அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu@TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆயுத வழிபாட்டுத் திருநாள் வாழ்த்துகள்!
"பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
வாளோடு முன் தோன்றி மூத்த குடி!"
என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள்.
150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 இலட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம்!
ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது.
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில்
முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார்
அறிவுப்பெருமகள் பொன்முடியார்.
வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது.
வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல;
மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது.
அதனால்தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம்.
போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூசை' விழாவாக இன்றும் தொடர்கிறது.
எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.
ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழுந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு.
உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கருவியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்!
அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே!
கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம்.
நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்ணும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்!
அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழிப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருத்தணி கார்த்திகேயபுரத்தில் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 35 இலட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கிளிங்கர் அரவை ஆலையை அமைத்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலை சீரழிக்க தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டியதும், அப்பகுதி மக்களின் கருத்தினைக் கேட்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும். அதனை விடுத்து, கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தைக் காட்டி, கிளிங்கரால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்துவிட முடியாது. கிளிங்கர் அரவை ஆலையில் மூலப்பொருட்களைக் கையாளுதல், சிமெண்ட் அரவை, தூசு பரவல், கனரக வாகனப் போக்குவரத்து, ஒலி மாசு மற்றும் நீர்வளப் பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிடத் தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கம் என்பது முதன்மையானது அல்ல. சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி மக்களின் கடமையோ, அதைப்போலவே, இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமையாகும். சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசு அனுமதியளிக்கக்கூடாது.
ஆகவே, தமிழ்நாடு அரசு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி