தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற, கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவினால், தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டது. தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாக கண்டித்து கடந்த 03.06.2026 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கினை திறம்பட தவெக அரசு நடத்தாதன் விளைவே தற்போது மீண்டும் தனது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய முதன்மைக்காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவக் கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சாதித்தது. அதனை தனது வாதத்தில் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை முழுமையாக மீண்டும் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒருவேளை இரண்டாம் சுற்று கலந்தாய்வும் முடிந்து, நீட் மதிப்பெண் வரம்பினைக் குறைக்க நேரிட்டால், அப்போது 50% இடங்களை அதாவது 151 இல் பாதி இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுபோல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கும் முறையா?
உண்மையில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 இடங்கள் பறிபோயுள்ளது. அதில் பாதி, அதாவது 151 இடங்களில் நிரம்பியதுபோக, மீதமுள்ள இடங்களில் பாதி இடங்கள், அதுவும் நீட் மதிப்பெண்ணைக் குறைக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், NEET SS cut-off குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 151 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவை உச்சநீதிமன்றம் 75 இடங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், அதுகூட மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவே. தமிழ்நாட்டின் உரிமையை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாமல், அதனை ஏதோ பெரிய சாதனை போல தவெக அரசு கொண்டாடுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு மருத்துவர்களுக்கான இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி அம்மக்களின் போராட்டத்தால் தூத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவாப்பதா?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
தவெகவினர் சீமான் அண்ணன் புள்ள பெத்ததை பற்றி பேசிட்டுருக்கிறாங்க !
ஆனால் சீமான் அண்ணன் ஒரு புள்ள செத்ததை பற்றி பேசிட்டுருக்காரு !
இது தான் நாதகவுக்கும்,தவெகவுக்கும் உள்ள வேறுபாடு...
நாங்கள் தேர்தலில் தான் தோற்றிருக்கிறோம், கொண்ட கொள்கையிலும், உறுதியான நிலைப்பாட்டிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் - சகோதரன் உசைன் திருமண விழாவில் அண்ணன் சீமான் பேச்சு 👇
இன்று 24.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அமைச்சர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுப்போம் என சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் சொன்னது அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பொருந்தாதா ?
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின் அன்புமகள் சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புமகள் சீதாலட்சுமி மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்து மாணவி உயிரிழக்க காரணமாகியுள்ள மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்புமகள் சீதாலட்சுமி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி