போதை மருந்துகளை ஒழிக்க ஓடிய ஓட்டம், கொடிய போதை “மதுவை” (மறைத்தது) மறந்தது ஏன்?
.............................................
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியில், 30 நிமிடங்களில் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி வெற்றிகரமாக மாரத்தானை நிறைவு செய்துள்ளார் முதல்வர் விஜய். பாராட்டுகள்! "ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs " என்பது நல்ல முழக்கம், நல்ல நோக்கம்.!
ஆனால், ஒழிக்கப்பட வேண்டியது கஞ்சா மற்றும் சில போதை மாத்திரைகள் மட்டுமல்ல; ஆண்டுக்குப் பல லட்சம் கோடி ரூபாய்க்கு அரசே விற்பனை செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானமும்தான் என்பதை (மறைத்தது) மறந்தது ஏனோ?
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
26.06.2026
ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி டாஸ்மாக் ”Party Fund” கொள்ளை! கட்சி பெயரை வெளியிடாதது ஏன்?- கிருஷ்ணசாமி
#assembly#tnassembly#tasmac#partyfund#KrishnaSamy
விரிவான செய்தியை படிக்க க்ளிக் 👇https://t.co/TWxlM3UyOl
ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி டாஸ்மாக் ”Party Fund” கொள்ளை!
பலனடைந்த கட்சிப் பெயரைச் சட்டமன்றத்தில் வெளியிடாதது ஏன்?
முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு, ’ரீல்ஸ்’களுக்குப் பயன்படுமே தவிர, ரியல் அரசியலுக்குப் பயன்படாது!
........................................
கடந்த 40 தினங்களாக விஜய் காட்டிய மௌனம் கலைந்து, ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மூலம் தனது அரசியல் எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் துவம்சம் செய்துவிடப் போகிறார் என்று இன்று பலரும் எதிர்பார்த்தனர்.
தங்களது கட்சிக் கூட்டங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மாநாடுகளிலும் அரசியலுக்காக ஆதாரமின்றிக் கூட சில விஷயங்களைப் பேசிவிடலாம்; ஏன், திரைப்படங்களில்கூட வசனகர்த்தா எழுதியபடி வசனத்தை முழங்கிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் அவ்வாறு பேச இயலாது; ஆதாரம் இல்லாமல் எதையும் பேசவும் கூடாது.
டாஸ்மாக்கில் ”Party Fund” அதாவது, கட்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்த விஜய், எந்தக் கட்சிக்கு அந்த Fund சென்றது என்பது குறித்த ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தால், அது அரசியல் பூதாகாரமாக வெடித்திருக்கும்.
மேலும், இது இன்று அவர் வைக்கும் புதிய குற்றச்சாட்டும் அல்ல; கடந்த இரண்டு வருடங்களாக மேடைகளில் அவர் பேசிவரும் குற்றச்சாட்டு. அன்று அவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமே; மே மாதம் 10ஆம் தேதிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
கடந்த 40 நாட்களாக ஆட்சி - அதிகாரத்தில் இருந்தும், மாதம் சராசரியாக ரூ. 100 கோடி என ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் எந்தக் கட்சிக்குக் கைமாறியது? அதன் நேரடிப் பயனாளிகள் யார்? என்பதை முழுமையாக ஆய்ந்து, அறிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழகச் சட்டமன்றத்தில் தனக்குக் கிடைத்திருக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து உண்மைகளையும் வெளியிட்டு இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்; அதைவிடுத்து மீண்டும் அதே குற்றச்சாட்டையே திரும்பத் திரும்பச் சொல்வதில் ”அரசியல் அசுரத்தனமே (RHETORIC) – வெறுமையே” வெளிப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்த்த அவரது குற்றச்சாட்டு, வெறும் ”புழுதிக்காற்றாகவே” போய்விட்டது.
ஆட்சிக்கு வந்த பிறகும் தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனைகளைப் பெறுவது ”ஆரோக்கியமானது” அல்ல.
முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு நமத்துப்போன ’ரீல்ஸ்’களுக்குப் பயன்படுமே தவிர, ரியல் அரசியலுக்குப் பயன்படாது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
23.06.2026
தவெக அரசின் வெள்ளை அறிக்கை:
எதிர்பார்த்தது “பூகம்பம்”; நடந்தது “புஸ்வாணம்”
திமுக ஆட்சி மீதான நிதி மேலாண்மை குறித்து, த.வெ.க அரசின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “வெள்ளை அறிக்கை” நேற்றைய முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் பொருளாதாரத் தளத்தில், முதல்வர் விஜய் அவர்களின் இன்றைய அரசு வெளியிடும் வெள்ளை அறிக்கை தமிழகத்தைத் தாண்டிப் பெரும் பூகம்பத்தைக் கிளப்பப்போகிறது என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்தார்கள். விஜய் மிகப்பெரிய அஸ்திரத்தைத் தூக்கிப்போட்டு வெடிக்கச் செய்யப்போகிறார் என்றே அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.
தேர்தல் நேரத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட 10 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டையே, 'பழைய ‘கள்’ புதிய மொந்தை' என்பதைப் போல, பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடனையும் சேர்த்து 13 லட்சம் கோடி கடன் என்பதை வெளியிட்டுள்ளது.
எப்பொழுதுமே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடும் முன் வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் சொன்னால் போதாது; அதற்கான அடிப்படை காரணங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்; அதற்கான தீர்வுகளையும் தெள்ளத் தெளிவாக வெளியிட வேண்டும். 2011 – 2021 கடந்த அஇஅதிமுக ஆட்சியில் இருந்த ரூ. 5 லட்சம் கோடி கடனானது 2021 - 2026 திமுக ஆட்சியில் ரூ 10 லட்சம் கோடியாக அதிகரித்த காரணத்தை இந்த அரசு சுட்டிக்காண்பித்திருக்க வேண்டும் – அவ்வாறு செய்யவில்லை.
ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடும் பொழுது, அதை வெளியிடும் அரசுக்குத் தெளிவான பார்வையும் மனோதைரியமும் இருந்திடல் வேண்டும். 10 லட்சம் கோடி கடன் இருந்ததை அனைத்துத் தரப்பினரும் அறிவார்கள்; ஆனால், அதை வெள்ளை அறிக்கையாக வெறும் புள்ளிவிவரமாக மட்டும் நாம் இந்த அரசிடம் எதிர்பார்க்கவில்லை. ஐந்து லட்சம் கோடியாக இருந்த கடன், ஐந்தாண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்க உண்மையான காரணம் என்ன? அதிகமாகப் பெறப்பட்ட கடன் எந்தத் திட்டத்திற்காகச் செயல்படுத்தப்பட்டுள்ளது? மக்களுக்குப் பயனளிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா அல்லது ஊதாரித்தனமான திட்டத்திற்குச் செலவிடப்பட்டதா? அல்லது எந்தத் திட்டத்திற்கும் செலவழிக்காமல் கடன் பெற்று மிகப்பெரிய ஊழலோ அல்லது நிதி முறைகேடோ நடைபெற்றுள்ளதா என்பதைப் பற்றி இந்த அரசு விளக்கியிருந்தால், அது அறிவுப்பூர்வமான, ஆழமான வெள்ளை அறிக்கையாகக் கருதப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 23ஆம் தேதி வரையிலும் தனது தேர்தல் பரப்புரையில் மூலைமுடுக்கெல்லாம் கடந்த ஆட்சியைக் குற்றம் சுமத்திவிட்டு, மே மாதம் பத்தாம் தேதி பதவி ஏற்பு விழாவில் "கஜானா காலி" என்று அறிவித்துவிட்டு, அதை விடுத்து, "It is neither an exercise in retrospective blame nor a political statement. It is an analytical record of fiscal fact — of the present position" என "யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை" எனப் பூசி மெழுக வேண்டிய அவசியம் என்ன? திமுகவைக் கண்டு பயப்படும் இந்த அரசுக்கு எதற்கு இந்த வீண் வேலை?
தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை, குண்டுகற்கள் மற்றும் கருங்கல் ஜல்லி உள்ளிட்ட முக்கியமான கனிம வளங்கள் கொள்ளை; அதனால் ஏற்படும் வருவாய் இழப்பு போன்றவற்றைச் சரி செய்ய எவ்வழியும் சொல்லப்படவில்லை. அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து கிடைக்கிறது. மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதிலும், போக்குவரத்துத் துறையிலும், அனைத்து மட்டங்களிலும் ஊழல்; பதிவுத்துறையிலும் ஊழல் மலிந்து அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் யார் யாருக்கோ போய்விட்டது. அவற்றை அடியோடு ஒழித்து நிதி மேலாண்மையைச் சரி செய்யப்படும் என்று இந்த அறிக்கை சொல்லவில்லை.
அதேபோன்று, மதுவின் போதைக்கு அடிமையாவதால் தமிழகத்தில் லட்சோபவட்சம் குடும்பங்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன; எண்ணற்ற இளம் விதவைகள் உருவாகின்றார்கள். எனவே, டாஸ்மாக்கிலிருந்து பல ஆயிரம் கோடிகள் வருமானம் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம்; தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிடவில்லை. ரூ 78,000 கோடி வரி வருவாய் பற்றாக்குறை என்று குறிப்பிட்டுவிட்டு, எவ்வாறு வரி வருவாயைப் பெருக்கப் போகிறார்கள் என்று தெளிவாக விளக்கவில்லை.
அனைத்து மகளிர்க்கும் தமிழ்நாட்டில் இலவசப் பேருந்து பயணம், மாதம் ரூபாய் 2500, பட்டதாரிகளுக்கு ரூபாய் 4000, ஆண்டுக்கு 6 சிலிண்டர், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்ற நிதி எப்படி உருவாக்கப்படும் என்பதற்கு எவ்வித திட்டமும் இல்லை. இந்த அறிக்கையால் யாருக்கும் எவ்விதத்திலும் பயனில்லை. தவெக அரசின் இந்த வெள்ளை அறிக்கை “வெற்று அறிக்கையாகி” உள்ளது.
தவெக அரசின் வெள்ளை அறிக்கை பெரும் பூகம்பத்தை உருவாக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், 'புஸ்வாணம்' ஆகிவிட்டது.
#அரசியல்POST | “தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்?”
அதிகரிக்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் - கிருஷ்ணசாமி விமர்சனம்
#SunNews | #TVKVijay | #Krishnasamy
தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம்!
முதல்வர் விஜய் அவர்களின் அர்த்தமற்ற மௌனம், பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது!
மௌனத்தை கலைத்திடுங்கள்; ஆட்சி நிர்வாகத்தை முறைப்படுத்துங்கள்!
................................................................
நேற்றைய தினம் (15.06.2026) ஒரே நாளில் மட்டும், மூன்று வயது முதல் 12 வயது வரையிலான ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அதில் ஒரு குழந்தை படுகொலை செய்யப்பட்ட செய்திகள் நமக்கு மட்டுமல்ல; தமிழகமெங்கும் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழ்ந்த கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் புலம்பெயர் தொழிலாளியின் 3 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார்; பூந்தமல்லியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி, தாம்பரம் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, திருவள்ளூர் பகுதியில் 7 வயது சிறுமி, சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்கரம் என தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் நாம் ஒரு நாகரீக சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என எண்ணும் வகையில் கொடும் சம்பவங்கள் டதொடர்ந்து நடைபெறுகின்றன.
எந்தெந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஏழை, எளிய தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்களோ... அவர்கள் அந்தப் பெண் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்!
1 ½ லட்சம் காவலர்களை வைத்தும், 2,500 பேரைக் கொண்ட 'சிங்கப்பெண்கள்' சிறப்புப் படையை வைத்தும் என்ன பலன்? தான் முதலமைச்சராக வேண்டுமென்ற கனவு நிறைவேறினால் மட்டும் போதுமா? தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை உங்களின் கைகளில் உள்ளது. நீங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரம் இது. நீங்கள் மக்களோடும் நிர்வாகத்தோடும் நேரடி தொடர்பில்லாமல் இருப்பதும், உங்களின் அர்த்தமற்ற மௌனமும் பெரிய பெரிய பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதே போன்று விரும்பத்தகாத எவ்வளவோ நிகழ்வுகள் நடந்துவிட்டன. தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள், மெல்ல மெல்ல சட்டம் ஒழுங்கு உங்களின் கைகளில் இருந்து நழுவுவதை உணர முடிகிறது.
உங்கள் இடத்தை தகுதியற்ற எவரையும் வைத்து நிரப்ப எண்ணாதீர்கள். இது கட்சிப் பொறுப்பல்ல; நீங்கள் ஒரு ரசிகர் மன்றத்தின், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மட்டுமல்ல; 7 ½ கோடி தமிழக மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க வேண்டிய அரசு பொறுப்பில் உள்ளவர்; அதைத் தட்டிக் களிக்காதீர்கள்; மௌனத்தை கலைத்திடுங்கள்; ஆட்சி நிர்வாகத்தை முறைப்படுத்துங்கள். ஆட்சிப் பொறுப்புக்கு வருவது கடினம்; ஆனால், கண்மூடி கண் திறப்பதற்குள் அது போய்விடும். எச்சரிக்கையோடும் பொறுப்போடும் இனியாவது விழித்துக் கொண்டு செயல்படுங்கள்; குழந்தைகள், பெண்கள் மற்றும் பிற குடிமக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திடுங்கள்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
16.06.2026
@DrHolyhemp 100 நாள் வேலை திட்ட பங்கீட்டை 90:10 என்பதில் இருந்து 60:40 என மத்திய அரசு #VBGRAMG என்ற பெயரில் மாற்றியதை எந்த எதிர்க்கட்சியும் கண்டிக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் நிதி உரிமைகளுக்காக துணிச்சலாக குரல் எழுப்பியது புதிய தமிழகம் கட்சித் தலைவர் @DrKrishnasamy அவர்கள் மட்டும் தான்.!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-ஆவது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதன் மூலம், அவர் தமிழ் மண்ணில் ஆற்றிய தொண்டுகளையும் நினைவுகூர்வோம்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஆட்சி என்றாலே தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் ஓரடுக்கு, ஈரடுக்கு மேம்பாலங்களும், பெரிய பெரிய கட்டுமானங்களுமே நினைவிற்கு வரும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்துப் பெருநகரங்களை ஒட்டியும் 'சிட்கோ' (SIDCO) என்று அழைக்கப்படக்கூடிய, குறைந்த முதலீட்டில் அதிகமான தொழிலதிபர்களையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.
அவரது 103-ஆவது பிறந்தநாளில், அவர் தமிழுக்கும், தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூர்வோம்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
03.06.2026