#தினம்_ஒரு_திருப்புகழ்
தந்தா தத்தன தந்தா தத்தன
தந்தா தத்தன ...... தனதான
......... #திருப்புகழ் .........
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய ...... மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
னந்தா னித்தரை ...... மலைபோலே
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
னந்தா னிப்படி ...... யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
என்றே யிப்படி ...... அருள்வாயே
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
மண்டா நற்றவர் ...... குடியோட
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
யென்றே திக்கென ...... வருசூரைப்
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
வந்தோ ரைச்சில ...... ரணகாளிப்
பங்கா கத்தரு கந்தா மிக்கப
னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.
#விளக்கம்
கொந்து ஆர் மைக் குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே
செப்பிய மொழி மாதர் ... பூங் கொத்துக்கள் நிறைந்த கரிய
கூந்தலையும், சந்திரனைப் போன்ற முகத்தையும், சர்க்கரை என்றே
சொல்லப்பட்ட மொழிகளையும் உடைய விலைமாதர்களின்
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இத்தரை
மலை போலே வந்தே சுற்றி வளைந்தால் ... வாசனை கொண்டதும்
முத்து மாலை பூண்டதுமான மார்பகம், இந்தப் பூமியில் உள்ள மலை
போல் உயர்ந்து எதிர் வந்து தோன்றிச் சுற்றி என் மனத்தைச் சூழ்ந்து
கவர்ந்து பற்றினால்,
அற்ப மனம் தான் இப்படி உழலாமல் ... இந்த ஏழை மனம்
இப்படியே அலைந்து அலைந்துத் திரியாமல்,
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி
அருள்வாயே ... அழிதல் இல்லாத சிறந்ததொரு உபதேசப் பொருளை
இதோ பெற்றுக்கொள், இது ஒரு அற்புதமானது என்று கூறி
இவ்வண்ணம் இப்போதே அருள்வாயாக.
இந்து ஓடக் கதிர் கண்டு ஓடக் கடம் மண்டா நல் தவர் குடி
ஓட ... சந்திரன் பயந்து ஓட, சூரியன் அதைக் கண்டு ஓட, காட்டில்
கூட்டமாகச் செல்லும் நல்ல தவசிகளும் குடும்பத்துடன் அஞ்சி ஓடவும்,
எங்கே அக்கிரி எங்கே இக்கிரி என்றே திக்கென வரு சூரை ...
எங்கே அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள், எங்கே இந்த மலையில்
இருப்பவர்கள் என்று கூறியே, திடுக்கிடும்படியாக வந்த சூரனை
பந்தாடித் தலை விண்டு ஓட ... பந்தடிப்பது போல அடித்து விரட்டி,
தலை அற்றுப் போய்ச் சிதறி விழவும்,
களம் வந்தோரைச் சில ரண காளி பங்காகத் தரு கந்தா ...
போர்க்களத்துக்கு வந்த அசுரர்களைக் கொன்று (அவர்களது
உடல்களை) சில ரண தேவதைகளுக்குப் பங்கிட்டுத் தந்த கந்தனே,
மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே. ... சிறப்பாக
திருப்பனந்தாளில்* வீற்றிருக்கும் பெருமாளே.
#திருப்புகழ்
#திருப்புகழ்_அமிர்தம்
#தினம்_ஒரு_திருப்புகழ்
#கௌமாரம்
#முருகன்வழிபாடு
#ஓம்நமோகுமாராயநம