அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை.
அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?
பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை#குழந்தைகள்மையம் , தரச் சான்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண்ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk
தமிழினத்தினுடைய பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களின் 140வது பிறந்தநாள் இன்று.
இந்த நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது, அதன் விடுதலைக்காக அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி. தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினைப் பயன்படுத்தி, பாடல் இயற்றுவது, மெட்டமைத்து இனிமையாகப் பாடுவது, அசாத்தியமாக நடிப்பதன் மூலம் மங்கிக்கிடந்த நாட்டு விடுதலை உணர்வை, தன் பாட்டின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் மண்ணின் மக்களுக்கு ஊட்டிய ஒரு மகத்தானக் கலைஞர் நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்கள். தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் முழு வடிவமாகவே மாறி அந்த வேடத்தில் கரைந்து நடிக்கும் ஆற்றல் பெற்ற சிறப்புக்குரியவர்.
ஒரு காலகட்டத்தில், பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களின் நாடகம் நடக்கிறது என்றாலே அங்கே மக்கள் தன்மான உணர்வு பெற்று எழுச்சிக் கொள்கிறார்கள் என்று அறிந்துக்கொண்ட ஆங்கிலேயே அரசு பாட்டனாரை காவலர்கள் மூலம் சிறைபிடிப்பது பிறகு விடுதலை செய்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. அத்தகைய
கடுஞ்சூழலில் தொடர்ச்சியாக நம்முடைய
பாட்டனார் அவர்கள் சிறைப்பட்டதால் தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்க முடியவில்லை. அதன் காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில், அவர் பரம்பரையாக வாழ்ந்த வீடும் ஏலத்திற்கு வந்தது.
அன்றைய மாநகரத் தந்தையாக இருந்த வாசுதேவ் அவர்கள், “நீங்கள் துன்பப்படக்கூடாது, இந்த வீட்டிற்கு என்ன தொகை வருமோ அதை நானே கட்டி உங்கள் வீட்டை மீட்டுத் தருகிறேன். அதனை நீங்களே பயன்படுத்துங்கள்” என்று கூறியபோது, “என்னால் புல்லை உண்ண முடியாது” என்று தன்மானத்தோடு கூறி மறுத்த தீரர் நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்கள்.
மக்களின் உடற்பிணி தீர்த்து உயிர்காக்கும் உன்னத மருத்துவக்குடியினர் பின்னாட்களில் தாழ்ந்த குலம் என இழிவுப்படுத்தப்பட்டனர். அதனால், நாவிதக் குலத்தில் பிறந்த விஸ்வநாததாசுடன் நாங்கள் நடிக்கமாட்டோம் என்று அவருடைய சக நடிகர் நடிகைகள் பலர் மறுத்தது நம் பாட்டனாருக்கு மிகுந்த வலியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. இந்த மண்ணில் பிறந்த மகனாக, இந்த நாட்டின் உரிமைக்கு, அதன் விடுதலைக்குப் போராடுகிற ஒரு மனிதனைத் தாழ்த்தப்பட்டவன் என்று ஒதுக்கும் கொடியவர்களும் வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்தவர்கள்தான். அத்தகு நெருக்கடி நிலையை எதிர்கொண்ட நம்முடைய பாட்டனார், தனது நாடகத்தில் “தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ?, மண்ணில் ஏங்குவோர் உண்டோ?” என்றெல்லாம் வருந்திப்பாடி தன்னுடைய மனக்காயத்தினைக் கொண்டே தமிழர் இனக்காயத்திற்கும் மருத்துவம் செய்த பெருந்தகை.
தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்த நம்முடைய பாட்டனார் உடல் நலிவுற்ற நிலையில், இறுதியாக இன முன்னோன் முப்பாட்டன் முருகன் வேடமிட்டு நடித்தபோது, அந்த மேடையிலேயே முருகன் வேடத்திலேயே தம்முடைய இன்னுயிரை இழந்தார்.
இம்மண்ணின் விடுதலைக்கு அளப்பரிய ஈகத்தைச் செய்த பாட்டனார் விஸ்வநாததாஸ் போன்றவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கு அரை நூற்றாண்டிற்கும் மேலாக இந்த மண்ணை ஆண்ட திராவிடக் கட்சிகள் அரசியல் மற்றும் ஆட்சி -& அதிகாரத்தில் கடைபிடிக்கும் தீண்டாமையே முதன்மையான காரணமாகும்.
ஈடு இணையற்ற நடிப்பாற்றல் கொண்ட நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களைப் போன்ற பெருமைமிகு நம் இன முன்னோர்களை, வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியக் கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கிறது.
அந்தவகையில் விடுதலைப் போராட்ட ஈகி,
நம் பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களின் புகழை, அவர் ஆற்றிய அளப்பெரும் பணியை என்றென்றும் உளமாரப் போற்றுவோம்!
நம்முடைய பாட்டனார்
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அவர்களுக்கு நம்முடைய புகழ் வணக்கத்தைச்
செலுத்துவோம்!
நாம் தமிழர்!
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay
கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu@TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது.
ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே !
பிறகு எதற்கு கனிவளக்கொள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ?
என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
திருவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
பாதிக்கப்பட்ட பெண்ணே திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியும், எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்காதது ஏன்?
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிட்டு, குற்றத்துக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினரை காப்பாத்தும் இந்த மானங்கெட்ட அரசு மனுநீதிச்சோழன் அரசா?
வாய்ல வந்துரும்.. வேண்டாம் முதல்வரே!
@CMOTamilnadu@TVKVijayHQ
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி