமே இந்தியாவுக்கு வெளியே தமிழில் பொறிப்புகள் கிடைத்துள்ளன.
■ இசுலாமுக்கு முந்தைய காலம்...
இந்த வகையில் இசுலாமுக்கு (பொ.பி 600க்கு) முந்தைய காலத் துறைமுக நகரமாக இருந்த #கோர்ரோரி சிறப்பிடம் பெறுகிறது. இது தென் அரேபியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள வணிகத் தொடர்பை நிறுகிறது என்கிறார் செரியன். 1/2
பண்டைத் தமிழர் பயன்படுத்திய கால அளவுகள்...!
கண் இமைத்தலுக்கும், கை நொடித்தலுக்கும் செல்லும் சிறு நேரமாம் மாத்திரையிலிருந்து பல தலைமுறைகள் வாழ்ந்து மடியும் பெருங்காலமான ஊழிவரையிலும் தமிழர்கள் அறுதியிட்டு எண்ணி வந்துள்ளனர்.
இத்தகைய கால அளவுகள் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் குறுகிய கால அளவைக் குறிக்கும் #கண்இமை, #கைநொடி, #மாத்திரை ஆகிய சொற்கள் காணப்படுகின்றன. #கணம் என்னும் சொல்லும் திருக்குறளில் காணப்படுகிறது.
அடுத்துப் பெரிய கால அளவு #நாழிகை அல்லது #கடிகை என்பதாகும். ஒரு நாட்காலத்தை அறுபது நாழிகைகளாகப் பிரித்திருந்தனர். நாழிகையை அறிந்து கொள்ளப் பயன்பட்டுவந்த ஒரு கருவியை #நாழிகை_வட்டில் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இது நீர் சொட்டுச் சொட்டாக மேலுள்ள பகுதியிலிருந்து கீழுள்ள பகுதிக்கு இறங்குவதற்கு காலத்தைக் எடுத்துக்கொள்ளும் என்னும் தத்துவத்தை அடியாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒருவகைப் பாத்திரம். இதனைக் #குறுநீர்க்_கன்னல் எனச் சங்க இலக்கியம் #முல்லைப்பாட்டு குறிப்பிடுவதைக் காண்கிறோம்.
அடுத்த, பெரிய அளவு #யாமம் என்பதாகும். இரவு நான்கு யாமங்கள் கொண்டது என்று சொல்லப்படுவதால் பகலும், நான்கு யாமங்கள் கொண்டது எனக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே, ஒரு #யாமம் என்பது 7 1/2 நாழிகைகள் கொண்ட ஒரு காலமாகும்.
மேலும் 10 நாழிகைகள் கொண்ட #வைகறை, #காலை, #நண்பகல், #எற்பாடு, #மாலை, #யாமம் என்று நாளைப் பிரிக்கும் வழக்கமும் இருந்துவந்தது என்பதைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம் (#குறுந்தொகை).
விண்மீன்களிடையே நாளுக்குநாள் கிழக்காக நகர்ந்து செல்லும் திங்களின் இயக்கத்தை அடியாகக்கொண்டு #திங்கள் அல்லது #மதி என்ற காலத்தைக் கணக்கிட்டுப் பின்பற்றி வந்தனர். திங்கள் என்னும் சொல் மாதத்தைக் குறிக்கும் வகையில் #புறநானூறு, #சிலப்பதிகாரம், #மணிமேகலை ஆகிய நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் எந்த விண்மீனோடு முழுத் திங்கள் இணைந்து திகழ்கிறதோ, அந்த விண்மீனின் பெயரால் அந்த மாதம் அழைக்கப்படுகிறது. #சித்திரை, #வைகாசி என்னும் பெயர்கள் அப்பொருளில் #சிலப்பதிகாரம், #மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும், திங்கட் காலத்தைப் பதினைந்து நாள்களைக் கொண்ட வளர்பிறைத் திங்கட் காலம் என்றும், தேய்பிறைத் திங்கட் காலம் என்றும் இரு பகுதிகளாகக் குறிப்பிட்டும் பின்பற்றி வந்துள்ளனர். இப்பகுதிகளைப் #பக்கங்கள் என அழைத்தனர் என்பதும் சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது.
திங்கட் காலத்தை ஏழு நாள்கள் கொண்ட வாரம் என்று நான்கு பகுதிகளாக்கி அதன் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கோளின் பெயரால் அழைக்கும் வழக்கத்தையும் சிலப்பதிகாரத்தில் முதன்முதலாகக் காண்கிறோம்.
அடுத்து, ஞாயிறு தென்திசை நோக்கிச் செல்வதாகத் தோன்றும் ஆறுமாத காலத்தைத் 'தெற்கு ஓட்டம்' (#அயனம்) என்றும், வடதிசை நோக்கிச் செல்வதாகத் தோன்றும் ஆறுமாத காலத்தை 'வடக்கு ஓட்டம்' (#அயனம்) என்றும், ஞாயிறு மீண்டும் விண்மீன்களிடை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வருவதற்கு எடுத்துக்கொள்ளும் 12 மாத காலத்தை (365 1/4 நாள்) ஓர் ஆண்டு என்றும் அழைத்துப் பின்பற்றியுள்ளனர்.
ஞாயிறு விண்மீன்களிடை நகர்வதாகத் தோன்றும் பாதை வட்டத்தைப் பன்னிரண்டு பகுதிகளாக்ப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் காணும் விண்மீன் தொகுதிகள் அவர்கள் உள்ளத்தில் எழுப்பிய கற்பனை உருவங்களின் பெயரை அவற்றிற்கு இட்டு #மேழம், #விடை, #ஆடவை, #கடகம், #மடங்கல், #கன்னி, #துலாம், #நளி, #சிலை, #சுறவம், #கும்பம், #மீனம் என அழைத்தனர்.
இந்த இராசி வட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இயங்கியபடி, அவ்வப்பொழுது சேர்ந்தும் பிரிந்தும் தோன்றும் கோள்களின் நிலைகளை மனத்திற்கொண்டு, அவற்றிற்கு வேறுவேறு பலன்களைக் கற்பித்துக் கூறும் சோதிடக்கலையும் ஒருபுறம் வளர்ந்து பின்னாளில் அறிஞர்களால் கைவிடப்பட்டது.
விண்பொருள்களின் நிலைகளைக்கொண்டு காலத்தைக் கணித்தறிவதுடன், எளிய மக்களுக்கும் அவ்வப்பொழுது கழிந்த காலஅளவை உணர்த்துவதற்கெனக் #குறுநீர்க்_கன்னல் போன்ற கருவிகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
காலத்தை ஊர்மக்கள் அனைவரும் அறியும்பொருட்டு ஒலியெழுப்பி உணர்த்தும் பணியாளர்களும் இருந்துவந்தனர்.
- நன்று.
சங்ககாலத்தில் மன்னன் பகலிலும், இரவிலும் எவ்வாறு மதுரைநகர வாழ்க்கையில் வாழ்ந்தான் என்பதை சங்க இலக்கியங்கள்வழி காணலாம்...!
இரவு வேளையில் மாறுவேடம் பூண்டுசென்று, அரசாட்சி பற்றிய மக்களின் கருத்தினை ஆராய்வதில் மன்னன் ஈடுபட்டிருந்தான் என்பதைப் #பொற்கைப்பாண்டியன் வரலாறு நமக்குக் காட்டுகிறது. (#சிலப்பதிகாரம்).
அரண்மனையில் #மும்முரசு முழங்கிற்று (#புறநானூறு). செல்வர் இல்லங்களிலும் முரசு முழங்கிற்று. (#அகநானூறு). அரண்மனையில் #அவைக்களம் இருந்தது. அதில் இருந்த அரியணையில் அரசன் வீற்றிருந்தான். அப்போது அவனுக்குக் கவரி வீசப்பட்டது (#நற்றிணை). அந்த அவையில் இருந்துகொண்டு காலையில் மன்னன் கொடை வழங்கினான். அங்குச் சான்றோர் பலரும் குழுமியிருந்தனர் (#புறநானூறு).
