அன்பார்ந்த உயர் உயர் அதிகாரிகளுக்கு,
சில காலம் ஓய்ந்திருந்த வழக்கம் மீண்டும் அதிக அளவில் நடந்து வருகிறது.
அரசு வாகனங்களில் அதிகாரிகளின் பிள்ளைகளை இறக்கி விடும் வழக்கம் மீண்டும் அதிகமாகியிருக்கிறது. சென்னையின் ஒரு செல்வந்தப் பள்ளியில் இன்று காலை எடுக்கப்பட்ட படத்தை மாதிரிக்காக பகிர்ந்திருக்கிறேன்.
அன்பு அதிகாரிகளே, உங்களில் பலர் எனக்கு பழக்கம். இதை செய்ய உள்ளபடியே சங்கடமாக இருக்கிறது. ஒரு காலத்தில் நீங்கள் அரசு வாகனத்தை துஷ்பிரயோகம் செய்வது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் இது டிஜிட்டல் யுகம். சமூகவலைத்தள யுகம். இங்கே ஒவ்வொருவரும் பத்திரிக்கையாளரே.
ஒரு காலத்தில் செய்து கொண்டிருந்தீர்கள். சரி. ஆனால் இனியும் இதைத் தொடர்வது சரியாகப் படவில்லை. மக்கள் கோபமடைகிறார்கள். சாமான்யர்கள் சண்டமாருதம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
சவுக்கின் சகோதரர்கள் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். பள்ளிகளுக்கு வரும் ஒவ்வொரு அரசு வாகனத்தையும் படமெடுத்து பதிவிட முடியும்.
ஆனால் இதைத் தவிர்க்கலாமே ! அன்பு அதிகாரிகளே, உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு விட உங்களால் மிக எளிதாக ஒரு தனியார் வாகனத்தை அமர்த்த முடியும். அதற்கு உங்களில் பெரும்பாலானோர் உங்கள் பணத்தை செலுத்தப் போவதில்லை. ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி செய்து விட்டுப் போங்கள். அரசு வாகனத்தையும், அரசு டிரைவரையும் பயன்படுத்தாதீர்கள்.
ஊரில் உள்ள எல்லோர் பிள்ளைகளைப் போலத்தான் உங்கள் பிள்ளையும். தனியார் வாகனத்தில் பள்ளி செல்வது அவர்களின் எதிர்காலத்துக்கும் நல்லது. ஆணவமில்லாமல் வளர்வார்கள். மற்றவர்களோடு எளிதாக பழகுவார்கள்.
என் அன்புக்குரிய அதிகாரிகளாகிய நீங்கள் கேட்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
அன்புடன்
சவுக்கு சங்கர்
26 ஜூன் 2023