மக்கள் நலன் மட்டுமே நோக்கமேத் தவிர, எவ்வித ஈகோவும் பாமகவிற்கோ தலைவர் அன்புமணி அவர்களுக்கோ இல்லை!
மூன்று படமுமே முதல்வராக இருந்தவர்களிடம் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கிய போது!
முதலாமவர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆணையம் அமைத்தார், சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டார்.
இரண்டாமவர் அமைத்த ஆணையத்தையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வேடிக்கைப் பார்த்தார்.
மூன்றாமவர் தேர்தலுக்கு முன்னரே பாமக சொன்னதையே வாக்குறுதியாக சொன்னார். ஆட்சிக்கு வந்த பின்னரும் செய்வேன் என உத்திரவாதம் அளித்திருக்கிறார்.
தேர்தலில் தோல்வியடைந்தோம் என்பதற்காக முடங்கிப் போகும் கட்சியல்ல, பாட்டாளி மக்கள் கட்சி.
மக்கள் நலன் மட்டுமே முதன்மையானது, அதிகாரத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும், மக்களுக்கானதை கேட்டுப் பெறுபவரே மக்கள் தலைவன்!
மனு கொடுக்கும் தலைவராக இல்லாமல், மனுவைப் பெறும் தலைவராக மக்கள் அன்புமணி அவர்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மனு அளிக்கும் நிலையே இல்லாமல் அனைத்தையும் செவ்வனே செய்து முடித்திருப்பார்.
ஆனாலும் எவ்வித தனிமனித ஈகோவிற்கு இடம் அளிக்காமல், மக்களுக்காக நிற்கும் தலைவர் அன்புமணி அவர்களின் தொண்டனாக இருப்பதை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறேன்!
#AnbumaniRamadoss #PMK #CasteCensus
"சமூக நீதி சர்வே :முதலமைச்சர் விஜய் அவர்களிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அளித்த மனுவின் விவரம்!"
மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, வணக்கம்!
பொருள் : தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ளக் கோருதல் - தொடர்பாக
தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த மனுவை தங்களிடம் வழங்குகிறேன்.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்து மக்கள் விரும்பும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் சிக்கல்களில் மிகவும் முதன்மையானது தற்போது நடைமுறையில் உள்ள சமூகநீதியை பாதுகாப்பதும், அனைவருக்கும் முழுமையான சமூகநீதியை வழங்குவதும் ஆகும்.
தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் சமூகநீதிக் கொள்கை ஆகும். இந்தியாவில் 100% இட ஒதுக்கீட்டை 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த மாநிலம் என்ற சிறப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இப்போதும் 50% உச்சவரம்பு என்பதைக் கடந்து 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவது மட்டுமின்றி, அதற்கான சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்த ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு தான் உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புக்கு காரணமான 69% இட ஒதுக்கீட்டிற்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மே 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்த சில மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதைக் காரணம் காட்டி இணை வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தாலும் கூட, இரு முதன்மை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படலாம். அப்போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போதிலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடையவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியலின அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன. இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சமூகத்திற்கும் அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான். இவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் அவர்களை முன்னேற்ற முடியும். அதற்கான அத்தியாவசியத் தேவை தான் சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பு.
மூன்றாவதாக சமூகநீதியைக் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, வசிப்பிடம், வாழ்க்கைத் தரம் போன்ற அடிப்படையான தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தொகுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை இந்தத் தரவுகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இந்த அடிப்படைத் தரவுகளை சமூகநீதி சர்வே மூலம் தான் திரட்ட இயலும்.
கல்வியிலும், சமூக நிலையிலும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகள் முடிவு செய்தாலும் அதை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, நவீன, நிகழ்கால, பொருத்தமான தரவுகள் (Modern, Contemporary, Pertinent Data) இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் கூறியுள்ளன. இத்தகைய சூழலில், அவற்றைத் திரட்டுவதற்காக தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே மேற்கொள்ள வேண்டும்.
2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அந்தக் கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் போதுமானவையாக இருக்காது. தேசிய அளவில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில மேக்ரோ தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு மாநிலங்களில் தேவைப்படும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்கவே முடியாததாகும்.
தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்திலும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசால் மேற்கொள்ள முடியும். இந்த சட்டத்தின்படி சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று பிகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. அந்தத் தீர்ப்புகளுக்கு உச்சநீதிமன்றமும் தடை விதிக்கவில்லை.
இந்தியாவில் பிகார், தெலுங்கானா, ஒதிஷா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சர்வேயை நடத்தியுள்ளன. கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் இரு முறை சாதிவாரி சர்வேயை நடத்தியிருக்கிறது. பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேக்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற சமூகநீதி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற மேலும் பல மாநிலங்களிலும் சமூகநீதி சர்வேக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும் இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 46 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். இந்த கோரிக்கைக்காக சென்னையில் 05.06.2026-ஆம் நாள் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்திலும் தங்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் திரு. வீர. விக்னேஷ்வரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, திரு. இராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் திரு. எம்.ஏ.முத்தழகன், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் திரு. கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இயக்குனர் திரு.சோழன் மு. களஞ்சியம், அ.ம.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திரு.செந்தமிழன், திருமிகு. சி.ஆர். சரஸ்வதி, தே.மு.தி.க.வின் திரு. வி.சி. ஆனந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன், கொ.ம.தே.க பொதுச்செயலாளர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன், த.மா.கவின் திரு.விடியல் சேகர், திரு.முனவர் பாஷா, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு.பூவை. ஜெகன் முர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திரு. என்.ஆர். தனபாலன், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் டாக்டர் இராஜா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திரு. கே.சி. திருமாறன்ஜி, தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர் திரு. கே.கே.செல்வக்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் திரு. சண்முகம், புதிய தமிழகம் கட்சியின் திரு. சங்கர் குரு, இந்திய தேசிய லீக் கட்சியின் திரு. தடா ரஹீம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ.தனியரசு, வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.அண்ணா சரவணன், பறையர் பேரவைத் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி, தமிழ்நாடு யாதவ மகாசபை இணைப் பொதுச் செயலாளர் திரு. என்.எஸ்.சேதுமாதவன், நாடார் மகாஜன சங்கத்தின் திரு. ஏ.வி.எஸ். மாரிமுத்து, விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பின் திரு. சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள், குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த திரு. கே.செல்வராசன், மிழலை நாடு மக்கள் கட்சியின் திரு. விவேகானந்தன், கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் திரு. சி.ஆறுமுகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திரு.சிரஞ்சீவி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் திரு.முத்து கிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவையின் திரு.கோவை ரவிக்குமார், வீரபத்திர ராஜகுல பேரவையின் திரு.தா. வசந்தன், தமிழ்நாடு நாடார் சங்கத்தின் திரு. சௌந்திரகுமார் நாடார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜியும் இதே நிலைப்பாட்டைத் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சாதிவாரி சர்வே நடத்தப்படுவதை ஆதரிப்பதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; அது குறித்த அறிவிப்பை ஆளுனர் உரையின் போது தமிழக அரசு வெளியிட வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி மற்றும் சமூகத் தலைவர்கள் சார்பில் தங்களிடம் வலியுறுத்துவதற்காகவே தங்களை நேரில் சந்தித்து இந்த மனுவை வழங்குகிறேன்.
தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பதில் தங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தங்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக, ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியையும், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூகங்கள்ன் கோரிக்கையையும் நிறைவேற்றும் வகையில் 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்த்தப்படவிருக்கும் ஆளுனர் உரையில் வெளியிடுவதுடன், அதற்கான அரசாணையையும் உடனடியாக பிறப்பித்து சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்களின் ஆட்சிக்காலத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் அது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், தங்களுக்கும் பெரும் பெருமை சேர்க்கும்.
மிக்க நன்றி!
தங்கள் அன்புள்ள,
(மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)
பெறுநர்:
உயர்திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள்,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
#cmvijay #AnbumaniRamadoss #PMK #CasteSurvey #CasteCensus
"சாதிவாரி சர்வே ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும். தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்'' - முதல்வரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் வலியுறுத்தல்....
``முதலமைச்சர் விஜய்யை, சுமார் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன். தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மாநில அரசு சாதிவாரி சர்வே நடத்தினால் தான் துல்லியமாக இருக்கும். சாதிவாரி சர்வே குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.''
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பேட்டி
#cmvijay #AnbumaniRamadoss #PMK #CasteSurvey #CasteCensus
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் கிழக்கு ஒன்றியம் பொத்தரை கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தபோது.!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் கிழக்கு ஒன்றியம் குறும்பூர் கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தபோது.!
“தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே ( #CasteSurvey ) நடத்துவதன் தேவை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் அனைத்துக் கட்சி, சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம்”
— தீர்மானம் —
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்!
வளர்ச்சியும், வீக்கமும் தோற்றத்தில் ஒன்றாக இருக்கக் கூடும். ஆனால், மருத்துவக் கண்ணோட்டத்தில் இரண்டும் வேறு வேறானவை என்பது மட்டுமின்றி ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் முன்னேறினால் தான் அது மாநிலத்தின் வளர்ச்சியாகக் கருதப்படும். மாறாக, சில தரப்பினர் மட்டும் வளர்ச்சியடைந்து, பல தரப்பினர் வளர்ச்சிப் படிக்கட்டுகளில் பின்தங்கியிருந்தால் அது வீக்கம், அதாவது சமச்சீரற்ற வளர்ச்சியாகவே பாதிக்கப்படும். இதனால் சமூகங்களிடையே சமநிலை பாதிக்கப்படுவதால் சமூக மோதல்கள், குற்றங்கள் போன்றவை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டிலும் இத்தகைய சமச்சீரற்ற வளர்ச்சிப் போக்கு காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து நிலைகளிலும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றால், எங்கெல்லாம் வளர்ச்சிக் குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டும். அதற்கான கருவி தான் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகங்களும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநிலை ஆகியவற்றில் எந்தெந்த நிலையில் உள்ளன என்பது சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும். அதனடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியலின அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன. இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சமூகத்திற்கும் அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான். இவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் அவர்களை முன்னேற்ற முடியும். அதற்கான அத்தியாவசியத் தேவை தான் சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பு.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் சமூகநீதிக் கொள்கை ஆகும். இந்தியாவில் 100% இட ஒதுக்கீட்டை 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த மாநிலம் என்ற சிறப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இப்போதும் 50% உச்சவரம்பு என்பதைக் கடந்து 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மட்டுமின்றி, அதற்கான சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்த ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு தான் உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புக்கு காரணமான 69% இட ஒதுக்கீட்டிற்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மே 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்த மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதைக் காரணம் காட்டி முடித்து வைக்கப்பட்டது. ஆனால், வேறு சில காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதிய வழக்குகளை தொடருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு புதிய வழக்குகள் தொடரப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் அவை விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் உடனடியாக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அந்தக் கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் போதுமானவையாக இருக்காது. தேசிய அளவில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில மேக்ரோ தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு மாநிலங்களில் தேவைப்படும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்கவே முடியாததாகும்.
தேசிய அளவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டும் தான் மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் சமூகநீதி நடவடிக்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு தேவையான சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து வகை அமைப்புகளும் மேற்கொள்ள முடியும். இந்த சட்டத்தின்படி சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று பிகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. அந்தத் தீர்ப்புகளுக்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றமும் மறுத்து விட்டது.
இந்தியாவில் பிகார், தெலுங்கானா, ஒதிஷா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சர்வேயை நடத்தியுள்ளன. கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் இரு முறை சாதிவாரி சர்வேயை நடத்தியிருக்கிறது. பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேக்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற சமூகநீதி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற மேலும் பல மாநிலங்களிலும் சமூகநீதி சர்வேக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். தமிழ்நாட்டை இப்போது ஆட்சி செய்யும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக, ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையிலும், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையிலும் 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; அதனடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு நிலையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாமக சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி, சமூகத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்துகிறது; இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கவும், இந்த அனைத்துக் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் விரைவில் முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து சாதிவாரி சர்வே நடத்துமாறு கோரிக்கை விடுக்கவும் இந்தத் கூட்டம் தீர்மானிக்கிறது.
#CasteCensus #PMK #AnbumaniRamadoss
இன்று உலக சுற்றுச்சூழல் நாள்! #WorldEnvironmentDay உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் #NowForClimate என்பதை இவ்வாண்டின் முழக்கமாக ஐநா அவை முன்வைத்துள்ளது.
காலநிலையில் மாற்றத்தின் காரணமாக அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன! இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். இதனை எதிர்கொள்ள போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு தகவமைப்பு (Adaptation) நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் ஒரு அங்கமாக, சென்னை பெருநகருக்காக ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். (The Advisory Committee for Mitigation and Management of Flood Risk in the Chennai Metropolitan Area, led by V. Thiruppugazh IAS)
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுபாடு தடுப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சி, நீடித்திருக்கும் போக்குவரத்து என அனைத்திலும் தமிழ்நாடு முழுமை அடைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். அதன் ஒரு இன்றியமையாத பகுதியாக தமிழ்நாட்டின் சதுப்புநிலங்கள் அனைத்தையும் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இஸ்ரோ SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை (Notification) வெளியிட வேண்டும்.
சென்னை கொடுங்கையூர், பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திட்டமிடப்பட்டுள்ள மிக ஆபத்தான குப்பை எரிஉலை (Incinerator) திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்த சுற்றுச்சூழல் நாளில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
#WorldEnvironmentDay
#NowForClimate
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போது.!
#CasteCensus #PMK
பாமக, தவெக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், கொங்குநாடு மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தவாக, பார்வார்ட் பிளாக், புதிய தமிழகம், ஐஜெகே, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாய பிரதிகள் பங்கேற்று ஆதரவளித்தனர்.
திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்க இயலாத நிலையிலும் கூட்டத்தின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெர்வித்தனர்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
#CasteCensus #PMK #AnbumaniRamadoss #cmvijay
உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் -5 பல்லாவரம் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.
#WorldEnvironmentDay #NowForClimate
முதலமைச்சர் விஜய் 717 மதுக்கடைகளை 2 வாரங்களில் மூடுவதாக அறிவித்தார். ஆனால், 3 வாரங்கள் கடந்தும் 462 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 255 கடைகள் இதுவரை மூடப்படவில்லை.
செய்தி: Times of India
#cmvijay#TASMAC
“மேகதாது இல்லை, பாசனத் திட்டம் இல்லை, கொள்முதல் விலை இல்லை: முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது!”
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும் உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்டம் தேர்தலுக்கு பிந்தைய பரப்புரைக் கூட்டமாகவே அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அந்த விழா நடந்த மேடையிலேயே தமது அரசின் பயணம் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து உரையாற்றினார். அதன்பின் 3 வாரங்களாகிவிட்ட நிலையில், எந்த அரசு விழாவிலும் பங்கேற்று அவர் உரையாற்றவில்லை. அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
இத்தகைய சூழலில் தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி புனித ஜோசப் கல்லூரித் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அது அரசு விழா அல்ல... அரசியல் நிகழ்ச்சி தான் என்றாலும், முதலமைச்சராக விஜய் அவர்கள் பங்கேற்றும் முதல் பொது மேடை என்பதால், தமிழ்நாட்டுக்காக அவர் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பார், குறிப்பாக பெருமளவில் அவருக்கு வாக்களித்த விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே அவரது உரை அமைந்திருந்தது.
திருச்சி மாநகரை தமிழ்நாட்டின் இதயப் பகுதி என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மேலாக காவிரி பாசன மாவட்டத்தின் இதயமும் திருச்சி தான். காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் இன்றைய பெரும் கவலை குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது தான். ஜூன் 12-ஆம் நாளுக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஒருவேளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய வசதியாக தடையில்லா மும்முனை மின்சாரம், குறுவைத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பு திருச்சி மேடை ஆகும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது மேகதாது அணைத் திட்டம் ஆகும். கர்நாடகத்தில் மேகதாது அணையை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையிலான நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை முதல்வர் விஜய் திருச்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள் அதை செய்யவில்லை.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்பது தான். அதுகுறித்த அறிவிப்புகளும் கூட முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை.
திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்ட பாசனத் திட்டங்களில் முதன்மையானது காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும். இத்திட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வெறும் 3% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் பகுதி உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த உழவர்களுக்கும் முதல்வர் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக உழவர்களுக்கு அளித்த மிகப்பெரிய ஏமாற்றம் பயிர்க்கடன் தள்ளுபடி தான். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5000 முதல் ரூ.50000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் கூடுதலான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில், வெறும் ரூ.2000 கோடிக்கும் குறைவான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நடந்த குளறுபடிகளை முதலமைச்சர் திருச்சியில் சரி செய்வார் என்று பார்த்தால், அதையும் அவர் செய்யவில்லை.
உரம் விலை உயர்வு, கொள்முதல் நிலையக் குளறுபடிகள், மணல் கொள்ளையை தடுப்பது, ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவது என ஏராளமான விஷயங்களில் முதலமைச்சரின் முத்தான அறிவிப்புகளை உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சரோ அது குறித்தெல்லாம் எதையும் பேசாமல் எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் தேர்தல் பரப்புரையைத் தான் நிகழ்த்தினார். தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகி விட்ட பிறகும் கூட, அறிவிப்புகளை வெளியிடாமல் பரப்புரையை மட்டுமே செய்வதை ஏற்க முடியாது.
விஜய் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனியாவது உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#PMK #AnbumaniRamadoss #cmvijay
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
இந்த Polimer News செய்தி உண்மைதானா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவு படுத்த வேண்டும்:
மதுரை திருப்பரங்குன்றம் - முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கடையின் பார் உரிமையாளர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூடுதல் தகவல்..
#TASMAC #cmvijay
மக்களின் உணர்வுகளை மதிக்க மறுத்துவருக்கு முனைவர் சௌமியா அன்புமணி MLA எதிர்ப்பு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் மாற்றம்!
பழைய பேருந்து நிலையத்தை புறக்கணித்து, புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதில் மும்முறமாக இருந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, எதிராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வாயிலாகவும், தர்மபுரி சட்டப்பேரவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் பேட்டி வாயிலாகவுப் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி இருந்த நிலையில், இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு சரவணன் என்பவர் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இடையே பாமக தலைவர் அறிக்கை வெளியானவுடன், பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அதனை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#AnbumaniRamadoss #Dharmapuri
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அக்கரை காட்டூர் கிராமத்தில் எங்கள் குலதெய்வம் அருள்மிகு குட்டியாண்டவர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் பாமக சட்டமன்ற உறுப்பினர் க. வைத்தி, பாமக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ. மகேஷ், பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர் தி. அழகரசன், திரு. இராஜவேல், திரு. கி. இராமரத்தினம். பசுமைத் தாயகம் இராகவன் உள்ளிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
#குட்டியாண்டவர் #கும்பாபிஷேகம்
முதலமைச்சர் விஜய் அவர்கள் மூட ஆணையிட்ட717 மதுக்கடைகளில் எத்தனை மூடப்பட்டன? அவற்றை வேறு இடங்களில் திறக்கவே கூடாது!
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக உள்ள மதுக்கடைகளை இரு வாரங்களில் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்த நிலையில், பெரும்பான்மையான மதுக்கடைகள் மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றமளிக்கின்றன.
பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை அடுத்த இரு வாரங்களில் மூடும்படி கடந்த 12&ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்தார்கள்.
ஆனால், மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டியும், முதலமைச்சர் உத்தரவிட்டவாறு இரு வாரங்களில் 717 மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும் கடந்த 23-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து மே 23-ஆம் தேதி வரை 436 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள கடைகளும் குறித்த காலத்திற்குள் மூடப்பட்டு விடும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்திருந்தார்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் அளித்த இரு வாரக் காலக்கெடு மே 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. நேற்றுடன் 16 நாள்கள் முடிவடைந்து விட்டன. ஆனால், 717 மதுக்கடைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. பல இடங்களில் இன்னும் மதுக்கடைகள் மூடப்படாமல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் மூட ஆணையிட்ட 717 மதுக்கடைகளில் எத்தனை மதுக்கடைகள் கடந்த 26-ஆம் தேதிக்குள் மூடப்பட்டன என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அவற்றில் இதுவரை மூடப்படாத மதுக்கடைகளை இன்றைக்குள் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இப்போது மூடப்படும் 717 மதுக்கடைகளும் வேறு இடங்களில் திறக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu