மதுரை கூடல் நகர் மாணவன் தமிழ்ச்செல்வன் சந்தேக மரணம்!
மரணத்திற்கான உண்மை காரணம் வெளிக்கொணரப்பட வேண்டும்!
....................................
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பயின்று வரும் ஊராளிக் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவன், கடந்த 6 ஆம் தேதி காலையில் விளையாடச் சென்று, இரவு வரை வீடு வந்து சேரவில்லை. அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் தேடியதில், அங்குள்ள நீர்நிலையில் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மாணவனுக்கும் வேறொரு சமுதாய மாணவிக்குமிடையே காதல் இருந்ததாகவும், மாணவியின் பெற்றோர் அம்மாணவனை பலமுறை எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அன்றைய தினம் மாணவன் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்திருக்கின்றன. இந்த மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. மாணவனின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை வெளிக்கொண்டுவரவும், அது கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
- நிறுவனர் & தலைவர்,
- புதிய தமிழகம் கட்சி,
- 09.09.2026
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி – அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.!
.....................................................
பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 வருடங்கள் கழித்து, வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இச்சிறப்பு நிகழ்ச்சியில் மேல்மாடத்திற்குச் சென்று பங்கேற்க பலரும் ஆர்வம் செலுத்துவர்.
இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய 9,000 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டும் ஆளுங்கட்சி அரசியல் தலையீடு காரணமாக வழங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பொதுவாக மீனாட்சி அம்மன் கோவிலின் உபயதாரர்கள், சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், அனைத்து சமுதாயத் தலைவர்கள் - பிரமுகர்கள் என பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவது உண்டு.
ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் அச்சடிக்கப்பட்ட 9,000 சிறப்பு அழைப்புகள் இன்னும் வழங்கப்படாதது ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. எனவே, எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் இடமின்றி, அச்சடிக்கப்பட்ட 9,000 சிறப்பு அழைப்புகளும் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது குழுவிடம் சிக்கிவிடாத வண்ணம், இந்து சமுதாய அனைத்து முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கக்கூடிய வகையில், இந்து அறநிலையத் துறை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அழைப்புகளை விநியோகம் செய்ய வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சியில் எந்தவிதமான குறை குற்றங்களுக்கும் இடமில்லாத வகையில், அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இதை ஒரு ஆன்மீக நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமே தவிர, இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக் கூடாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் யாரையும் ஒதுக்கி வைக்கவோ, புறந்தள்ளவோக் கூடாது. பாரபட்சமற்ற வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பு அழைப்புக்கான அழைப்புகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
- நிறுவனர் & தலைவர்,
- புதிய தமிழகம் கட்சி,
- 09.09.2026
திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்ட வேண்டும்!
வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்!
........................................
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகியதால், திடீரென போய்கி, கோசி, திரிசூலி ஆகிய நதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இதில், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்ட 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற திடீர் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் வெள்ளப்பெருக்குகளில் இருந்து மக்களை மீட்பதற்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளும் பின்பலமும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு இல்லை.
எனவே, மனிதநேய அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவி நடவடிக்கைகளையும், தேவைப்பட்டால் மீட்புப் பணிகளுக்காக இந்தியத் துணை ராணுவத்தை அனுப்பவும், வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கு இந்திய அரசின் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து விதமான உதவிகளையும் நேபாள அரசுக்கு வழங்க வேண்டும் எனவும்; வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2026
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்க சட்டத் திருத்தம் வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் பலனளிக்குமா?
.................................................
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, இந்தியா முழுமைக்கும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசும் கொண்டு வந்தது; உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இதன் அடிப்படையில் நடைபெற்ற TET தேர்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் ’தமிழ்’ பாடத்திலேயே வெற்றி பெற முடியவில்லை. பிற பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுடைய ஒட்டுமொத்த சதவீதம் 95; அதாவது 5 சதவீதம் பேர் மட்டுமே TET (Paper 1 & Paper 2) தேர்வில் முழுமையாக வெற்றி பெற்றார்கள் என்றும், குறிப்பாக, 2010-க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களால் இந்த TET தேர்வில் பெருமளவில் வெற்றி பெற முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசாங்கத்தினுடைய நேரடி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரையிலும் பயிற்றுவிக்கக்கூடிய ஆசிரியர்களுடைய எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்து 28 ஆயிரம் ஆகும். அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் மீண்டும் TET தேர்வு நடைபெற்றுள்ளது.
”2010-க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தி—நேற்றைய தினம் (25.08.2026) சட்டமன்றத்தில் அரசினர் தீர்மானம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் முன்மொழிந்துள்ளார்.
இதை எப்படி மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் அல்லது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியவில்லை. இதை ஆசிரியர்களை சமாதானப்படுத்துவதற்கான ராஜ்மோகனின் ஒரு முயற்சியாகத்தான் கருத வேண்டுமே தவிர, இத்தீர்மானத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.!
விலக்கு கேட்டு மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையாவது ஆசிரியர்களுக்கு தீவிரப் பயிற்சியளித்து TET தேர்வில் வெற்றி பெற வைப்பதன் மூலம் ஆசிரியர்களின் தரமும் உயரும்; அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரமும் மிளிரும். ஆசிரியர்களும் TET தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையோடும், யாருடைய கருணையை எதிர்பார்த்தும் பயணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
எனவே, ஆசிரியர்களை தகுதிமிக்கவர்களாக மாற்றுவதை விட்டுவிட்டு, இதுபோன்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக மட்டுமே பார்க்கப்படும். தமிழக அரசின் இந்த முயற்சி ”எலியைப் பிடிக்க மலையைக் குடைவதற்குச் சமமாகவே” கருதப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) 150-க்கு 90 மதிப்பெண்கள் (60%) பெற வேண்டும் என்ற விதியை தளர்த்தியதற்கு எதிரான வழக்குகளை வாபாஸ் பெற வைத்து, பணிபுரியும் ஆசிரியர்களிடத்தில் ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டியது அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் தலையாய முயற்சியாக இருக்கட்டும்; இதுபோன்று கடந்த காலங்களில் பல தேர்வுகளுக்கு விலக்குக் கேட்டு நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானங்கள் பலனளிக்கவில்லை; இனியும் பலனளிக்குமா என்பதும் கேள்விக்குறியே!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2026
கோவளம் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?
..................................................
துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களின் அர்த்தமற்ற, திசைதிருப்பும் பதில்கள் — 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்று கேட்பது போல உள்ளன.
நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய வீராவேசப் பதில்கள் சமூக ஊடக Content-களுக்கு பயன்படுமே தவிர, மக்களுக்குக் கிஞ்சித்தும் பயன் தராது. ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் உள்ள பேரவைத் தலைவர், இருதலைக்கொள்ளி எறும்பைப் போல் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்.
அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே நேரலையில் சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது ”குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்”; இதனால் யாருக்கு என்ன பலன்?
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக்த்திலிருந்து எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எவ்வித முன்அறிவிப்புமின்றி, தமிழகத்திலுள்ள கோவளம் பகுதியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தலைமையில் தென்னிந்திய முதலமைச்சர்களுடைய மாநாடு நடைபெற்றது.
இதில் மேகதாது பிரச்சனை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சனைகள் குறித்து தமிழக முதலமைச்சர் பேசியது என்ன? என்பது குறித்து தமிழகச் சட்டமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டுமே, ஏன் முதலமைச்சர் விஜய் அவர்கள் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் எவரும் வினா எழுப்பவில்லையே ஏன்?
’பட்டுக்கோட்டைக்கு’ வழி கேட்டால் ’கொட்டைப்பாக்கின்’ விலை என்ன? என்பதற்கேற்ப அமையும் தமிழக அமைச்சர்களின் பதில்கள்!
“Reels content”- மீடியா வெளிச்சத்தை குறிவைத்து பேசும் தமிழக அமைச்சர்கள்!
கோவளம் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா?
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
23.08.2026
நாளை (24-ஆம் தேதி) மீண்டும் தொடரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு விவாதம் குறித்து தமிழக முதல்வர் விரிவான விளக்க அறிக்கை வெளியிட சட்டமன்றத்தில் வலுவாக எழுப்ப வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் எதிர் கட்சித் தலைவர் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யுனியன் முஸ்லீம் லீக், பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சட்டமன்ற கட்சி குழு தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம்:
........................................................
பொருள் : தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விவாதித்த விபரங்கள் குறித்து சட்டமன்றத்தில் விரிவான அறிக்கை சமர்பிக்க வலியுறுத்தல் - சார்பு
.....................................................
அன்புடையீர் வணக்கம்!
கடந்த 20.08.2026 அன்று, மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமையில் 31 வது தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டம் குறித்த முன்னறிவிப்பு ஏதும் ஊடகங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி நதிநீர்ப் பிரச்சினை மிகத் தீவிரமாக உள்ள சூழலில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் துணைத் தலைவராகப் பங்கேற்றார்; கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீர் பங்கீடு முறையாக வழங்கப்படாதது மற்றும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகள், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு அனுமதி மறுப்பது, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தொடர்ச்சியாக தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரும் நீரோட்டத்தைத் தடுப்பது உள்ளிட்ட தமிழக மக்களின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதம் மேற்க்கொள்ளப்பட்டதா? அதில் என்ன முடிவுகள் எட்டப்பட்டது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அத்தகைய அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே, நாளை (24-ஆம் தேதி) மீண்டும் தொடரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு விவாதம் குறித்து தமிழக முதல்வர் விரிவான விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என தாங்கள் இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் வலுவாக எழுப்ப வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
23.08.2026
காவல்துறையின் அத்துமீறல்களுக்கு அளவில்லையா?
..................................
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை சிந்தாமணி பூசாரி பரமசிவம் உயிரிழந்த செய்தி கவலையளிக்கிறது.
வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு வீட்டாரிடையே ஏற்பட்ட சிறு பிணக்கை விசாரிக்க அழைத்துச் சென்று பிணமாக்குவதா?
அதேபோல, கடந்த 17-08-2026 அன்று தஞ்சாவூரில் ஆகாஷ் என்ற இளைஞரைச் சாலையில் தாக்கி, கழுத்தை நெரித்துக் கைது செய்த அவலமும் அரங்கேறியுள்ளது.
இதெல்லாம் நியாயமா? இந்த அரசின் 100 நாள் சாதனைகளில் இதுவும் ஒன்றா?
காவல்துறையின் அத்துமீறல்களுக்கு முடிவில்லையா? முதல்வர் விஜய் அவர்களே?
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
19.08.2026
அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வளவு காலம் அவைத்தலைவரின் நிழலில் காலத்தை ஓட்டப் போகிறீர்கள்?
.............................................................
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கண்ணியம் தவறிப் பேசுவதும், அவர்களின் வெறுக்கத்தக்க உடல்மொழிகளும் அவையடக்கமின்மையின் வெளிப்பாடு என்பதைக் காட்டிலும், முதிர்ச்சியற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி அவையை அமர்க்களமாக்க முயலும் போக்கிற்குச் சமம்.
குறிப்பாக, நேற்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் எதிர்க்கட்சிகள் மீதான மிரட்டல் பேச்சையும், அமைச்சர் ரமேஷ் அவர்களின் அர்த்தமற்ற பேச்சையும் அவைத்தலைவர் அடக்கி ஒடுக்கியிருக்காவிடில், அவை நடவடிக்கைகள் அமளிதுமளியில் முடிந்திருக்கும். கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற அனைத்துச் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் அவைத்தலைவரே ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றி வருகிறார்.
அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்களைச் சீரமைத்துக் கொள்ளாமல், இன்னும் எவ்வளவு காலம் அவைத்தலைவரின் நிழலில் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.08.2026
52-ஆவது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமான தருணத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு, வருங்காலம் மிகவும் சவாலானதாகவே இருக்கும். தாங்கள் பல்லாண்டுகள் நல்ல உடல் நலத்தோடும் உள்ள நலத்தோடும் விளங்கி, தமிழக மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றிட வாழ்த்துகிறேன்.
@CMOTamilnadu
விசாரணை கைதி உயிரி*ப்பு.. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே இதுபோன்ற உயிரி*ப்புகளுக்கு காரணம்.. புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பேட்டி.
#Sivagangai#Police#Attack#PoliceIncident#Protest#Newstamil24x7
கனிமவளக் கொள்ளையைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!
………………………………………………
கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலை பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் திருச்சி மாவட்ட செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபஸ்டின் ஆகியோர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்கள், மக்கள் நலன் கருதி சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செய்தி சேகரிக்க முற்பட்டபோது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன், சகோதரர்கள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அடியாட்கள் செய்தியாளர்களை மிகக் கொச்சையான வார்த்தைகளால் திட்டி, கொலை வெறித் தாக்குதலை நடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தங்களது சட்டவிரோதச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் ட்ரோன் உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் கொன்று புதைத்து விடுவோம் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதிகாரப் பலத்தை வைத்துக்கொண்டு, கனிமவளங்களைச் சூறையாடுவது மட்டுமின்றி, அதனைத் தட்டிக்கேட்கும் ஊடகவியலாளர்கள் மீதே கை வைப்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
எனவே, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், அய்யர்மலை பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத குவாரி மற்றும் கனிமவளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்தி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தாக்குதலில் சேதமடைந்த ஊடக உபகரணங்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு பெற்றுத் தர வேண்டுமென புதிய தமிழகம் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
31.01.2026
@NewsTamilTV24x7
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் மதிப்பிற்குரிய H.ராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகள்!
மகளிருக்கு ரூ 5000 அறிவிப்பு – தேர்தலுக்கான வித்தை!
திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியும் குறையாது; மகளிர் மனமும் மாறாது!
அரசு பணத்தில் திமுக ஓட்டுச் சேகரிப்பு – தடுத்து நிறுத்த,
தேர்தல் விதிமுறைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்!
...................................................................
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அராஜகத்தால் தமிழக மக்கள் அனைவரும் அளவிட முடியாத அதிருப்தியில் உள்ளனர். பட்டிதொட்டியெங்கும் பெருகிவிட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், தடையற்ற கனிம வளக் கொள்ளை, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தலைவிரித்தாடும் மிதமிஞ்சிய ஊழல்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் போன்ற சாதாரணப் பணிகளுக்கே லட்சக்கணக்கில் பேரம்; படித்த இளைஞர்களுக்குப் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றின் அதீத உயர்வு மற்றும் தாறுமாறான விலைவாசி உயர்வு; அடிப்படை வசதிகளின்றிப் பெரும்பான்மையான மக்கள் தவிப்பு என அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியின் அவலத்தால் அல்லப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக பராமரிக்காமல், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன; குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், இந்த ஆட்சியின் குறைபாடுகளும், முறைகேடுகளும், மக்களின் அதிருப்தியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்ற சூழலில் அதனை மடைமாற்றம் செய்வதற்காக, கடைசி நேர, கால தாமத, காலாவதியாகிப் போன ஒரு நடவடிக்கையைத் தேர்தல் நேரத்தில் திமுக அரசு எடுத்துள்ளது. அதுதான் 5,000 ரூபாய் உரிமைத் தொகை அறிவிப்பு.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வழங்கப்பட வேண்டிய 3,000 ரூபாயுடன், 'கோடைக்காலத் தொகை' என்ற பெயரில் 2,000 ரூபாயைச் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளனர். மழை, புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணத் தொகை வழங்குவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், 'கோடைக்கால நிவாரணம்' என்று ஒரு புதிய கரடியை விட்டிருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதை மூடிமறைக்க, வார்த்தை ஜாலங்கள் மூலம் அரசுப் பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். இந்த அறிவிப்பு எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். இது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியைக் குறைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது; மகளிர் மனமும் மாறாது."
தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, அரசுப் பணத்தைத் தவறான முறையில் தாரை வார்ப்பதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதிக்கிறது? நீதிமன்றங்களும் மத்திய அரசும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.
திமுக அரசு இதுபோன்ற முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தான் ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற எங்களது புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாட்டில், ”தமிழ்நாட்டில் 2026 - சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி விரும்புகிறது. ஆட்சி - அதிகாரம், பண பலம், சாதி பலம் மற்றும் அடியாள் பலம் உள்ளிட்ட எந்த அம்சங்களும் மேலோங்கிடத் தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. எனவே, வாக்குப்பதிவு தேதிக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு நிர்வாகம் கொண்டு வரப்பட வேண்டும்; தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த ஆட்சியைப் கலைக்க வேண்டும்” என்று 19 வது தீர்மானமாக நிறைவேற்றினோம். ஆனால், மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாகவே இன்று திமுக இத்தகைய மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளது.
ஜனநாயகப் பூர்வமாகத் தேர்தலை எதிர்கொள்ளாமல், ஏமாற்று அரசியலில் ஈடுபடும் இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தலையொட்டி இன்னும் திமுகவால் அரங்கேற்றப்பட இருக்கின்ற முறைகேடுகளைத் தடுத்து, நியாயமான தேர்தலை நடத்திட, உடனடியாகத் தேர்தல் விதிமுறைகளைத் தமிழகத்தில் அமலுக்குக் கொண்டு வரவும், அனைத்து அரசு நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.02.2026
நாடு போற்றும் அந்த நல்ல மனிதரின் மறைவால் கவலையுறும் அனைவருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல்.!
......................................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், பொதுவுடைமை இயக்கத்தின் முதும்பெரும் தலைவருமான ஐயா நல்லகண்ணு அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக 100 ஆண்டுகள் வாழ்வதே அசாத்தியமானது. அதிலும் தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக இம்மியளவும் பிசகாமல், தன் வாழ்நாளை முழுமையாகப் பூர்த்தி செய்தது எவருடைய வாழ்க்கையோடும் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.
அவர் ஒரு கட்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், அனைத்து உழைப்பாளர்களும் அவரைத் தங்களுக்கான உரிமை மீட்பராகவே கருதி, அவருக்கு உண்டான மதிப்பையும் மரியாதையையும் அளித்து வந்துள்ளனர். 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாம் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டபோது, பல்வேறு தருணங்களில் அவரோடு இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
அவருடைய இழப்பு பொதுவுடைமைத் தோழர்களுக்கு மட்டுமின்றி, சமத்துவமும் சம உரிமையும் இம்மண்ணில் நிலைநாட்டப்பட வேண்டும் என உளமாற எண்ணும் அனைவருக்கும் பேரிழப்பாகும். நாடு போற்றும் அந்த நல்ல மனிதரின் மறைவால் கவலையுறும் அனைவருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD. Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.02.2026
நாங்குநேரியில் மீண்டும் மீண்டும் தொடரும் கொலை வெறியாட்டங்கள்!
தடுத்து நிறுத்தத் தயங்கும் காவல்துறை!
..........................................................
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் (பறையர்), உடையார், நாடார், பிள்ளைமார், பிராமணர், விஸ்வகர்மா எனப் பல்வேறு சமூக இளைஞர்கள் பல வருடங்களாகச் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கு தடையற்ற வன்முறையில் ஈடுபடுவதால், மற்ற சமூகங்கள் தங்கள் சொந்தக் கிராமங்களிலேயே வாழ முடியாமல் ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும் அவல நிலைகளை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எண்ணற்ற முறை எடுத்துச் சொல்லியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதன் விளைவாக ஏழை எளிய மக்களும், குறிப்பாக இளைஞர்களும் வியாபாரிகளும், அராஜகப் போக்குக் கொண்ட கும்பலால் எவ்விதமான காரணமும் முன்விரோதமும் இன்றி கொல்லப்படுவதும், கொடும் தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு சின்னதுரை என்ற பள்ளி மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார். நேற்று நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது பேர் கொண்ட ஆயுதக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி, சரமாரியாகத் தாக்கியதன் காரணமாக, ஜான் மார்க் என்ற ஆதிதிராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்தவரும், திருநாத் கடா என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேர் பலத்த காயமுற்றுள்ளனர்; இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கடந்த வருடம் நடந்த நாங்குநேரி வாகைக்குளம் தீபக் படுகொலையிலேயே உண்மைக் குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்புறமாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்திய போதும், கைது செய்யப்பட்ட சிலரையும் 90 தினங்களில் பிணையில் விடுதலை செய்தார்கள். அவர்கள் அனைவரும் இன்றுவரை தலைமறைவாக இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வன்முறைக் கும்பல்கள் அதிகரித்து ஏழை, எளிய மக்கள் மீது இது போன்ற தாக்குதல்களைச் செய்து எதற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். சின்னத்துரை மீதான தாக்குதலுக்கு ஆறுதல் அளிக்க சென்றுவிட்டு, நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு நாம் சென்றதை கூட சில வன்முறை கும்பல்கள் எதிர்த்தார்கள்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரே அவ்விடத்தில் இருந்தும், நமக்கு பாதுகாப்பு அளித்து கோவிலுக்கு அழைத்துச் செல்ல முன்வரவில்லை.
