ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை
- மேதகு வே. பிரபாகரன் | என்றென்றும் தமிழர் தலைவர் அண்ணன் @KKSelvakumaroff வழியில்❤️ | தமிழர் தேசம் கட்சி
எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ!!
எங்கெல்லாம் ஒரு சாமானியனின் குரல்வளை நெறிக்கப்படுகிறதோ!!
அங்கெல்லாம் சாமானியனின் குரலாய்,ஏழைத் தொழிலாளியின் குரலாய் தமிழர் தேசம் கட்சி களத்தில் நிற்கும்-சமநீதிப்போராளி அண்ணன் கே.கே.செல்வக்குமார்❤️
@KKSelvakumaroff#தமிழர்_தேசம்_கட்சி
@Padayachee_18 இதே போல சிவகங்கை மாவட்டத்தில் எஸ் புதூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊரிலும் இதே நிலைமை தான்..
இதில் குறிப்பிடப்பட்ட அம்மன் கோவில்பட்டி வேலாயுதம்பட்டி சொக்கம்பட்டி பகுதியில் நாங்கள் இதனை நேரில் கேட்டுள்ளோம்..
இந்த பகுதிகள் எல்லாம் முத்தரையர் சமூகம் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகள்
@Padayachee_18 மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் பக்கம் இதில் குறிப்பிடப்பட்ட ஊர்களில் எல்லாம் அப்பாவோட சாதி சான்றிதழ் வன்னியர் அவர்கள் மகன் அல்லது மகள் சாதி சான்றிதழ் மறவர்னு இருக்கும்..
இது முற்றிலும் உண்மை..
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கால் நூற்றாண்டுகளாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் காலந்தாழ்த்தாமல் உடனடியாக பணி நிரந்தரம் செய்திடுக!..
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடித்தளமாக விளங்கும் களப்பணிகளில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திற்காகவே அர்ப்பணித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பிறகும், அவர்கள் 'ஒப்பந்தத் தொழிலாளர்கள்' என்ற நிலையிலேயே தொடர்வது நியாயமற்றது.
மின்சார வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான கள உதவியாளர் மற்றும் இதர பணியிடங்கள் காலியாக உள்ளன. புதியவர்களைப் பணியமர்த்துவதை விட, ஏற்கனவே அனைத்துக் களப்பணிகளையும் முழுமையாக அறிந்து அனுபவம் பெற்ற இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்த காலியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பதே மின்சார வாரியம் திறம்பட செயல்படுவதற்கு வழிவகுக்கும்.
ஒப்பந்த முறை தொழிலாளர்களின் குடும்பங்கள் எவ்வித எதிர்கால பாதுக்கப்பும் இல்லாமல் இருந்து வருகின் றனர். பணி நிரந்தரம் மட்டுமே அவர்களின் பணிப் பாதுகாப்பையும், மாதாந்திர நிலையான ஊதியத்தையும் உறுதி செய்யும். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றும் தொழிலாளர்களைச் சீரமைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும், தொழிலாளர் நலச் சட்ட விதிகளும் தெளிவுபடுத்துகின்றன.
நிரந்தரப் பணியாளர்கள் செய்யும் அதே ஆபத்தான மின் பழுதுநீக்கம், பராமரிப்பு மற்றும் பேரிடர் காலப் பணிகளைத்தான் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். எனவே, பணிப் பொறுப்பில் சமமாக இருக்கும்போது, பணி அந்தஸ்திலும் அவர்களை நிரந்தரமாக்குவதே நீதியாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முழுமையாகப் பணி நிரந்தரம் செய்வதற்கான கொள்கை முடிவைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் நீண்டகாலச் சேவையைக் கருத்தில் கொண்டு, வயது வரம்பைத் தளர்த்தி, சிறப்பு அரசாணை மூலம் அனைவரையும் காலியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள களப்பணியாளர் காலியிடங்களுக்கு ஏற்ப, ஒப்பந்தத் தொழிலாளர்களை அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்போதைய போராட்டத்தின் ஒரே இலக்கும், பிரதானக் கோரிக்கையும் பணி நிரந்தரம் மட்டுமே. மாற்று நடவடிக்கைகளோ அல்லது தற்காலிக நிவாரணங்களோ இவர்களின் நீண்டகால வாழ்வாதாரப் பிரச்சனைக்குத் தீர்வாகாது. எனவே, தமிழக அரசு இதில் நேரடியாகத் தலையிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை நிபந்தனையின்றி ஏற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
மேகதாது அணைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி உரிமையை நிலைநாட்டவும்,தமிழக அரசு கடிதங்களோடு நிற்காமல் சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்துக!. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்!!
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே தீராத சிக்கல் தொடர்ந்து வருகிறது. இது வெறும் விவசாயப் பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நம்பிக்கையுடன் தொடர்புடையது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மைசூர் அரசனுக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, மேட்டூர் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவில் நீர் பங்கிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் காலம் 1974 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகு கர்நாடகா புதிய அணைகளைக் கட்டத் தொடங்கியதால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவிரி நடுவர் மன்றம் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. சுமார் 17 ஆண்டுகள் நீடித்த விசாரனைக்குப் பிறகு, 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதன்படி, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கர்நாடகா விடுவிக்க வேண்டிய மொத்த நீரின் அளவு 192 டி.எம்.சி என நிர்ணயிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டி.எம்.சி-யாக (சுமார் 14.75 டி.எம்.சி குறைக்கப்பட்டு) உறுதி செய்தது. காவிரி ஒரு தேசிய சொத்து என்றும், எந்த ஒரு மாநிலமும் நதியின் மீது முழுமையான உரிமை கொண்டாட முடியாது என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தது.
தற்போது காவிரி நதிநீர் விவகாரத்தில், முக்கிய பிரச்சனையாக மேகதாது அணை திட்டம் உருவெடுத்துள்ளது. கர்நாடக அரசு, பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவை மற்றும் மின் உற்பதிக்காக, தமிழக எல்லையிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பீடு செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காது.
இதனால் டெல்டா மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். நடுவர் மன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் முன் அனுமதியின்றி படுகையில் எந்தவொரு புதிய கட்டுமானமும் செய்யக்கூடாது. இருப்பினும், கர்நாடக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு வெறும் சட்டப் போராட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது உரிமைகளுக்காகவும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் மிகத் தீவிரமாக களமிறங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பில் உள்ளது. வெறும் எதிர்ப்புக் கடிதங்கள் எழுதுவதோ அல்லது சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதோ மட்டுமே போதுமானதாக இருக்காது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. கர்நாடக அரசு சார்பில் கர்நாடகாவில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறட்சியயை காரணம் காட்டி தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, காவிரிப் படுகை மாநிலங்களின் நீர் உரிமைகள் பாதிக்கப்படும் போது, அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கே அச்சுறுத்தல் என்பதை மற்ற மாநிலங்களுக்கும் உணர்த்தி, ஒத்த கருத்துடைய மாநிலங்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அறிவியல் பூர்வமான தரவுகள், செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் காலநிலை மாற்றக் கணிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழ்நாட்டின் பாசனத் தேவையை சர்வதேச அளவில் நிரூபிக்கும் வகையில் வல்லுநர் குழுவை அமைத்து வலுவான அறிக்கைகளைத் தயார் செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் தனக்கு இருக்கும் அனைத்து அதிகார எல்லைகளையும் பயன்படுத்தி, சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் துரிதமாகச் செயல்பட்டு காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான நிரந்தர நீதியை வென்றெடுத்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
இன்றைய தினம் 25.07.2025,சனிக்கிழமை - திருச்சி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எந்நாளும் மக்களின் அன்பைப் பெற்ற மண்ணின் மைந்தருமான அண்ணன் @MPalaniyandiMLA அவர்களை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி எனது உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்!
எளிமையின் உருவமாகவும், மக்கள் தொண்டையே தன் மூச்சாகவும் கொண்டு திருவரங்கம் தொகுதி மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் அண்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மக்களுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள், தொகுதியின் வளர்ச்சிக்காக எடுத்த தீவிர முயற்சிகள் மற்றும் எளிய மக்களிடமும் காட்டும் அளப்பரிய அன்பு என்றும் போற்றத்தக்கது.
எப்பொழுதும் புன்னகையோடும் இன்முகத்தோடும் அனைவரையும் அரவணைக்கும் அண்ணன் மொ. பழனியாண்டி அவர்கள், நீடூழி வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நலத்தோடும், மன நிறைவோடும், நீண்ட ஆயுளோடும் மக்கள் தொண்டைத் தொடர அண்ணனுக்கு மீண்டும் ஒருமுறை எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனாரை அவமதித்த ஆதித்யா தொலைக்காட்சிக்கு கடும் கண்டனம்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரின் அடக்குமுறையையும் வணிக ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தன் சொத்து, சுகம், வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து, சிறையில் செக்கு இழுத்துத் தியாகத்தின் உச்சத்தைத் தொட்டவர் நமது மதிப்பிற்குரிய கொள்கை வழிகாட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். தமிழர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், சுதேசி சிந்தனைக்கும் முகவரியாகத் திகழும் தேசியத்தலைவர் வ.உ.சி அவர்களின் தியாக வரலாற்றை வருங்கால தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், நகைச்சுவை என்ற பெயரில் அவரைக் கேலிப்பொருளாகச் சித்தரிப்பது மிகவும் வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
சமீபத்தில் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்று, வ.உ.சிதம்பரனார் அவர்களின் புனிதமான நினைவையும் வரலாற்றுப் பெருமையையும் சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நகைச்சுவைக்கும் கேலிச்சித்திரங்களுக்கும் எல்லையும் நாகரிகமும் உண்டு. நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகிகளை, வர்த்தக லாபத்திற்காகவும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வரலாற்று நாயகர்களையும், தியாகிகளையும், ஊடகங்கள் இழிவுபடுத்துவதைத் தடுக்கத் தேவையான கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேசியத்தலைவரையும் சுதந்திரப் போராட்ட வீரரையும் இழிவுபடுத்தி ஒளிபரப்பிய ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு! என்று முழங்கிய பாரத ரத்னா, முன்னாள் குடியரசுத் தலைவர், “இந்தியாவின் ஏவுகணை நாயகர்” டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று.
இராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் இந்தியாவின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த அந்த மாமனிதரின் வாழ்வு ஒவ்வொருவருக்கும் ஆகச்சிறந்த பாடம்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவூர்தியான SLV-III திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு, 'ரோகிணி' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தக் காரணமானவர். அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளை உருவாக்கி, பாதுகாப்புத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்தவர்.
இந்தியாவின் அணுசக்தி வல்லமையை உலகிற்குப் பறைசாற்றிய 'பொக்ரான்-II' சோதனையில் முதன்மைச் சிற்பியாகச் செயல்பட்டவர். இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சோமராஜு அவர்களுடன் இணைந்து ஏழை மக்களுக்காக மிகக் குறைந்த விலையில் "கலாம்-ராஜு ஸ்டென்ட்" மற்றும் இலகுரக மாற்றுத்திறனாளி கருவிகளை உருவாக்க உதவினார்.
2002 முதல் 2007 வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய கலாம் அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகத் திறந்து வைத்தார். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதும் எளிமையின் சிகரமாகவே வாழ்ந்தார்.
கோடிக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடி, அவர்களிடம் "வல்லரசு இந்தியா" என்ற தொலைநோக்குப் பார்வையை விதைத்தார். மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டவர்.
இன்று நாம் அவருக்குச் செய்யும் இதய அஞ்சலி, அவர் கண்ட கனவுகளுக்கு உயிரூட்டுவதும், அவர் வழியில் நேர்மையாகவும் உழைப்புடனும் வாழ்வதுமே ஆகும்!
"உங்கள் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவரது நினைவைப் போற்றுவோம்!..
தேனி மாவட்டம் கடமலை, மயிலை ஒன்றியங்களிலுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த 5000 விவசாய குடும்பங்களின் வாழ்வுரிமை போராட்டம்! தமிழர் தேசம் கட்சி முழு ஆதரவு!!
அன்புடையீர் வணக்கம்,
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, முருக்கோடை, சிங்கராஜபுரம், நரியூத்து, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முத்தாலம்பாறை உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிவழியாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
1919-ஆம் ஆண்டு முதல் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலங்களை, 1978-க்குப் பின் வனக்காடுகள் என அறிவித்தும், தற்போது அப்பகுதி விவசாயிகளை 'ஆக்கிரமிப்பாளர்கள்' எனக் கூறி வெளியேற்ற நடக்கும் முயற்சிகளும், வனத்துறையின் கெடுபிடிகளும் கடும் கண்டனத்திற்குரியவை. 2006 வன உரிமைச் சட்டத்தின்படி 60 முதல் 75 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளுக்காகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வன உரிமைக் குழுக்கள் சார்பில் வரும் ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள 'பெரும் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு' தமிழர் தேசம் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் இந்த அறப்போராட்டத்தில், தமிழர் தேசம் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு கோரிக்கைக்கு வலுசேர்க்குமாறும் அத்துடன், இந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!..
தமிழ் மண்ணின் வீரம், கொடை, இயற்கை வளத்தைப் போற்றும் வல்வில் ஓரி விழா மற்றும் ஆடி 18 பெருக்குத் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்!
சங்க காலத்தில் தமிழ் நிலத்தை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் ஆடி 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் கொல்லிமலையில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சங்க காலத்தில் கொல்லிமலை பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் மன்னர் வல்வில் ஓரி. வில்லாற்றலில் இவருக்கு நிகர் இவரே என்பதால், 'வல்லிய வில்லையுடைய ஓரி' எனப்பட்டு "வல்வில் ஓரி" என்று அழைக்கப்பட்டார்.
வல்வில் ஓரியின் வில்லாற்றலைச் சங்கப் புலவர் கபிலர் புறநானூற்றில்,
"வேழம் வீழ்த்திய வெண்கோட்டு அம்பின்..."
ஓரி எய்த ஒரே ஒரு கணையானது,
முதலில் ஒரு பெரிய யானையைத் துளைத்தது.
அடுத்து வாயைப் பிளந்து வந்த புலியை கொன்றது.
தொடர்ந்து ஓடிய ஒரு மானை வீழ்த்தியது.
பின்னர் ஒரு காட்டுப்பன்றியைச் சாய்த்தது.
இறுதியாகப் புற்றிலிருந்த ஒரு உடும்பின் மீது பாய்ந்து நின்றது!
ஒரு அம்பில் ஐந்து விலங்குகளை வீழ்த்திய இந்த இணையற்ற வீரமே அவருக்கு 'வல்வில் ஓரி' என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. வீரத்தில் மட்டுமல்லாது கொடையிலும் ஓரி நிகரற்றவராகத் திகழ்ந்தார்.
தன்னைத் தேடி வரும் பாணர்களுக்கும், விறலியர்களுக்கும், புலவர்களுக்கும் பரிசில்களை அள்ளிக் கொடுத்தார்.
பரிசிலர்களுக்கு வெறும் பொன்னும் பொருளும் மட்டும் தராமல், தான் ஆட்சி செய்த நாட்டையே பரிசாகக் கொடுக்கும் பழக்கம் உடையவர் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.
இயற்கையும் நதிகளும் பொங்கிப் பெருகும் இந்த ஆடிப் பெருக்கு நாளில், வல்வில் ஓரியின் வீரத்தையும் கொடைப் பண்பையும் நெஞ்சில் ஏந்துவோம்.
இன்றைய தினம் 03.08.2026, திங்கட்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறையில், தமிழர் தொழிற்சங்க நடுவம் சார்பில் புதிய ஆட்டோ தொழிற்சங்கத்தை, ஆட்டோ ஓட்டுநர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!
இந்த நிகழ்வில், தொழிற்சங்கத்தின் உடைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று கொங்கு நாட்டின் பெரும் வீரன், விடுதலைப் போராட்ட களத்தில் ஆங்கிலேயர்களுக்குப் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம்!
இளமையிலேயே சிலம்பம், வாள்வீச்சு, வில்வித்தை மற்றும் குதிரையேற்றம் ஆகிய அனைத்துப் போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் தீர்த்தகிரி.
மைசூர் சுல்தான் ஹைதர் அலியின் வரி வசூல் அதிகாரி முகமது அலி, கொங்கு நாட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு மைசூர் சென்றுகொண்டிருந்தார். வழியில் அவரை மறித்த தீர்த்தகிரி, அனைத்துப் பணத்தையும் பறித்து ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
அப்போது வரி அதிகாரியிடம், "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் இருக்கும் 'சின்னமலை' பறித்ததாகப் போய் உன் சுல்தானிடம் சொல்!" என்று கம்பீரமாக முழங்கினார். அன்றிலிருந்து அவர் 'தீரன் சின்னமலை' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
திப்பு சுல்தானுடன் கைக்கோர்த்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான மூன்றாம் மற்றும் நான்காம் மைசூர் போர்களில் தீரமுடன் போரிட்டார். திப்புவின் மறைவுக்குப் பின், ஓடாநிலை என்ற இடத்தில் கோட்டை கட்டி, பீரங்கிகள் மற்றும் போர்க்கருவிகளைத் தயாரித்துத் தன் சொந்தப் படையை உருவாக்கினார்.
காவேரிக் கரைப் போர், ஓடாநிலைப் போர் மற்றும் அரச்சலூர் போர்களில் ஆங்கிலேயப் படைகளைத் தந்திரமான 'கொரில்லா தாக்குதல்' முறை மூலம் சிதறடித்துத் தோற்கடித்தார். ஆங்கிலேயர்களால் நேருக்கு நேர் தீரன் சின்னமலையை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, அவரது சமையல்காரரான நல்லப்பன் என்பவனின் துரோகத்தால் ஆங்கிலேயர்களிடம் சிக்கினார்.
ஆங்கிலேயர்கள் அவரைப் மன்னிப்பு கேட்கச் சொன்னபோதும், தங்களின் அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, 1805 ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டையில் தனது சகோதரர்களுடன் தூக்கிலிடப்பட்டார் (ஆடி 18 பெருக்கு நாளன்று). தூக்கிலிடப்படும் தருணத்திலும் தலைநிமிர்ந்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் உயிரை அற்பணித்தார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த நம் தாய்நாட்டின் மாபெரும் மாவீரனின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குவோம்!
"உயிரை விட மானமே பெரிது!" என்று வாழ்ந்து காட்டிய கொங்கு மண்டலத்தின் வீரத் திருமகனுக்கு வீரவணக்கம்!
இன்றைய தினம் 03.08.2026, திங்கட்கிழமை - ஈரோடு மாவட்டம், அறச்சலூர், கொட்டாரத் தோட்டத்தில் நடைபெற்ற, கொல்லிமலை வேந்தன், மன்னர் வல்வில் ஓரி விழாவில் கலந்து கொண்டு, அவரின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தோம்!..
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை,கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மீது காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை, சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும், கருத்து சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்!.
ஒரு பேச்சு இரட்டை அர்த்தத்தில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த முறையான மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொண்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவெக பெண் நிர்வாகி புகார் அளித்தார் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாக கைது செய்திருப்பது முற்றிலும் பழிவாங்கும் அரசியலாகும்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் @CMOTamilnadu அவர்கள் பேசும்போது இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு இருக்க, பொதுமக்கள் யாரேனும் புகார் அளித்தால் முதலமைச்சர் மீது இதே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா?
முதலமைச்சரின் நண்பர் அல்லது நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதற்காக மட்டுமே இந்த அளவுக்குக் காவல்துறை விரைந்து செயல்படுகிறதா? அல்லது சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இதே வேகத்தில் நடவடிக்கை தொடருமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனங்களைத் தடுத்து, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சனநாயத்திற்கு ஆபத்தான தவறான முன்னுதாரணமாகும்.
அரசியல் விமர்சனங்களையும் கருத்துக்களையும் சட்டரீதியாகவும் சனநாயக ரீதியாகவும் எதிர்கொள்வதே முதிர்ச்சியான அரசுக்கு அழகு. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பழிவாங்கும் கைது நடவடிக்கைக்கு தமிழர் தேசம் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது!..
ஐயா கக்கன் பிறந்தநாள் விழா!!
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி கொட்டாம்பட்டி ஒன்றியம் தும்பை பட்டியில் அமைந்துள்ள ஐயா #கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.@KKSelvakumaroff அவர்கள் மரியாதை செலுத்தினார்..
ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,விமர்சிப்பதும், இயல்பானது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த திரு. மாரிதாஸ் என்ற யூடியூபர் அமைச்சர்கள் திரு.ஆதவ் அர்ஜுனா, திருமதி.கீர்த்தனா மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக
சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்துள்ளது.
இதனை தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது சனநாயகத்திற்கு விரோதமானது.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதை கலாச்சாரத்திற்கு முந்தைய அரசுதான் காரணம் என கூறி தட்டிக் கழித்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்,ஒருவர் விமர்சனம் செய்தார் என்பதற்காக இத்தனை வேகமாக செயல்பட்டு அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் போக்கை காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட, யூடியூபர் திரு.மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்து சனநாயகத்தை காத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
தமிழகத்தின் மரபுசார் அடையாளமும், இயற்கை பானமுமான "கள்" மீதான தடையை உடனடியாக நீக்கி, விவசாயிகளின் பொருளாதாரத்தை தமிழக அரசு மேம்படுத்திட வேண்டும்!
தமிழகத்தின் மரபுசார் அடையாளங்களிலும், கிராமப்புறப் பொருளாதாரத்திலும், தென்னை மற்றும் பனை மரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ள "கள்" தடை உத்தரவு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் கள் ஒரு பாரம்பரிய உணவாகவும், இயற்கை பானமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இயற்கை விவசாயத்திற்கும் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தென்னை மற்றும் பனை மரங்களை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான குறு, சிறு விவசாயிகளுக்குக் கள் ஒரு நிலையான வருமான வாய்ப்பை வழங்கும். தேங்காய் மற்றும் கொப்பரை விலையில் ஏற்படும் அதீத விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடனாளியாவதைத் தடுத்து, அவர்களுக்குத் தினசரி வருமானம் கிடைக்க வழிவகை செய்யும். ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காயை விட, கள் மற்றும் அதன் உபரிப் பொருட்கள் மூலம் 3 முதல் 4 மடங்கு கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.
மரத்திலிருந்து இறக்கப்படும் தூய்மையான கள்ளில் குறைந்த அளவே (சுமார் 4% முதல் 5% வரை) இயற்கை ஆல்கஹால் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் நிறைந்துள்ளன. இரசாயனங்கள் கலந்த மதுவகைகளை விட, இது ஒரு சிறந்த இயற்கை ஆரோக்கிய பானமாகும்.
மரமேறும் தொழிலாளர்கள், கள் சேகரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்குப் புதிய வாழ்வாதாரம் கிடைக்கும். பதநீர், கருப்பட்டி, பனை வெல்லம், பனஞ்சர்க்கரை போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, கிராமப்புறப் பெண்களின் சுயஉதவிக் குழுக்களுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
தற்போது தமிழகத்தில் விற்கப்படும் ரசாயன மதுவிற்குப் பதிலாக மக்கள் ஒரு இயற்கை பானத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படும். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிப்பது என்பது வெறும் மதுவிலக்குச் சார்ந்த முடிவு அல்ல; அது விவசாயிகளின் வாழ்வுரிமைச் சார்ந்தப் போராட்டம். அண்டை மாநிலங்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உரியக் கட்டுப்பாடுகளுடன் கள் இறக்க அனுமதிப்பதன் மூலம் தமிழக விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு, கிராமப்புறங்கள் சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும். எனவே, உடனடியாக இதற்கான தடையை நீக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 3 முக்கிய செய்தி அலைவரிசைகளை தன்னிச்சையாக நீக்கியது வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இந்த சனநாயக விரோதப் போக்கைக் கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களை எவ்வித நிபந்தனையுமின்றி, உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்!..
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மூன்று முக்கிய செய்தி சேனல்களான, @polimernews , @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகிய தொலைக்காட்சிகளை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தனது ஒளிபரப்புத் தொகுப்பிலிருந்து தன்னிச்சையாக நீக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத் துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களாட்சியில் மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதும், அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு விமர்சிப்பதும் ஊடகங்களின் கடமையாகும். ஆனால், மாற்றுக்கருத்துகளுக்கோ அல்லது தங்களுக்குச் சாதகமற்ற செய்திகளுக்கோ இடமளிக்கக் கூடாது என்ற நோக்கில், அரசு பொதுத்துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி இவ்வாறு சேனல்களை முடக்குவது சனநாயக விரோதச் செயலாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை காரணமாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மக்கள் படும் அவதிகளை இந்த மூன்று செய்தி சேனல்களும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட மூன்று செய்தி சேனல்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக அரசு கேபிள் அலைவரிசையில் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும். அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஒளிபரப்பை முடக்குவதன் மூலம் ஊடகங்களை மறைமுகமாக அச்சுறுத்தக் கூடாது.
ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்க உருவாக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம், அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.
கருத்துச் சுதந்திரமும், ஊடகச் சுதந்திரமுமே ஒரு ஆரோக்கியமான சனநாயகத்தின் அடையாளமாகும்.
அதை நசுக்க முற்படுவது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கூண்டில் அடைப்பதற்குச் சமம்.
அரசு தனது இந்த மக்கள் விரோத, ஊடக விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக அலைவரிசைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..