ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தமிழ் மண்ணில் முதன்முதலில் ஒலித்த சிம்மக்குரல், நம் மதிப்பிற்குரிய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அண்ணல் அம்பேத்கருக்கும் முன்பே, லண்டன் வட்டமேஜை மாநாடுகளில் (1930 - 1932) கலந்துகொண்டு, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்குரிமையும், முறையான பிரதிநிதித்துவமும் வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசிடமே நெஞ்சுறுதியோடு வாதிட்ட மாபெரும் ஆளுமை அவர்.
1893-லேயே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பினராக (1923 - 1936) இருந்தபோது, பொது நீர்நிலைகளில் அனைவரும் தண்ணீர் எடுக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவரக் காரணமாய் இருந்தவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 'பூனா ஒப்பந்தத்தில்' அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து கையெழுத்திட்ட பெருமைக்குரியவர்.
"தன்னம்பிக்கை கொள்ளுங்கள், கல்வி பயிலுங்கள், உரிமைகளுக்காகப் போராடுங்கள்" என்று தன் வாழ்நாளெல்லாம் உழைத்த அந்தச் சமூகப் போராளியின் வழியில் நடப்போம். சாதியற்ற, சமத்துவமான சமுதாயத்தைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்!
வீழ்ந்துக் கிடந்த சமூகத்தை நிமிர்த்திய அந்தச் சரித்திர நாயகருக்கு எங்களின் வீரவணக்கங்களும், பிறந்தநாள் வாழ்த்துகளும்!
இந்திய மண்ணில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் ஆயுதம் ஏந்தி, சுதந்திரப் போராட்டக் கனலை மூட்டிய மாபெரும் பாட்டனார், கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை விழா இன்று!
மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் மானத்திற்காகவும் ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் முறையை எதிர்த்து நெஞ்சுரத்தோடு நின்றவர். காட்டிக்கொடுத்தால் உயிரும், பெரும் செல்வமும் தருவதாக வெள்ளையர்கள் ஆசை காட்டியபோதும், "மண்ணை காட்டிக்கொடுத்து வாழும் உயிர் எனக்குத் தேவையில்லை" என்று கம்பீரமாக மறுத்தவர்!
1759-ஆம் ஆண்டு நடுக்காட்டுப் பகுதியில் ஆங்கிலேய பீரங்கிகளுக்கு முன்னால், தன் படைவீரர்கள் 6 பேருடன் நெஞ்சு நிமிர்த்தி நின்றார். கைகள் பீரங்கி வாயில் கட்டப்பட்டிருந்த போதும், மரண பயமின்றி தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த அந்த வீர வரலாறு, நம் நரம்புகளில் என்றும் தேசபக்தியை ஊட்டும்!
ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளுக்குத் தன் மார்பைக் காட்டி, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம்பிடித்த வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம்!
அவரது வழியில் மண்ணையும், மொழியையும், மக்கள் ஒற்றுமையையும் காக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
இன்றைய தினம் (14.07.2026, செவ்வாய்க்கிழமை), திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், காசம்பட்டி கிராமத்திற்கு சொந்தமான அழகர் கோவில் வழிபாட்டு உரிமை, கடந்த 17 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. நமது வழிபாட்டு உரிமையும், ஆன்மீக மரபும் யாராலும் பறிக்கப்பட முடியாதவை.
இந்த நிலையில், இன்று காசம்பட்டி கிராமப் பெரியோர்களை நேரில் சந்தித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்தேன். இழந்த வழிபாட்டு உரிமையை சட்டரீதியாகவும், அமைதியான முறையிலும் எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த விரிவான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கினேன்.
பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அநீதிக்கு விரைவில் ஒரு சுமுகமான மற்றும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். காசம்பட்டி கிராம மக்களின் நியாயமான ஆன்மீக உரிமை மீட்டெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு உறுதுணையாக தோளோடு தோள் நின்று போராடுவோம்!..
"கோட்டையில் அமர்ந்திருந்தும்
குடிசைகளை மறவாத குணம்...
அதிகாரம் கையில் இருந்தும்
ஆடம்பரம் அறியாத மனம்..."
தமிழகத்தின் விதியைத் தன் மதி நுட்பத்தால் மாற்றி எழுதிய மாமனிதர், கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன்!
மதிய உணவு என்ற ஒரு திட்டத்தின் மூலம், ஏழைத் தாயின் வயிற்றில் இருந்த பசியையும், அந்தப் பிள்ளையின் கையில் இருந்த அறியாமை இருளையும் ஒரே நேரத்தில் போக்கிய தீர்க்கதரிசி. "பிள்ளைகள் படிக்கட்டும், செலவை அரசாங்கம் ஏற்கும்" என்று ஒற்றை வரியில் ஏழைக் குடும்பங்களின் தலைவிதியை மாற்றிய கல்வித் தந்தை.
'கே-பிளான்' (K-Plan) மூலம், கட்சிப் பணிக்காகத் தன் முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்த தியாகச் செம்மல்.அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, நாட்டின் இரண்டு பிரதமர்களை (லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி) உருவாக்கிய 'கிங் மேக்கர்' ஆக இருந்தும், இறுதிவரை ஒரு வாடகை வீட்டிலும், சில கதர் வேட்டிகளுடனும் மட்டுமே வாழ்ந்து மறைந்த உன்னதத் துறவி!
வைகை அணை, சாத்தனூர் அணை, மணிமுத்தாறு அணை எனத் தமிழகத்தின் நதிகளைக் கட்டிப்போட்டு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தவர். தொழிற்சாலைகளைப் பெருக்கி, பின்தங்கியிருந்த மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டிய நிர்வாகத் திறன் மிக்க தலைவர்.
இன்று நாம் அனுபவிக்கும் கல்வி, தொழில், விவசாய வளர்ச்சி என அத்தனையிலும் பெருந்தலைவரின் வியர்வைத் துளிகள் கலந்திருக்கின்றன.
மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காகவே மறைந்த அந்தப் படிக்காத மேதையின் தூய்மையான அரசியலையும், நேர்மையையும் இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்!
கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துகள்!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களின் முதன்மை போக்குவரத்து ஆதாரமாக விளங்குவது அய்யலூர் இரயில் நிலையம்.
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் மற்றும் ஆசிய அளவில் புகழ்பெற்ற தக்காளிச் சந்தை, காய்கறிச் சந்தை மற்றும் விவசாயப் பொருட்கள் வரத்து அதிகமாக இருக்கும் நிலையில், திருச்சி - திண்டுக்கல் மார்க்கத்தில் செல்லும் முக்கிய விரைவு இரயில்கள் அய்யலூரில் நிற்பதில்லை!
இது தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மக்களின் நீண்ட நாள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி இன்று (20.07.2026 - திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில், தமிழர் தேசம் கட்சியின் சார்பில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது!
இப்போராட்டத்திற்கு தலைமையேற்று, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை ரயில்வே உயர் அதிகாரிகளிடம் மனுவாக வழங்கி, உடனடியாக விரைவு இரயில்களை அய்யலூரில் நிறுத்திட வலியுறுத்தினோம்!
மக்களின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் களத்தில் நின்று போராடுவதில் தமிழர் தேசம் கட்சி என்றும் முன்னிற்கும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கால் நூற்றாண்டுகளாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் காலந்தாழ்த்தாமல் உடனடியாக பணி நிரந்தரம் செய்திடுக!..
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடித்தளமாக விளங்கும் களப்பணிகளில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திற்காகவே அர்ப்பணித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பிறகும், அவர்கள் 'ஒப்பந்தத் தொழிலாளர்கள்' என்ற நிலையிலேயே தொடர்வது நியாயமற்றது.
மின்சார வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான கள உதவியாளர் மற்றும் இதர பணியிடங்கள் காலியாக உள்ளன. புதியவர்களைப் பணியமர்த்துவதை விட, ஏற்கனவே அனைத்துக் களப்பணிகளையும் முழுமையாக அறிந்து அனுபவம் பெற்ற இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்த காலியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பதே மின்சார வாரியம் திறம்பட செயல்படுவதற்கு வழிவகுக்கும்.
ஒப்பந்த முறை தொழிலாளர்களின் குடும்பங்கள் எவ்வித எதிர்கால பாதுக்கப்பும் இல்லாமல் இருந்து வருகின் றனர். பணி நிரந்தரம் மட்டுமே அவர்களின் பணிப் பாதுகாப்பையும், மாதாந்திர நிலையான ஊதியத்தையும் உறுதி செய்யும். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றும் தொழிலாளர்களைச் சீரமைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும், தொழிலாளர் நலச் சட்ட விதிகளும் தெளிவுபடுத்துகின்றன.
நிரந்தரப் பணியாளர்கள் செய்யும் அதே ஆபத்தான மின் பழுதுநீக்கம், பராமரிப்பு மற்றும் பேரிடர் காலப் பணிகளைத்தான் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். எனவே, பணிப் பொறுப்பில் சமமாக இருக்கும்போது, பணி அந்தஸ்திலும் அவர்களை நிரந்தரமாக்குவதே நீதியாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முழுமையாகப் பணி நிரந்தரம் செய்வதற்கான கொள்கை முடிவைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் நீண்டகாலச் சேவையைக் கருத்தில் கொண்டு, வயது வரம்பைத் தளர்த்தி, சிறப்பு அரசாணை மூலம் அனைவரையும் காலியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள களப்பணியாளர் காலியிடங்களுக்கு ஏற்ப, ஒப்பந்தத் தொழிலாளர்களை அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்போதைய போராட்டத்தின் ஒரே இலக்கும், பிரதானக் கோரிக்கையும் பணி நிரந்தரம் மட்டுமே. மாற்று நடவடிக்கைகளோ அல்லது தற்காலிக நிவாரணங்களோ இவர்களின் நீண்டகால வாழ்வாதாரப் பிரச்சனைக்குத் தீர்வாகாது. எனவே, தமிழக அரசு இதில் நேரடியாகத் தலையிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை நிபந்தனையின்றி ஏற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
மேகதாது அணைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி உரிமையை நிலைநாட்டவும்,தமிழக அரசு கடிதங்களோடு நிற்காமல் சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்துக!. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்!!
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே தீராத சிக்கல் தொடர்ந்து வருகிறது. இது வெறும் விவசாயப் பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நம்பிக்கையுடன் தொடர்புடையது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மைசூர் அரசனுக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, மேட்டூர் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவில் நீர் பங்கிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் காலம் 1974 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகு கர்நாடகா புதிய அணைகளைக் கட்டத் தொடங்கியதால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவிரி நடுவர் மன்றம் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. சுமார் 17 ஆண்டுகள் நீடித்த விசாரனைக்குப் பிறகு, 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதன்படி, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கர்நாடகா விடுவிக்க வேண்டிய மொத்த நீரின் அளவு 192 டி.எம்.சி என நிர்ணயிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டி.எம்.சி-யாக (சுமார் 14.75 டி.எம்.சி குறைக்கப்பட்டு) உறுதி செய்தது. காவிரி ஒரு தேசிய சொத்து என்றும், எந்த ஒரு மாநிலமும் நதியின் மீது முழுமையான உரிமை கொண்டாட முடியாது என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தது.
தற்போது காவிரி நதிநீர் விவகாரத்தில், முக்கிய பிரச்சனையாக மேகதாது அணை திட்டம் உருவெடுத்துள்ளது. கர்நாடக அரசு, பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவை மற்றும் மின் உற்பதிக்காக, தமிழக எல்லையிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பீடு செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காது.
இதனால் டெல்டா மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். நடுவர் மன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் முன் அனுமதியின்றி படுகையில் எந்தவொரு புதிய கட்டுமானமும் செய்யக்கூடாது. இருப்பினும், கர்நாடக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு வெறும் சட்டப் போராட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது உரிமைகளுக்காகவும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் மிகத் தீவிரமாக களமிறங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பில் உள்ளது. வெறும் எதிர்ப்புக் கடிதங்கள் எழுதுவதோ அல்லது சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதோ மட்டுமே போதுமானதாக இருக்காது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. கர்நாடக அரசு சார்பில் கர்நாடகாவில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறட்சியயை காரணம் காட்டி தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, காவிரிப் படுகை மாநிலங்களின் நீர் உரிமைகள் பாதிக்கப்படும் போது, அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கே அச்சுறுத்தல் என்பதை மற்ற மாநிலங்களுக்கும் உணர்த்தி, ஒத்த கருத்துடைய மாநிலங்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அறிவியல் பூர்வமான தரவுகள், செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் காலநிலை மாற்றக் கணிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழ்நாட்டின் பாசனத் தேவையை சர்வதேச அளவில் நிரூபிக்கும் வகையில் வல்லுநர் குழுவை அமைத்து வலுவான அறிக்கைகளைத் தயார் செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் தனக்கு இருக்கும் அனைத்து அதிகார எல்லைகளையும் பயன்படுத்தி, சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் துரிதமாகச் செயல்பட்டு காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான நிரந்தர நீதியை வென்றெடுத்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு! என்று முழங்கிய பாரத ரத்னா, முன்னாள் குடியரசுத் தலைவர், “இந்தியாவின் ஏவுகணை நாயகர்” டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று.
இராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் இந்தியாவின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த அந்த மாமனிதரின் வாழ்வு ஒவ்வொருவருக்கும் ஆகச்சிறந்த பாடம்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவூர்தியான SLV-III திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு, 'ரோகிணி' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தக் காரணமானவர். அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளை உருவாக்கி, பாதுகாப்புத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்தவர்.
இந்தியாவின் அணுசக்தி வல்லமையை உலகிற்குப் பறைசாற்றிய 'பொக்ரான்-II' சோதனையில் முதன்மைச் சிற்பியாகச் செயல்பட்டவர். இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சோமராஜு அவர்களுடன் இணைந்து ஏழை மக்களுக்காக மிகக் குறைந்த விலையில் "கலாம்-ராஜு ஸ்டென்ட்" மற்றும் இலகுரக மாற்றுத்திறனாளி கருவிகளை உருவாக்க உதவினார்.
2002 முதல் 2007 வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய கலாம் அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகத் திறந்து வைத்தார். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதும் எளிமையின் சிகரமாகவே வாழ்ந்தார்.
கோடிக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடி, அவர்களிடம் "வல்லரசு இந்தியா" என்ற தொலைநோக்குப் பார்வையை விதைத்தார். மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டவர்.
இன்று நாம் அவருக்குச் செய்யும் இதய அஞ்சலி, அவர் கண்ட கனவுகளுக்கு உயிரூட்டுவதும், அவர் வழியில் நேர்மையாகவும் உழைப்புடனும் வாழ்வதுமே ஆகும்!
"உங்கள் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவரது நினைவைப் போற்றுவோம்!..
கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனாரை அவமதித்த ஆதித்யா தொலைக்காட்சிக்கு கடும் கண்டனம்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரின் அடக்குமுறையையும் வணிக ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தன் சொத்து, சுகம், வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து, சிறையில் செக்கு இழுத்துத் தியாகத்தின் உச்சத்தைத் தொட்டவர் நமது மதிப்பிற்குரிய கொள்கை வழிகாட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். தமிழர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், சுதேசி சிந்தனைக்கும் முகவரியாகத் திகழும் தேசியத்தலைவர் வ.உ.சி அவர்களின் தியாக வரலாற்றை வருங்கால தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், நகைச்சுவை என்ற பெயரில் அவரைக் கேலிப்பொருளாகச் சித்தரிப்பது மிகவும் வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
சமீபத்தில் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்று, வ.உ.சிதம்பரனார் அவர்களின் புனிதமான நினைவையும் வரலாற்றுப் பெருமையையும் சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நகைச்சுவைக்கும் கேலிச்சித்திரங்களுக்கும் எல்லையும் நாகரிகமும் உண்டு. நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகிகளை, வர்த்தக லாபத்திற்காகவும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வரலாற்று நாயகர்களையும், தியாகிகளையும், ஊடகங்கள் இழிவுபடுத்துவதைத் தடுக்கத் தேவையான கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேசியத்தலைவரையும் சுதந்திரப் போராட்ட வீரரையும் இழிவுபடுத்தி ஒளிபரப்பிய ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
இசையுலகின் ஆகாய கங்கை... விடைபெற்றார் ஜானகி அம்மா!
நம்பவே முடியவில்லை... பல தலைமுறைகளாக நம் வீடுகளிலும், மனங்களிலும் தனது தேன்குரலால் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த அந்த 'இசைக்குயில்' தன் பாடலை நிறுத்திக் கொண்டதா?!
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, நான்கு மொழிகளில், 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இந்தியத் திரையிசையின் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்த மரியாதைக்குரிய 'பாடும் நிலா' எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும், கோடிட்டுச் சொல்ல முடியாத பேரிழப்பாகும்.
'சின்னச் சின்ன வண்ணக்குயில்' என்று அவர் துள்ளலாகப் பாடினால் நம் மனமும் சிறகடிக்கும், 'உருகும் உன்னைக் கண்டு' என்று அவர் உருகினால் நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கும். கொஞ்சும் மழலையின் குரலாகட்டும், காதலின் தவிப்பாகட்டும், தாலாட்டின் தாய்மையாகட்டும்... அத்தனை உணர்வுகளையும் தன் குரல் வளத்தால் மட்டுமே கடத்தியவர் அவர்!
மெல்லிசை மன்னர் MSV முதல், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசை மேதைகளின் கற்பனைகளுக்கும் உயிர் கொடுத்தவர் ஜானகி அம்மா. குறிப்பாக, SPB - ஜானகி அம்மாவின் கூட்டணி என்பது தமிழ் திரையிசையின் பொற்காலமாகும்.
அவரது எளிமையும், எதற்கும் ஆசைப்படாத அந்தப் பெருந்தன்மையும், விருதுகளை விட ரசிகர்களின் அன்பே பெரிது என்று வாழ்ந்த குணமும் அவரை சாதாரணப் பாடகியாக அல்லாமல், நம் வீட்டுத் தாயாக மாற்றியது.
உடல் மறைந்தாலும், காற்றுள்ள வரை... இந்த பூமியில் இசை உள்ள வரை உங்களது குரல் அலைகள் காற்றில் மிதந்து கொண்டே இருக்கும் அம்மா!
ஜானகி அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!...
வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இந்த துயரமான விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வரவும், துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!