நாங்குநேரி பகுதியில் நடைபெறும் இதுபோன்ற அராஜக வன்முறை செயல்களால் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் வனிகர்கள் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களுடைய உடமையைக் கைப்பற்றுவதும், பிற சமூக மக்களை அப்பகுதியிலிருந்து துடைத்தெறிவதும் தான் அவர்களின் தலையாய நோக்கமாகும். இது குறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம்; எனினும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; நடுநிலை பேசும் சமூகநீதி பற்றாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இனியாவது திருநெல்வேலி, நாங்குநேரியில் வன்முறையில் ஈடுபட்டு வரும் வன்முறை கும்பல்களின் செயல்களை அறவே ஒழித்துக் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இச்சம்பவத்தில் மரணமெய்தியவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சமும், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
- நிறுவனர் & தலைவர்,
- புதிய தமிழகம் கட்சி.
- 03.03.2026
மானாமதுரையில் மீண்டும் ஒரு காவல் நிலையச் சாவு!
..........................................................
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கிடைக்கும் முன்னர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய சரகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய மரணம் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மார்ச் 6-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனங்களுக்கு இடையே ஏற்பட்ட சாலை விபத்தைத் தொடர்ந்து, இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூக இளைஞர், காவல்துறையினரின் தாக்குதலால் இன்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சாதாரண வழக்குகளுக்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பட்டியலின மக்கள், இதுபோன்ற காவல் நிலைய மரணங்களுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்துத் தமிழகக் காவல்துறை தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பது, இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தடையின்றி நடைபெற முக்கியக் காரணமாக அமைகிறது. இத்தகைய போக்கு குறித்து ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபோது, மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரிகள் மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். ஆனால், இன்று மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருப்பது அந்த மறுப்பு அறிக்கைகள் யாவும் உண்மைக்கு மாறானவை என்பதையும், இத்தகைய சம்பவங்கள் இன்னும் தொடர்கதையாகவே உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் குகன் உள்ளிட்ட காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்திற்கு அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
• டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
• நிறுவனர் & தலைவர்,
• புதிய தமிழகம் கட்சி.
• 08.03.2026
17 வயது பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை!
விளாத்திகுளம் - குளத்தூர் காவல் நிலையம் மெத்தனப்போக்கால் அநியாயமாக இளம்பெண் உயிர் இழப்பு.!
.........................................
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமம் சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியினரின் 17 வயது மகள், நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தனது வீட்டில் இருந்து 200 அடி தொலைவில் உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். வயல்வெளிக்குச் சென்ற மகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உற்றார் உறவினர்களுடன் அவ்வூர் முழுவதும் தேடியுள்ளனர். எனினும் மாணவியைக் கண்டுபிடிக்க முடியாததால், அருகில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் அம்மாணவியின் தந்தை சுப்புராஜ் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அவரது புகாரைப் பெற்றுக்கொண்டு மாணவியைத் தேடிக் கண்டுபிடிக்க உரிய முயற்சியை மேற்கொள்ளாமல், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர். விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசியதோடு, காலை 10 மணிக்கு வருமாறு கூறி அனுப்பிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு வேடநத்தம் கிராமத்தின் காட்டு பகுதியில், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை விளாத்திகுளம் மற்றும் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதே காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காவல்துறையின் மெத்தனப்போக்கால் 17 வயது மாணவிக்கு இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாங்குநேரி பெரம்பத்தூர் தாக்குதல், மானாமதுரை காவல் நிலையச் சாவு, இன்று விளாத்திகுளத்தில் மாணவி கற்பழித்துக் கொடூரக் கொலை என வன்சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொடூர கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்து விரைந்து நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.03.2026