எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்நாட்டில் தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
வழக்கம்போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களத்தில் எதிர்கொள்கிறது. தேர்தல் களத்தை விட்டு வெளியேறுவது எங்களுடைய அரசியல் அல்ல. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரத் தோல்வியாகப் பார்ப்பதில்லை; தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். எப்போதும்போல எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு இம்முறையும் தனித்துக் களத்தில் போட்டியிடுகிறோம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தம்பி கோ.ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தங்கை மு.கார்த்திகா, புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியில் அன்புத்தங்கை ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களம் காண்கிறார்கள்.
எங்களிடம் படை இருக்கிறது; கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. எல்லாம் இருந்தும் எங்களுக்கிருக்கிற ஒரே பின்னடைவு பொருளாதார வலிமைதான்.
எப்போதுமே எமது மக்கள்தான் சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பை அளித்து எங்களை வலிமைப்படுத்தி, அரசியல் களத்தில் பணியாற்ற வைத்திருக்கிறார்கள். இம்முறையும் எமது மக்கள் அதனைச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மக்கள் இயக்கத்திற்கு இனமாகவும், பணமாகவும், வளமாகவும், வலிமையாகவும் மக்கள்தான் துணை நிற்க வேண்டும். ஏனெனில், மக்களிடமிருந்தே மக்களுக்காக வந்த அரசியல் இயக்கம்தான் நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரோ, வெறும் அடையாளமோ அல்ல. அது நாம் பிறந்த பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளம்.
ஒரு இனத்தின், நிலத்தின் அரசியல் என்பது மொழி, இனம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம் ஆகியவற்றைப் பேசாமல் இருக்க முடியாது. இந்நிலத்தில் மொழி என்றும், இனம் என்றும், இனத்தின் நலம் என்றும், நிலம் என்றும், வளம் என்றும் தொடர்ந்து பேசுகின்ற அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது.
எமது மக்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் எடுத்துப் பேசி, அவற்றிற்கான விடிவையும் முடிவையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது.
இந்தத் தேர்தலை ஒரு சாதாரண இடைத்தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் எதற்காக வந்தது என்பதை மக்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை விட்டு விலகுகிறார்கள். அதன் பிறகு வேறொரு கட்சியில், குறிப்பாக ஆளும் கட்சியில் இணைந்து, மீண்டும் அதே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.
அப்படியானால் அவர்களுக்கு மக்களுக்கான சேவை முதன்மையா? அல்லது தங்களுக்கான தேவை முதன்மையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
அதே பதவி! அதே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு! ஆனால் கட்சியை மட்டும் மாற்றிக்கொண்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிவார்ந்த எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவரின் பதவி விலகலால் மீண்டும் ஒரு தேர்தல் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலை நடத்த பல கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது. நேரமும் காலமும் செலவாகிறது. அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. தொடர்புடைய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.
மக்கள் பணம் இப்படித் தேவையில்லாமல் செலவிடப்படுவதற்கு காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?
“ஆளும் கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்று கூறினால், எதிர்க்கட்சி எதற்காக? எதிர்க்கருத்து எதற்காக?
ஒரு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கருத்தே இல்லாமல் போனால் அது எத்தகைய ஜனநாயகம்?
மக்கள் மன்றத்திற்குள் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்ய உறுப்பினர்களே இல்லாமல் அனைவரும் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை உருவாவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
நாம் தமிழர் கட்சி முன்வைக்கின்ற அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்று.
மக்கள் கொடுத்த பதவியிலிருந்து இடையில் விலகிவிட்டு கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அவருடைய பதவி விலகலால் ஏற்பட்ட இடைத்தேர்தலுக்கான செலவை முதலில் அவரிடமே வசூலிக்க வேண்டும்.
ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகிறது என்றால், தனிப்பட்ட அரசியல் விருப்பத்தால் அந்தத் தேர்தலை உருவாக்கியவர் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மக்கள் பணத்தில் அந்தச் செலவைச் செய்யக்கூடாது.
அதன் பிறகே தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுத்தொகையைச் செலுத்த அனுமதிக்கும் விதியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
அப்படியொரு அமைப்பு மாற்றம் வந்தால், மக்கள் கொடுத்த பதவியை எளிதில் யாரும் தூக்கி எறிய மாட்டார்கள். மக்கள் அளித்த பொறுப்பை மதித்து, அந்தப் பதவியில் இருந்து பணியாற்றுவார்கள்.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று, ஒரு நம்பிக்கையோடு வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அந்தப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டு, மீண்டும் அதே பதவிக்கு வந்து வாக்குக் கேட்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.
“நாங்கள் எங்கு நின்றாலும், எதைச் செய்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்” என்ற மெத்தனப்போக்கோடு மக்களைக் குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல.
இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இடைத்தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தும்.
பல கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்றதால் என் மீது மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. எமது பிள்ளைகளும் பல்வேறு வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் தவிர்த்துவிட்டோம் என்று சொல்ல முடியாது.
மக்களோடு மக்களாக மழையிலும், பனியிலும், வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காகப் போராடியிருக்கிறோம்.
அப்படிப்பட்ட எங்களை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் “ஜீரோ” என்று சொல்கிறார்கள்.
ஆனால், இந்த ஜீரோவைப் பார்த்துத்தான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள்!
எதுவுமே இல்லாதவர்கள், கட்டுத்தொகையைக்கூட பெற முடியாதவர்கள் என்று எங்களைப் பேசுபவர்கள், நாம் முன்வைத்த அரசியல் இன்று தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் பேசிய அரசியலின் தேவை இன்று மக்களுக்குப் புரிகிறது!
குடிப்பதற்குத் தூய நீர் இல்லை. உணவு நஞ்சாகிறது. தூய காற்றைச் சுவாசிக்க முடியாத நிலை உருவாகிறது. புவி வெப்பமடைகிறது. பருவநிலை மாறுகிறது.
இவையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே இல்லாதவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த நிலையிலும் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் தொடர்ந்து இந்த அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.
எப்போதும்போல எமது மக்கள் வலிமையாகவும், வளமாகவும், இனமாகவும், பணமாகவும் எம்மோடு இணைந்து நின்று எங்கள் கைகளை வலிமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி!
திரள்நிதி திரட்டல்: https://t.co/mO413e5BlI
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu@Chief_Secy_TN@jagadeshwarioff@VanniTamizhVCK@tnpoliceoffl
சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது. பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன. பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும். இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இணைந்திருங்கள்!
https://t.co/pBJIfHme4a
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:23-09-2026, புதன்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்:
சுனந்தா தாமரைச்செல்வன்
மாநிலத் தலைவர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
குருதிக்கொடைப் பாசறையின் தொடர் கீவெளி!
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத் தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா? கள்ளுக்கான தடையைத் தவெக அரசு நீக்க மறுப்பது பனை தொழிலாளர்களின் வாழ்வினை அழிக்கும் கொடுஞ்செயல்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
‘கள்’ தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்ததாகும். பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன்? தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பது தவெக அரசுக்கு தெரியுமா? தெரியாதா? ‘கள்’ போதைப்பொருள் என்றால், அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத்தீர்த்தமா? அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி, நம் நாட்டு ‘கள்’ அல்ல; மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் தவெக அரசு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா? அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத்தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா?
‘கள்’ உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையை கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தடைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது வெட்கக்கேடானது. உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையையும், தரத்தையும் ஒழுங்குபடுத்த முடிகிற அரசால், ‘கள்’ உற்பத்தியை மட்டும் உரிய உரிமம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டுவர முடியாதா? கலப்படம் நடைபெறுகிறது, சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது என்றால் அவற்றை அரசு தடுக்க வேண்டும். அதற்கு மாறாக, கள்ளுக்கு தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது கொடுங்கோன்மை இல்லையா? கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக அரசால் மலிவு விலையில் மதுவிற்க முடியுமென்றால், கலப்படக் கள்ளை தடுக்க, அரசால் தூய கள்ளை விற்க முடியாதா? கள்ளுக்குத் தடையை நீக்காமல், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று தவெக அரசு கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.
பனை விவசாயிகள் பயன்பெறும் ‘கள்’ விற்பனைக்கு அரசு ஏன் செயல் திட்டம் வகுக்கக்கூடாது? என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையமும் தனது ஆய்வறிக்கையில், இயற்கை பானமான ‘கள்’ விற்பனையை அனுமதிக்கப் பரிந்துரைத்தது. நாம் தமிழர் கட்சியும், பனைதொழிலாளர்களும் ‘கள்’ தடையை நீக்கப் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, தவெக அரசு கள்ளின் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உடனடியாக திரும்பப்பெற்று, பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘கள்’ மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புத்தங்கை மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து 21-09-2026 அன்று தாராபுரம் அருள்மிகு திருமுருகப்பெருமான் கோயில் அருகில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
https://t.co/Y8nSHXgJ3j
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுவதுமாகப் பறித்து, அவற்றை நேரடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் வளர்ச்சி, நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பறித்து தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தைத் தவெக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள நில கையகப்படுத்தல் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தும் போது அந்த ஊராட்சியில் அதற்காகத் தீர்மானம் போட வேண்டும். ஊர் மக்கள் அதை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும். தவெக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவர முடியும் என்ற குறைந்தபட்ச சனநாயக வழிமுறையையும் துடைத்தெறிந்துள்ளது. இப்புதிய திருத்த வரைவின் படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்த இனி ஊராட்சி அமைப்புகளிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, தொடர்புடைய விவசாயிகளிடமோ, கருத்துக்கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை. மேலும், விளைநிலங்களை, வேறு பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும்போது முடிவெடுக்கும் அதிகாரம் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்துவந்தது. அதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, நிலத்தை விரைந்து கையகப்படுத்த வசதியாக, நகரத் திட்ட இயக்குநரே இனி நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கலாம் என்று அதிகாரத்தை மாற்றி வரையறுக்கிறது இப்புதியச் சட்டத்திருத்தம்.
அரசு நினைத்தால் எந்த இடத்திலும் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் தொடங்க தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கலாம் என்பது கொடுங்கோன்மை இல்லையா? விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக்கும் இப்படியொரு எதேச்சதிகார சட்டத்திருத்தத்தை தவெக நிறைவேற்றியது ஏன்? தமிழ்நாட்டு விவசாயிகளை விடவும், தனியார் பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் தவெக அரசுக்கு முதன்மையானதா? பரந்தூரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதை, தடுத்து நிறுத்துவோம், வேளாண்மையைக் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதியளித்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலின்றி அபகரிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர எப்படி அனுமதித்தார்? பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் ஒப்புதல் இன்றித் தலைமைச்செயலகம் கட்டுவதற்காகவா? இதுதான் ஜனநாயகமா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகன் ஆட்சியா? எத்தனை சட்டங்கள் கொண்டுவந்து வந்து எம் மக்களை அச்சுறுத்தினாலும் நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் இருக்கும்வரை ஏழை எளிய மக்களின் நிலங்களை, அவர்களின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாகப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்காது.
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை இழிவுபடுத்திக் கொடூரமாகத் தாக்கிய தனித்துணை ஆட்சியரை கைது செய்யாதது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் ஜெகநாதனை தனித்துணை ஆட்சியர் கலைமன்னன் காலணியால் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. நம்மை நாடி வந்த தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாட்டு அரசு அதிகாரியே, காலணியால் தாக்கியுள்ளதை எண்ணும்போது இரத்தக்கண்ணீர் வருகிறது. முகாமில் வசிப்பவர்களைக் காலணியால் தாக்க யார் அதிகாரம் கொடுத்தது? யாருடைய உத்தரவின்பேரில் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஈழத்தமிழ்ச் சொந்தங்களைத் தாக்கினால் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற அலட்சியமா?
சிங்கள இனவெறி ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு இன்றளவும் இந்த நாடு குடியுரிமை வழங்க மறுத்து அடிமைகள்போலத் திறந்தவெளி சிறை முகாம்களில் அடைத்து வதைக்கிறது. வாழும் உரிமைக்காக நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் போராடும் ஈழத்தமிழ்மக்களை, அரசு அதிகாரிகளும் கொடுமைப்படுத்தினால் அவர்கள் இங்கு வாழ வழிதான் என்ன? சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களை எண்ணற்ற வசதிகளோடு வாழ்விக்கும் இந்த நாடு, அவர்களுக்கு இழைக்காத கொடுமைகளை எம் தமிழ் மக்களுக்கு மட்டும் இழைப்பதேன்? இத்தகைய கொடுமைகளை பாகிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களுக்கோ, சீனாவிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கோ செய்ய முடியுமா? நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் சென்ற இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை அள்ளி அரவணைத்துக் குடியுரிமை வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த ஈழத்தமிழ் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் - கடமையும் பத்துகோடி தமிழர்கள் நாங்கள் வரி செலுத்தி, வாக்கு செலுத்தி நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா?
பிறக்க ஒரு நாடு, உயிர் பிழைக்க ஒரு நாடு என்று அரசியல் காரணங்களால் அகதியாக்கப்பட்ட மனிதர்களை, அடித்துத் துன்புறுத்தி அடிமைகளாக நடத்தி, 'வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் கொடுமைகள் செய்தால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? அகதியாக்கப்பட்டது அவர்கள் குற்றமா? அகதியாக்கிய நாட்டில் அவர்கள் பிறந்ததுதான் குற்றமா? அல்லது அடைக்கலம் தேடி இந்த நாட்டை நம்பி வந்ததுதான் குற்றமா? இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேசப் பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படிச் செய்வது முறைதானா? இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? அன்றைக்கு இத்தகைய கொடுமைகள் நடந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் இந்தியாவிலுள்ள புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா? உலகம் தழுவி நேசித்து மனிதப்புனிதர்களாக அவர்கள் உயர்ந்திருக்கத்தான் முடியுமா? உலகிற்கு அன்பையும், அறத்தையும் கற்பித்த ஞானிகள் பலர் வாழ்ந்த இந்த நாடானது, நம்மைப்போல இரத்தமும், சதையும், உயிரும், உணர்வும் கொண்ட சக மனிதர்களிடம் இப்படி வெறுப்புகாட்டி விரட்டுவது முறைதானா? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்தக் கூடுதல் சலுகையும் இந்த நாடு தரவேண்டாம். குறைந்தபட்சம் நம்மை மனிதர்கள் என்பதற்காவது மனிதநேயத்தோடு நடத்தலாமே?
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் ஜெகநாதனை காலணியால் தாக்கிய தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், இராமநாதபுரத்தில் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சாதிகள் இல்லையடி பாப்பா என்று,
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்!
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா; என்று,
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி, கவிப்புரட்சிக்கு வித்திட்ட பைந்தமிழ் பாவலன்!
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? என்று,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்துப் பாடச்செய்த கவிவேந்தன்!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! என்று பாடி,
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோமென
தரணி எங்கும் தமிழ்ப் புகழ் பாடிய சொல்லின் செல்வன்!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு! என்று,
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! என்று,
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்குப்
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்!
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ! என்று,
கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது
துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது
வெஞ்சினம் கொண்டு வெகுண்ட கவிவேங்கை!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு
நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; என்று
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடி பெண்ணியம் போற்றிய பெருங்கவி!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என்று,
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட
இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி
தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த செந்தமிழ்ப் பாவலன்!
பெரும்பாவலர் நம்முடைய பாட்டன் பாரதியார் அவர்களின் தமிழ்ப்புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் கைவிட வேண்டும்!
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து 2000 ஏக்கர் பரப்பளவில் 38,000 கோடி முதலீட்டில், தென்கொரிய நிறுவனத்தின் மூலம் புதிதாகக் கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக அரசு அறிவித்துள்ள 2000 ஏக்கரில் ஏறத்தாழ 1000 ஏக்கர் நிலமானது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஏழை எளிய மக்கள் பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள் என்றாலும் அவை உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, கருணை அடிப்படையில் உப்பு உற்பத்திக்காகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும். அவற்றைக் கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதென்பது கொடுங்கோன்மையாகும்.
வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வேளாண்மை செய்யும் விளைநிலங்கள், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள், மீன்பிடி தளங்கள் அமைந்துள்ள கடற்கரைகள், மக்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், இயற்கையின் அருங்கொடைகளான ஆறுகள், அருவிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயலாகும். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு எதை வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்? அடுத்த தலைமுறையிடம் எவற்றைக் கையளிக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு உணவாக எதைக்கொடுக்கப்போகிறீர்கள்?
உணவுகள் அனைத்துக்கும் அடிப்படையானது உப்பு. உப்பினை உப்பளங்களங்களில்தான் உற்பத்தி செய்ய முடியுமே தவிர, கப்பல்கட்டும் தளங்களில் அல்ல; எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உணவு உற்பத்தி நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து, அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து இரத்தம் குடிப்பதற்குச் சமமாகும்.
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட்ட தவெக அரசு, ஓசூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிடாதது ஏன்? தற்போது தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து உப்பளங்கள் மீது கப்பல்கட்டும் தளம் அமைக்க முயல்வது ஏன்? அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நவீனம், நாகரீகம் என்ற பெயரில் அவர்கள் நாட்டுத் தொழிற்சாலை உற்பத்திகளைக் கொண்டுவந்து குவித்து, நம் நாட்டின் கைவினைத் தொழில்களை அழித்து முடித்தனர். விடுதலை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு அழைத்துவந்து மீதமிருக்கும் பாரம்பரிய உணவு உற்பத்தி தொழில்களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதில் எங்கே இருக்கிறது விடுதலை? எங்கே இருக்கிறது மக்களின் ஆட்சி?
அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே தவிர, தொழிற்சாலைகளுக்காக மக்கள் தோன்றவில்லை. தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் இன்றி மக்களால் வாழ முடியும். ஆனால், மக்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்காது. மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறிநிற்கும்.
ஆகவே, தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இல்லையென்றால், பாதிக்கப்படும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப் போராடிய பெருந்தமிழர்! சமூகநீதிப் போராளி நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் நினைவுநாள் பெருநிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆவணி 25ஆம் நாள் (11-09-2026) காலையில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக மக்களிடம் முழங்கிய ஆகச்சிறந்த சொற்பொழிவாளர்..!
பன்மொழிப் புலமைப்பெற்ற பேரறிஞர், திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்..!
கவிநயம் மிகுந்த தமிழ்செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்ற தமிழ் இலக்கிய - இலக்கண வித்தகர்..!
தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை அழியாமல் காத்த பெரும்புலவர்!
தமிழ் தேசம் என பொருள்படும் தமிழ் நேசன் இதழ் நடத்திய பத்திரிகையாளர்..!
ஏழை மக்களுக்கு இலவசமாக வாதாடிய நேர்மைமிகு வழக்கறிஞர்..!
தற்சார்பு பொருளாதாரம் போற்றிய புரட்சியாளர்..!
6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணைப்பெற்று கொடுஞ்சிறை கண்ட விடுதலை வீரர்..!
வணிகர், கட்டுரையாளர், நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், பதிப்பாளர், தத்துவவாதி என்று பன்முக ஆற்றல் பெற்ற நம்முடைய பெரும்பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தாயக விடுதலைக்காக தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, கடைசி காலத்தில் ஊர் ஊராய் சென்று மண்ணெண்ணெய் விற்கும் வறிய நிலையில் வாடினார் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம்!
தாய் நிலத்தில் ஒரு பிடி மண்ணையும் அந்நியர் கொள்ளை கொண்டு போகக்கூடாது என்று செக்கிழுத்து, சிறைபட்டு, சொத்திழந்த பெருந்தமிழனின் ஈகப்பெருவாழ்வைப் போற்றுகின்ற இந்நாளில், நம்முடைய வீரமிகு பாட்டனார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று.
முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.
பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”
“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..!
பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..!
தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
அன்னைத்தமிழ் நிலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுகிடந்தபோது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த மாவீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் மாமன்னன் பூலித்தேவன் அவர்கள்!
'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்!
எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன். அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.
பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்
துணிவு எங்கிருந்து உங்களுக்கு
வந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;
காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?
மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை;
காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல்,
அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல்,
அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;
அது எமது மண்ணின் அடையாளம்!
அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;
மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!
(1/2)
🌴 பலகோடி பனைத் திட்டம் & பத்தாண்டு பசுமை திட்டம்! 🌴
மண் வளம் காக்கும் மாபெரும் முயற்சியில்...அப்பா செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதல்படி,
எங்கள் கிராமத்தில் நாங்கள் முன்னெடுத்த பனை விதைப்புப் பணி,இன்று வெற்றிகரமாக வளர்ந்து நிற்கிறது! 🌱
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
நேற்று (23.08.2026) அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் - காவிரி வனவிலங்கு சரணாலயப்பகுதியில் தொலைந்து போன தன் மாடுகளைத் தேடிச்சென்ற 3 அப்பாவித் தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையைக் கண்டித்து - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?
அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா?
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?
மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?
தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?
அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி