இந்த சாதிவெறி நாய்கள் கூட்டம் கல்யாணசுந்தரத்தை எதுவும் திட்ட மாட்டானுங்க இதே கருத்தை சொல்லும் எங்க கார்த்தி, சாட்டையை மட்டும் திமுக மூலாம் பூசி கடிக்க வருவானுங்க!
100 நாள் ஆட்சியில், 6 காவல்நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை!
@CMOTamilnadu@TVKVijayHQ
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச்சேர்ந்த ஐயா பரமசிவம் அவர்களை, விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையததில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. 100 நாள் ஆட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் காவல்நிலைய மரணங்களை தடுக்கத்தவறி தவெக அரசு வேடிக்கைப்பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து, தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையிலும் ஐயா பரமசிவம் அவர்கள், அளித்துள்ள மரண வாக்குமூலக் காணொளி இதயத்தை உறையச்செய்கிறது. வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்னையில், தன்னுடைய மனைவி அய்யம்மாளுடன் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற ஐயா பரமசிவத்தை, காவல் நிலையத்திற்குள் வைத்தே கடுமையாகத் தாக்கிய சிந்தாமணி காவல்துறையினர், தாக்குதல் குறித்து வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கில் குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், ஐயா பரமசிவத்தை மிரட்டியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை. தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
தவெகவின் நூறுநாள் ஆட்சியில் ஆறு விசாரணை சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற காவல்துறை மரணங்களின்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காதது ஏன்? தனது கட்சி கூட்டத்தில் வந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கே அரசு வேலை தருகின்ற முதல்வர் விஜய், தனது ஆட்சியில், தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மக்கள் மீது நிகழ்த்திவரும் அடக்குமுறை கொடுமைகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்குத் துயர்துடைப்பு உதவியோ, அரசு வேலையோ வழங்க மறுப்பதேன்? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்கள் கேட்கவில்லையா? தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த திமுக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத்தராது இருப்பது முறைதானா முதல்வர் அவர்களே? கொடுங்குற்றம் புரிந்த குற்றவாளியாக, இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத்தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் எந்தவொரு நாட்டிலும் நிகழக்கூடாத மனிதப் பேரவலம்!
ஆகவே, மதுரை சிந்தாமணி காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ள ஐயா பரமசிவம் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும் வழங்க வேண்டும். அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய விசாரணை மரணங்கள் இனியும் தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ்! அந்த உயிர்மொழியினை அன்பைப் போதிக்க வில்லையெனக் கூறி, அமைச்சர் மரியவில்சன் அவமதிப்பு செய்வதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களைச் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக
மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்!
நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே!
உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும்,
பாராடா உன் மானுட பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும்,
புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும்,
"உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?
காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?
தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே!
எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்;
தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது.
பெரும்பாவலர் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.
'வாடியப்பயிரை கண்டு வாடிய'
வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.
அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.
கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?
இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.
*நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.
அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற
அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி