பென்னாகரம் தொகுதியில் மனமகிழ் மன்றம் திறப்பு: மக்களின் எதிர்ப்பையும் மீறி மது வணிகம் செய்ய ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரே துணை போவதா?
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி நல்லாம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மது வணிகம் செய்வதற்கான மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சிகளை பாமக முறியடித்து வந்த நிலையில் அங்கு மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டிருப்பதும், அதற்கு ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துணை போயிருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
நல்லாம்பட்டி கிராமத்தில் நீண்ட காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லாத நிலையில், அங்கு புதிய மதுக்கடையை திறக்க கடந்த ஐந்தாண்டுகளாக பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர எதிர்ப்புகளாலும், போராட்டங்களாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில் தான் நரியை பரியாக்குவதைப் போல நேரடியாக மதுக்கடையை திறப்பதற்கு பதிலாக மனமகிழ் மன்றம் அமைத்து அதன் மூலம் மது வணிகம் செய்யலாம் என்று திட்டமிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முந்தைய ஆட்சியாளர்களின் உதவியுடன் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி உரிமம் பெற்றார். ஆனாலும் பாமக மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் மனமகிழ் மன்றத்தையும் திறக்க முடியவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த மே 28-ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் யூனியன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டு மதுவணிகம் செய்யப்பட்டு வருகிறது. மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 30-ஆம் தேதி ஊர்மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து மனமகிழ்மன்றத்தை மூட வேண்டிய அதிகாரிகள், மனமகிழ் மன்றத்தை நடத்துவோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி, விவேகானந்தர் இளைஞர் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் 6 பேர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், யூனியன் மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வாங்கியும் கடந்த 3 மாதங்களாக திறக்கப்படாத நிலையில், இப்போது அது திறக்கப்பட்டதன் பின்னணியில் பென்னாகரம் தொகுதி ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும், அவர் தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மனமகிழ் மன்றத்தைத் திறக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மனமகிழ் மன்றத்திற்கான உரிமத்தைப் பெற்றுள்ள பிரகாஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சந்துக்கடைகள் மூலமாக சட்டவிரோதமாக மதுவணிகம் செய்து வந்தவர் என்றும், நல்லாம்பட்டி பகுதியில் மதுக்கடைத் திறக்க பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான உரிமத்தை வாங்கினால், அதைக் கொண்டு நேரடியாக மது வணிகம் செய்யலாம் என்று டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் யோசனைத் தெரிவித்த நிலையில், அவர்களையும், தமது சகோதரர் முருகவேலையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு இந்த மனமகிழ் மன்றத்தை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டத்தை மீற டாஸ்மாக் ஊழியர்களே துணை போயிருப்பதை அனுமதிக்க முடியாது.
முதலமைச்சராக இருக்கும் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக ஆட்சிக்கு வந்த இரு நாள்களில் 717 மதுக்கடைகளை மூட ஆணையிட்டார். ஆனால், அவரது கொள்கையை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஆளும்கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மது வணிகத்திற்கு துணை போயிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மனமகிழ்மன்றங்கள் என்ற பெயரில் மது வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது தான் தமிழத்தில் இன்று நிலவும் குழப்பங்களுக்கு காரணமாகும். ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிக் கொண்டு இன்னொருபுறம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. இது அரசின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரே ஒரு மதுக்கடை கூட திறக்கப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கு எதிரான வகையில் நல்லாம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள மனமகிழ்மன்றத்தை உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும்; மனமகிழ் மன்றத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.! @CMOTamilnadu
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை
அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு
சிந்தாமல் சிதறாமல் செலுத்தி,
கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சாரும்
PMK votes were transferred without pilferage to their Alliance.