இத்தனைக்கு இடையிலும்
ஏதோ ஒரு தருணத்தில்
நம்மை மறந்து
சிரித்து தான் விடுகிறோம்.
அடுத்த நொடி
சட்டென
ஒரு மின்னல் வெட்டும்
எப்படி இது நம்மால்
முடிந்தது என.
வாழ்வெனப்படுவது
இப்படி தான்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
பலருக்கு.
எத்தனை தூரம்
பயணித்திருக்கிறீர்கள்
என்பதே
இங்கு கணக்கு,
எவ்வளவு காலம்
என்பதல்ல.
நெடுங் காலம் பயணித்தும்
தூரம் அதிகம்
கடக்க முடியாதவர்களின் இளைப்பை
அவர்களை தவிர
வேறெவரும்
கணக்கிலெடுத்துக் கொள்ள
மாட்டார்கள்.
எனக்கே தெரியாமல் என்னை
புகைப்படம் எடுத்தாற் போல்
இருக்கும்
சில கவிதைகளை
வாசிக்கும் பொழுது
அவருக்கே தெரியாமல் அவர்
என் வாழ்வை வாழ்வதாய்
எண்ணிக்கொள்வேன்,
அதுமுதல்
அவருக்கே தெரியாமல்
அவருக்காகவும்
சிந்திக்கும் என் மனம்
இப்போது அவர்
என்னைப் போல்
என்ன செய்து கொண்டிருப்பார்
என்று.
தடங்கள் மறைந்து
பாதை அழிந்து
முட்செடிகள் முளைத்தன
கைவிடப்பட்ட குலசாமியின்
காவலும் முடிந்தது
எங்கோ சிதறிய குடும்பத்தில்
யாரோ ஒருவர்
கடைசியாய்
கண் மூடுகையில்
பிரம்மையில் கண்டிருக்கலாம்
குலசாமியின்
கடைசி பூசையை.
என் உள்மனம்
உன் குரல்
உரையாடி மகிழ்கிறது.
அங்ஙனம்,
உன் மனம்
என் குரல் கேட்கிறதா..?
எங்ஙனம்
நான் உரைத்திட
மெய்யற்ற குரல்கள்
பேசிடும் சொற்கள் யாவும்
உண்மைகள் தானென்று.
பொழிந்திட முடியாத நேசமென்பது
கூட்டிலிருந்து தவறி விழுந்த
ஒரு சிறு பறவை..
அதன் திறந்த வாயும்
ஓயாத கூக்குரலும்
என் செய்வதென அறியாததை
உள்ளங்கையில் ஏந்தி நிற்கும்
தவிப்பும்..
அது ஒரு
சுமக்கவே முடியாத
சிறு பாரம்.
என் பெயர் இதுவரை
எத்தனை முறை மற்றவர்களால்
அழைக்கப்பட்டு இருக்குமோ
அதை காட்டிலும்
ஒருமுறையேனும் கூடுதலாய்
உன் குரலால்
அழைக்கப்பட வேண்டுமென
ஆவல் கொள்கிறேன்.
என்னைப் போன்ற மனிதர்களை
சந்திக்கும் பொழுதெல்லாம்
அவர்கள் என்னிடம்
என்னைப் போல்
பழகுவதில்லை.
பரவாயில்லை
என்னால் அவர்களை
புரிந்துக் கொள்ள முடிகிறது.
என்னை எனக்குத் தெரியாதா என்ன?