72-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'ராயன்' திரைப்படத்திற்காகச் சிறந்த தமிழ் படம் விருதையும், 'கேப்டன் மில்லர்' படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான சிறப்புத் தேசிய விருதையும் வென்றுள்ள தம்பி தனுஷ் @dhanushkraja எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! உங்களது கலைப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
#NationalFilmAwards #Dhanush #Raayan #CaptainMiller #MDMK #vaiko #duraivaiko
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு தடுப்பு அணை கட்ட மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டி சபை ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தேன்.
தமிழ்நாடு கர்நாடகா இடையே பல ஆண்டுகளாகவே இருக்கும் முக்கியமான பிரச்சினை காவிரி நீர் பங்கீடு. அதில் இடையூறு விளைவித்து தமிழ் நாட்டிற்கு அநீதி இழைக்க கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு தடுப்பு அணை கட்ட பெருமுயற்சி மேற்கொண்டுவருகிறது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த போதிலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை எடுத்துரைத்து,
அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி,
1956 நதிநீர் தாவா சட்டப்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு, நடுவர் மன்றம்
அளித்த இறுதித் தீர்ப்பு ஆகியவற்றையும் குறிப்பிடப்பட்டு,
கர்நாடக மாநிலம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்றம் அனுமதிக்க வில்லை என்பதையும் குறிப்பிட்டு,
உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையே உறுதி செய்திருப்பதை எடுத்துக்காட்டி,
மேகதாது அணை கட்டவே கூடாது; அவ்வாறு கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாடு பெற்று வருகிற நீர் குறைவதோடு காவிரிப் படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் .
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பறிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு துணைபோகாமல், மேகதாட்டு தடுப்பு அணை அமைப்பதற்கு ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஆணையம், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை அளிக்கக் கூடாது என குறிப்பிட்டு சபை ஒத்திவைப்பு தீர்மானத்தை இன்று (21.07.2026) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
21.07.2026
புதுடெல்லி
#DuraiVaiko #trichy #cmotamilnadu #cmvijay #tvk
தூத்துக்குடி மாநகரில்
ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வரவேற்பு விழா
60%பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி போதிக்கும் இப்பள்ளிக்கு அங்கீகாரம் புதுப்பித்தலை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்புச் சகோதரர் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் சொல்லி பெற்றுக் கொடுத்தேன்.
அதை ஒட்டி நான் தூத்துக்குடி வருவது அறிந்து பள்ளியில் ஒரு எனக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த விரும்பி அழைத்தனர்.
அந்த அழைப்பை ஏற்று,
மாநகரில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் ஸ்ரீ காமாட்சி வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி வரவேற்பு விழாவில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிடும் வாய்ப்புப் பெற்றேன்.
எனது உரையில்
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
மாணவர்கள் தாங்கள் விரும்புகிற துறையில் ஆர்வம் ஏற்படுத்திக் கொண்டுதிட்டமிட்டுச் செயல்படுமாறும்,
நம்பிக்கையுடனும்,
ஊக்கமுடனும் உயர்வதற்கு தேவையான பல்வேறு தகவல்களையும் எனது உரையில் தெரிவித்தேன்.
தொடர்ந்து,
மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
10க்கும் மேற்பட்ட மாணவர்கள்,
எனது பள்ளி கல்லூரி பருவம் குறித்தும், எனது அரசியல் வருகை குறித்தும், எனது ரோல் மாடல் யார் என்பது குறித்தும், வாக்களிக்கின்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது குறித்தும்,
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
எனது பதில்கள் எப்போதும் போல் உண்மையாகவும், யதார்த்தமாகவும் அமைந்தது..
மாணவர்கள், ஆசிரியர்களின் வரவேற்பையும் பெற்றது.
நிறைவாக, மதிப்பெண்கள் குறைந்தால் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும், மதிப்பெண்களே எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல; அதையும் தாண்டி சாதிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறி நம்பிக்கை ஊட்டினேன்.
ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்விச்சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்ற இந்தப் பள்ளிக்கு என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்தேன் என்பதில் மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்பட்டது ..
பள்ளிச் செயலாளர் திருஅருணாசலம் வரவேற்புரையில்,
எவ்விதச் செலவுமின்றி
அங்கீகாரம் புதுப்பித்து வழங்கியதற்காக
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும், எனக்கும் மாணவர்களின் பலத்த கை தட்டலுக்கிடையே நன்றி தெரிவித் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் பணிகளுக்கு மத்தியில்
இது போன்ற இளைய தலைமுறையாம் மாணவச் செல்வங்களை சந்தித்து கலந்துரையாடியதன் மூலம்
மனதிற்கு
ஒரு இளைப்பாறுதல் கிடைக்கிறது .அந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன்.
அன்புடன்
துரை வைகோ MP
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
19.02.2026.
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko
ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, நான் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
இதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ரஷ்யாவின் துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து, இதுவரையிலான நிலவரத்தை எடுத்துரைத்துள்ளேன்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எனது கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான கடிதம் ஒன்றை நேற்று 30.08.2025 அனுப்பியுள்ளது. அதில்,
மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம், கிஷோர் சரவணனை ரஷ்ய இராணுவத்திலிருந்து விடுவிக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இந்த விவகாரம் ரஷ்ய அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலை 15, 2025 அன்று சீனாவின் டியான்ஜினில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு. செர்ஜி லாவ்ரோவுடன் இவ்விவகாரத்தை எழுப்பியதாகவும்,
ஆகஸ்ட் 5, 2025 அன்று ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல் ஜெனரல் அலெக்ஸாண்டர் ஃபோமினுடனான சந்திப்பில் இப்பிரச்சினையை மீண்டும் எடுத்துரைத்ததாகவும்.
ஆகஸ்ட் 21, 2025 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இடையேயான 26வது அரசு-அரசு ஆணையக் கூட்டத்தில் (IRIGC-TEC) மீண்டும் இதுகுறித்து விவாதித்ததாகவும், அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விளக்கக் கடிதத்திற்கு பதிலாக, இன்று 31.08.2025 நான் நன்றி பாராட்டி அனுப்பிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்ற எனது கோரிக்கைக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு, மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசு, அமெரிக்காவின் 50% வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் இத்தருணத்தில், எனது, இந்த உயிர்காக்கும் விவகாரத்திற்கான கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை , இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய தாங்கள் காட்டும் அர்ப்பணிப்பு எங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
கிஷோர் சரவணனை மீட்க நான் மேற்கொண்ட முயற்சிகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழை, எளிய கிராமப்புற மக்கள், தங்களது பிள்ளைகளும் ரஷ்யாவில் இதேபோல் சிக்கியுள்ளதாகவும், அவர்களையும் மீட்டு அழைத்து வர வேண்டுமென்று நேரிலும் தொலைபேசி வழியாகவும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, கிஷோர் சரவணனுக்கு மட்டுமல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு என்று ஏமாற்றப்பட்டு ரஷ்யாவில் போர்முனையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
31.08.2025
விடுதலைப் போராட்ட வீரர் அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்களின் நலம் விசாரித்தேன்.
இந்திய விடுதலை யுத்தத்தில் ஒன்பது ஆண்டுகள் சிறைப்பட்ட தியாகச் செம்மல், தாமிரபரணி ஆற்றங்கரை பொதுவுடமை இயக்க அரசியலுக்கு தந்த அப்பழுக்கற்ற ஒருபெருந்தலைவர், எனது பொது வாழ்க்கைக்கு ஒர் வழிகாட்டியாகத் திகழும் அய்யா ஆர் நல்லகண்ணு அவர்கள்(RNK) உடல் நலிவுற்று சென்னை ராஜீவ் காந்திஅரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு தலைவர் வைகோ அவர்கள், அய்யா அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.
இன்று (31.08.2025) முற்பகல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று, அவர்கள் சிகிச்சை பெறும் அறைக்கும், பார்வையாளர் இருக்கும் இடத்திற்கும் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி வழியாக அவர்கள் சிகிச்சை பெற்று வருவதை பார்த்தேன்.
அருகில் இருந்த பேத்தி நான் வந்திருப்பதை கூறினார். அவருக்கு வணக்கம் கூறினேன். தமது கரத்தை உயர்த்தி என்னை அடையாளம் கண்டுகொண்டதை உறுதிப்படுத்தினார். அவரது மகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரிடம் அய்யாவிற்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். சீராக உடல் நலம் தேடி வருகிற செய்தியை அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்.
தலைவர் வைகோ அவர்களுக்கும், அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கும் சுமார் 45, 50 ஆண்டு காலத்திற்கு முன்பே இணக்கமான நல்லுறவு உண்டு. அய்யா அவர்கள் கலிங்கப்பட்டி இல்லத்திற்கு சில முறை வந்துள்ளார்கள்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் தென்னகத் தளபதிகளில் ஒருவரான தாத்தா "மானா கோனா" என்று அழைக்கப்படும் மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அவர்கள், திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது,
திருவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, இன்றைக்கும் கம்பீரமாக காட்சி தருகிற ஆற்றுப்பாலம் திறப்பு விழாவில், ஒரு பள்ளி மாணவனாக அய்யா ஆர். நல்லகண்ணு அவர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த படம் அவரது பொது வாழ்வு இளமைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது என்பதற்கு சான்றாகும்.
அந்தப் படம் சமூகநீதி போராளி சகோதரர் வியனரசு அவர்களால் வழங்கப்பட்டு எங்கள் கலிங்கப்பட்டி இல்லத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
என் தந்தையாரும் அய்யாவும் இணைந்து நடத்திய பல போராட்டங்கள், அரசியல் பொது வாழ்வில் அவர்கள் பேணி வந்த பண்பட்ட நல்லுறவுகள் குறித்து குடும்பத்தினரிடம் சுமார் 2 மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் அரியதோர் வாய்ப்பினைப் பெற்றேன்.
நான் அரசியல் பொதுவாழ்விற்கு வந்தபோது, தாயகத்தில் எனக்கென்று ஒரு அலுவலக அறையை, தலைமைக் கழகம் உருவாக்கித் தந்த போது, அந்த அலுவலகஅறையை திறந்து வைப்பதற்கு தகுதியானவர் யார் என யோசித்து அய்யா நல்லகண்ணு அவர்களே பொருத்தமானவர் எனக் கருதி அழைத்து வந்தேன். நான் அமர வேண்டிய இருக்கையில் முதன் முதலாக அவரை அமரச் செய்து அவரது நல்லாசியைப் பெற்ற பின்னர் தான் எனது அரசியல் பணியைத் தொடங்கினேன்.
அரசியல் பொதுவாழ்வில் ஒரு முன்மாதிரியாக, ஆகச்சிறந்த அரசியல் ஆளுமையாக, அய்யா ஆர் நல்லகண்ணு அவர்கள் விளங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் காணக் கிடைக்காத அபூர்வமான தலைவர் அவர். என்னை போன்ற அரசியல் புது முகங்களுக்கு அவரது பொது வாழ்வே ஒரு உந்து சக்தியாக இருக்கின்றது.
எந்த ஆசாபாசங்களுக்கும் ஆட்படாமல் வெள்ளையர் காலத்தில் நாட்டு விடுதலைக்கு போராடி, தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு, பொதுவுடமை இயக்கத்தை மண்ணில் நிலை நிறுத்த அரும்பாடுபட்டு, இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க நீதிமன்றப்படிக்கட்டுகளில் 90 வயதிலும் ஏறி, இறங்கி, வேளாண் தொழிலாளர்களை பாதுகாக்க உரிமை முரசு கொட்டி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக களத்தில் நின்று கடமையாற்றி, இப்படி வாழ்வையே மக்களுக்காக அர்ப்பணித்த அய்யா அவர்களின் பொதுவாழ்வு, என்னைப் போன்றோர் படித்துப் பின்பற்ற வேண்டிய நெறி சார்ந்த தூய பொதுவாழ்வாகும்
அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த தமிழ் மண் மேலும் பண்பட பணியாற்றிட வேண்டும் என்கிற எனதுவிருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்தேன்.
அய்யா அவர்கள் முழுமையாக நலம் பெற்று வர இறைவனை வேண்டுகிறேன்.
இந்த சந்திப்பின்போது, வட சென்னை கிழக்கு மாவட்டச்செயலாளர் அண்ணன் சு.ஜீவன், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சகோதரர் ப. சுப்பிரமணி மற்றும் தோழர்கள் உடன் வந்திருந்தனர். நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்களும் நலம் விசாரிக்க வந்திருந்தார்கள்.
அன்புடன்
துரை வைகோ MP
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
31.08.2025