இரங்கல் அறிக்கை.
என் அன்பு மாமா எ.ராமானுஜம் அவர்கள் மறைந்தார்!
பிறப்பும் இறப்பும் சேர்ந்ததே வாழ்வு என்றாலும், ஒருவரின் இழப்பில் அவருடனான அன்பும், பழகிய பாசமும், வாழ்ந்த வாழ்வும், அவரின் உயர்ந்த குண நலன்களும் கண்முன் வந்து மனதை நிறைக்கும்.
அப்படியான நினைவுகளை நினைத்துப்பார்க்கிறேன்.
என் தாயார் ரேணுகா அம்மாவின் உடன் பிறந்த இரண்டாவது அண்ணன். நம் இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்களின் மைத்துனர். என் தாய்மாமா ராமானுஜம் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று 11.11.2024 மறைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் வசித்துவந்தவர். தலைவர் மீதும் அவருடைய அரசியல் மீதும் தீராத பற்றுடையவராகவும், தலைவருக்கு உற்ற உறுதுணையாகவும் கடந்த 60 ஆண்டுகாலமாக வாழ்ந்தார். தலைவரின் ஆரம்ப கால அரசியலிலும், கட்சி தொடங்கிய பிறகும், தன்னுடைய இறப்புவரையிலும் அந்த நிலையிலிருந்து கொஞ்சமும் விலகாதவர்.
அவரது மகன்களும், அவரது குடும்பமும் தலைவர் மீது மரியாதை கொண்டவர்களாகவும், தலைவர் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று உளமாற விரும்பியவர்களாகவுமே இருந்தார்கள். அதிலும் அவர் மகன் தியாகி சரவணசுரேஷ் அவர்கள் தலைவர் மீது அன்புநெறி பாசவெறி கொண்டிருந்தார். அவர், தலைவர் பங்கேற்கும் தென்மாவட்ட கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கக்கூடியவராகவும், அனைத்து நடைபயணங்கள், ஆர்ப்பாட்டக்களங்களில் பங்கேற்றவர். ஒவ்வொரு தேர்தல் களங்களிலும் முன்வரிசை தொண்டராக களத்தில் நிற்பவர். ஒருபோதும் மேடைகளிலோ, புகைப்படங்களிலோ தன்னை முன்னிருத்திக்கொள்ளாதவர்.
அப்படிப்பட்ட தன் மகன் சரவணசுரேஷ், தலைவரை சில அயோக்கியர்கள் கொச்சைப்படுத்தியதற்காக மனமுடைந்தவராக, தன் மேனியில் தீவைத்து மாண்டுபோனபோதும், தன் மகன் இழந்த துயரில் கூட அரசியல் மீதோ தலைவர் மீதோ வெறுப்புணர்வு வந்துவிடாதவாறு கூடுதல் அன்பை பொழிந்தவர் என் மாமா ராமானுஜம் அவர்கள்.
கட்சி தலைவர் நலனே அனைத்திலும் முக்கியம் என்று தன் மகன் இழப்பிழும் உறுதியோடு நின்றவர் மாமா ராமானுஜம்.
ஆரம்பக் காலகட்டத்தில் பருத்தி வியாபாரத்தில் கோலாச்சியவர். 1960களில் தென்மாவட்ட கிராமங்களில் கார்களை பார்ப்பதே அதிசயம். ஆனால் அப்போதே ஆஸ்ட்டின் காரை வைத்திருந்தவர் தான் மாமா இராமானுஜம் அவர்கள். வியாபாரத்திலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குடன் வாழ்ந்தவர். அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தின் வரதராஜ முதலாளியுடன், சென்-ஜான்ஸ் பள்ளி பருவக்காலம் தொட்டு நெருங்கிய நண்பராக இருந்தவர்.
கண்ணியமானவர். ஒருதடவை கூட அதிர்ந்து பேசாதவர் என்ற அளவிற்கு மிகவும் மென்மையின் உருவானவர். இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடுபார்க்காதவர். நல்ல குண நலன்கள் நிறைந்த பண்பான மனிதர். அவருடைய இறப்பு என் தாயார் ரேணுகா அம்மா அவர்களுக்கு பேரிழப்பு ஆகும்.
கடந்த வாரம் நடந்த என் மகளின் திருமணத்திற்கு, அவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலாமல் போய்விட்டது.
அவரின் இறப்பு செய்தி அறிந்த நேற்று, என் மகள் மறுவீடு செல்லும் நிகழ்வால் துக்கவீட்டிற்கு செல்ல முடியவில்லை; தலைவருக்கு சில மாதங்களுக்கு முன் தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் தலைவர் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், என் அம்மாவும் இறப்பு வீட்டில் இருப்பதால் இன்றும் என்னால் அங்கு சென்று மாமாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
கடைசியாக என் மாமா ராமானுஜம் அவர்களின் முகத்தை காண முடியாத, அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத சூழ்நிலை என் மனதை பெரிதும் வாட்டுகிறது.
நாளை மறுநாள் 14 ஆம் தேதி இயக்கத்தோழரின் திருமணத்தை நடத்திவைக்க மதுரை செல்ல உள்ளதால், அப்படியே என் மாமா இல்லத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
தாங்க முடியாத மன வேதனையுடன், கழகத்தின் சார்பாகவும், தலைவரின் சார்பாகவும் என் ஆழ்ந்த இரங்கலை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
12.11.2024
மாண்பும் மகிழ்வும் நிறைந்த என் மகளின் திருமண விழா!
எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன், ஆன்றோர் சான்றோர் பெருமக்களின் அருளுடன், இயற்கையின் பேராதரவுடன், உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன், மறுமலர்ச்சி இதயங்கள் இனிக்க இனிக்க வரவேற்பும், தமிழ்ப் பாடல்கள் மணக்க மணக்க திருமணமும்
பிரமாண்டமாகவும், சீரும் சிறப்போடும், எல்லோர் மனமும் நிறைவாகும் வகையில் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த திருமண நிகழ்வை ஒருங்கிணைத்த மற்றும் வருகைத்தந்து வாழ்த்திய இயக்கத்தோழர்கள் தங்களின் சொந்த மகளுக்கு, சொந்த சகோதரிக்கு, தங்கள் வீட்டு பிள்ளைக்கு நடந்த திருமணத்தைப்போல எண்ணி கலந்துகொண்டதை மணமக்களை வாழ்த்தியதை அவர்கள் ஒவ்வொருவரின் முகமலர்ச்சியில் அறிந்துகொண்டேன். அதனால் நானும் மனமகிழ்ச்சி கொண்டேன்.
என் அழைப்பை ஏற்று வந்திருந்து வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், அவரோடு வந்திருந்த சகோதரி கனிமொழி எம்பி அவர்களுக்கும், முதல்வரின் மருமகன் சகோதரர் சபரீசன் அவர்களுக்கும்,
அன்றைய நாள் இன்னொரு திருமணத்திற்கு சென்றதனால் வர இயலாத போதும், எங்கள் அண்ணா நகர் இல்லத்திற்கே நேராக வந்து மணமக்களை வாழ்த்திய தமிழ்நாடு துணைமுதலமைச்சர் மாண்புமிகு சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன்.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் ஆளுமைகள், சட்டமன்ற நாடாளுமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், கலைதுறையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கில் தமிழகமெங்கிருந்தும் திரண்டு வந்திருந்த என் மறுமலர்ச்சி சொந்தங்கள் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடோ, சாதி மத பிரிவினையோ, நிர்வாகி தொண்டர்கள் என்ற பார்வையோ எள்ளளவும் அற்ற திருமண விழாவை, அனைவரும் வியந்து பாராட்டும் வண்ணம் நடத்தி முடித்திருக்கிறோம். குறிப்பாக என் மகளும் என் மருமகனும் பெரிதும் சந்தோஷப்பட்டார்கள் என்பது கூடுதல் நிறைவு.
இயக்கத்தந்தை மாமனிதர் தலைவர் வைகோ அவர்களின் எண்ணப்படி திராவிட இயக்க மாண்பின்வழி சீர்திருத்த முறையில் திருமண வரவேற்பு நிகழ்வையும், என் மகள் மற்றும் மணமகன் வீட்டாரின் விருப்பத்தின் பேரில், இந்து மத முறைப்படி திருமணத்தையும் நடத்தியிருக்கிறோம். அதிலும், பிறமொழி ஆதிக்கத்தை அறவே தவிர்த்து என் விருப்பப்படி தமிழ் மந்திரங்கள் முழங்க நடந்த திருமணம் நம் இல்லத் திருமணம்.
திருமண ஏற்பாட்டில் பல வகைகளில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சென்னை மண்டல மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அனைவருக்கும் என் இதயம் நிறைந்த கோடான கோடி நன்றிகளை தெரிவிக்கிறேன்.
குறிப்பாக, இரண்டு நாட்கள் ஊண் உறக்கம் அற்று, பகல் இரவு பாராமல் திருமண நிகழ்வை ஒருங்கிணைத்த திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் நெமிலிச்சேரி மு.பாபு, வடசென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் சு. ஜீவன் MC, தொண்டரணி ஆலோசகர் சகோதரர் பாஸ்கர சேதுபதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சகோதரர் மாவை மகேந்திரன், கழக செய்தி தொடர்பாளர் சகோதரர் மின்னல் முகம்மது அலி, திருவேற்காடு நகரச் செயலாளர் சகோதரர் கே.எஸ். பார்த்தீபன், பூந்தமல்லி நகரச் செயலாளர் சகோதரர் பூவை இரா. சங்கர், சமையல் சகோதரர் பெருந்துறை குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர், அவர்களுக்கு உறுதுணையாக விளங்கிய கங்கா ஸ்வீட்ஸ் அய்யா நல்லையா அண்ணாச்சி, அய்யா சுப்பையா அண்ணாச்சி அவர்களுக்கும், சமையல் மேற்பார்வையிட்ட கழக தோழர்கள், எப்போதும் என் மனம் கவர்ந்த தொண்டரணி தோழர்கள் அனைவருக்கும் என் உணர்வுபூர்வமான நன்றிகளை என் அன்பின் வழி தர கடமைப்பட்டுள்ளேன்.
இன்னும் இறுகப் பற்றி
மீண்டும் தங்கள் அனைவருக்கும்
நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
11.11.2024
புதுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வேயிடம் நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 03.11.2024 பிற்பகல் 03.00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட இருக்கிறது. நம் கோரிக்கையை ஏற்று சிறப்பு இரயில் அறிவித்த தென்னக ரயில்வேக்கு நன்றி.
மேலும் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு புதுக்கோட்டை வழியாக இயங்கும் சிறப்பு ரயிலை வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு பொங்கல் வரை நீடிக்க செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனவே தலைவர் வைகோ அவர்கள் பற்றியும் & மதிமுக பற்றியும் உண்மை நிலை தெரிந்தும் அரசியலுக்காக விமர்சனம் செய்யும் பாஜக ராமசீனிவாசன் அவதூறு கருத்துக்களை விருதுநகர் & தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல அங்கு இருக்கும் பாஜகவினரே ஏற்று கொள்ளமாட்டார்கள்.
வெற்று அரசியலுக்காக இனியும் அவதூறு பொய் கருத்துக்களை பரப்புவதை நிறுத்திவிடுங்கள்.
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
22.10.2024
பாஜகவை சேர்ந்த ராமசீனிவாசன் அவர்களின் பேட்டி ஒன்றை ஊடகங்கள் வாயிலாக காண நேர்ந்தது.
உண்மைக்கு புறம்பான முறையில் அவதூறு கருத்துக்களை அதில் தெரிவித்து இருந்தார்.
சீன பிளாஸ்டிக் லைட்டர்கள் & அதை தயாரிக்க தேவைப்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என நீண்ட காலமாகவே மதிமுக குரல் கொடுத்து வந்து இருக்கிறது.
நான் கோவில்பட்டிக்கு சென்று இருந்த போது தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் என்னை சந்தித்தனர்.
சீன லைட்டர்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்படுவதால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் மொத்தமாக முடங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தி தரும்படி கோரிக்கை வைத்தனர்.
நான் இந்த விவகாரம் குறித்து விரிவாக தமிழ்நாடு முதல்அமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று 21-04-2022 அன்று கோரிக்கை கடிதம் அளித்து இருந்தேன். தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து சீன லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்தார்
அதோடு இந்த கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
09-12-2022 அன்று மாநிலங்களவையில் சீன லைட்டர்கள் இறக்குமதி தடை செய்யப்பட வேண்டும் என்று முறையிட்டார் தலைவர் வைகோ.
மாநிலங்களவையில் வர்த்தகம் & தொழில் துறை இணை அமைச்சர் அனுபிரியா படேல் அவர்கள் தமிழ்நாடு அரசிடம் இருந்தும் சீன லைட்டர்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று 08-9-2022 அன்று தேதியிட்ட கடிதம் மூலம் கோரிக்கை வந்துள்ளது என தலைவர் வைகோ அவர்களிடம் தெரிவித்தார்.
இதனை அடுத்து சீன லைட்டர் இறக்குமதிக்கு தடை விதித்து ஒன்றிய அரசு அறிவித்தது.
பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று எண்ணிய நிலையில், சீன பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிக்கப் பயன்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கே லைட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது ஒன்றிய அரசு ஒருமுறை பயன்படுத்த கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது.
இந்த அறிவிப்பின் மூலமாக இந்த தொழிலையே நம்பி இருக்கும் மக்களின் வாழ்வதாரம் காக்கப்படும். எனவே ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இந்த சீன லைட்டர் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருந்தேன்.
இதில் என்ன குற்றம் கண்டுபிடித்தாரோ ராமசீனிவசான் தெரியவில்லை.
இன்றல்ல நேற்றல்ல கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தென்மாவட்டங்களில் பட்டாசு & தீப்பெட்டி தொழிலாளர்களின் காவலனாக மதிமுக திகழ்கிறது. எங்கள் இயக்க தந்தை வைகோ அவர்கள் பல முறை அவர்களுக்கு ஏற்பட்ட பல சிக்கல்களை தீர்த்து கொடுத்து இருக்கிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பாக சீன பட்டாசுகளை இறக்குமதி செய்யலாம் என்ற அறிவிப்பு வந்த உடன், தமிழ்நாட்டில் பட்டாசு தொழில் முழுவதுமாக முடங்கி போய்விடும் என பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தலைவர் வைகோ அவர்களிடம் நேரில் வந்து முறையிட , வெறும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய பிரதமரை சங்க நிர்வாகிகளோடு நேரில் சென்று சந்தித்து, சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கான உத்தரவை ரத்து செய்ய வைத்தார்.
இப்படியாக பட்டாசு தொழில் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் & தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளையும் எத்தனை முறை தலைநகர் டெல்லிக்கு அழைத்து சென்று இந்திய பிரதமர் & துறை சார்ந்த அமைச்சர்களை சந்திக்க வைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார் என்பது தமிழ்நாடு பட்டாசு & தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினருக்கும் மட்டுமல்ல பட்டாசு & தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
எங்களுக்கு மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் கவலை இல்லை. மக்கள் நல பிரச்சினைகளுக்காக யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களிடம் முறையிடுவோம்.
எங்களது உழைப்பினால் கிடைக்கப்பெற்ற திட்டங்களுக்கு கூட மற்றவர்கள் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது கண்டு இருக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் எப்போதும் மதிமுகவிற்கு இல்லை.
கூட்ட நெரிசலை தவிர்க்க தீபாவளி பண்டிகை முடித்து பணிக்கு சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு இரயில் இயக்கக் கோரிக்கை.
தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதோடு, அலைபேசியிலும் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தேன். அதுபோலவே புதுக்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி, மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியும், அலைபேசி வழியாகவும் கேட்டுக் கொண்டேன். பரிசீலனை செய்துவிட்டு திரும்ப அழைப்பதாக கூறினார்கள்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
24.10.2024
தீபாவளி பண்டிகைக்காக வழங்கிய சிறப்பு இரயில் சேவைக்கு நன்றி கூறவும், நாம் கேட்ட கோரிக்கைகளின் அவசியத்தை எடுத்துக் கூறவும் மீண்டும் இரயில்வே கோட்ட மேலாளர்களிடம் பேசினேன்.
தீபாவளி பண்டிகை முடித்து சென்னை திரும்பும் திருச்சி தொகுதி மக்களுக்கு, 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி - சென்னை மற்றும் புதுக்கோட்டை - சென்னை சிறப்பு இரயில் சேவை வேண்டி, கடந்த 23.10.2024 அன்று, திருச்சி மற்றும் மதுரை இரயில்வே கோட்ட மேலாளருக்கும், தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் நான் கடிதம் எழுதியும், அலைபேசி வழியாகவும் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனை நிறைவேற்றும் முதல் கட்டமாக, திருச்சி மற்றும் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் அட்டவணையை தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் வரிசை எண் 2, 5, 6, 7, 9 திருச்சி வழியாகவும், வரிசை எண் 5 புதுக்கோட்டை வழியாகவும் இயக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனை வரவேற்கும் வேளையில்,
பிற ஊர்களில் இருந்து, திருச்சி மற்றும் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் இரயில்களால் கூட்ட நெரிசலை முழுவதுமாக கட்டுப்படுத்த இயலாது. புறப்படும் ஊர்களிலேயே இரயில்களின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி, unreserved எனப்படும் முன்பதிவில்லா பெட்டிகளும் முழுவதுமாக நிறைந்துதான் திருச்சியை மற்றும் புதுக்கோட்டையை வந்தடையும். எனவே இந்த சிறப்பு ரயில்கள் எனது திருச்சி தொகுதி மக்களுக்கு முழு பயன்களைத் தராது.
இதனை, திருச்சி மற்றும் மதுரை இரயில்வே கோட்ட மேலாளருக்கு அலைபேசிவழியாக இன்று மீண்டும் எடுத்துக்கூறினேன். அவர்களும் எனது கோரிக்கையை புரிந்து கொண்டு, அது இன்னமும் பரிசீலனையில் தான் இருப்பதாகவும், இதுகுறித்து மீண்டும் தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசுவதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் புறப்பட்டு விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வரையும் மற்றும் புதுக்கோட்டையிகிருந்து புறப்பட்டு விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வரையும் இரண்டு சிறப்பு இரயில் சேவை கிடைக்க வேண்டும். அதுதான் திருச்சி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும், எனது கோரிக்கையாகவும் உள்ளதை மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தினேன்.
இது குறித்த நல் அறிவிப்பிற்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
27.10.2024
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று ஆய்வு செய்தேன்.
திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய அருணா, டாக்டர் அருண்ராஜ் மற்றும் துறைத் தலைவர்கள் இந்த ஆய்வுப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள்.
ஆய்வில் இதயவியல் பிரிவு, புற்றுநோய் பிரிவு குழந்தைகள் நலப்பரிவு, மகப்பேறு பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, மற்றும் பல் மருத்துவப் பிரிவு , அறுவைச் சிகிச்சைப் பிரிவு என ஒவ்வொரு துறைவாரியாக தற்போதுள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து விரிவாக கேட்டு அறிந்தேன்.
மருத்துவமனையின் பொது உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தத் தேவைப்படுபவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
அப்போது, பொதுமக்கள் தரப்பில் இருந்து வருடா, வருடம் இருதயநோய்க்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவருகிறது. அதனால் இருதய அறுவை சிகிச்சை அரங்கம், அதற்குத் தேவையான இதய அறுவைக் கருவிகள் வேண்டும். இதய அறுவை சிகிச்சை நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்.
அதேபோல, புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் ரேடியேசன் தெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கும் விரிவான ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் குமரவேல் தலைமையிலான அரசு மருத்துவர்களிடம் நான் பேசும்போது, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் இங்கு வந்திருக்கிறேன். பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார்.
ஆகவே, என்னைப் பொறுத்தவரை உங்களுக்குத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் எதிர்பார்ப்பு இவற்றை தெரிவித்தால், அரசுக்கும், மருத்துவமனைக்கும் ஒரு பாலமாக இருந்து திருச்சி அரசு மருத்துவமனையின் தரத்தை இன்னும் உயர்த்திட முயற்சிப்பேன் என்றேன்.
இதுதவிர மருத்துவ மனையில் நாளுக்கு நாள் வருகைதரும் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையையும், அரசுக்கு எடுத்துச்செல்வேன் என்றும் தெரிவித்தேன்.
இந்த ஆய்வின்போது மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹையா, தி.மு.இராசேந்திரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
29.10.2024,
திருச்சி.
இன்று இரவு, சென்னை - திருச்சிக்கு இரண்டு முன்பதிவில்லா சிறப்பு இரயில்; தென்னக இரயில்வே அறிவிப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எனது திருச்சி தொகுதி மக்களின் பயண சிரமத்தை குறைக்கும் நோக்கில், இரண்டு முறை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு நான் கோரிக்கை வைத்த நிலையில், முன்பதிவில்லா இரண்டு சிறப்பு இரயில் சென்னை - திருச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என்றும், இரவு 12.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் அரியலூர் வழியாக திருச்சிக்கு இன்னொரு இரயில் இயக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி!
அதுபோலவே, சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கும் சிறப்பு இரயில் குறித்த அறிவிப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
30.10.2024
ஆந்திர மாநில முதல்வரை சந்தித்தேன்
டெல்லியில் நேற்று மாலை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து எனது மகள் திருமண அழைப்பிதழ் அளித்தேன்.
நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலனை விசாரித்தார்.
எனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களைப் பற்றியும் கேட்டு விட்டு, மணவிழாவுக்கு தனது வாழ்த்துக்களையும் கூறினார்.
தமிழக அரசியல் நிலைமை குறித்தும், மறுமலர்ச்சி திமுக செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
09.10.2024
141 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா நோக்கி இன்று மாலை புறப்பட்ட ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் AXB613 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இவ்வாறு கோளாறு நேரிட்டால் உடனே தரையிறங்குவது தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என சமயோஜிதமாக முடிவெடுத்த விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல், இணை விமானி மைத்ரி ஸ்ரீகிருஷ்ணா ஷிடோல் அவர்கள் உடனே தரையிறங்க தயாராகியுள்ளனர்.
ஆனால், விமானத்தில் முழு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதால் தரையிறங்குவது பாதுகாப்பானது அல்ல என்று சுதாரித்துக் கொண்டு, சுமார் இரண்டரை மணி நேரம் விமானத்தை திருச்சி வானிலேயே வட்டமடிக்கச் செய்து, எரிபொருளை காலி செய்து விட்டு, மீண்டும் திருச்சியில் பத்திரமாக தரையிறக்கி நிம்மதி பெருமூச்சு விட வைத்தார் விமானி பைலட் இக்ரோம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
ஒருவேளை தரையிறங்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால், உடனடி நடவடிக்கைக்காக வேண்டி, அனைத்து அவசர பாதுகாப்பு அம்சங்களோடு திருச்சி விமான நிலையத்தை தயார் நிலையில் வைத்திட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. மா. பிரதீப் குமார் இ.ஆ.ப அவர்களுக்கும், திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.
இந்த நல்ல நேரத்தில், தவிர்க்கப்பட்ட அசம்பாவிதத்தை நினைத்துப் பார்த்தால் மனம் அச்சம் அடைவதை தவிர்க்க முடியவில்லை. வெளியில் இருந்து கவலைப்பட்ட நாமே இவ்வளவு பதைபதைப்புடன் இருந்தோம் என்றால், உள்ளே இருந்த 141 பயணிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எவ்வளவு அச்சமாக இருந்திருக்கும்? அதனால் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள்? இதில் பெரியவர்கள் குழந்தைகளில் நிலை இன்னும் மோசமானது.
ஆகவே, இந்திய ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இயக்கப்படும் பல விமானங்கள் போதிய தரத்தில் இல்லாமலும், போதிய இடைவெளியில் முழு ஆய்வுக்கு (maintenance) உட்படுத்தப்படாமல் உள்ளதையும் ,
அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும் விமானக் கோளாறுகள், சேவை குறைபாடுகள், போதுமான வசதிகள் இல்லாமை, சுத்தம் போன்ற விடயங்களில் அக்கரைகாட்டாமை போன்ற செய்தியிலும், இரண்டு விமானங்கள் எதிரெதிரே வந்தும் மயிரிழையில் தப்பினார்கள் என்று அவ்வப்போது வரும் செய்திகளின் வாயிலாகவும், நம் விமான போக்குவரத்து சேவையில் உள்ள குறைப்பாடுகளை உணர்ந்தாகவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவில் இயக்கப்படும் பயணிகளுக்கான அனைத்து விமானங்களின் தரத்தை சோதித்து உறுதிப்படுத்துவதுடன், தரமற்ற பழைய விமானங்களை ஒதுக்கிவிட்டு பாதுகாப்பில் எவ்வித அச்சுருத்தலும் இல்லாத விமானத்தை இயக்கி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும், அடிக்கடி நடக்கும் விமான சேவை ரத்து (cancellation) மற்றும் நேரம் காப்பின்மை (delayed departure and arrival) பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் மக்களின் பிரதிநிதியாக ஒன்றிய விமான போக்குவரத்துத் துறையை கேட்டுக்கொள்வதோடு, இதுபோன்ற சமிஞ்சைகளிலிருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்றால் மிகப்பெரிய அசம்பாவிதங்களை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கை விடுக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
11.10.2024
ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் சந்திப்பு.
இன்று (07.10.2024) திங்கள்கிழமை மதியம், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களை, அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், நமது கழகத்தின் மூத்த உறுப்பினரின் கோரிக்கைக்காக சந்தித்து உரையாடினேன்.
அப்போது, என் கோரிக்கைகளை கவனித்து கேட்டுக் கொண்டதுடன், நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை நலம் விசாரித்ததாகவும் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தார்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
07.10.2024
நாடாளுமன்றத் தேர்தலில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை எனக்கு ஈட்டித் தந்த, திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய இரண்டு பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு, கடந்த 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நேரில் சென்று, காலை 7:30 மணி முதல் இரவு 10 மணி வரை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டேன். 30ஆம் தேதி இறுதியில் ஆற்றிய உரையின் காணொளி
விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரம்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கிடுக!
தமிழக அரசுக்கு துரை வைகோ எம்.பி., கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மக்காசோளம், உளுந்து, பாசிப் பயிர் உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளார்கள். அதற்கு அடி உரமாக டி.ஏ.பி. தேவைப்படுகிறது.
விவசாயிகள் தனியார் கடைகளில் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்றால், அதனுடன் வேறு ஏதாவது உரத்தையும் சேர்த்து வாங்கச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து கடைகளில் விவசாயிகள் முறையிட்டபோது, எங்களுக்கு உரம் வழங்கும் நிறுவனங்கள், ஒரு உரத்தை வாங்கும்போது மற்றொரு உரத்தையும் சேர்த்துத்தான் விற்க வேண்டும் என்று எங்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இப்படி விற்க வேண்டிய நிலை இருக்கிறது என்கிறார்கள்.
விவசாயிகளின் இப்புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்கள்.
இது போன்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு பயிர்களின் அடி உரமான டி.ஏ.பி. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2024
மறுமலர்ச்சி மாமனிதர் இயக்கத்தந்தை வைகோ அவர்களின் 81 ஆவது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் தமிழர் தலை நிமிர்வு நாளாக கொண்டாடப்பட்டது!
தந்தை பெரியாரின் ஒப்பற்ற மாணவர், பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வழித்தோன்றல், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திராவிட இயக்கப் போர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுவாசக் காற்றாகவும் இதயத்துடிப்பாகவும் விளங்கும் எங்கள் இயக்கத் தந்தை வைகோ அவர்களின் 81 வது பிறந்த நாளை “தமிழர் தலை நிமிர்வு நாளாக” தமிழகமெங்கும் உள்ள மறுமலர்ச்சி திமுக தோழர்கள் ரத்ததானம் வழங்கியும், ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கியும், கொடிகள் ஏற்றி நலத்திட்டங்கள் வழங்கியும் சிறப்பாக, தன்னெழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில், வட சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நான் கலந்து கொண்ட மூன்று நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
முதலாவதாக வடசென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், கழக உயர்நிலை குழு உறுப்பினருமான மாமன்ற உறுப்பினர் அண்ணன் சு.ஜீவன் அவர்களது ஏற்பாட்டில், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், குழந்தைகளுக்கு தேவையான ஆடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பும் வழங்கினேன்.
அடுத்ததாக எழும்பூர் பகுதி கழக செயலாளர் மாமா தென்றல் நிசார் அவர்களின் ஏற்பாட்டில், சேத்துப்பட்டில் உள்ள லிட்டில் சிஸ்டர் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில், 150 பேருக்கு நண்பகல் அசைவ உணவும் வழங்கினேன்.
அடுத்ததாக ராயபுரம் பகுதி கழக செயலாளர் சகோதரர் T. விஜயகணேஷ் ஏற்பாட்டில், ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் 100 பேருக்கு பரிசு பொருட்களும் வழங்கினேன்.
இதுபோல தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்கள் ஒன்றிய நகர பகுதி கழகங்கள் சார்பில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி, இயக்கத் தந்தை வைகோ அவர்களின் 81 வது பிறந்த நாளை மக்கள் பயன் பெறும் நிகழ்வாக வடிவமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் சென்னை மண்டல மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவர் இயக்கத் தந்தை வைகோ அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
22.09.2024
அன்பில் அறக்கட்டளை சார்பில் காலம் சென்ற அண்ணன் அன்பில் பொய்யாமொழி அவர்களின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினேன்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில், அவரது தந்தை அன்பில் பொய்யாமொழி அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர் வழிகாட்டும் நிகழ்ச்சி - நலஉதவிகள் வழங்கும் விழா - சான்றோர்க்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.
அன்புச்சகோதரர் அமைச்சர் மகேஸ் அவர்களின் தாத்தா, அன்பில் அய்யா அவர்கள் திராவிட இயக்கத் தூண்களில் ஒருவர்.
தந்தைப் பெரியார் அவர்களைப் பின்பற்றி அண்ணா அவர்களுடன் இணைந்து செயல்பட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அய்யா அன்பில் பெரும் துணையாக இருந்தார்.
அய்யா அன்பில் ஏழை,எளிய மக்களிடம் மிக எளிமையாகப் பழகினார். அவர் அமைச்சர் ஆனபோதும், அப்படியே அவர்களிடம் நடந்து கொண்டார்.
அன்பில் அய்யா அவர்களிடம் சென்றால், நமது பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று இப்பகுதி பொதுமக்கள் அவரைப் பெரிதும் நம்பினார்கள்.
அன்பில் அய்யா இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை சொந்தத் தம்பியாகவே பாவித்தார். கலைஞருடன் நல்ல தொடர்பில் இருந்தபோதும், 1978-ஆம் ஆண்டு அவர் முதன் முதலாக நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆவதற்கு அன்பில் அய்யா தான் காரணமாக இருந்தார்.
அதைப்போல இன்று நான் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு அவருடைய பேரன், என் அன்புச் சகோதரர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார். அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.
நான் நன்றி அறிவிப்பின்போது பொதுமக்களிடம் தெரிவித்தவாறு, திருச்சி தொகுதி மக்களின் மேன்மைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கி போல, மருது சகோதரர்களைப் போல இணைந்து செயல்படுவோம்.
அன்பில் அய்யாவின் மறுவடிவமாக நான் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைப் பார்க்கிறேன். அதே உழைப்பு, மதிநுட்பம் இவையெல்லாம் அவரிடம் இருக்கிறது.
குறுகிய காலத்தில் அவர் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். அதனால் அவர் நாடு போற்றும் அமைச்சராக இருக்கின்றார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் அன்பில் கிராமம் பெருமைப்படுகிறது. அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருவெறும்பூர் தொகுதி பெருமையடைகிறது. நம் திருச்சி மாவட்டமே பெருமை கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் பெருமையடைகிறது.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக்கல்வித் துறையில் நாடு பாராட்டும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் சிறந்த அமைச்சராக, சிறந்த சட்டமன்ற உறுப்பினராக, சிறந்த திமுக மாவட்டச் செயலாளராக அவர் பாராட்டப்படுகின்றார்.
இங்கு திரண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் நான் சில அறிவுரைகளைச் சொல்கிறேன்.
"அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை" என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
குணம் இல்லாதவர்க்கு எவ்வுலகமும் இல்லை என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நாம் கற்ற கல்வியால் அருளைப் பெற முடியும். அரசுத் துறையில் நம்முடைய மாவட்ட ஆட்சியர் திரு.பிரதீப்குமார் அவர்களைப் போல, ஒரு உயர் அதிகாரியாக உயரலாம். ஒரு சிறந்த அமைச்சராக அன்புச்சகோதரர் திரு.அன்பில் மகேஸ்பொய்யாமொழி போல உருவாகலாம், தனியார் துறையில் கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான திரு.சுந்தர்பிச்சை போல உயரலாம் அல்லது கற்ற கல்வியின் துணையுடன் சுயதொழில் புரிந்து தொழில் அதிபராக உயரலாம்.
ஆனால், நற்குணங்கள், நற்பண்புகள் இல்லையென்றால் கற்ற கல்வியால் பயன் இல்லை. அந்தக் கல்வியால் பெற்ற அருளை இழக்க நேரிடும். அந்தக் கல்வியால் ஈட்டிய செல்வத்தை இழக்க நேரிடும்.
ஆகையால் கல்விக்கு நிகரானது நற்பண்புகள். அந்த நற்பண்புகளை பெற்றோரிடம் இருந்து பெறமுடியும். ஆசிரியர்களிடம் இருந்து பெறமுடியும். ஏன் நல்ல நண்பர்களிடம் இருந்து கூட பெறமுடியும். நல்ல நண்பர்கள் கிடைப்பதன் மூலம் இந்த குணநலன்களைப் பாதுகாக்க முடியும். ஆனால் கூடாசேர்க்கையால் தீயபண்புகள் உடைய நண்பர்களால் நாம் அனைத்தையும் இழக்க நேரிடும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
Show me your friend , I will tell what you are
"உன் நண்பனைக் காட்டு உன்னைப்பற்றிச் சொல்கிறேன்" என்பதுதான் பொருள்.
ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களை வைத்துதான் சிந்தனையும், செயல்பாடும் சார்ந்து இருக்கும்.
ஆகவே, சாதி, மத அடையாளங்களைக் கடந்து நற்பண்புகளை உடையவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சாதி, மதங்களைக் கடந்து என்று நான் குறிப்பிடும்போது ஒன்றை நினைவுகூற விரும்புகிறேன்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்..!
காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் டாக்டர் திரு.S.சந்திரகுமார் - திருமதி C.தனலட்சுமி இணையரின் மகன் டாக்டர் ஹர்ஷித் ப்ரியன், திரு.கிரிதரன் நம்மாழ்வார் - திருமதி பிருந்தா இணையரின் மகள் டாக்டர் ஸ்ருதி ஆகியோரின் திருமண வரவேற்பு இன்று 07.09.2024 திருச்சி, மேரியாட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு மலர் கொத்துக்களை வழங்கி மணமக்கள் இருவரும் இணைபிரியாாமல் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தினேன்.
நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் கே.வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல்.ராஜமாணிக்கம், தெற்கு மாவட்ட பொருளாளர் வைகோ பழனிச்சாமி,
பகுதி கழக செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத், எப். எஸ். ஜெயசீலன், முன்னாள் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜன் இளமுருகு, மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிவகாசி பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹக்கீம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
07.09.2024.
திருச்சி விமான நிலையம் குறித்தும் விமான பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்வு, நேற்று செப்டம்பர் 6, 2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் நடைப்பெற்றது. இது தொடர்பாக விமான நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த பயணிகளிடம் விமான நிலையத்தின் சேவை குறித்தும், அவர்களுக்கு வேண்டிய தேவை குறித்தும் கேட்டறிந்தேன்.
இந்த நிகழ்வில் Airport Authority of India (A.A.I) மற்றும் Central Industrial Security Force (C.I.S.F) சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட ஆலோசனைகள், கோரிக்கைகள், செய்திகள் பின்வருமாறு:
1. Runway எனப்படும் விமான ஓடுதளம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி 95% நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள ஐந்து சதவீத நிலம் எப்போது கையகப்படுத்தப்படும் என்று சென்ற கூட்டத்தில் நான் கேட்டதற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி அதனுடைய தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
2. திருச்சி விமான நிலைய வளாகத்தில் இயங்கும் வாகனங்களுக்கான கட்டணத்தை (Taxi fare) சரியான முறையில் வகுத்து, அதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவு போர்டு வைக்கப்பட வேண்டும் என்று கடந்த முறை இக்கூட்டத்தில் நான் வலியுறுத்தி இருந்தேன். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு போர்டு அமைக்கப்பட்டுள்ள தகவலை கூறினார்கள்.
3. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தொழுகையை நிறைவேற்றும் வகையில் Departure எனப்படும் புறப்பாடு பகுதியில் ஏற்கனவே உள்ள தொழுகை செய்யும் இடம், Arrival எனப்படும் வருகை இடத்திலும் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
4. ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அமீரகத்திற்கு பணிபுரிய செல்வதால், அவர்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தின் உள்ளே வரை செல்லும் பேருந்துசேவை கேட்டிருந்தோம். அதற்கு தமிழ்நாடு அரசு செவிசாய்த்து சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இயக்கிக் கொண்டிருக்கும் பேருந்து சேவை ஒரு நாளைக்கு மூன்று தடவை செயல்பட்டதை, புதுக்கோட்டை சாலை முதல் விமான நிலையம் உள்ளே வரை ஒரு நாளைக்கு பத்து தடவைக்குமேல் நிரந்தரமாக ஒரு பேருந்தை இயக்குவது என்றும் கூறப்பட்டது.
5. தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வெளிநாட்டிற்கு வழி அனுப்ப மற்றும் வருகை தருவோரை வரவேற்க பயணிகளுடன் வரும் மக்களுக்கு புறப்பாடு மற்றும் வருகை ஆகிய இரு இடங்களிலும் ஒப்பனை மற்றும் கழிப்பறை (Toilet) வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதனை பரிசீலனை செய்து higher authorityக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார்கள்.
6. வருகை பகுதியில் மூத்த குடிமக்கள் பயன்படுத்த ஏதுவாக Ramp எனப்படும் சரிவு பாதை அமைக்க வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்ட தகவலை கூறினார்கள்.
7. விமான நிலையத்தில் immigration officers எனப்படும் குடிவரவு அதிகாரிகள் மற்றும் Customs officers எனப்படும் சுங்க அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி, இது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துச்செல்வேன் என்றும் கூறினேன்.
8. ஏர்போர்ட் வளாகத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி, இது குறித்து திருச்சி மாநகராட்சியில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண நான் முழுமுயற்சி மேற்கொள்வேன் என்றும் கூறினேன்.
9. சில நேரங்களில் பயணிகள் எடுத்து வரும் அதிக உடமைகளின் (Luggages) காரணமாக, திருச்சி விமான நிலையத்திற்கு வரும் Perishable products எனப்படும் அழியக்கூடிய விவசாய பொருட்கள், பூக்கள், உணவு பொருட்களை உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்ற முடியாமல் போவதால், அந்த பொருட்கள் பயனற்றுபோய்விடுகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் திருச்சிக்கு பதில் சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிவருகிறது. இதனை கருத்தில்கொண்டு சிறிய ரக சரக்கு விமான சேவையை கொண்டு வர உரிய நிறுவனங்களை அனுகி பேசுமாறு வலியுறுத்தினேன்.
10. பயணியர்களின் தேவையை உணர்ந்து, விமான நிலையத்திற்குள் வருகை மற்றும் புறப்பாடு பகுதியில் (Pharmacy) மருந்தகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
#TrichyAirportDevelopment #MPDuraiVaikoatTrichyAirport
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு..!
இன்று 02.09.2024 காலை சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகள் குழுவினருடன் சந்தித்தார்.
கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டுமானத்திற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்தி கடலில் கலக்கும் உபரி நீரை இராசி மணலில் தமிழ்நாடு அணைக்கட்ட வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விடுத்தார்.
அப்போது விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் நாகை எஸ்.ஸ்ரீதர், துணை செயலாளர் திருவாரூர் எம்.செந்தில் குமார், தஞ்சை மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், சென்னை மண்டல செய்தி தொடர்பாளர் சைதைசிவா உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
02.09.2024.