எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்கள் எதிர்கொண்ட பகைமையை மட்டுமே பேசுகிறார்கள்.
அன்பு காட்டிட ஒரு மனிதர் கூட இல்லாமல் போனார்களா எனும் கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.
காயங்கள்தான் பெரிதெனில் காயங்களை ஆற்றியவர்கள் ஏன் பெரிதாய் தென்படுவதில்லை.
உதவி செய்யும் மனம் உள்ளவர்களை, இரக்கம் இல்லாத மனிதர்களாக மாற்றிவிடும் காலத்திற்குத்தான் கொஞ்சமும் இரக்கமில்லை.
நிறையவே மாறிவிட்டாய் எனும் சொற்கள் காலத்தினால் உருவாக்கப்படுபவை.
நிறையவே மாறித்தான் போனீர்களோ!
நேரமிருந்தது. வானம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
சும்மா இருந்தேன் எனச் சொல்ல இயலாதபடிக்கு வானத்துப் பறவைகள் சில. வான் நோக்கிய மரங்கள் சில எனப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
வானமும், பறவைகளும், மரங்களும் என்னை பார்க்கவும் செய்ததால் அவையும் சும்மா இருக்கவில்லை.
என் விருப்பத்திற்கா பிறந்தேன், விருப்பப்பட்டா வாக்கப்பட்டேன், விருப்பப்பட்டா வேலைக்குப் போனேன், விருப்பப்பட்டா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என ஒரு விருப்பமற்றத் தன்மையை காலம் நம்மீது திணித்துக் கொண்டிருப்பதாகத் தோணும்.
உண்மையில் விருப்பம் என்பது விருப்பமற்றத் தன்மைதான்.
நாமே ஒரு பேரழகிய, பேரறிவுமிக்கப் புத்தகம்.
நமது வாழ்வும் ஒருவகை அனுபவப் பாடம்தான்.
இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாமோ என ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும்.
வாசிக்கப்படாமல் போகும் புத்தகங்கள் பல.
எப்போதும் பார்த்து இரசித்துக் கொண்டே இருக்கக்கூடிய முகம் அது, எப்போதாவதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
எப்போதாவது பார்க்கும் முகம் எனிலும் பேரழகியச் சிரிப்புடன் எப்போதும் கண்களில் தவழ்கிறது.
வீட்டு முன் முதன் முதலாக ஓர் அழகிய கோலம் ஒன்றை போட்டுவிட்டு வீட்டுக்குள் செல்கிறாள் சிறுமி.
அவள் சென்றதும் அவள் போட்ட கோலத்தை கண் கொட்டாமல் பார்க்கிறான் சிறுவன்.
கோல மாவுக்கென சில பல எறும்புகள் அங்கே ஊர்ந்து வருகின்றன.
கோலம் போடுவது அழகியல் மட்டுமல்ல, அது ஒரு பேரழகிய வாழ்வியல்
எதையோ நினைத்தபடி பிறர் சொல்வதை முழுவதும் கேளாமல் அமர்ந்திருக்கிறான் ஒருவன்.
என்ன சொன்னோம் எனச் சொல்லச் சொல்லி அவனிடம் கேட்டால் திருதிருவென விழிக்கின்றான்.
அங்குதான் அமர்ந்திருக்கிறான், ஆனால் எங்கெங்கோ அலைந்தலைகிறான்.
மனிதர்களை மெதுவாகத் தின்னுவிடும் அவர்தம் கவலைகள்.
அன்பு குறித்து பேசவே பேரச்சமாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தோடு பகைமை கொண்டு ஒருவருக்கொருவர் பல வருடங்களாகப் பேச மறுத்துவிடுகிறார்கள்.
எவர் வந்தாலும் தாங்கள் பேசாதவர்கள் குறித்துத்தான் பல மணி நேரங்கள் குறைசொல்லிப் பேசுகிறார்கள்.
அன்பில்லாத மனிதர்கள் கண்டால் பேரச்சமாகிறது.