ஆந்திரக் காட்டில் இருபது பேர் படுகொலை!
கர்நாடகக் காட்டில் மூன்று பேர் படுகொலை!
அண்டை மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லையா?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக மக்களின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வனத்துறை அவர்கள் வேட்டையாடச் சென்றதாகக் கூறுகிறது. அதேவேளையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அவர்கள் திரும்பி வராத மாடுகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள் என்று தெரிவிக்கின்றனர்.
இரு தரப்பின் கூற்றுகளிலும் உண்மை என்ன? என்பதை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது.
ஆனால் எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும், கைது செய்ய முடிந்தவர்களை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்?
மடக்கிப் பிடிக்க முடியாத அளவுக்கு என்ன நடந்தது?
துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா?
இந்தக் கேள்விகளுக்கு, கர்நாடக அரசு ஆதாரங்களுடன் பதில் வேண்டும்.
தமிழர்களின் உயிரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்மானிக்கும் நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2015 இல் ஆந்திரக் காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் காயமே இன்னும் முழுமையாக ஆறாத நிலையில், கர்நாடகாவில் மேலும் மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
20 தமிழர்களின் மரணத்திலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லையா?
ஒரு மனிதன் குற்றவாளி என்றால் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டிக்க வேண்டும். கையில் துப்பாக்கியை வைத்திருக்கிறோம் என்பதற்காக, அதை எளிய மக்கள் மீது பயன்படுத்தக் கூடாது.
தமிழ்நாடு அரசே, கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
கர்நாடக அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும்.
சம்பவத்தின் முழு உண்மையையும் கண்டறியச் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.
விசாரணை முடியும் வரை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தமிழக அரசு நேரடியாகச் சந்தித்து, உரிய நிவாரணம் மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும்.
உயிர் பிழைத்த நபரின் வாக்குமூலம் எந்த அழுத்தமும் இல்லாமல் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த மூன்று உயிர்களின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்த அந்த மூன்று தமிழர்களும் வேறு யாருமல்ல. மேட்டூர் அணை உருவாக்கப்பட்டபோது தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் நிலங்களையும் இழந்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து கர்நாடக எல்லைப் பகுதிகளில் குடியேறிய மக்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
அந்த மக்களின் தலைமுறைகள் இன்று கர்நாடக மண்ணில் வாழ்கின்றன.
அவர்கள் அந்நியர்கள் அல்ல.
அவர்கள் காவிரியின் வரலாற்றோடு வாழும் தமிழர்கள்.
காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம்.
ஆனால் அந்த முரண்பாடுகள் எல்லைப் பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் சூழலாக மாறக்கூடாது.
தமிழ்நாடு அரசு இதையும் தெளிவாக வலியுறுத்த வேண்டும்.
காவிரி நீருக்கான உரிமையைப் போலவே, காவிரிக் கரையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர்,
கர்நாடக முதலமைச்சரிடம் உடனடியாகப் பேசி, இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணையுடன் நின்றுவிடாமல், சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் சட்ட உதவியும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
உயிர் பிழைத்த நபரின் பாதுகாப்பையும் மருத்துவ சிகிச்சையையும் உறுதி செய்ய வேண்டும்.
சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் கருத்தில் கொண்டு, எல்லை மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நிரந்தரமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
#JusticeForTamils
#StopKillingTamils
#tamil
#தமிழர்_படுகொலைக்கு_நீதி
#தமிழர்_உயிர்_பாதுகாப்பு
சமூக அநீதி தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி
நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்
சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகமான திருவள்ளுவர் இல்லத்தில்
5 வது நாளாக தொடரும் தொடர் பட்டினி போராட்டத்தில் பங்கேற்று அவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்தினேன்.
#BanNeet_SaveTNStudents
#BanNEET
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில், தனது 4 மாத கைக்குழந்தையுடன் பங்கேற்ற தந்தை, குழந்தையின் எதிர்காலத்திற்காக போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
குழந்தையின்
எதிர்காலத்திற்காக
போராட்டத்தில் பங்கேற்ற தந்தை
#JantarMantar#Protest#Father#4MonthOldBaby #ChildsFuture #Delhi #ProtestForFuture #IndiaNews #ViralVideo #ThanthiTv
மின்சார வாரியமா?
மக்கள் பணத்தைப் பறிக்கும் வாரியமா?
200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்து மக்களின் கைத்தட்டலைப் பெற்ற அரசு, இன்று அதே மக்களின் கைகளில் அதிர்ச்சியூட்டும் மின்கட்டண இரசீதுகளைத் திணித்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, அதிகப்படியான மின்கட்டணம், சலுகைச் சரியாகக் கணக்கிடப்படாதது, கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, அரசின் அமைச்சர்களே விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியிருக்கிறார்கள். அப்படியிருக்க, தவறு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதை அரசே மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது எனும் பட்சத்தில், தவறால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி எப்போது?
தமிழ்நாடு அரசு உடனடியாக மின் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி,
மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
தவறாக வசூலிக்கப்பட்ட அனைத்து தொகைகளையும் உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் எனவும்,
200 யூனிட் இலவச மின்சாரச் சலுகை நடைமுறையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும்,
தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#மின்கட்டணகுளறுபடி
#மக்களின்உரிமை
#PowerBillIssue
#StandWithPeople
தில்லியில் நடப்பது,
சனநாயக ஆட்சியா?
சர்வாதிகார ஆட்சியா?
ஒன்றிய அரசே,
மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது என்று கூறும் ஒன்றிய அரசு, அதே இளைஞர்கள் தங்களின் கல்வி உரிமையையும் எதிர்காலத்தையும் காக்க அமைதியான முறையில் போராடும்போது, அவர்களைத் தடியடியாலும், கண்ணீர் புகைக் குண்டுகளாலும் எதிர்கொள்வது சரியான சனநாயகம் அல்ல. அது சர்வாதிகாரமாகும்.
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாக வந்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கொடூரமானத் தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
நீட் தேர்வு அறிமுகமான நாளிலிருந்தே வினாத்தாள் கசிவு, முறைகேடு குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள், மறுதேர்வுகள் எனத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. 2024-ஆம் ஆண்டு மறுதேர்வு நடத்த வேண்டிய நிலையும், 2026-ஆம் ஆண்டு தேர்வு முழுமையாக இரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்ட நிலையும், இந்தத் தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து நாடு முழுவதும் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம் அனிதா, விக்னேஷ், மதுரை மாவட்டம்,ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரி மாவட்டம், ஆதித்யா, நாமக்கல் மாவட்டம்,மோதிலால் என இன்னும் பல மாணவர்களின் உயிர்கள், நீட் தேர்வு தொடர்பானக் கடுமையான மனஅழுத்தச் சூழல்களால் பறிபோயுள்ளன.
இன்று டெல்லியில் ஒலிக்கும் இளைஞர்களின் குரல், டெல்லி மாணவர்களின் குரல் மட்டுமல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் இளைஞர்களின் குரலாகும். குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சனநாயக அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை, சனநாயக வழியில் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஒன்றிய அரசு, 140 கோடி மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவியும் நிவாரணமும் வழங்க வேண்டும் எனவும், மாணவர்களின் எதிர்காலத்தைத் தொடர்ந்து நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிவரும் நீட் தேர்வை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#நீட்ஒழிக்கவேண்டும்
#மாணவர்களுக்குநீதி
#BanNEET
#JusticeForStudents
பதவியேற்ற 20 நாளில் போதைப் பொருட்கள் பறிமுதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
பதவியேற்ற 20 நாளில் எவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன? போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் உள்ளிட்ட விவரங்களைத் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வயது வித்தியாசமின்றி, ஆளும் கட்சியினரும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வீதிக்கு வீதி விற்பனை, அருகில் மதுக்கடைகள், கள்ளச்சாராய விற்பனை ஆகியவை அதிகரித்துள்ளதால், சமூகத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்த்து தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உள்ளது.
தமிழக முதல்வர் நேற்று வீதிக்கு வீதி கஞ்சா விற்பனைக்கு கடந்த திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம்: 62 வயதான மணி என்பவர், 12 வயது உறவுக்கார சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதே பகுதியில், எம்.ஜி.ஆர். நகரில் 59 வயதான வரதராஜன் என்பவர், 3 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். உறவினர்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர், ஒரு இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராமநாதபுரம் அருகே தனியார் விடுதியில் தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம்: ராஜா என்பவர் போதையில் தன் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்: செங்கல் சூளையில் பணியாற்றும் 50 வயதான சங்கர், 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தலைமைச் செயலகம் அருகே, பைக்கில் செல்லும் ரவுடி இடுப்பில் பட்டாகத்தியை செருகிக்கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான்: அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பிரபாகரன், பேருந்தை இயக்கியபோது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தனுஷ்கோடி சாலையை மறித்து தாக்கிய சம்பவம் நடைபெற்றது.
சென்னை தண்டையார்பேட்டை: கஞ்சா விற்பனைக்கு எதிராகப் புகார் அளித்த விஷ்ணு என்பவர், கஞ்சா கும்பலால் சுத்தியல், அம்மிக்கல் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
2021 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 1,07,000 கிலோ கஞ்சா, 3,21,000 போதை மாத்திரைகள், 1,223 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 2025-ம் ஆண்டு 2,362 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2025 ஜூன் வரை 4,889 வழக்குகளில் 3,493 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.
கடந்த ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக 27,000 போக்ஸோ வழக்குகள் உள்பட மொத்தம் 62,000-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், போதைப் பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் அமைக்க உத்தரவிட்டார். ஆனாலும், இந்த ஆட்சியிலும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாலியல் சீண்டல், கொலை, அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, பதவியேற்ற 20 நாளில் எவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன? போதை விற்பனையாளர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தமிழக அரசு உடனடியாக அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசே!
அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்!
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட நெட்டூர் பகுதியில் பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தும் வகையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, கொடூரமான ஆயுதங்களுடன் அங்கு இருந்தவர்களை குறிவைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், தமிழ்நாட்டின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இத்தகைய வன்முறைச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. மக்களின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பின்மை நிலவுகின்ற சூழல் உருவாகுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். சமூக ஆதிக்க மனப்பான்மை மற்றும் சாதி வெறி எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தை சாதாரண குற்றச் சம்பவமாகக் கருதாமல், அதன் முழுமையானப் பின்னணியை ஆராய்ந்து உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், அப்பகுதியில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்படுத்தி, அனைத்து சமூக மக்களின் உயிர், உடைமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முழுமையானப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்த சமூகத்தினருக்கும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே சனநாயகத்தின் மாண்பையும் மனிதநேயத்தின் அடிப்படையையும் காக்கும் வழியாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
மாநில உரிமைகளை கைவிடும் உயர்கல்வி அமைச்சரின் கூற்று - உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும்.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும்” என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியிருப்பது, மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும்.
கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அதில் பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சரே இருக்கும் மசோதாவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
நீண்ட நாட்களாக அந்த மசோதாக்கள் கிடப்பில் இருந்தன. ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மசோதாக்கள் அனைத்துக்கும் ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் , உயர்கல்வித்துறை அமைச்சரான காங்கிரஸ் எம் எல் ஏ விஸ்வநாதன் “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும்” என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியிருப்பது, மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும்.
இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களை தேசிய கட்சிகளே ஆண்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மாநிலக் கட்சிகள் எப்படித் தொடர்ந்து ஆட்சி புரியலாம் என்ற குரோதத்தின் அடிப்படையில், உயர்கல்வித்துறை அமைச்சரான காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன், “தமிழ்நாட்டைத் தமிழர்கள் நிர்வகிக்கக் கூடாது” என்பதன் நீட்சியைத்தான் கூறியுள்ளார். மொத்தத்தில் டெல்லியிலிருந்து நேரடியாக தேசிய கட்சிகள் ஆள வேண்டும் என்ற எண்ணம்தான் இதன் பின்னணியில் உள்ளது. இதில் பாஜகவோ, காங்கிரஸோ அது முக்கியமல்ல என்பதுதான் உயர்கல்வி அமைச்சரின் கூற்று என குற்றம்சாட்டுகிறேன்.
என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது.
நெய்வேலி: என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும். இதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி மக்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளும்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளை நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டபோது, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நான் களத்துக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தென்குத்து கிராமத்தில் உள்ள கல்குவாரி இடத்தை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அதன் உரிமையாளரிடமிருந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. அதிகாரிகள் வந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே, நேற்று காலை தென்குத்து கிராமத்தில் காவல்துறை பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் ஊருக்கு அருகில் 20 மீட்டர் தொலைவில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியைத் தொடங்கினர். இதற்கு தென்குத்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடலூர் - ஆபத்தாரணபுரம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 15,000 ஏக்கர் நிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படாமல் உள்ளது. அந்த நிலங்களில் முதலில் நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும். புதிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தக் கூடாது.
தமிழர்களின் நிலங்களைப் பறித்து நடத்தப்படும் இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலை வழங்காமல் புறக்கணித்துவிட்டு, வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அதிக அளவில் பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. பணியின் பாதிப்பால் நெய்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு) செய்து வருகின்றனர்.
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 2023-2025 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில், நெய்வேலி அருகே வடக்குவெள்ளூர் கிராமத்தில் குடிநீரில் பாதரசம் (Mercury) அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. என்.எல்.சி.யின் தெர்மல் பவர் ஸ்டேஷனில் நிலக்கரி எரிக்கும்போது வெளியேறும் பறக்கும் சாம்பல் மழைநீரில் கலந்து நீர் நிலைகளுக்குச் செல்வதாலும், சுரங்க நீர் வெளியேற்றத்தாலும் பாதரச மாசு ஏற்படுகிறது. இது நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல், கருவுறுதல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. பார்வைக் கோளாறு, நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களை கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே, மத்திய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் புதிதாக நிலம் கையகப்படுத்த முன்வரக் கூடாது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தபோது “மக்களின் விருப்பத்திற்கு மாறாக விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்” என வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல் என்.எல்.சி.யால் பாதிக்கப்படும் மக்களின் நிலங்களையும் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்த மாட்டோம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும்.
தீய சக்தி திமுக செய்த வேலையை தான் தூய சக்தி என்று சொல்லிக் கொள்ளும் நீங்களும் செய்கிறீர்கள்..
கடலூர் மாவட்டம் NLC க்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வானதிராயபுரம் மக்கள் சாலை மறியல்.!
தமிழ்நாடு காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்..
@TVKVijayHQ@CMOTamilnadu
#legendary_speech_of_velmurugan #உங்களில்_ஒருவன்_உங்களுக்காகவே_ஒருவன் #தமிழர்தலைவர் #velmuruganspeech #TamilPolitics #tamilvoice #socialawareness #tnassembly2026 #VCK #PMK #velmurugantvkleader #tamilnadu #BJP #TVK #TVKITWING #JustNow #tamilreels #DMK #legendary_speech_of_velmurugan #TNPolitics #ADMK #TamilNaduPolitics #velmuruganspeech #velmurugantvk #TamilNaduGovernment #TNPolitics2026 #tnpoliticalnews #trendingnews #PoliticalNews #tamilnews
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அவமதிக்கும், வட இந்திய ஊடகங்களின் வன்மத்தைக் கண்டிக்கிறோம்!
தமிழினத்தின் மீதான வட இந்திய ஊடகத் தாக்குதல்களை முறியடிப்போம்!
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளது.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனை.