மக்கள் தமது குறைகளை அவையிலிருந்த மன்னனிடம் முறையிட்டனர். மன்னன் அந்த அவையில் திறமிக்க ஒருவனை அமர்த்திச் #செங்கோல் செலுத்துதலும் உண்டு. நட்பு மன்னர்களோடும், புலவர்களோடும், கலைஞர்களோடும் (#பரிசில் பெறவந்த #பாணர், #விறலியர், #கூத்தர் முதலானோர் தமது கலைநிகழ்ச்சி நடத்திக் காட்டினர் எனலாம்); அந்த அவையில் கூடியிருந்து முறையே அரசியல் தொடர்பாக உரையாடியும், மொழி வளர்ச்சிக்கு வேண்டியனவெல்லாம் செய்தும், கலை வளர்ச்சிக்கு உதவியும் தன் வாழ்க்கையை நடத்தி வந்தான் (#புறநானூறு).
தம்மைக்காட்டிலும் வலிமையுடையவர்கள் சொன்னபடியெல்லாம் கேட்கும் நிலையினராக இல்லாமலும், தம்மைக்காட்டிலும் வலிமை அற்றவர்களாயின் அவர்கள் முன்னிலையில் தம்மை வியந்து கூறாமலும், பொருளுக்காகப் பிறரிடம் இரக்காமலும், பொருளுக்காக இரந்தவர்களுக்கு இல்லையென்று மறுப்புச் சொல்லாமல் அளித்தும், பெரும்பாலான மன்னர்கள் வாழ்ந்து வந்தனர் (#புறநானூறு).
போரில் தமது உயிரைப்பற்றிப் பெரிதாக மதிக்காமை, பெரியோரைப் பேணி அவர்வழி நடத்தல் ஆகிய பண்புகள் நிறைந்தவராய் அவர்கள் வாழ்க்கை நடத்தி வந்தார்கள் (#பதிற்றுப்பத்து).
விடியற்காலம் ஆயிற்று என்பதை உணர்ந்த சூதர், மாகதர் முதலானோர் மன்னன் துயில் எழும்படி வாழ்த்துப் பாடினர். #பாணர், #விறலியர் முதலானோரும் தம் இசைக் கருவிகளை மென்மையாக இசைத்து அவனைத் துயிலெழும்படி செய்தனர்.
துயிலெழுந்த மன்னன் நீராடித் தன்னை ஒப்பனை செய்துகொண்டான்; மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு #முத்தாரம் அணிந்துகொண்டான். கழுத்தில் #பூமாலை, கையில் #பொன்தொடி, இடுப்பில் கஞ்சியிட்டுச் சலவைசெய்த உடை முதலான ஒப்பனைகளைச் செய்துகொண்டு முருகன்போல் மன்னன் தோன்றினான். (#மதுரைக்காஞ்சி).
பின்னர் அவைக்களம் சென்றான். அங்கு வீரர்கள் அவனுக்கு முதலில் வாழ்த்துக் கூறினர். பின் மன்னன் கொடை வழங்கினான். போரில் தான் வெற்றிபெற உதவிய வீரர், அந்த வீரரின் சுற்றத்தார், பாணர், விறலியர், புலவர் முதலானவர்களைத் தானே 'வருக' என வரவேற்றுப் பரிசுகள் வழங்கினான். (#மதுரைக்காஞ்சி).
பின் அவர்கள் எல்லாரோடும் கூடிச் சுவைமிக்க உணவை உண்டு மகிழ்ந்தான். அதன் பின்னர் அரசியல் தொடர்பான செயல்களைச் செய்தான். அரசியல் அலுவலர்களும், குறுநில மன்னர்களும் அவனது ஆணையை நிறைவேற்ற அவையில் காத்துக் கொண்டிருந்தனர். இவர்களும், அவனைப் புகழ்ந்து கூறினர். அழகிய அணிகலன்களை அணிந்திருந்த மகளிர் கொடுத்த தேறலை மன்னன் உண்டு மகிழ்ந்தான். (#மதுரைக்காஞ்சி).
