உன்னை நன்கு புரிந்து உணர்ந்தவர்களிற்கு தெரியும் அண்ணா நீ சொக்கத்தங்கம் என்று 💯
என்ன நடந்தாலும் என்றும் உன்னோடுதான் என் அரசியல் பயணம் 💯✊🏽
@Seeman4TN 🫶🏼🥰✊🏽💯
கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மூன்று தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள்கூட இப்படுகொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டும், படுகொலையைக் கண்டித்தும் பேசியிருக்கின்றன.
தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் விஜய், வாய்திறக்காது மூடிக்கொண்டு இருக்கிறார்.
கண்முன்னே மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் கல்லுளிமங்கன் போல இருப்பதுதான் முதலமைச்சரின் வேலையா?
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் நினைவுகூர வேண்டியது அண்ணன் சீமான் அவர்களைத்தான்.
“இது விவசாயிகளின் போராட்டம்; இதில் தன்னுடைய கட்சிக் கொடி பறக்கக் கூடாது” என்று சுயநலமின்றிப் போராட்டத்தில் கலந்து கொண்டார் அண்ணன் சீமான் அவர்கள்.
— பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராளி சுப்ரமணியன்
#ntk #seeman #parandur
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை?
இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?
அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா?
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?
மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?
தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?
அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு. கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது? கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே! தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.
தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.
ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயல்! மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட அனூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சிறிதும் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. வழிதவறிய தங்களின் மாடுகளை தேடி வந்தவர்களை வேட்டையாட வந்தவர்கள் என்றுகூறி கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
வழிதவறிய மாடுகளை தேடி வந்த தமிழர்களை, மானை வேட்டையாட வந்தவர்கள் என்று கர்நாடக வனத்துறை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறது? அப்படியே வேட்டையாட வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்ல கர்நாடக வனத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டனைப்பெற்று தருவதை விடுத்து, எந்த விசாரணையும் இன்றி சுட்டுக்கொன்றது ஏன்? மானை சுட்டார்கள் என்றால் சுடப்பட்ட மான் எங்கே? மானை சுட்டவர்களுக்கு மரண தண்டனை? மனிதர்களை சுட்டவர்களுக்கு என்ன தண்டனை? மானின் உயிரை மலிவாகிவிட்டதா சகமனிதனின் உயிர்? மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா? மனிதநேயம் பேசும் நியாயவான்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாருமே இதைப்பற்றி பேசாமல் கடந்து செல்வது சரிதானா? விலங்குகளை வேட்டையாடினால்கூட கேட்பதற்கு வனத்துறையும், வனவிலங்கு ஆர்வலர்கள் இருக்கிறார்கள்? தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு எந்த நாதி இருக்கிறது? வனவிலங்குகளை வேட்டையாடுவது கொடுங்குற்றம் என்றால் தமிழர்களை சுட்டுக்கொல்வது புனித சட்டமா?
தமிழர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சுட்டுக்கொல்கிறது.
தமிழர்கள் கூலி வேலைக்கு சென்றால் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திர காவல்துறை சுட்டுக்கொன்றது. தற்போது மாடுகளை தேடி சென்ற தமிழர்களை வேட்டையாட வந்ததாக கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது. இலங்கை ராணுவம்தான் இனவெறியுடன் தமிழர்களை கொல்கிறது என்றால் ஆந்திர, கர்நாடக வனத்துறை தமிழர்களை மட்டும் குறிவைத்து சுட்டுக்கொல்வதற்கு பெயரென்ன? அண்டை நாடான இலங்கையிடம் இருக்கும் அதே இனவெறியும், வெறுப்பும் அண்டை மாநிலங்களிடமும் இருந்தால் ஒரு நாட்டிற்குள் நாம் இருப்பதற்கான அர்த்தம் என்ன?
சொந்த நாட்டு குடிமக்களை சகோதர மாநில வனத்துறையினர் எவ்வித விசாரணையும் இன்றி சிறிதும் மனச்சான்றின்றி, சுட்டுக் கொல்வார்கள் என்றால், இதில் எங்கே இருக்கிறது தேச ஒற்றுமை? எங்கே இருக்கிறது இந்திய ஒருமைப்பாடு? தேசபக்தி குறித்து பாடமெடுத்தவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? திராவிடம் பேசும் திருவாளர்கள் இதற்கு வாய்த்திறவாமல் அமைதி காப்பது ஏன்? இந்திய ஒன்றியத்தை பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் இதுவரை கர்நாடக அரசை கண்டிக்காது வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. பாகிஸ்தான் கடற்படையால் ஒரு குஜராத் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் பதறித்துடிக்கும் பாஜக அரசு, கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருப்பது ஏன்? இதனை பிரதமர் மோடியோ, காங்கிரசு மூத்த தலைவர் ராகுல்காந்தியோ இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழர்களுக்கான ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரவிய வதந்திக்கே அம்மாநில சட்டமன்றம் அதிர்ந்தது. ஆய்வுக்குழுவை அனுப்பி பீகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்தது. அந்த அக்கறையில் அணுவளவாவது தவெக அரசிற்கு இருக்கிறதா?
3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தவெக அரசு இதுவரை ஆற்றிய எதிர்வினை என்ன? தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோரின் கருத்து என்ன? அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு அரசு வழங்கப்போகும் நிதியுதவி என்ன? அவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு வேலை வழங்குமா?
காவிரி சிக்கல் போல, இதிலும் கர்நாடக காங்கிரசு அரசை கண்டிக்க தவெக அரசுக்கு துணிவில்லையா? ஆட்சிக்கு ஆபத்துவந்துவிடுமோ என்று அஞ்சுகிறதா? இதுதான் தமிழர் உரிமையை தவெக அரசு காக்கும் முறையா? கர்நாடகாவை சேர்ந்தவரை தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்ததறகு பரிசுதான், 3 அப்பாவி தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளதா?
இன்னும் எத்தனை எத்தனை துயரங்களைத்தான் தமிழினம் தாங்குவது? பெருங்கொடுமை!
கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புவதுடன், கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழக முதல்வரின் மனதிற்கினிய ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றி வேலின் ஆலோசனைக்கிணங்க முதலீட்டாளர்கள் கருத்தரங்கிற்கு VETTRI
Tamilnadu எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது .
இரண்டு TT போட்டால் வெற்றி கிடைக்குமாம் ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் .
வெறும் ஒப்பந்தத்தை முதலீடாக முதல் பக்கங்களில் விளம்பரப்படுத்திய கடந்த திமுக ஆட்சியின் நீட்சி தான் தவெக ஆட்சி.. எந்த மாற்றமும் இல்லை..
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்ல எப்படி மனசு வருகிறது @CMOTamilnadu
'அண்ணன் இன்று இரவு பனகுடிக்கு வருகிறார்' என்கிற செய்தி வந்தது.
நான், என் குழந்தைகள் இருவர், மற்றும் நான்கு நண்பர்களோடு சாயங்கால வாக்கில் கிளம்பிவிட்டேன். பனகுடி பரபரப்பான சாலையின் இருபுறங்களிலும் நாற்காலிகள். சிறிய மேடை, அதன் பின் திரை என எந்த பகட்டுகளுமின்றி ஒரு கட்சிக் கூட்டம்.
நான் சென்ற போது கூட்டமும் குறைவாகதான் இருந்தது. சாலை வழக்கம் போல இயங்கிக்கொண்டிருந்தது. என்னுடன் வந்த நண்பன், "ஏல உங்க தலைவர் வர்ர கூட்டத்துக்கே இவ்ளோதான் ஆளு வருவாங்களா?" என நகை தொனியில் கேட்டான். நான் பதிலே பேசவில்லை. நேரம் ஆக ஆக கூட்டம் குவியத்துவங்கியது. சாலையில் சென்ற கடைசி பேருந்து கடும்பாடுகளுக்கு இடையே கடந்தது. அதன்பின் அந்த சாலையில் எந்த வாகனங்களும் ஓடவில்லை. அந்த சாலை, அதன் கரை இரண்டிலுமிருந்த கடைகள் என முற்றாக மாறியிருந்தது அந்த இடம்.
சிறிது நேரத்தில் அந்த வந்தார்.
மேடைக்கு சற்று தொலைவில் நான் நின்றிருந்தேன்.
அண்ணனை அருகிலிருந்து பார்க்க வேண்டுமென என் மகள் விரும்பியதால்.
மகிழுந்தினுள் இருந்த அண்ணனை பார்த்தோம். வியர்வையால் முகம் வியாபித்திருந்தது. அவர் முகத்தில் அப்படியொரு சோர்வு.
இடைவிடாமல் பேசுகிறார். பேசுகிற இடங்களில் எங்கேயும் ஒப்புக்காக 5 நிமிடங்கள் பேசிவிட்டு செல்வதில்லை ஓய்வின்றி உளப்பூர்வமாக வேண்டியதை பேசிவிட்டே கடக்கிறார் ஒவ்வொரு இடத்திலும். அவர் வந்ததும் அந்த இடம் பெருந்திரள் மன்றம் போல மாறியது.
மேடை ஏறி பேசத்துவங்கிய போது குரல் எங்கிருந்தோ பேசுவது போல இருந்தது. உண்மையில் வருந்தினேன்.
அந்த சோர்விலும் அவர் தளராமல் நீண்ட நேரம் பேசிவிட்டு புன்னகையோடு இறங்கினார்.
எல்லா தலைவர்களின் பரப்புரையையும் உன்னிப்பாக கவனித்த முறையில் சொல்கிறேன். சீமான் அண்ணனின் உழைப்பில் பத்தில் ஒரு பகுதியை கூட எந்த தலைவர்களும் அளித்திருக்கவில்லை. அதிலும் தற்போதைய முதல்வரின் பரப்புரையை சொல்லவே தேவையில்லை.
அப்படியானதொரு உழைப்பு சூரக்காற்றில் சாய்ந்த வாழைக்குலைகளை போல ஆகிவிட்டதே என்கிற ஆற்றாமை தேர்தல் முடிவு தெரிந்து இந்த கனம் முதல் ஆறவே மறுக்கிறது.
மகாநதி படத்தில் அழுதுகொண்டே கமல் பேசுகிற ஒரு வசனம், "ஒரு நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கிடைச்சிருதே" என. அதுதான் மீண்டும் மீண்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மலை கிராம மக்களின் உரிமைக்கான
மேகமலை - வருசநாடு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்.
உரிமை முழக்கம்:
கல்வியாளர் மு.இ.ஹுமாயூன் கபீர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
சாட்டை துரைமுருகன்
மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்
நாள்: ஆடி 31 ஞாயிற்றுக்கிழமை
16.08.2026 மாலை 4.00 மணிக்கு
இடம்: விநாயகர் கோவில் அருகில், கடமலைக்குண்டு.
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ்! அந்த உயிர்மொழியினை அன்பைப் போதிக்க வில்லையெனக் கூறி, அமைச்சர் மரியவில்சன் அவமதிப்பு செய்வதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக
மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்!
நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுக்கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே!
உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும்,
பாரடா உன் மானுடப் பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும்,
புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும்,
"உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?
காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?
தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே!
எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்;
தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது.
பெரும்பாவலர் பாட்டன் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.
'வாடியப்பயிரை கண்டு வாடிய'
வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.
அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.
கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?
இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.
*நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.
அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற
அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்று (10.08.2026) சென்னை கோயம்பேடு திருவள்ளுவர் இல்லத்தில், ஒன்றிய அரசு நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு எதிராகச் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புக் கூட்டியக்க இளைஞர்களைச் சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
@Ntkyouthwing