அந்தத் துயர நினைவுகளை மனதில் ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு . விஜய் அவர்கள் வெளியிட்ட “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்ற பதிவு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான உணர்வுப்பூர்வமான வெளிப்பாடே அன்றி, எந்தவிதத் தீவிரவாத ஆதரவும் அல்ல என்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியாகப் பதிவு செய்கிறது.
ஆனால், சில வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் அந்தப் பதிவைத் திரித்து, தமிழர்களின் இன உணர்வையும் மனிதநேயக் குரலையும் தீவிரவாத அரசியல் என்பது போன்று விவாதிப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. தமிழர்களின் வரலாற்று வலியையே அவமதிக்கும் செயலாகும்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது இன்று தோன்றிய ஒன்று அல்ல. பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் அரசியல், மாணவர், சமூக, மனித உரிமை இயக்கங்கள் அனைத்தும் ஈழத் தமிழர்களின் உயிர் பாதுகாப்பு, அரசியல் உரிமை மற்றும் நீதி வேண்டி குரல் கொடுத்து வருகின்றன.
அது தமிழின உணர்வு.
அது தாய்மொழி சார்ந்த உறவு.
அது தொப்புள் கொடி இரத்த சொந்தம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் கூட தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என எங்கிருந்தாலும், தமிழ் என்ற தேசிய பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இணைந்த மக்களாகவே எங்களை உணர்கிறோம்.
அந்த உணர்வை அவமதிப்பதோ, எங்களின் கண்ணீரை அரசியல் கேலியாக மாற்றுவதற்கோ, எந்த ஊடகத்திற்கும் உரிமையில்லை.
இன்று தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கிறது.
கோடிக்கணக்கான வடஇந்தியத் தொழிலாளர்களும் குடும்பங்களும் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வேலை செய்து வாழ்கின்றனர்.
அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் மாநிலத்தின் மக்களைப் பிரிவினைவாதிகள் போலச் சித்தரிப்பது, பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களின் ஒற்றுமையைச் சிதைத்து, பகைமையை ஏற்படுத்திப் பிளவுபடுத்தும் செயலாகவே நாம் கவனிக்கிறோம்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று குறிப்பிடாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று தனிமைப்படுத்திப் பேசும் வட இந்திய ஊடகங்கள், இன்று மீண்டும் தமிழர்களை இந்தியாவிற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயல்கின்றன.
இது திட்டமிட்ட பாசிச கார்ப்பரேட் மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
இதைவிட மக்களிடம் பெரிய கேள்வி ஒன்றை எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
இன்று தொலைக்காட்சிகளையும் தேசிய ஊடகங்களையும் கவனித்துப் பாருங்கள்.
நாட்டு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகப்பெரியப் பொருளாதார, தொழில்நுட்ப, சமூக மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
ஆனால் மக்களிடம் தொடர்ந்து திணிக்கப்படுவது என்ன?
முடிவில்லா அரசியல் குழப்பங்கள் மட்டுமே.
உலகளவில் அதிகரித்து வரும் போர்கள் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றன?
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வால் சாதாரணக் குடும்பங்களின் வாழ்க்கை இன்னும் எவ்வளவு சிரமப்படப் போகிறது?
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் எத்தனை வேலைவாய்ப்புகள் மாறப்போகின்றன?
பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் என்ன?
காலநிலை மாற்றத்தால் நாட்டின் விவசாயமும் குடிநீர் பாதுகாப்பும் எந்த நிலைக்கு செல்லப் போகின்றன?
உலக வர்த்தக மாற்றங்கள் சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும்?
உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசுகள் என்ன செய்கின்றன?
மாநிலங்களின் பொருளாதார உரிமைகளில் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து ஏன் திறந்த விவாதங்கள் நடைபெறுவதில்லை?
இந்தியாவின் செல்வமும், வளங்களும் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிவதை ஏன் ஊடகங்கள் பேச மறுக்கின்றன?
2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளை நினைவேந்தும் விதமாக
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று மாலை 3மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டமும் உலகத் தமிழர் ஆவண மையம் சார்பில் தொகுக்கப்பட்டுள்ள "அடிக்கற்கள்" நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.
