மனம் ஒரு அதிசயம்.
அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது.
நினைவுகளை நீக்கி பார்த்தால்,
மனமென்ற பொருளில்லை.
ஆகவே நினைவகளின் தொகுப்பே மனது.
-
எல்லாவற்றிலும் எல்லாமும் உள்ளது.
எல்லாமும் எல்லாவற்றிலும் இல்லை.
-
மனம் ஒரு மாயை
நீங்களே உங்கள் மனதை உருவாக்கிய படைப்பாளி ( கடவுள் ! )
#திருக்குறள்#எண் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
கலைஞர் மு.கருணாநிதி உரை
ஒருவர் செய்யும்
தினையளவு நன்மையைக்கூட
அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர்
பல்வேறு வகையில் பயன்படக்கூடிய
பனையின் அளவாகக் கருதுவார்
#திருக்குறள்#எண் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே,
அன்பின் காரணமாக
ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
#திருக்குறள்#எண் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தேவைப்படும் காலத்தில்
செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,
அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
#திருக்குறள்#எண் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
-
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாராது வந்த மாமணி
( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி)
என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால்,
அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
#திருக்குறள்#எண் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இனிய சொற்கள்
இன்பத்தை வழங்கும்
என்பதை உணர்ந்தவர்
அதற்கு மாறாக
எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.
#திருக்குறள்#எண் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல்
ஒருவனுக்கு அவன் வாழும் போதும்,
வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
நெருப்பு தேவதை
நேரில் வந்தாள்
பார்க்கவே பிரகாசம்
கண்களை வெட்டி
என்னைப் பார்த்தாள்
அவளது தேகத்திலிருந்து
பீறிட்டுக் கிளம்பும்
அக்னிக் கொழுந்துகள்
என்னைத் தழுவத் துடித்தன
அவளது
அருகாமையில் என் உடல் தகித்தது
நா வறண்டது
-
எழுந்திருங்க மருந்து சாப்பிட்டுப் படுங்க என்றாள் மனைவி !
#திருக்குறள்#எண் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நன்மையான
பயனைத் தரக்கூடிய
நல்ல பண்பிலிருந்து
விலகாத சொற்கள்
அவற்றைக் கூறுவோருக்கும்
இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்.
#திருக்குறள்#எண் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தீய செயல்களை அகற்றி
அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,
இனிய சொற்களைப் பயன்படுத்தி
நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
வினாடி கூட
ஓய்வில்லாமல்
உழைத்த கடியாரம்
காலத்தைக்
கணக்கெடுத்த
கறாரான கடியாரம்
எசமானன் வெறுத்தாலும்
மணி அடித்து எழுப்பிய கடியாரம்
பார்க்கும்
மனிதருக்கெல்லாம்
பாரபட்சமின்றி
நேரங்காட்டிய கடியாரம்
இன்று
தனது செயலிழந்து
அனாதை ஆன கடியாரம்
காலமகள் புறக்கணித்த - மரணித்த கடியாரம்
#திருக்குறள்#எண் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
-
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அடக்கமான பண்பும்,
இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர,
ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
#திருக்குறள்#எண் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
கலைஞர்
இன்சொல் பேசி
எல்லோரிடத்திலும்
கனிவுடன் பழகுவோர்க்கு
நட்பில் வறுமை எனும் துன்பமில்லை
சாலமன் பாப்பையா
எவரிடமும் இன்பம் தரும்
இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது
#திருக்குறள்#எண் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
-
கலைஞர் மு.கருணாநிதி உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது,
அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.