கானக் குயிலே
காலமானாயா?
அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?
‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?
தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?
‘நாதம் என் ஜீவனே’ என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே
சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!
நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை
கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்
‘தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே
அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்’
வாழ்க நீ அம்மா!
#ஜானகி
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், உலகப்புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசை உலகின் ஒப்பற்ற குரலாக திகழும், பத்ம விபூஷண் விருது பெற்ற பின்னணிப் பாடகி திருமதி S. ஜானகி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையும், ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
பல தலைமுறைகளாக தனது இனிமையான குரலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அவர், எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களின் மூலம் என்றும் மக்களின் நினைவில் நிலைத்திருப்பார். இசைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பும், சாதனைகளும் காலத்தால் அழியாதவை.
மாயி திரைப்படத்தின் "சூரியனே" பாடல், ரிஷி திரைப்படத்தின் "வா வா பூவே வா" பாடல், நாட்டாமை திரைப்படத்தின் "கொட்டப்பாக்கும்" பாடல், சாமுண்டி திரைப்படத்தின் "முத்துநகையே" பாடல், I love India திரைப்படத்தின் "ஆடி வரும் பல்லாக்கு" பாடல் என எண்ணற்ற திரைப்படங்களில் அவரது இளமையான குரலால் பாடிய தருணங்களை நினைவுகூறுகிறேன்.
அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.