தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?
மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?
தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VijaySethuOffl
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை?
இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் வல்வில் ஓரி அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ்வணக்க உரையாற்றினேன்.
https://t.co/axYzLPVgZB
காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக, கர்நாடகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதா? போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இப்போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை. காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கானத் தார்மீக உரிமையை மறுத்து வருகிறது என்பதே மறுக்கவியலா பேருண்மை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை. முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, அதேபோல தற்போது மேகதாதுவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா? உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் பயனும், தீர்வும் கிடைக்கப்பெறாது திரும்பி வந்ததெல்லாம் முதல்வர் விஜய்க்குத் தெரியாதா? ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுபோல, முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்து, விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி, இச்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது? காவிரி நதிநீர் உரிமைப் பங்கீட்டுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பெற முயற்சி எடுக்காத தவெக அரசு, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி தண்ணீருக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் எவ்வித உறுதிப்பாடுமில்லை. காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும்கூட, அதனை ஏற்க மறுத்து, மேல்முறையீட்டுக்குச் செல்கிறது கர்நாடக அரசு. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? எதற்கு இந்த வறட்டுப்பிடிவாதம்? ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாது ஏமாற்றி, விவசாயிகளின் வயிற்றிலடித்த தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர்ச்சிக்கலையும் மிகுந்த மெத்தனப்போக்கோடும், அலட்சியப்போக்கோடும் கையாள்வது ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதற்கு நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும். இப்போது சூழல் சரியில்லாததால், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாமென்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் கூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.
ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.
கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள் என்றென்றும் தமிழ் மக்களால் போற்றப்படும்!
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமுடனும் மனமகிழ்வுடனும் வாழ்ந்து, இனிவரும் தலைமுறை பிள்ளைகளுக்கும் வழிகாட்டவும், தொடர்ந்து அரசியல் தெளிவூட்டவும் வேண்டுமென அன்புடன் கோருகிறேன்.
அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட, சமூகநீதி போராட்டக் களத்தின் நாயகர் மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பரந்தூரிலிருந்து புதிய வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற, தவெக அரசு இதுவரை ஒன்றிய அரசிடம் கோராதது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை ஒன்றிய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் வானூர்தி நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வானூர்தி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய வானூர்தி நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை ஒன்றிய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய் அவர்களுக்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?
ஆகவே, பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
காவிரி பாசன நீர் வராததால் தமிழ்நாட்டு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது!
@CMOTamilnadu@TVKVijayHQ
வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரசு அரசு கை விரித்துவிட்டது. காங்கிரசு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. கூட்டணிக் கட்சியான காங்கிரசு ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா?
அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப்பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும். அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப்பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும்பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.
ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Not Just Investigating Irregularities; The Fraudulent NEET Itself Must Be Completely Abolished!
As a continuation of the massive youth protest held in Delhi against the irregularities and bungling in the National Eligibility cum Entrance Test (NEET), while protests are spreading across Northern states, the TVK government’s action of suppressing Tamil Nadu's students and youth using the police when they attempt to take to the streets in protest is deeply condemnable. The state government's tendency to suppress the spontaneous protest of the younger generation against NEET, while claiming to oppose the exam itself, is a betrayal of democracy.
Is it fair for Chief Minister Vijay—who brands himself a. "Democrat" (Jananayagan) on screen—to unleash state violence through the police on students and youth on the ground, committing a brutal murder of democracy? Is he a democrat only in movies? While Northern youth stand on the streets of Delhi fighting for their right to education, keeping Tamil Nadu youth lined up outside cinema halls is an unacceptable cruelty. On one hand, claiming to condemn the BJP government's suppression of the youth protest in Delhi, while on the other, attempting to crush the youth protests against NEET in Tamil Nadu—is this not double standards by the TVK government?
Calling the BJP an ideological enemy while secretly serving their interests—is this not indirect service by the TVK government? What a farce!
While protests in Northern states condemn the irregularities in NEET, it is only in Tamil Nadu that protests emphasize that the NEET system itself is a fraud. When a system brought in under the pretext of producing quality doctors—claiming to be better than the previous method—suffers from so many irregularities, confusions, and bunglings, what is the purpose of this examination system? What guarantee is there that irregularities did not occur in this same NEET system in the past?
Therefore, not only investigating the irregularities in NEET, but completely abolishing this fraudulent NEET system altogether is the best opportunity to safeguard the healthcare infrastructure of this country. In a country lacking uniform learning opportunities and facilities, conducting a standardized entrance examination is inherently unequal. Thus, Naam Tamilar Katchi strongly opposes the anti-equality NEET system.
When political parties and movements lead protests against NEET, they are often viewed merely as symbolic demonstrations. However, when students, youth, and the general public take to the streets to protest, it explodes into a democratic revolution, forcing the ruling class to submit and fulfilling their demands. I fully support and welcome the peaceful struggle of the youth gathering working toward this goal.
May the peaceful struggle of the youth in Tamil Nadu triumph!
May the NEET be completely abolished!
My wishes and love to all my brothers and sisters fighting with a militant spirit against injustice!
- Senthamizhan Seeman
Chief Coordinator | NTK
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும்.
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும்.
திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!
வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும்
இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்!
நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்!
அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப் படைத்து, மாந்த உணர்வுகளை வலிமையாகக் கடத்தி, காலங்கடந்து நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!
அப்பா பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்று, நடிப்பு, திரைமொழி எல்லாவற்றுக்குமானப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் தன்னிகரற்ற கலை ஆளுமை!
தனது திரைப்படங்களின் மூலம் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தலைசிறந்த படைப்புகளின் மூலம் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் பெருமைக்குரிய திரைக்கலைஞர்!
தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் பெருமித அடையாளங்களை ஏற்று, தாய் நிலத்தின் மீது பற்றோடும், தமிழ்த்தேசிய இன உணர்வோடும் திகழும் மண்ணின் மகன்!
தமிழ்த்திரையுலகின் பெருமிதத்திற்குரிய கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது ஆருயிர் இளவல் பாலா அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை.
ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும்.
ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களின் திருவுடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அப்பாவின் பண்ணை வீட்டில் இன்று 09-07-2026 நடைபெற்ற 30ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி