தமிழக அரசே!
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களை விடுதலை செய்!
விவசாயிகளின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாகவும், சனநாயக வழியிலும் தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களை, வீட்டுக்காவலில் வைத்து அவரது குரலை ஒடுக்க முயற்சிப்பது சனநாயகத்திற்கு எதிரான செயல். கருத்தை எதிர்கொள்ள முடியாத ஆட்சிகள்தான் அடக்குமுறையை ஆயுதமாக்கும்.
கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கோரி போராட்டம் அறிவித்த விவசாய சங்கத் தலைவரை, வீட்டுக்காவலில் அடைப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறையாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், அய்யாக்கண்ணு அவர்கள் மீதான வீட்டுக்காவல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக வீட்டுக்காவல் நடவடிக்கையை திரும்பப் பெற்று, விவசாயிகளின் சனநாயக உரிமைகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு உறுதியாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#விவசாயிகளுடன்_தமிழகம்
#அய்யாக்கண்ணுவுக்கு_நீதி
#StandWithFarmers
#JusticeForAyyakannu
𝐍𝐂𝐎 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲, 𝐃𝐡𝐚𝐧𝐚
Combat Leadership Course conducted at NCO Academy, Dhana culminated on 25 Jul 2026. Non Commissioned Officers of #IndianArmy and Indian Air force underwent Training through a specialised curriculum focussed on Jointness and Integration in dynamically transformed era of warfare.
Brig Lalit Sharma, Shaurya Chakra, Sena Medal, Commandant, NCO Academy shared profound insights on the Decade of Transformation & essence of junior leadership in combat. Havildar Kalu Ram Gurjar of Rajput Regiment was awarded Army Commander ARTRAC Medal for being adjudged overall Best Student.
Facebook- https://t.co/HSt3EExRW3
Instagram- https://t.co/P5jF61ghbo
#JuniorLeaders
#IndianArmy
#ARTRAC
@adgpi
திரையரங்குகளில் பகற்கொள்ளையா?
கள்ளச் சந்தைகளை ஊக்குவிப்பது யார்? ஏன்?
நாளை வெளியாகவுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அரசால் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை மீறி விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச் சந்தை மூலம் மக்களிடம் அதிக விலை வசூலிக்கப்படுவதாகவும் வெளியாகும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.
ஒரு திரைப்படத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை, சிலர் இலாப வேட்டைக்கான வாய்ப்பாக மாற்ற முயற்சித்தால், அது வெறும் நுகர்வோர் உரிமை மீறல் மட்டுமல்ல. சட்டத்தின் மீதான வெளிப்படையான அவமதிப்பாகும்.
தாங்கள் விரும்பும் நடிகர்களின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் ஆர்வத்துடன் பார்க்க வரும் இரசிகர்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி, அவர்களின் சட்டைப் பையில் இருக்கும் பணத்தைப் பகல் கொள்ளையடிப்பது போன்ற இந்தக் கட்டணக் கொள்ளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரசிகர்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் இலாபத்திற்கானக் கருவியாக மாற்றும் இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ளத் திரையரங்குகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா?, டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், எந்த நடிகரின் திரைப்படமாக இருந்தாலும், எந்த நிறுவனத்தின் திரையரங்காக இருந்தாலும், யார் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி உரிமங்கள் இரத்து செய்யும் அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#டிக்கெட்கொள்ளையைத்தடுப்போம்
#மக்கள்உரிமையைக்காப்போம்
#StopTicketBlackMarket
#FairTicketPricing
ஊடகவியலாளரை மிரட்டுவது ஏன்?
சனநாயகத்தின் மீதானத் தாக்குதலை நடத்துவது யார் ?
புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அளித்த புகார் தொடர்பான விசாரணைக்காக, சிறப்பு புலனாய்வுக் குழுவால் அழைக்கப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் கடும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான திரு விஜயனைப் பல மணி நேரம் கேள்வி கேட்டதோடு நிற்காமல், நள்ளிரவில் மீண்டும் வருமாறு அழைத்து, உரிய நடைமுறைகள் குறித்த வெளிப்படையான விளக்கமின்றி அவரது கைப்பேசியைக் கைப்பற்றியிருப்பதாக வெளியாகியுள்ளத் தகவல்கள் மிகுந்த கவலைக்குரியவை.
அதனைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை என்ற காரணத்தால் அழைத்து, நீண்ட நேரம் காவல் நிலையத்திலேயே வைத்திருப்பதாகக் கூறப்படுவதும் சனநாயக நடைமுறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
குற்றப்புலனாய்வு மேற்கொள்வதற்கான அதிகாரம் காவல்துறைக்கு இருப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் சட்ட வரம்புகளுக்குள், மனித உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளையும் மதித்தே பயன்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பே சட்ட நடைமுறைகளைப் புறக்கணிக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகக் கூடாது.
ஒரு பத்திரிகையாளரின் தகவல் தொடர்பு சாதனத்தை கைப்பற்றுவது என்பது அவரது தனிப்பட்ட உரிமையோடு மட்டுமல்ல. ஊடகத்தின் சுதந்திரமான செயல்பாடு, செய்தி மூலங்களின் பாதுகாப்பு மற்றும் கருத்துரிமை ஆகியவற்றுடனும் நேரடியாக தொடர்புடையது.
எனவே, இத்தகைய நடவடிக்கைகளை மிகுந்த பொறுப்புணர்வுடனும், சட்டப்பூர்வமானக் காரணங்களுடனும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்கள் மீது நடைபெற்று வரும் விசாரணை முழுமையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ள கைப்பேசி குறித்து சட்டப்படித் தேவையான விளக்கத்தை உடனடியாக வழங்கி, சட்டத்திற்குப் புறம்பான நடைமுறைகள் ஏதேனும் இருந்தால் அதைச் சரிசெய்ய வேண்டும்.
மேலும், விசாரணை என்றப் பெயரில் ஊடகப் பணியாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் செயல்கள் இனிமேல் நடைபெறாதவாறு முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் உரிய அறிவுறுத்தல்களைக் காவல்துறைக்கு வழங்க வேண்டும்.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான உரிமை மட்டுமல்ல. உண்மையை அறியும் மக்களின் சனநாயக உரிமையும் ஆகும். அந்த உரிமையைப் பாதிக்கும் எந்தச் செயலையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்பதை, இவ்வரிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
@gennowmedia
#பத்திரிகை_சுதந்திரம்
#கருத்துரிமை
#StandWithJournalists
#FreedomOfPress
#CMOTamilNadu
#TamilNaduPolice
#HumanRights
#Democracy
#JusticeForJournalists
தமிழ்நாடு அரசே!
தண்ணீர், தமிழ்நாட்டு மக்களின் உரிமையா?
பன்னாட்டு நிறுவனங்களின் வணிகமா?
அனைத்து உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கும், இயற்கையின் கொடையாக விளங்கும் நீர்வளத்தைத் தன்னிச்சையாக வர்த்தகப் பொருளாக மாற்றுவது சகித்துக்கொள்ள முடியாத அத்துமீறலாகும்.
பன்னாட்டு ஏகபோகச் சுரண்டலில் ஈடுபட்டு, உலக அரங்கில் பல்வேறு இறையாண்மை மிக்க நாடுகளால் துரத்தியடிக்கப்பட்ட 'சூயஸ்' (Suez) நிறுவனத்திற்குத் தமிழக மண்ணில் சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
குடிநீர் விநியோகக் கட்டமைப்பைப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் வசம் ஒப்படைப்பது, தமிழ் குடிகளின் வாழ்வுரிமை மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும்.
இந்நிறுவனத்தின் ஊடுருவல் என்பது ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நசுக்குவதாகவே அமையும். இனிவரும் காலங்களில் நம் மக்கள் தங்களின் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் ஒவ்வொரு துளி நீருக்கும் பெருந்தொகையைக் விலையாகச் செலுத்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
நீர் என்பது சந்தையில் விற்கப்படும் நுகர்வுப் பண்டமல்ல. அது நமது மக்களின் பிரிக்க முடியாத உயிராதாரம். அதைத் தாராளமயமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த அநீதியான சூயஸ் ஒப்பந்தத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி.
#CMOTamilNadu
#தமிழ்நாடு_அரசு
#நகராட்சி_நிர்வாகத்துறை
#CMWSSB
#குடிநீர்_மக்களின்_உரிமை
#குடிநீரை_தனியார்மயமாக்காதே
#பன்னாட்டு_நிறுவனங்களுக்கு_இல்லை
#நீரை_வணிகமாக்காதே
#தமிழக_நீரை_பாதுகாப்போம்
#மக்களின்_குடிநீர்_மக்களுக்கே
#PublicWaterNotPrivateProfit
#WaterIsARight
#SaveTamilNaduWater
#தமிழக_வாழ்வுரிமை_கட்சி
தமிழ் உயிரோடு இருக்கிறது...! ஆனால் தமிழ்ப் பெயர்கள் உயிரோடு இருக்கிறதா?
ஜ... ஷ... ஸ... ஹ... க்ஷ...
இந்த எழுத்துகளின் ஒலிககளைக் கவனியுங்கள்.
தமிழின் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத இந்த ஒலிகள், இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்களில் இயல்பாகிவிட்டன.
இது வெறும் மொழிக் கலப்பா?
அல்லது பல நூற்றாண்டுகளாகத் தமிழர் வாழ்வியலுக்குள் படிப்படியாகப் பதிந்த ஆரியப் பண்பாட்டின் தாக்குதலா?
உலகின் தொன்மையான மொழிகளில், முதன்மையான மொழியாகப் போற்றப்படும் தமிழ், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தனது தனித்துவத்தை ஆயிரமாயிரமாண்டுகளாகக் காத்து நிற்கிறது. தமிழ் மொழியைத் தாங்கி நிற்கும் மக்களின் அடையாளங்களிலும் இருக்கிறது.
இன்று தமிழர் இல்லங்களில் ஒலிக்கும் பெயர்களைப் பார்த்தால், தமிழின் இயல்பான ஒலிகளைவிட பிறமொழி எழுத்துக்களின் ஒலிகளே அதிகமாகக் கேட்கின்றன. இது ஒரு நாளில் நிகழ்ந்த மாற்றமல்ல. பல தலைமுறைகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மாற்றங்களின் விளைவாகவே பார்க்கிறோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. ஆனால், தமிழின் தனித்துவ அடையாளம் மெல்ல மெல்ல மங்கும் எந்தப் பண்பாட்டு மேலாதிக்கப் போக்காக இருந்தாலும், அதை ஆய்வு செய்து, தமிழர் சமூகத்துடன் திறந்த விவாதங்களை நடத்த வேண்டியது காலத்தின் தேவை என்று கருதுகிறோம்.
தமிழில் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத ஒலிகள், இன்று தமிழர் குழந்தைகளின் பெயர்களில் ஏன் தவிர்க்க முடியாததாக மாறின?
தமிழில் பெயரிடும் மரபில் இந்த மாற்றம் எப்போது, எப்படி, எந்தச் சமூகப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்டது?
தமிழரின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்ப் பெயர்கள் ஏன் படிப்படியாகக் குறைந்தன?
இந்த மாற்றம் இயல்பாக நடந்த மாற்றமா? அல்லது ஆழமான திட்டமிடலோடு தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா?
இந்தக் கேள்விகளுக்கு, மொழியியல் மற்றும் சமூக ஆய்வுகளின் அடிப்படையில் பதில் தேட வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மொழியியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து, தமிழில் பெயரிடும் மரபில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், தமிழின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழ்நாடுஅரசு
#முதலமைச்சர்கவனத்திற்கு
#தமிழ்வளர்ச்சித்துறை
#தமிழ்அறிஞர்கள்கவனத்திற்கு
#மொழியியலாளர்கள்கவனத்திற்கு
#வரலாற்றுஆய்வாளர்கள்கவனத்திற்கு
#கல்வியாளர்கள்கவனத்திற்கு
#GenZதமிழர்
#தமிழ்இளைஞர்கள்
#தமிழ்தேசியம்
#தமிழர்பெயரிடும்மரபு
#தமிழ்பெயர்களைக்காப்போம்
#தமிழின்அடையாளம்
#ஆய்வுவேண்டும்
#தமிழகவாழ்வுரிமைக்கட்சி
வேலை தேடுபவர்களை உருவாக்காதீர்கள்..!
வேலை கொடுப்பவர்களை உருவாக்குங்கள்..!
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கானப் பொறியாளர்கள், டிப்ளமோ பட்டதாரிகள், ஐடிஐ மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன் பெற்ற இளைஞர்கள் கல்வியை முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால், அவர்களில் மிகக் குறைவானவர்களே தொழில்முனைவோராக மாறுகிறார்கள்.
ஏன்?
திறமை இல்லாததால் அல்ல. உழைக்கும் மனப்பான்மை இல்லாததால் அல்ல. அரசின் தொழில் தொடக்கக் கட்டமைப்பே அவர்களுக்கு எதிராக இருப்பதால்தான்.
ஒரு உற்பத்தித் தொழிலைத் தொடங்க விரும்பும் இளைஞன் முதலில் நிலம் வாங்க வேண்டும். தொழிற்சாலை கட்ட வேண்டும். கோடிக்கணக்கான மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும். பல்வேறு துறைகளின் அனுமதிகளுக்காக மாதக்கணக்கில் அலைய வேண்டும். இந்த நடைமுறைகளே பலரின் தொழில் கனவை, ஆரம்பத்திலேயே முடிவுக்குக் கொண்டு செல்கின்றன.
ஒரு நாடு உண்மையாக வளர வேண்டுமெனில், பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான சிறு குறு உற்பத்தியாளர்களும் உருவாக வேண்டும். ஆனால் இன்று அரசின் கொள்கைகள் பெருநிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு முட்கள் நிறைந்தப் பாதையையே உருவாக்கி வைத்திருக்கின்றன.
இதற்குச் சரியான மாற்று வழியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கமும் முன்வைக்கின்றன.
தமிழகம் முழுவதும் Co Factory Manufacturing Parks உருவாக்கப்பட வேண்டும்.
500 முதல் 1,000 சதுர அடி பரப்பளவில், உடனடியாக உற்பத்தியைத் தொடங்கக்கூடிய தொழிற்சாலை அலகுகள் அரசால் அமைக்கப்பட வேண்டும்.
அந்த அலகுகளில்,
மும்முனை மின்சார இணைப்பு,
மாசுக்கட்டுப்பாடு மற்றும் தீயணைப்பு அனுமதிகள்,
பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய CNC, Injection Moulding உள்ளிட்ட உயர்தர இயந்திரங்கள், தரச் சோதனை ஆய்வகங்கள், கிடங்குகள், பொதுத் தளவாட வசதிகள், மாதாந்திர வாடகை முறை, 7 நாட்களுக்குள் ஆன்லைன் ஒதுக்கீடு ஆகிய, அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும்.
இன்று மென்பொருள் துறையில் கூட்டுப் பணி இடம் (Co working Space) என்ற கருத்து, ஆயிரக்கணக்கான நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அதேபோல், உற்பத்தித் துறையில், கூட்டுத் தொழிற்சாலை உற்பத்தி பூங்காக்கள் என்ற புதிய தொழில் மாதிரியை அரசு உருவாக்கினால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவை, தொழிலாக மாற்ற முடியும்.
ஒரு பொறியாளர் தனது வேலையை விட்டுவிடாமல், ஒரு சிறியத் தொழிற்சாலை அலகை வாடகைக்கு எடுத்து, தனது புதிய தயாரிப்பை உருவாக்க முடியும். ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குறைந்த முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு புதுமையான யோசனை, உலகச் சந்தையை அடையும் நிறுவனமாக வளர முடியும். இப்படித்தான் சீனா வளர்ந்தது. இப்படித்தான் தென்கொரியா வளர்ந்தது. இப்படித்தான் உலகின் பல நாடுகள் வளர்ந்தன.
இந்தியாவும், தமிழகமும் உண்மையாக உற்பத்தி மையமாக மாற வேண்டுமெனில், பெரிய நிறுவனங்களை மட்டும் உருவாக்கும் பொருளாதாரக் கொள்கையிலிருந்து, ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில்முனைவோரை உருவாக்கும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற வேண்டும்.
Make in India என்பது ஒரு முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய தொழிற்சாலைகள் உருவாகும் இயக்கமாக மாற வேண்டும்.
எனவே, முதல் தலைமுறைத் தொழில்முனைவோருக்காக கூட்டுத் தொழிற்சாலை உற்பத்தி பூங்காக்கள் (Co Factory Manufacturing Parks) திட்டத்தைத் தமிழக அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், அதன் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கமும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றன.
பெரிய நிறுவனங்கள் வளர்வதால் கிடைக்கப்பெறும் பொருளாதாரத்தை விட, சிறு குறு உற்பத்தியாளர்கள் வளர்வதன் மூலமாக கிடைக்கப்பெறும் வளர்ச்சி தான், நாட்டின் உண்மையான வளர்ச்சி ஆகும்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
Entrepreneurship | Make in India | Job Creators | jobsearch | MSME | Manufacturing | வேலை தேடுபவர்கள் | வேலை கொடுப்பவர்கள் |
#JobCreators #Entrepreneurship #MakeInIndia #MSME #Manufacturing #jobsearch #வேலைவாய்ப்பு
ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடவேண்டும்.
ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடவேண்டும்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு பதிலாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பேக்கேஜ்' எவ்வளவு வழங்கப்படும் என்று அரசாணையில் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த 'பேக்கேஜ்' காப்பீட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கேற்ப 'பேக்கேஜ்' முறையாகவே உள்ளது.
முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் சிகிச்சைக்காகும் செலவில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கி வந்தது. இப்போது உள்ள 'பேக்கேஜ்' திட்டத்தில் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தான் கிடைக்கும் என்று தெரியவருகிறது.
காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று மெடிக்கல் மேனேஜ்மென்ட், மற்றொன்று அறுவை சிகிச்சை. மெடிக்கல் மேனேஜ்மென்ட்டில் இதய அடைப்பு, ரத்த அடைப்பு, தீவிர சுவாசப் பிரச்சினை, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை உண்டு.
எந்த ஒரு மெடிக்கல் மேனேஜ்மென்ட்டாக இருந்தாலும் இந்த 'பேக்கேஜ்' திட்டத்தில் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். 3 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஏசி அறை கிடையாது. பொது வார்டில்தான் தங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமாக இருந்த உச்ச வரம்பு ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு, லென்ஸ் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஞ்சியோ பிளாஸ்டி, இரண்டு ஸ்டெண்ட் வைத்தாலும் ரூ.85 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கப்படும் 'பேக்கேஜ்' தொகை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 'பேக்கேஜ்'க்கு மருத்துவத் துறை ஒப்புதல் அளித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் ஓய்வூதியர்களுக்கான திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடவேண்டும். என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
ஓய்வூதியர் காப்பீடு | புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் | | தி. வேல்முருகன் | தமிழக அரசு ஊழியர்கள் | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் | Government Employees Insurance | Retired Government Employees |
#InsuranceScheme
#MedicalInsurance
#Pensioners
#tvelmurugan
#ஓய்வூதியர்கள்
#மருத்துவக்காப்பீடு
#தமிழகவாழ்வுரிமைக்கட்சி
#வேல்முருகன்
கோயமுத்தூர் மாவட்டத்தில் யூரியாவை திரவ நிலைக்கு மாற்றும் தனியார் தொழிற்சாலைக்கு ஒன்றிய அரசின் 2881 மானிய உர மூட்டைகள் கடத்தல்; கண் துடைப்புக்காக இரண்டு லாரி டிரைவர்கள் மட்டும் கைது; உயர் அலுவலர் தலைமையில் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் யூரியாவை திரவ நிலைக்கு மாற்றும் தொழிற்சாலைக்கு ஒன்றிய அரசின் 2881 பாரத் யூரியா மூட்டைகளை கடத்தியதாக இரு லாரி டிரைவர்கள் மட்டும் கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உயர் அலுவலர் தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும்.
கோயமுத்தூர் அடுத்த மதுக்கரை அருகே தல்மனம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைக்கு இரவு நேரங்களில் அதிக அளவில் லாரிகள் வந்து சென்றதை அறிந்த அப்பகுதி விவசாயிகள், கடந்த 4-ம் தேதி இரு லாரிகளை வழிமறித்து பார்த்தபோது, ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 500 பாரத் யூரியா மூட்டைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வேளாண்மைத் துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து வேளாண்மைத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உர மூட்டைகளைப் பறிமுதல் செய்த பின்னர், தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்தபோது, யூரியாவை உருக்கி திரவ நிலைக்கு மாற்றும் தொழிற்சாலை செயல்படுவது தெரியவந்தது. மேலும் அங்கு சுமார் 100 டன் அளவுக்கு மானிய உர மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
வளைகுடா போர் காரணமாக தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானிய உரத்தை கடத்தியுள்ளனர். வேளாண் துறையினரின் உதவியின்றி இவ்வளவு பெரிய அளவில் உர மூட்டைகள் கடத்தப்பட வாய்ப்பே இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். எனவே, தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உரம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக லாரி டிரைவர்கள் தெரிவித்தனர். “இதனால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை” என்று வேளாண்மைத் துறையினர் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் இதை ஏற்க மறுத்து, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
இதையடுத்து கோயமுத்தூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கோயமுத்தூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார் அளிக்க வேளாண்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தல்மனம்பாறை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவரின் நிலத்தில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவர் சட்டவிரோதமாக இந்தத் தொழிற்சாலையை நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கு யூரியாவை உருக்கி, பிளைவுட் ஒட்ட பயன்படும் ரெசின் என்ற பசை தயாரித்து கேரளாவுக்கு அனுப்பியதும் கண்டறியப்பட்டது.
மேலும் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.38.42 லட்சம் மதிப்புள்ள 2,637 யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழிற்சாலை உரிமையாளர் ஆசிப் அலி, நில உரிமையாளர் பாலகிருஷ்ணன், லாரி உரிமையாளர் மரிபாலன், டிரைவர்கள் செல்வம், பிரம்மயா, உர மூட்டைகளை அனுப்பிய ஈரோடு லட்சுமண சண்முகம், வெள்ளியங்கிரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தல்மனம்பாறை அருகே ரொட்டிக்கவுண்டனூரில் இன்னொரு தொழிற்சாலை செயல்படுவதை விவசாயிகள் கண்டுபிடித்து வேளாண்மைத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சோதனை செய்தபோது, திரவ நிலை யூரியாவை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியும், தொழிற்சாலைக்குள் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தொழிற்சாலையில் இருந்து ரூ.3.55 லட்சம் மதிப்புள்ள 244 யூரியா மூட்டைகள், டேங்கர் லாரி மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் முகமது ஜாபர், நில உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இரு சட்டவிரோத தொழிற்சாலைகள் தொடர்பாக உரக் கட்டுப்பாடு சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லாரி டிரைவர்கள் செல்வம் மற்றும் பிரம்மயா ஆகிய இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
மக்களாட்சி தத்துவத்தைப் புதைக்கும் முயற்சியில் ஆளுநர்.
ஒன்றிய அரசு மாநிலத்திலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் ஆளுநரின் மதுரையில் நடத்திய ஆய்வுக் கூட்டமும், நேற்றைய ஆளுநரின் உரையும் அமைந்துள்ளது.
அண்மையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசும்போது, “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” எனக் கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில் வைகை ஆற்றைப் பற்றியும் விசாரித்தறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, “மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்கள் ஆளுநர் மாளிகையை அணுகலாம். என்னிடம் அளிக்கும் கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண அறிவுறுத்துவேன். ஒன்றிணைந்து மக்களுக்காகச் செயல்படுவோம். வாக்களித்த மக்களால் பிரச்சினைகளை உணர முடியும். தீர்வு சொல்லவும் முடியும். என்னிடம் தீர்வுகளைச் சொன்னால் நான் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட முதல்வரிடம் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
“ஆளுநர் என்பதை மறந்தும், தன் அதிகாரம் எதுவரை என்பதை உணராமலும், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் போல ஆய்வுக் கூட்டம் நடத்துவதும், ‘என்னிடம் கோரிக்கைகளைச் சொல்லுங்கள், நான் தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண அறிவுறுத்துவேன்’ என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் சுயசார்புடன் தமிழ்நாடு அரசு ஆட்சி புரிய வேண்டும். கடந்த காலங்களில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஒன்றிய அரசுடன் இணக்கமாகச் செல்வது வேறு, இணங்கிச் செல்வது வேறு. ஆளுநரின் அத்துமீறல்களைத் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இணங்கிச் செல்வதைப் போன்று தோற்றமளிக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கடந்த கால வரலாறுகளைத் தமிழக முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு மாநிலத்திலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியே ஆளுநரின் இந்தச் செயல்பாடுகள்” என குற்றம் சாட்டுகிறேன்.
தமிழகச் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையிலான நிரந்தர முன்விடுதலை வழங்க வேண்டும்.
தமிழகச் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையிலான நிரந்தர முன்விடுதலை வழங்க வேண்டும்.
“தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்துவிட்ட தமிழகச் சிறைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், தற்போது முதுமை மற்றும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவின் பேரில் பரோல் விடுப்பில் இருந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இவர்கள், பரோல் காலம் முடிந்ததால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசின் தொடர்ச்சியான தாமதம் மற்றும் நிர்வாக அலட்சியம் இவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
மே 29-ம் தேதி பரோல் விடுதலைக்கான கோப்புகளில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழக முதலமைச்சர் இது குறித்து உடனடியாகப் பரிசீலனை செய்து, விடுதலைக்கான நடைமுறைகள் முடியும் வரை மீண்டும் நீண்டகால பரோல் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தின் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர முன்விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.
முருகன் யாருக்குச் சொந்தம்?
தமிழர் மரபையும், பண்பாட்டு அடையாளத்தையும் சிதைக்கும், எந்த முயற்சியையும் ஏற்க முடியாது!
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள "Born in the North. Forged in the Heartland. Worshipped in the South." என்ற வாசகம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் பண்பாட்டு மரபிலும், சங்க இலக்கியங்களிலும், முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும், தமிழரின் வாழ்வியல், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு ஒன்றிணைந்த தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், அது தமிழர் மரபையும் வரலாற்றுப் பார்வையையும் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கலைப் படைப்புகளுக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு. ஆனால், அந்த சுதந்திரம் ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, மத உணர்வுகள் மற்றும் அடையாளங்களை மாற்றியமைக்கும் உரிமையாக மாறக்கூடாது. குறிப்பாக, பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ள பொருளில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விளம்பர வாசகங்களைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதா? இல்லையா? என்பதை திரைப்படக் குழுவினர் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், தமிழர் மரபுக்கு முரணாகப் புரிந்துகொள்ளப்படும் இந்த வாசகத்தைத் திரும்பப் பெற்று, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாற்று மரபும் யாராலும் மாற்றி எழுதப்பட முடியாது. அவற்றை மதிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதைத் திரைப்படக் குழுவினருக்கு வலியுறுத்துகிறோம்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
தமிழ்நாடு அரசே!
அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தைக் கைவிடு!
ஜவ்வாது மலையை விற்காதே!
வேலூர் மாவட்டம் அரசம்பட்டு காப்புக்காடு பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டம், ஒரு சாதாரண மின் உற்பத்தித் திட்டம் அல்ல. இது தமிழ்நாட்டின் முக்கியமான காடுகளில் ஒன்றான ஜவ்வாது மலைச் சுற்றுச்சூழல் அமைப்பையும், நீராதாரங்களையும், விவசாயத்தையும், பல்லுயிர் வளத்தையும் நீண்டகால பாதிப்புக்கு உள்ளாக்கும் அபாயம் கொண்ட திட்டமாகும்.
திட்ட ஆவணங்களின்படி, சுமார் 337 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதில் 228 எக்டேருக்கும் அதிகமான பகுதி அரசம்பட்டு காப்புக்காட்டுக்குள் அமைந்துள்ளது. மேலும், 1800 மெகாவாட் திறன் கொண்ட இந்த நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக, மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளுக்கு இடையிலானச் சுற்றுச்சூழல் வழித்தடத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்தப் பகுதியில், அரிய பறவைகள், விலங்குகள், ஊர்வன, தவளையினங்கள் மற்றும் பல ஓரிடவாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றின் வாழ்விடங்களைச் சிதைப்பது, ஒரு காட்டை மட்டும் அழிப்பதல்ல. ஒரு முழுமையான இயற்கைச் சங்கிலியை உடைப்பதாகும்.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான தண்ணீரைப் பாலாற்றிலிருந்து கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஏற்கனவே நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் இருந்து நீரை மாற்றுவது, விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். மலையிலிருந்து வடிந்து வரும் இயற்கை நீரே மலையடிவார மக்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. அந்த இயற்கைச் சுழற்சியை மாற்றும் எந்த முடிவும் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சேமிப்பு வசதிகள் தேவை என்பது உண்மை. ஆனால் அதற்காகக் காப்புக்காடுகளை அழிப்பது சரியான வழி அல்ல.
மின்கல சேமிப்பு உள்ளிட்ட மாற்று தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது.
திட்ட ஆவணங்களின்படி, இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மின்கல சேமிப்பு வசதியுடன் கூடிய சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்கள் குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
எனவே, சுற்றுச்சூழலை அழித்து, மக்களின் வரிப்பணத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் திட்டங்களை விட, நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளையே அரசு முன்னெடுக்க வேண்டும்.
ஜவ்வாது மலை சுற்றுச்சூழல் அமைப்பு, அரசம்பட்டு காப்புக்காடு, பல்லுயிர் வளம், நீராதாரங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தமிழக அரசின் வரலாற்றுப் பொறுப்பாகும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்து, எதிர்கால தலைமுறையின் வாழ்வுரிமையைப் பறிக்கும் எந்தத் திட்டத்திற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் துணைநிற்காது.
எனவே, அரசம்பட்டு காப்புக்காட்டை பாதிக்கும் அதானி நிறுவனத்தின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளையும் தமிழக அரசு நிராகரிப்பதோடு, இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து, சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை, முழுமையாகக் கைவிடத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும்.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்தத் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தப்பட வேண்டும். மேலும், முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 48 துறைகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வை 42,064 பேர் எழுதினர். கடந்த பிப்ரவரியில் 5 பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் மட்டும் வெளியாகின. மீதமுள்ள 56 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கல்லூரி விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரு தாள்களையும், மூன்று பிரிவுகளையும் கொண்டதாகும். முதல் தாளில் ஏ மற்றும் பி என இரு பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி தேர்வர்களின் தமிழ் மொழித் திறனுக்கானது. 50 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி. இந்தப் பகுதியில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசையைத் தீர்மானிப்பதில் கணக்கில் கொள்ளப்படாது.
முதல் தாளின் பி பிரிவில் தேர்வர்களின் விருப்பப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாவது தாளில் 5 தலைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கட்டுரை எழுத வேண்டும். அதற்கு 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினர் 40% மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35% மதிப்பெண்களும் பெற வேண்டும்.
தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில், முதல் தாளின் பி பிரிவில் 111 மதிப்பெண்கள் (74%) பெற்ற பலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்யம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை.
இரண்டாம் தாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவு ஆகிய பாடங்களிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படும். விருப்பப் பாடத்தில் 111 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு எழுதிய கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. தலைப்புக்கு பொருத்தமான ஒரு இரு தகவல்களை எழுதினால்கூட குறைந்தபட்சம் 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் பெற்ற ஒருவர், பூஜ்யம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவும் தெரியாதவராக இருப்பது சாத்தியமே இல்லை.
மேலும், முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்யம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது எப்படி என்பது விளங்கவில்லை. இது திட்டமிட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.
தமிழக அரசு உடனடியாக இந்தத் தேர்வை முழுமையாக ரத்து செய்து, மறு தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். மேலும், முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்டம்-2026 வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்:தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்யவேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013 அமலில் உள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்டம்-2026 வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்யவேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் (அரிசி அல்லது கோதுமை) இலவசமாக வழங்கப்படுகிறது.
முன்னுரிமை குடும்பங்கள் (PHH) என்றழைக்கப்படும் பிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவருக்கு மாதம் 5 கிலோ வீதம் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்டம்-2026 வரைவு அறிக்கையை பொதுமக்களின் கருத்து கேட்புக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி, AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவருக்கு 7 கிலோ வீதம் உணவு தானியம் வழங்கப்படும். ஆனால் அதிகபட்சம் 35 கிலோ மட்டுமே வழங்கப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, 2 அல்லது 3 பேர் கொண்ட குடும்பத்துக்கும், 6 அல்லது 7 பேர் கொண்ட குடும்பத்துக்கும் அதிகபட்சம் 35 கிலோவே வழங்கப்படும். இதனால், சிறிய குடும்பங்களுக்கு (எ.கா. 2 பேர்) மாதம் 14 கிலோ மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும்.
மத்திய அரசு இந்த வரைவு அறிக்கையை பொது தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த பொதுமக்களின் கருத்துக்களை ஜூலை 13-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஒரு நபரின் ஒரு மாத சராசரி உணவுத் தேவை சுமார் 8.5 கிலோ முதல் 9.5 கிலோ வரை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி தனிநபருக்கு வழங்கப்படும் உணவு தானிய அளவு குறையும் நிலை ஏற்படும். இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், ஏழை எளிய மக்களுக்கு தற்போது வழங்கப்படும் அளவே குறைவானதாக இருக்கும்போது, தனிநபருக்கு 7 கிலோ என்றும் குடும்பத்துக்கு அதிகபட்சம் 35 கிலோ என்றும் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்து, தனிநபருக்கு வழங்கப்படும் 5 கிலோவை 7 கிலோவாக அதிகரிப்பதே சரியானதாக இருக்கும்.
எனவே, மத்திய அரசு மக்கள் கருத்து கேட்புக்காக வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்ய வலியுறுத்துகிறேன்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதை முற்றிலும் கைவிட வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிப்பதை முற்றிலும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
முருகனை தரிசிப்பதில் பக்தர்களுக்கு பல்வேறு விருப்பங்களும் வழிமுறைகளும் ஆண்டாண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கோயிலுக்கான வருவாயை உண்டியல் மூலமும், கோயில் நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலமும் பெற முடியும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இறைவனை தரிசிக்க எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. திருக்கோயில்களை கார்ப்பரேட் கம்பெனி போல வருவாய்க்கு முன்னிருத்தக் கூடாது.
திருச்செந்தூர் முருகன் கோயில் சிறப்பு
தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டுமே கடல் சார்ந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மற்ற ஐந்து படைவீடுகளும் மலைக்குன்றின் மேல் உள்ளன. ஆன்மிகத்தில் சிறந்த குரு ஸ்தலமாகவும் திருச்செந்தூர் திகழ்வதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
திருச்செந்தூருக்கு எப்போது. சென்றாலும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம்.
இக்கோயிலில் 2018-ம் ஆண்டு பல்வேறு சேவை கட்டணங்களை உயர்த்திய கோயில் நிர்வாகம், மீண்டும் 2023-ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தரிசனக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது.
தற்போது வசூலிக்கப்பட கட்டணங்கள்:
• விஸ்வரூப தரிசனக் கட்டணம்: ரூ. 2,000
• யாகசாலையில் உள்ளே அமர்ந்து பார்க்க: ரூ. 3,000
• அபிஷேக கட்டணம்: ரூ. 3,000
• விரைவு தரிசனம் (புதிய கட்டணம்): ரூ. 1,000 (தனி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது)
புதிய கட்டண உயர்வு முயற்சி
தற்போது பல்வேறு சேவை கட்டணங்களை மேலும் உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி:
• தங்க ரத உலா திட்டத்துக்கான சேவை கட்டணம்: ரூ. 2,500லிருந்து ரூ. 5,000 ஆக உயர்வு
• சண்முகார்ச்சனை கட்டணம்: ரூ. 5,000லிருந்து ரூ. 30,000 ஆக உயர்வு
• அபிஷேக தரிசன கட்டணம்: சாதாரண நாட்களில் ரூ. 500லிருந்து ரூ. 2,500 ஆகவும், விழா நாட்களில் ரூ. 2,000லிருந்து உயர்த்த முடிவு
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கட்டணச் சேவைகள், அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணம் ஆகியவை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய உயர்ந்த விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டும், வருவாய்க் குறைவை ஈடுசெய்யும் வகையிலும், நிர்வாக நலன் கருதியும் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் ஜூலை 7-ம் தேதிக்குள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கலாம் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“முருகனை தரிசிப்பதில் பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், பக்தர்களிடம் தரிசனக் கட்டணம் வசூலிப்பதை முற்றிலும் தமிழக அரசு கைவிட வேண்டும். திருக்கோயில்களை வருவாய் மையமாக்கி கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்தக் கூடாது” என வலியுறுத்துகிறேன்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். கர்நாடக அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம். அது நமக்கு அவசியமும் இல்லை.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் காவேரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனித்தீர்மானமாக கொண்டுவந்து பேசியது,
காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வழங்கியது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது. இவற்றை மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் கருத்தை கேட்காமலும், மத்திய அரசின் எந்த அனுமதியையும் பெறாமலும் கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாதுவில் தன்னிச்சையாக அணை கட்ட முயற்சி மேற்கொள்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
கர்நாடக அரசின் இந்த செயலுக்கு இந்த சட்டசபை தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் தரக் கூடாது என்று மத்திய அரசை இந்த சபை வலியுறுத்துகிறது.
காவிரி பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வ பிரச்சினை. எனவே, கர்நாடக அரசு மேகதாது அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலும் அணை அல்லது புதிய நீர்த்தேக்க திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது. பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றி, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இந்த சபை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இந்த சபை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்த சபை ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கிறது என தெரிவித்தார்.
இத்தீர்மானத்தை முன் மொழிந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரம் காவேரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். கர்நாடக அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம். அது நமக்கு அவசியமும் இல்லை என வலியுறுத்துகிறேன்.