மன்னன் குதிரை, தேர், யானை ஆகிய ஊர்திகளில் செல்லுதல் உண்டு (#புறநானூறு). #செங்குட்டுவன் மலைவளம் காணவும், அப்பகுதியில் விளையாடித் திளைக்கவும் விரும்பித் தன் மனைவி வேண்மாளுடன் வஞ்சிநகரத்தைவிட்டுச் சென்றபோது பூங்கா, ஆறு, ஆற்றுத்திட்டு முதலான இடங்களில் அரசனும் அரசியும் அவர்களுக்குத் துணையாக வந்த மகளிரும் விளையாடினார்கள் என்பதைச் #சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது.
#புகார் நகரத்தில் இருந்த பூங்காவில் சோழமன்னன் #மாவண்கிள்ளி, தன் மனைவி சீர்த்தி என்பாளுடன் விளையாடினான். (#மணிமேகலை). #மதுரை அரண்மனையில் செயற்கைப் பூங்கா அமைக்கப் பட்டிருந்தது (#நெடுநல்வாடை)
'ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்' தன் மனைவிமீது கொண்டிருந்த அன்பும், அவனது மனைவி, பூதப்பாண்டியன் இறந்தபோது தீயில் பாய்ந்து இறக்கும் அளவுக்கு அவளது கணவன்மீது கொண்டிருந்த அன்பும் அவர்களின் கற்புநெறியைக் காட்டுகின்றன.
சோழன் #நலங்கிள்ளி பரத்தையைத் தழுவுவதை இழிவாகக் கருதியதாக அவனே பாடிய புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
- நன்று.
சங்ககால அங்காடிகளும், வாணிகமும்...!
பெரிய ஊர்களுக்குள்ளாக நடந்த பண்டமாற்று வாணிகம் ஊர்களைத் தன்னிறைவு பெற்றவையாக வைத்திருந்தது. ஊர்களில் அதாவது, நகரங்களில்தாம் #அங்காடிகள் இருந்தன. சிற்றூர்களில் கூலவாணிகம்தான் நடைபெற்றது.
நகர அங்காடிகளைப்பற்றி ஓரளவு விளக்கமாகவே செய்தி கிடைக்கிறது: சிற்றூர் வாணிகத்தைப் பற்றிய செய்தி சிறிதாக இருந்தாலும், அதன் அடிப்படைத் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
#உமண்மகள் உப்பு விற்றதைப்பற்றிச் சங்கப்பாடல்களில் குறிப்பு உள்ளது. காட்டிலிருந்து மருதநில ஊர்களுக்குள் வரும் #வேட்டுவர்கள் தங்களோடு கொண்டுவந்த மான்கறியைக் கொடுத்துவிட்டு மாறாக #வெண்ணெல் பெற்று மீண்டனர் (#புறநானூறு).
இதே ஊர்களில், #ஆய்மகள் தயிர் கொண்டுவந்த பாத்திரம் நிறைய #வெண்ணெல் பெற்றுச் சென்றாள் (#புறநானூறு).
#பாண்மகள் (மீனவப்பெண்) 'கெடிறு மீனும், வரால் மீனும்' கொண்டுவந்த வட்டி (கூடை) நிறையப் #பயறு அல்லது #வெண்ணெல் நிரப்பி அனுப்பினாள் #வேளாளப்பெண் (#ஐங்குறுநூறு). #பாண்மகள் கொஞ்சம் மீன் கொடுத்துவிட்டு மாறாக மிகுந்த நெல்லைப் பெற்றாளாம் (#ஐங்குறுநூறு).
ஊர்களில் தெருத் தெருவாகச் சென்று #உழவப்பெண்கள் புது மலர்களை விற்றுவந்த காட்சியும் மிக வழக்கமான ஒன்றாகும் (#நற்றிணை).
#காவிரிப்பூம்பட்டினம், #மதுரை முதலிய நகரங்களில்தாம் ஆரவாரமான அங்காடித் தெருக்கள் இருந்தன. பல்வேறு தொழில் செய்வோர் நிறைந்தனவாகவும், பல்வேறு நாட்டுப் பொருள்களும் மலிந்தனவாகவும் இவையிருந்தன. #மதுரை நகரில் இருந்த அங்காடிகளைப்பற்றி #மதுரைக்காஞ்சி பின்வருமாறு நன்றாக சித்திரிக்கிறது. மதுரையில் #நாளங்காடி, #அல்லங்காடி என வகை அங்காடிகள் இருந்தன.
பகற்பொழுது மட்டு விற்பனை நடக்கும் அங்காடி #நாளங்காடி; மாலை தொடங்கி முன்னிரவு முடிய விற்பனை நடக்கும் அங்காடி #அல்லங்காடி ஆகும்.
அல்லங்காடியில் கடைகள் வைத்திருந்த மகளிர், முதல் யாமம் கழிந்த பிறகு (இரவு 9 மணிக்குப் பிறகு) கடைகளை அடைத்து உறங்கச் செல்வார்களாம்.
#மதுரை நாளங்காடியில் பெண்கள் பல பொருள்களை விற்றார்கள். இனிய #பண்ணியங்கள், #நறியபூக்கள், பலவகையான #பூமாலைகள், நறுமணச் சுண்ண வகைகள், #அடைக்காய் (பாக்கு), #வெற்றிலை, #நூறு (சுண்ணாம்பு) முதலிய பல்வேறு பொருள்களை விற்றார்கள்.
சிலபோது இவர்களுடைய அமைதியான வாழ்க்கைக்கு, போர்மேற் செல்லும் படைகளின் அணிவகுப்பு இடைஞ்சலாய் அமைந்தது. படைகள் அகன்றதும் மீண்டும் தங்கள் விற்பனையைத் தொடங்கினார்கள். சிலர் வீடுவீடாகப் பொருள்களைக் கொண்டுசென்றனர். போக்கும்வரத்தும் சமமாக இருந்ததால் நாளங்காடியில் பொருள்கள் குறையவுமில்லை, கூடவுமில்லை என்கிறார் புலவர்.
மலையிலிருந்து வந்த பொருள்கள், நிலத்திலிருந்து வந்தவை, நீரிலிருந்து வந்தவை, பல்வேறு திருமணிகள், முத்து, பொன், துணி என்று பலநாட்டுப் பொருள்களை அறநெறி பிழையாது முறையாக விற்கும் வாணிகர்கள் பலர் மதுரையில் இருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இதேபோலக் காவிரிப்பூம்பட்டினத்தின் அங்காடிகளிலும் விற்பனைப் பொருள்கள் மலிந்தவையாக இருந்தன. கடல்வழியாக வெளிநாட்டிலிருந்து வந்த #குதிரைகள், நிலத்தின் வழியாக வண்டிகளில் வந்த #மிளகு மூட்டைகள், இமயமலைப் பகுதியிலிருந்து வந்த மணிகளும் பொன்னும், மேற்கு மலைகளிலிருந்து வந்த சந்தனமும் அகிலும், தென்கடலிலிருந்து வந்த #முத்து, குணகடலிலிருந்து வந்த #பவளம், கங்கை காவிரிப்பகுதி விளைபொருள்கள், ஈழத்திலிருந்து வந்த உணவுப் பொருள்கள், கடாரத்திலிருந்து வந்த பொருள்கள் முதலியன செறிந்து மிக்க வளப்பத்தையுடைய தெருக்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தன.
இந்நகர வாணிகர்களும் அறவழியில் தொழில் செய்தவர்கள்; பிறர் பொருள்களைத் தம் பொருள்களைப்போல் உயர்வாக நினைத்தவர்கள்; கொடுக்கும் பொருள்களைக் குறைக்கவுமில்லை விலையைக் கூட்டவுமில்லை.
சங்ககால நகரங்களில் பல்வேறு கொடிகள் பறந்தன. பலவேறுபட்ட மக்களின் குழுக்கள் தங்கள் இலச்சினையாக இவற்றை வைத்திருந்தன. எல்லாக் கடைகளிலும் கொடிகள் பறந்தன என்று உறுதியாகக் கூற இயலாது.
ஆனால், மது விற்கும் கடைகளில் கொடிகளிருந்தன என்று #மதுரைக்காஞ்சி, #பட்டினப்பாலை ஆகிய இரண்டிலும் குறிக்கப்படுகிறது.
மற்றக் கடைகளிலும் இவை இருந்தன என உய்த்துணரலாம். இக்காலத்தில் பெயர்களைத் தாங்கிய பலகைகள் விளங்குவதைப்போல அக்காலத்தில் #கொடிகள் விளங்கின.
- நன்று.
எனது #தொல்லியல் ஆர்வம், தேடல் அனைத்தும் ஆறாம் வகுப்பு - பள்ளிப் பருவம் (படித்த கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, #தஞ்சாவூர்) முதலே தொடங்கிவிட்டது.
பள்ளி முடித்தும் உடனே ஓடிச் சென்றுவிடும் பார்க்கும், வியக்கும் இடம் பெருவுடையார் கோயிலும், தற்போதைய மராட்டியர் அரண்மனையும் (இது சோழர் அரண்மனை எனவும், நாயக்கர் சற்றே புரனமைப்பு செய்தனர், பின்பு மராட்டியர் வாழ்ந்ததாக சமீபத்தில் சான்றுகள் கூறுகிறது) தான்...
அன்றே #கல்வெட்டுகள் மீது ஆவல், படிக்கத் தொடங்கிவிட்டேன். எனக்கு அன்றே துணையாக குடவாயில் பாலசுப்ரமணியன் (இவர் ஆய்வுகளில் சில கருத்து மாறுபாடு உள்ளது) மற்றும் இரா. கலைக்கோவன் அவர்கள்.
அன்றுமுதல் இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அரசர்கள், அவர்தம் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய #சுரங்கப்பாதை.
அது எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் மிக அதிகம்.
2003-ஆம் ஆண்டுக்கு முன்னரே, நான் உள்ளேயே சென்றுப் பார்த்தேன். நான் எடுத்த #சுரங்கப்பாதை படங்கள் இருந்தால் பகிரப் பார்க்கிறேன்.
இவை தனி மனிதன் ஒருவன் செல்லும் அளவிற்கு இருக்காது. படிகள் இறங்கி உள்ளே உள்ள சென்றால், அங்கு குதிரைக் கொண்ட தேர் போன்ற வாகனம் எப்பொழுதும் தயராக இருக்கும் (பொன்னியின் செல்வன் படக்காட்சிப் போல). உள்ளே இயற்கையாகவே Oxygen (உயிர்வாயு / பிராணவாயு) வரும் அளவிற்கு துளைகள் இருக்கும். எந்நேரமும் தீபந்தங்கள் எரியும்.. உடன் அரசரின் / அரச குடும்பத்தின் காவல் ஆட்களும் இருப்பர்.
#சுரங்கப்பாதை என்பது அரண்மனை முதல் அவர்தம் முக்கிய கோயில் வரை (அ) கோட்டையின் புறப்பகுதி வரை நீண்டு இருக்கலாம். இருந்திருக்கின்றது.
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலின் அருகே, சோழ சமுத்திர ஏரியின் உள்ளே, இருக்கும் கைவிடப்பட்ட சிதைந்த (குரங்கு மண்டபம் என்று சொல்வார்கள்) மண்டபத்தின் கீழ் நான் உள்ளே சென்று பார்த்திருக்கிறேன்.
அன்பர்கள் எவருக்கும், தங்கள் பகுதியில் #சுரங்கப்பாதை பார்த்த, உள்ளே இறங்கிய அனுபவம் உண்டா? .
(அப்பழங்கால சுரங்கப்பாதைகளில் கொடுமையான நஞ்சுள்ள பூச்சிகளும், நஞ்சுள்ள வாயுக்களும் அதிகம் உண்டு. இனி உள்ளே செல்ல அறவே தவிர்க்கவும்...).