நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது..? முதல் படத்தில் அறிமுமமாகும் போது போடாதது ஏன்..? தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது பெரம்பூரையும், திருச்சி கிழக்கையும் தேடி போய் நின்றது ஏன்..? உங்களை ஒழிக்காமல் எப்படி இதையெல்லாம் ஒழிப்பது..? சீமான் கேள்வி
#Seeman | #NTK | #PolimerNews
200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் நடப்பு மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவெக அரசு 200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 அலகிற்கு மேல் அதிகமானதால், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின்கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணமாகும்.
தவெக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 அலகுகள் இலவசம் என்றும், அதுவும் 500 அலகுகள்வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதென்று தற்போது, மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தைவிடப் பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் மட்டுமே இதுபோன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பன்மடங்கு தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக, கர்நாடகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதா? போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இப்போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை. காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கானத் தார்மீக உரிமையை மறுத்து வருகிறது என்பதே மறுக்கவியலா பேருண்மை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை. முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, அதேபோல தற்போது மேகதாதுவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா? உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் பயனும், தீர்வும் கிடைக்கப்பெறாது திரும்பி வந்ததெல்லாம் முதல்வர் விஜய்க்குத் தெரியாதா? ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுபோல, முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்து, விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி, இச்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது? காவிரி நதிநீர் உரிமைப் பங்கீட்டுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பெற முயற்சி எடுக்காத தவெக அரசு, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி தண்ணீருக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் எவ்வித உறுதிப்பாடுமில்லை. காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும்கூட, அதனை ஏற்க மறுத்து, மேல்முறையீட்டுக்குச் செல்கிறது கர்நாடக அரசு. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? எதற்கு இந்த வறட்டுப்பிடிவாதம்? ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாது ஏமாற்றி, விவசாயிகளின் வயிற்றிலடித்த தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர்ச்சிக்கலையும் மிகுந்த மெத்தனப்போக்கோடும், அலட்சியப்போக்கோடும் கையாள்வது ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதற்கு நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும். இப்போது சூழல் சரியில்லாததால், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாமென்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் கூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.
ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@sri50 Advantage Karnataka Tamil Nadu is doomed we are going to pay the price for celebrating mass moments goosebumbs noments slave for mass actors has cost our lives some 1.75 cr peoples stupidity has destroyed TN RIP TN nice languafe nice state once upon a Time not anymore
உரிமை கேட்டு போராடும் எம்ஆர்எஃப் (MRF) தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் மக்களுக்கான மாற்றமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
பெரம்பலூரில் அமைந்துள்ள, எம்ஆர்எஃப் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 730 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு கடந்த 27 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் எம்ஆர்எஃப் நிறுவனம் அவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுத்து வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களைத் துன்புறுத்தி அடித்து, மிரட்டும் தவெக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச்சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களைக் கூவி கூவி அழைத்து ஒப்பந்தம் போடும் தமிழ்நாடு அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் பேச்சுவார்த்தை நடத்தி நம் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன் காக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் தலையாயக் கடமையாகும்.
அதை விடுத்து, நாங்கள் மக்களை காக்க வந்த காவலர்கள், மாற்றத்தைத் தர வந்த மனிதப் புனிதர்கள் என்று தற்பெருமை பேசும் தவெக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் அமைத்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே காலநிலை மாற்றம், பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்கக்கூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆதாரமில்லாமல் அவதூறாக பேசும் உங்கள் மேல் வழக்கு தொடுக்கப்படும் @itisprashanth. உங்கள் அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டாலும் நீதிமன்றங்கள் மூலம் வழக்கு பதியப்பட்டு தண்டனை பெரும் படி செய்வோம்.