அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அண்ணன் அடிக்கடி சொல்வார்
நான் போதிக்கும் போது புரியாது,
நீ பாதிக்கும் போது புரியும் என்று
ஆனால் இங்கு பாதிப்பு வந்தபிறகும் பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினை புரியவில்லை.
#Seeman4TN