அனைவரும் திரளாக பங்கேற்று அழிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோருவோம்.
#may18
@TVKVijayHQ எம் இனத்தின் வலிகளுக்கு மருந்தாகும் விதமாக தமிழக சட்டமன்றத்தில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று தனி தீர்மானம் நிறைவேற்றுங்கள்
Chief Minister of Tamil Nadu Sir
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கருங்குழி ஊராட்சி மேட்டுக்குப்பம் கிராமத்தில் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரியை பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை கண்டுகொள்ளாத நிர்வாகம்.
@CMOTamilnadu@DistrictColle15@VelmuruganTVK@TVKVijayHQ
ஒன்றிய அரசே,
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று!
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை!
தமிழகத்தில் கல்வி, மொழி, மாநில உரிமைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முக்கியமான அடிப்படை உரிமைகள் ஆகும். இந்நிலையில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பி.எம். ஸ்ரீ (PM SHRI) திட்டத்தை நாம் மிகுந்த கவனத்துடனும் அரசியல் விழிப்புணர்வுடனும் ஆய்வு செய்கிறோம்.
இந்த திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் கல்வி மாற்றங்களில் வெளிப்படையாகக் காணப்படாத சில ஆழமானப் பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக, மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி நடைமுறைகள், வருங்காலத்தில் இந்தி திணிப்பிற்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன.
தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பின்பற்றிவரும் இருமொழிக் கொள்கை (தமிழ் + ஆங்கிலம்) என்பது மொழி அடையாளத்தையும், கல்வி சமத்துவத்தையும் பாதுகாக்கும் முக்கியக் கொள்கையாகும். இதற்கு முரணாக மும்மொழிக் கொள்கையை திணிப்பது, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் வரலாற்றுப் போராட்டங்களுக்கும் எதிரானதாகும்.
மேலும், கல்வி என்பது அரசியலமைப்பின் அடிப்படையில் மாநிலங்களின் உரிமை சார்ந்த துறை ஆகும். மாநிலங்களின் தேவைகள், மொழி, சமூக அமைப்பு, பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு விதிக்கும் ஒரே மாதிரியான கல்விக் கட்டுப்பாடுகள், மாநிலங்களின் சுயாட்சியைக் குறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன.
அதனால், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தலாகும். மாநில அரசுகளே கல்வித் துறையில் முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். அதனை உறுதி செய்வது அவசியம். இதுவே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை.
இதனுடன், தற்போது ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு விதித்துள்ள காலக்கெடு மற்றும் அழுத்த நடைமுறைகளை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சனநாயக அமைப்பில், மாநிலங்களின் விருப்பம் மற்றும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள அரசு இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் விதமாக,அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மிகப்பெரிய அளவில் வலுவானப் போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழ் மொழி, மாநில உரிமை, கல்வியில் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடிப்படை நிலைப்பாடாகும். தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிரான எந்த முயற்சியையும் எதிர்த்து, சனநாயக வழியில் தொடர்ந்துப் போராடுவோம்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நடைபெற்ற இந்த சனநாயகத் தேர்தல் களத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றத் தலைமைகளுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் களத்தில், இரவு பகல் பாராமல், வெயில் மழை எதையும் பொருட்படுத்தாது, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த,
களத்தில் முன்னின்று உழைத்திட்ட, அனைத்து நிலை அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியின் உயிர்நாடியாக விளங்கும் கடைக்கோடித் தொண்டர்கள் மற்றும் தன்னார்வமாகப் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
எமது கொள்கை மீது நம்பிக்கை வைத்த தமிழக மக்களுக்கும், சனநாயகக் கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கும், எமது புரட்சிகர வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து சமரசமின்றிப் போராடும் வலிமையை, இந்தத் தேர்தல் களம் எமக்கு வழங்கியுள்ளது.
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் மண்ணின் நலனுக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் எமது பயணம், இன்னும் வீரியத்துடன் தொடரும்.
தி.வேல்முருகன்,
நிறுவனத் தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி